வாயு பகவானின் பக்தர்களாக இருந்தால் நீங்கள் அதிகமாக உள்ளி உட்கொண்டு வாயு பகவானைக் 'குஷி'ப்படுத்துவீர்கள். உள்ளி வாயு பகவானை நன்றாகவே கிளப்பி விடும்.
இரத்தம் குடிக்கும் ட்ரகுலா பேயை விரட்ட மேற்குலகில் உள்ளியைப் பயன்படுத்துவதாக ஐதீகம் உண்டு. தடிமன், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து குணம் அளிக்கக் கூடிய வல்லமையும், கூடாத ஆவிகளின் தொல்லையை தடுக்கும் வலிமையும் உள்ளிக்கு உண்டு என ரூமேனியர்கள் நம்புகிறார்கள். அங்கே தான் ட்ரகுலா பேய் பற்றிய கதையின் தளம் உண்டு.
Halloween எனப்படும் இந்த அசுத்த ஆவிகள் பற்றிய கொண்டாட்டம் நடக்கும் குளிர்காலத்தில் தான் இங்கே உள்ளி பயிரிடப்படுகிறது.
உள்ளி Softneck, Hardneck என இரண்டு வகைப்படும். Softneck என்பது நீங்கள் கடைகளில் வாங்குவதாக இருக்கும். இதில் நிறைய உள்ளி விதைகள் இருக்கும். இவை நீண்ட காலம் சேமித்து வைக்கக் கூடியவை என்பதால் கடைகளில் அதிகமாக விற்கப்படுகின்றவை இவை தான். பெரும்பாலானவை தற்போது சீனாவில் இருந்தே இறக்குமதியாகின்றன. இவை பொதுவில் வெள்ளை நிறமாக இருக்கும்.
Hardneck அடுத்த வகையாகும். இதில் ஒரு தண்டு நடுவில் தோன்றி அதில் பூ வரும். விற்பனையாகும் போது, நடுவில் உள்ள மரத் தன்மையுள்ள தண்டின் மூலம் இதை அடையாளம் காணலாம். பெரும்பாலும் தோல் ஊதா நிறமானதாக இருக்கும். இது நீண்ட காலம் சேமிக்க முடியாத வகை என்பதால், கடைகளில் பெரிதாக விற்பனையாவதில்லை. ஒரு குமிழ்த் தொகுதியில் அதிகளவு உள்ளி விதைகள் இருப்பதுமில்லை. அத்துடன் உரிப்பதற்கு இலகுவானபடி தோல் உள் பகுதியுடன் ஒட்டாமல் இருக்கும். கனடிய வகைகளில் Music என்பது மிகவும் பிரபலமானது. இதை விட, நிறைய வகைகள் பெயர்களுடன் உண்டு. விவசாயிகளின் சந்தைகளில் இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதை விட, லீக்ஸ் வகையைச் சேர்ந்த Elephant Garlic வகையும் உண்டு. அது மிகவும் பெரிய குமிழ்களைக் கொண்டது. என்னிடம் உண்டு. இனம் பெருக்கிக் கொண்டிருக்கிறேன்.
உள்ளியை பனி விழுந்து நிலம் இறுகுவதற்கு முன்பாக நட வேண்டும். பனி முடிந்த பின்னர் வசந்த காலத்திலும் நடலாம் எனினும் அவற்றின் வளர்ச்சி முழுமையாக இருக்காது. நிலத்தை நன்றாகப் பண்படுத்தி, அதிகளவு இயற்கைப் பசளைகளான இலைகள், எரு என்பவற்றைப் போட்டு, சுமார் நான்கு அல்லது ஐந்து அங்குல ஆழத்தில் நட வேண்டும். வாங்கும் உள்ளியை பிரித்து தனித் தனியான விதைகளையே நட வேண்டும். சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். வேர்ப்பகுதி கீழாகவும், கூர்மையான பகுதி மேலாகவும் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் காலநிலை சீராக இருந்தால் இப்போதே முளைக்கத் தொடங்கும். அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. அவை குளிருக்குள் தப்பி வாழக் கூடியன. விதைகளை நட்ட பின்னர் இலைகளால் மூடி விடலாம்.
விதை உள்ளிகளை Garden Center, பெரும்பெட்டிக்கடைகளில் விதைக்காக விற்பனையாகும் உள்ளியை வாங்கி நடுங்கள்.
கடையில் விற்கும் சீன உள்ளி, நீண்ட நாட்கள் பயணப்படுவதால், அது முளைக்க விடாமல் செய்வதற்காக மருந்து அடித்திருப்பார்கள். சில நேரம் முளைக்காமல் போகலாம். ஆனால் விதை உள்ளி கிடைக்காவிட்டால் தற்போதைக்கு அதை நடலாம். ஆபத்திற்கு பாவம் இல்லை.
பனி உருகி வசந்த காலம் ஆரம்பிக்கும்போது, மூடியிருக்கும் இலைகளை எடுத்து விட வேண்டும்.
இது ஒரு அவசரக் குறிப்பு மட்டுமே. பின்பு விரிவாக எழுதுவேன்.
You must be logged in to post a comment Login