Recent Comments

    வாடிய பயிர் கண்டு மனம் வாடாதீர்கள்!

    outdoor plantsசூனியம் செய்வோர் அனுப்பிய பேய்கள் அண்டாது என்று வளர்த்த வேம்பும், மற்றும் கறிவேப்பிலை, கற்பூரவள்ளி என குளிர்காலத்தில் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த கன்றுகள் எல்லாம் போதிய சூரிய ஒளி கிடைக்காமல் சோர்ந்திருக்கக் கண்டு, வாடிய பயிரைக் கண்ட போதிலெல்லாம் மனம் வாடும், உள்வீட்டுக் கமக்காரர்களின் கைகள் எல்லாம், தற்போது வெயில் எறிக்கக் கண்டு, பயிர்கள் சூரிய நமஸ்காரம் செய்யட்டுமே என்று, உடனடியாகவே வெளியில் கொண்டு வந்து வைத்தல் வேண்டி துருதுருக்கக் கூடும்.

    அவசரம் வேண்டாம்!

    உயிர் வாடும் போழ்திலெல்லாம் களித்திருந்த தமிழர், பயிர் வாடும் போழ்தில் துடித்திருத்தல் கொஞ்சம் ஓவர் மாதிரித் தான் நமக்கு படும். அது கிடக்கட்டும். விடுங்க!

    காட்டை வெட்டி வீடு கட்டி, நாடு முழுக்க வண்டி ஓட்டி செய்த  அநியாயங்களால் காபனீர்ஒட்சைட் வளி மண்டலத்தை நிறைத்து, பூமி சூடாகியதால்… இப்போது காலநிலை ஒரே குழப்பமாய்த் தான் இருக்கும். இதனால் குளிர் காலம் முழுமையாக முடியும் முன்னாலேயே, கோடை காலம் போல வெப்பநிலை அவ்வப்போது கூடி ஜாலம் காட்டும்.

    ஆனால் காலநிலையை நம்பி, கன்றுகளை வெளியே வைத்தால், சில நேரம் எல்லாமே அம்போ தான்!

    காரணம், ரொறன்ரோவில் மே மாதம் மூன்றாம் வாரத்திற்குப் பின்னால் தான் வெப்பநிலை சீராக, வெப்ப வலயத் தாவரங்கள் வெளியில் எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி சுயாதீனமாக வளரக் கூடிய வகையில் இருக்கும்.

    அதற்கு முன்னால், காலநிலை சரியானதாக இருந்தால் பகல் நேரங்களில் வெளியில் வைத்த பின்னால், இரவில் மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இரவு வெப்பநிலை பத்து சதம பாகைக்கு மேலாக இருப்பின் வெளியே இரவு விடலாம். பத்து சதம பாகைக்கும் குறைவாக இருக்கும் போது, குளிர் காற்று வீசினால் அந்தக் குளிர் காற்றிலேயே கன்றுகள் வாடி வதங்கி இறக்க நேரிடலாம்.

    வெப்பநிலை நான்கு சதம பாகைகளுக்கு கீழாக குறையும் போது, தாவரங்களின் கலங்களில் உள்ள நீர் உறைந்து ஐஸ் கட்டியாக, அதன் கனவளவு அதிகரித்து, கலங்கள் வெடிப்பதாலேயே கன்றுகள் இறக்கின்றன.

    வெளியில் வைப்போர், காற்று வேகமாக வீசும் பகுதிகளான வீடுகளுக்கு இடையிலான வெளிகளில் கன்றுகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். நேரடியான காற்றோட்டமில்லாத பகுதிகளில், அல்லது காற்றோட்டம் படாதபடிக்கு குப்பை வாளி போன்ற பாரிய பொருட்களுக்கு அருகில் வைக்கலாம்.

    தேவையாயின் இரவுகளில் கன்றுகளுக்கு தண்ணீரால் விசிறி, பொலித்தீன் சீட்டுகளால் மூடி விட்டு, பகலில் மீண்டும் வெப்பநிலை கூடும் நேரத்தில் அந்த சீட்டுகளை எடுத்து விடலாம். பகலிலும் அந்தச் சீட்டுகளை விட்டால், கடும் வெயில் எறிக்கும் போது, உள்ளே வெப்பநிலை கூடி கன்றுகள் வெந்து போகலாம்.

    கன்றுகளை வெளியே வைக்கும் நாட்களில் காலநிலை அறிவிப்புகளை அவதானியுங்கள். இரவுகளில் உறைபனி (frost warning) ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டால், கன்றுகளைக் கட்டாயமாக உள்ளே கொண்டு வாருங்கள். குளிர் காலம் முழுவதும் கட்டிக் காத்த கன்றுகள் ஒரு இரவிலேயே கண்ணை மூடக் கூடும். இரவில் குளிராகவும், வானில் மேகங்கள் அற்றும் இருந்தால் உறைபனி ஏற்படச் சந்தர்ப்பங்கள் அதிகம்.

    மரக்கறி, பூக்கன்றுகளாயினும் இதே நடவடிக்கைகளைக் கையாளுங்கள். கத்தரி, மிளகாய், தக்காளி, பாகல், புடோல் போன்ற நம்ம ஊர் மரக்கறித் தாவரங்கள் சரியான வெப்பநிலையிலேயே நாட்டப்பட வேண்டும். வீடுகளில் விதை போட்டு வளர்த்திருந்தால், வெப்பநிலை சீரான நாட்களில் வெளியே, அதுவும் நேரடி வெயில் படாத நிழல் பகுதிகளில், சில மணி நேரங்கள் வைத்து, நேரத்தை தினசரி அதிகரித்து வெளிவெப்பநிலைக்குப் பழக்குங்கள்.

    கத்தரி, மிளகாய் போன்றன குளிரினால் அதிர்ச்சிக்குள்ளானால், பூக்கள் தோன்ற தாமதமாகலாம். அல்லது தோன்றாமலேயே போகலாம். எனவே ரொறன்ரோவில் இவற்றை மே மாதம் மூன்றாம் வாரத்தின் பின்பே வெளியில் நாட்டுங்கள். அப்போதும் கூட, கடும் வெயிலில் அவை கருகக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதால், நில மட்டத்திற்குக் கீழே குழி தோண்டி, அதற்குள் கன்றை நட்டு, இலைகளால் நிழல் கொடுங்கள். அவை வேர் வைக்கும் வரைக்கும் போதிய நிழலும் நீரும் வழங்குங்கள்.

    தற்செயலாக அவற்றை நாட்டிய பின்னால், கால நிலைக் கோளாறினல் திடீரென்று வெப்பநிலை குறைந்து குளிர் வந்தால், பாதியாய் வெட்டிய கொக்கா கோலா பிளாஸ்டிப் போத்தல்களால் மூடி, அவற்றின் அடியில் காற்றுப் போகக் கூடிய வகையில் கற்களை வையுங்கள். மறக்காமல் பகல் நேரம் அவற்றை எடுத்து விடுங்கள். பகலிலும் குளிர் இருந்தால் அப்படியே விடலாம். ஆனால் முழுமையாக மூடி வெப்பநிலை கூடி அவிந்து கொள்ளாதபடிக்கு, கீழ் பகுதி திறந்திருக்கட்டும்.

    ஆனால் வெங்காயம், கோவா வகைக்  கன்றுகளான கொலார்ட், கேல் போன்றன, பீட்ரூட், கரட், அவரை இனங்கள் போன்றன தோட்டத்தைக் கொத்திப் பண்படுத்தக் கூடிய அளவில் தோட்ட நிலம் இருக்கும் போது நாட்டப்படலாம். அவை குளிரை ஓரளவுக்குச் சமாளிக்கக் கூடியன. ஆயினும் அவற்றின் முழுமையான வேகமான வளர்ச்சி, சீரான வெப்பநிலை இருக்கும்போதே நடைபெறும்.

    இதைக் கவனமாகச் செய்தால், உங்கள் கன்றுகள் பாதுகாப்பாய் உயிர் வாழும். செழித்து வளர்ந்து கோடை முழுவதும் பூத்தும் காய்த்தும் குலுங்கும்.

    வாடிய பயிர் கண்டு மனம் வாடத் தேவையில்லை!

    கவனமாக வாசிக்காமல் எதையாவது செய்யப் போய், கன்றுகளுக்கு ஏதாவது ஆகினால் நம் மேல் பழியைப் போடாதீர்கள். (ஏற்கனவே இரவு உள்ளே வைக்கப் ‘பஞ்சிப்பட்டு’ வெளியே விட்டு, கன்றுகள் வாடிய ஒருவரிடம் ‘என்ன, உம்மட கதையைக் கேட்டு, கண்டெல்லாம் பட்டுப் போச்சு’ என்று பழி கேட்டாயிற்று!)

    Save

    Postad



    You must be logged in to post a comment Login