விதைத்ததை அறுக்கிறோம்!
தமிழ்ப் போராட்டமும், அடிப்படையில் மொத்தத் தமிழினமும் ஒரு கேலிக் கூத்தாகத் தான் வந்து முடிந்திருக்கிறது.
தங்கள் வாழ்வையே போராட்டத்திற்கு என அர்ப்பணித்து வாழ்வை இழந்தவர்கள் புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல, மாற்று இயக்கங்களிலும் இருந்திருக்கிறார்கள். தங்கள் வாழ்வைத் தொலைத்தாலும், இன்றைக்கும் மாற்று இயக்கங்களின் முன்னாள் போராளிகள் தங்கள் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் நினைவஞ்சலிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களைத் துரோகிகள் என்று சொல்பவர்கள் யார்?
இவ்வாறான போராட்டத்திற்குள் தாங்கள் அகப்படாதபடிக்கு, வெளிநாட்டுக்கு தப்பியோடி வந்து தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்களே! அங்கே குழந்தைகள் இழுத்துக் கொண்டு போய் பலி கொடுக்கப்பட்டதையும், மக்கள் கொல்லப்பட்டதையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள். இன்றைக்கு இவர்கள் தங்கள் தலைவருக்கு நினைவஞ்சலி செய்யக் கூட முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
இவர்கள் புலிகள் பற்றிய எந்த விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக, அவ்வாறான விமர்சனங்களை முன்வைப்போரை துரோகிகளாக்குவதில் முன்நிற்பவர்களாக இருக்கிறார்கள்.
புலிகள் இறுதிநேரத்தில் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, வீதிகளில் கொடி பிடித்த இவர்கள் வணங்காமண்ணில் தண்ணீர் போத்தல் அனுப்ப முயன்றார்களே தவிர, தாங்கள் ஏறிப் போய் போராட்டத்தில் பங்கு கொண்டு தலைமையைக் காப்பாற்ற முயற்சிக்கவேயில்லை!
சரி, புலிகளை எதிர்ப்பவர்கள் சொல்வதைத் தான் நம்பவில்லை, தங்களால் தூக்கிக் கொண்டாடப்பட்ட கே.பி, கருணா, தமிழினி சொல்வதை நம்ப ஏன் மறுக்கிறார்கள்?
தமிழினிக்கு பக்கத்தில் இருந்து, அவருக்கு எத்தனை தடவை நடந்தது என்று ஸ்கோர் எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்தப் புத்தகத்தை தமிழினி எழுதவில்லை என்றால், யார் எழுதினார் என்று சொல்லத் தெரியவில்லை.
தங்களால் தூக்கிக் கொண்டாடப்பட்டவர்களையே நம்பாதவர்கள், யார் சொல்வதை நம்பப் போகிறார்கள்?
பிரபாகரன் எழுந்து வந்து, தான் தவறு விட்டு விட்டதாகச் சொன்னாலும், அபகரித்த சொத்துக்களுக்கு பங்கம் வந்து விடுமே, தலைவர் மீண்டு வந்து போராட்டம் நடத்துவார் என்ற புலுடாக் கதை புஸ்வாணமாகி விடுமே என்று அவரையே மண்டையில் போடக் கூடியவர்கள் தான் இவர்கள்!
இது தான் எங்கள் போராட்டத்தில் கடைசியாக எங்களுக்குக் கிடைத்த விளைபொருள்.
You must be logged in to post a comment Login