என்னுடைய இந்த வீடு வாங்கி நீண்ட காலம்.
நில மட்டத்திற்கு கீழ் உள்ள வீட்டுப் பகுதியில் இருந்து பின்புறமாக கொல்லைப் புறத்திற்கு செல்ல கதவும் படிகளும் உண்டு. அந்தப் பகுதி கவனிப்பாரற்று சேதமுற்று இருந்ததால் அதை திருத்தி அழகுபடுத்தும் ஐடியா தோன்றியது.
இந்த 'உவருக்கு ஏன் வீணாய் காசைக் குடுப்பான்? உவரை விட மணியா செய்வன்!' யாழ்ப்பாணி தானே அதைச் செய்ய உத்தேசித்து...
வீட்டின் அகலத்திற்கு ஆறு அடி நீளத்தில் சுற்றி வர சீமெந்தில் அத்திவாரம் போட்டு, அதற்குள் பேவிங் ஸ்ரோன் எனப்படும் செவ்வகள வடிவ கற்களை அடுக்கி ஒரு தளமாக்கும் திட்டம்.
தனிச் சீமெந்தில் போட்டால் காலப் போக்கில் வெடிக்கக் கூடும். இது தேவைப்படும் போது கழற்றிக் கொள்ளலாம்.
சீமெந்துக் கலவை இங்கே நாற்பது இறாத்தல் பைகளில் விற்கிறார்கள்.
சீமெந்து குழைக்க சிறிய பரல் போன்ற ஒன்று வாங்கி வைத்திக்கிறேன். அதில் சீமெந்துப் பையில் உள்ளவற்றைக் கொட்டி, சரியான அளவு நீர் விட்டு, மூடியால் மூடி விட்டு, உருட்ட வேண்டியதுதான்.
கொங்கிரீட் தயார்.
இங்கே கனடாவில் பனி பொழிவதால் நினைத்த மாதிரி அத்திவாரம் போட முடியாது.
குளிருக்கு மண்ணில் உள்ள நீர் உறையும். உறையும் நீர் விரிவடையும். விரியும் நீர் அத்திவாரத்தை அசைக்கும்.
ஆனால் இரண்டடி ஆழத்திற்கு கீழ் குளிர் போகாததால், எந்த அத்திவாரமும் இரண்டடி ஆழத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
கனடாவின் துருவப் பகுதியில் உலக வெப்பமயமாதலில் பனி உருகுவதால் இவ்வாறு அத்திவாரம் போடப் படாத பெரும் கட்டடங்கள் சரிந்தும் வெடித்தும் வருவதாக செய்திகள் வருகின்றன.
இப்படியாகக் கிண்டி அத்திவாரம் போட்டாயிற்று.
இதெல்லாம் தனி ஆவர்த்தனம் தான்.
நமக்கோ நாம் சொன்னபடி செய்யாமல், தான் நினைத்தபடி செய்யும் முட்டாள்களை வேலைக்கு அமர்த்துவதில் ஈடுபாடு இல்லை.
எனவே வார இறுதிகளில் தனியே நடந்தது வேலை.
வீட்டில் எந்த வேலை செய்தாலும் வேலிக்குள்ளால் எட்டி விடுப்பு பார்ப்பது கனடாவிலும் இல்லாமல் போகுமா?
ஒரு பக்கத்தில் உள்ள இத்தாலிய தந்தை, ரொறன்ரோ கட்டியெழுப்பப்பட்ட எழுபதுகளில் சீமெந்து வேலைக்காக வந்தவர். தனது வீட்டை தானே கட்டியவர்.
அவருக்கோ நான் விசயம் தெரியாமல் செய்கிறேன் என்ற நினைப்பு.
பிறகென்ன, குறுக்கு விசாரணை தான்.
இதெல்லாம் கூகிள், யூடியூப்புக்கு முந்திய காலம். இந்த விசயங்களை கற்றுக் கொள்வதாயின், இந்தப் பொருட்களை விற்கும் பெரும் கடைகளில் நிற்கும் விற்பனையாளரிடம் கேட்டுப் பெறும் அறிவு தான்.
எனவே, அவருக்கும் எனது அறிவுப்பெருக்கை தெரியப்படுத்திய பின்னால், 'ஓ! அவன் வடிவா செய்யிறான்!' என்று என் வீட்டுக்காரிக்கு புழுகிக் கொண்டிருந்தார்.
அத்திவாரம் போட்டு முடிய, கல் அடுக்க வேண்டும். அதுவும் சிவப்பு, கறுப்பு நிறங்களில் வாங்கி, நிலத்தின் அசைவை சமாளிக்கவும், புற்கள் முளைக்காதபடிக்கும் நிலத்திற்கு சுண்ணாம்புக் கல் துகள்களைப் பரப்பி அடுக்கல் நடந்தது.
தனி ஆவர்த்தனம் என்பதால் எனக்கு நேரம் கிடைக்கும் போது, மாலைகளிலும் வார இறுதிகளிலும் நடக்கும்.
இது மற்றப் பக்க சிங்கிள் மதர் கிழவிக்கு பிரச்சனை.
ஆங்கிலம் தெரியாது. வந்து வேலி ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருப்பார்.
உவன் ஏதாவது சட்டவிரோதமாக காரியங்கள் செய்கிறானோ என்று பார்க்க!
ஏற்கனவே தோட்டத்தில் போட்ட கீரை ஏதோ கஞ்சாச் செடி என்ற சந்தேகத்தில் அதே தெருவில் வசிக்கும் மற்ற மசடோனிய சிங்கிள் மதர் கிழவிகளைக் கூட்டி வந்து எனது தோட்ட வேலியோரத்தில் நின்று கிசுகிசுத்தபடியே எனக்குப் புரியாமல் வீட்டுக்காரிக்கு மட்டுமே புரிகின்ற ஆங்கிலத்தில் குறுக்கு விசாரணை செய்வது வருடாந்த நிகழ்ச்சி.
என்னுடைய வேலையில் வேகத்தைப் பார்த்து, கிழவி என் வீட்டுக்காரிக்கு கிண்டலாக...
ஓ, உன்ரை புருசன், ஒரு நாள் ஒண்டு!
அதுதான் அவவின் ஆங்கிலம்.
நான் ஒரு நாளைக்கு ஒரு கல் வைக்கிறேனாம்.
வைத்து முடிய பேரழகு தான்.
இப்போது கிழவிக்கு ஆசை வந்து விட்டது.
என்னில் இல்லை!
தனது வீட்டிற்கும் செய்ய வேண்டும் என்று.
கிழவி யாரையோ பிடிக்க, அவர்கள் வந்து கிழவியைப் பேய்க்காட்டி மிகவும் மோசமானபடி கல்லை அடுக்கி, காசைக் கறந்து போய் விட்டார்கள்.
வீட்டுக்காரிக்கு சொன்னேன்...
என்னை விட்டிருந்தால் அழகாக செய்திருப்பேன் என்று.
பின்னர், இதற்கு நிழல் கொடுக்கவும் கனி தரவும் என்று... உலகமெல்லாம் தேடி ஐந்து வகையான முந்திரிகளை நட்டு, அதற்கு உலோக குழாய்களில் பந்தலும் போட...
அழகும் கனியுமாக இன்னமும் நன்றாக இருந்தது.
முந்திரிக் கன்று பராமரிப்பு இத்தாலிய தந்தை தான். ஒவ்வொரு வருடமும் கத்;தரிப்பார். போதாக்குறைக்கு முந்திரியை பக்கத்தில் உள்ள மரத்தில் ஏற்றி விட்டார். அது பெருமரம் எங்கும் ஏறி, கொல்லைப்புறம் உண்மையில் பழமுதிர் சோலையாகி விட்டது.
பின்னர் என்னுடைய தோட்டத்திற்காக நான் முளைக்க வைக்கும் கன்றுகளை சூரிய வெளிச்சத்தில் வைக்க, ஒரு கண்ணாடி மாளிகை அமைக்கும் ஐடியா வர...
கண்ணாடியை விட தேவைக்கேற்றபடி கழற்றக் கூடிய தடித்த பிளாஸ்டிக் திரையை தொலைதூரத்தில் இருந்து வருவிக்க வேண்டியிருந்தது.
இதை நிர்மாணிக்க என்னுடைய நண்பர் ஒருவரிடம் உதவி கேட்டேன். அவரும் இவ்வாறான வேலைகளை பகுதி நேர தொழிலாக செய்பவர்.
தேவையான பொருட்களை வாங்கி வைத்து, என்னிடம் இல்லாத கருவிகளை அவர் தன்னிடம் இருந்து கொண்டு வந்து...
அவரும் நானுமாக ஒரு வார இறுதியில் இந்த கண்ணாடி மாளிகையை நிர்மாணித்தோம்.
நீரில் உக்காத வகை மரப் பலகைகளை அத்திவாரத்திலும் வீட்டுச் சுவரிலும் அறைந்து, விழும் பனி வழிந்தோடும் வகையில் அதைச் செய்:து முடித்தோம்.
கோடை காலத்தில் கதவுப் பகுதியை கழற்றி விடலாம்.
வெளியே உள்ள பிளாஸ்டிக்கை விட, உள்ளே ஒரு தட்டு பிளாஸ்டிக் போட்டதால், அவற்றுக்கு இடையுள்ள வளி அரிதிற் கடத்தியாக இருப்பதால், குளிர் காலத்தில் பெரிதாக குளிர் இருப்பதில்லை. அதிலும் வீட்டின் கீழ் பகுதி கதவைத் திறந்து வைத்தால் போதிய வெப்பநிலை இருக்கும். பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் படுவதால் உள்ளே உள்ள காற்று சூடாகி நல்ல வெப்பநிலையில் இருக்கும்.
பகல் நேர வெப்பத்தை சேமித்து இரவில் வெளியிட, குளிர் காலம் தொடங்க முன் பெரும் கொள்கலங்களில் மழைநீர் நிரப்பி வைத்திருப்பேன்.
அந்த நீரே உள்ளே வளரும் கன்றுகளுக்கு பயன்படுத்தப்படும்.
கோடை காலத்தில் முந்திரி இலைகள் மூடி நிழல் வந்து குளிர்மையாக இருக்கும். குளிர்காலத்தில் இலைகள் உதிர்ந்து பந்தல் மொட்டையாக சூரிய வெளிச்சம் தடையின்றி வந்து இறங்கும்.
இங்கே தான் நிலக்கீழ் அறையில் மின்னொளியில் வளரும் மரக்கறிக் கன்றுகள் பின்னர் இடமாற்றம் பெற்று நடப்படும் வரை வளரும்.
You must be logged in to post a comment Login