உங்கள் உடலில் உயிர் இருப்பதற்கு மட்டுமன்றி, ஆரோக்கியமாக நடமாடவும் சரியான இதயச் செயற்பாடு அவசியம். இதயம் தனது செயற்பாட்டை இழக்கத் தொடங்கும்போது, அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், பலரும் அசட்டையாக இருந்து விடுவதால், மாரடைப்பு போன்ற நோய்களால் உயிரை இழக்க நேரிடலாம்.
இதயம் சரியாகச் செயற்படாத போது, உடல் பூராவும் இரத்தத்தை ஓடச் செய்யும் அதன் செயற்பாடு குறையும். சுவாசப்பையில் ஒட்சிசனைப் பெற்ற இரத்தம் இதயத்திற்கு சென்று உடல் பூராவும் செல்ல முடியாது போக, உடல் அவயவங்கள் தங்கள் செயற்பாட்டுக்கு தேவையான ஒட்சிசன் கிடைக்காமல், முழுமையாகச் செயற்பட முடியாது போகும். எனவே சுவாசிப்பது சிரமமாகி, வேகமாக சுவாசிப்பது இதய நோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. மிகச் சிறிய வேலைகள் செய்யும் போதும், எதுவுமே செய்யாதிருக்கும் போதும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக வைத்திய உதவி பெறுங்கள்.
கடுமையான இருமலும், இழுப்பும் சுவாசப்பையில் தடை ஏற்படுவதால் வருபவை. அதே போல, உங்கள் சளி சிவப்பு நிறமாகவும், நுரைத் தன்மையாகவும் இருப்பது சுவாசப்பையில் திரவங்கள் கழிவாகாமல் தேங்குவதாலேயே. இவையும் இதய நோயின் அறிகுறிகளே.
இதயம் சரியாக செயற்படாததால், அவயவங்களுக்கு சரியாக இரத்தம் போகாமல், உங்கள் உடலானது மூளை, சிறுநீரகம் போன்ற முக்கியமான அவயவங்களுக்கே அதிகமாய் இரத்தத்தை அனுப்பும். கை, கால்கள் போதிய இரத்தம் கிடைக்காததால், சுவாசப்பையிலிருந்து சக்தி கிடைக்காததுடன், உங்கள் உடல் பகுதிகளில் ஏற்படும் கழிவுகள் வெளியேற்றப்படாமலும், உடலில் சக்தி குறையும். இதனால் அதிகம் களைப்பு ஏற்படும்.
இரவு படுக்கும்போது, தலையணைகளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கும் போது தான் நித்திரை வருகிறது என்றால் அதுவும் இதய நோய்க்கான அறிகுறி. உங்கள் சுவாசப்பையில் தேங்கியிருக்கும் திரவங்கள் பரவுவதால், படுக்கையில் கிடக்க முடியாமல், அதிகளவு தலையணைகளை அடுக்கி கிட்டத்தட்ட நிமிர்ந்த நிலையில் நித்திரை செய்யும் நிலை வந்தால் உங்கள் இதயம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்று அர்த்தம்.
இதயம் முழுமையாகச் செயற்படாததால், இரத்த ஓட்டம் தடைப்பட, உங்கள் இரத்தத்தில் கழிவுத் திரவங்கள் தேங்க, ஓரிரு நாட்களுக்குள் உங்கள் நிறை அதிகரிக்கிறது என்றால் அது இன்னொரு அறிகுறி. குறிப்பாக உங்கள் சாப்பாட்டு முறைகள் மாறாமல், ஓரிரு நாட்களுக்குள் உங்கள் நிறை மூன்று இறாத்தல்களுக்கு மேல் அதிகரித்தால் வைத்திய உதவி பெறுங்கள்.
அதே போன்று ஈரல், குடல் பகுதிகளில் இந்தத் திரவம் தேங்குவதால் வயிறு பெருக்கும். அத்துடன் வயிற்றைப் பிரட்டுதல், பசியின்மை போன்றனவும் ஏற்படும். உப்பு, குடிவகை, சீனி போன்றவற்றைப் பாவிப்பதைக் குறைக்க வேண்டும்.
இவ்வாறு செல்லும் கழிவுத் திரவங்கள் உங்கள் கால்கள், கைகளில் தேங்குவதால் அவை வீங்கத் தொடங்கும். சில நேரம் வயோதிபம் காரணமாக அவை வீங்கினாலும், இதய நோய் காரணமாகவும் அவை வீங்குவதால் வைத்திய உதவி பெறுங்கள்.
மூளைக்கு போதிய இரத்தம் போகாவிடின், தலைச்சுற்று, ஞாபக மறதி, குழப்பம், மயக்கம், நினைவிழப்பு போன்றன ஏற்படும்.
எனவே இவ்வாறான அறிகுறிகள் உடலில் தென்படும் போது, இவை இதயம் செயலிழக்க ஆரம்பிப்பதை உணர்ந்து உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்.
இதெல்லாம் ஏற்படாமல், சரியான உணவு முறை, உடற்பயிற்சிகள் மூலம் இருதய நோய்க்கு ஆளாகமல் வருமுன் காத்துக் கொள்ளுங்கள்.
You must be logged in to post a comment Login