முன்னர் நண்பர்களுடனான அரசியல் உரையாடலின் போது நான் ஒரு விடயத்தை அடிக்கடி சொல்வதுண்டு.
புலிகளுக்கு தமிழர்கள் காட்டும் ஆதரவு, ஜெயலலிதாவின் அமைச்சர்கள் காலில் விழுவது போல!
* * *
நீண்ட நாட்களுக்கு முன், ஜுனியர் விகடனில் ஜெயலலிதாவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தொடர் ஒன்றை எழுதி வந்தார். (ஜி.விஸ்வநாதன் என்று பெயர் ஞாபகம்!)
ஆட்சிக்கு வரும் வரைக்கும் ஜெயலலிதா சட்டசபைக்கு வெளியே இருந்து தான் ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தார். அதாவது எதிர்க்கட்சியில் இருக்க நேர்ந்தால், ஓய்வு எடுக்க அடுத்த மாநிலத்திற்கு போய் விடுவார்.
சட்டசபையில் கட்சிக்காரர்கள் தான் எதிர்க்கட்சிக் கலாட்டாவுக்கு பொறுப்பாக இருப்பார்கள். (அவையில் துச்சாதனர்கள் துகில் உரிந்த காலம் என்று நினைக்கிறேன்)
இப்படி ஒரு தடவை ஜெயலலிதா பதவி கிடைக்காமல் போய், அஞ்ஞாதவாசம் போக, அவர் அரசியலை விட்டு விலகப் போகிறார் என்ற வதந்திகள் வர... பிழைப்பில் மண் விழப் போகிறதே என்று கலங்கிப்போன கட்சிக்கார முன்னாள் அமைச்சர்கள் மூவர் சந்திக்கப் போயிருக்கிறார்கள்.
வீட்டிற்குள் போக முடியாமல் வாசல் அடைத்திருக்க.. வாசலில் நின்று இன்டர்கொம்மில் அழைத்தால்... அம்மா இணைப்பில் வர, மூன்று அமைச்சர்களும் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு அம்மா என்று பலத்த சத்தம் போட்டு அழுதிருக்கிறார்கள், அம்மா இல்லாமல் தங்கள் எதிர்காலம் அஸ்தமனம் ஆகி விடும் என்று.
இதை அந்த அமைச்சர் எழுதுகிறார். 'அவர்கள் இருவரும் அழுதார்கள். நான் அழுவது போல நடித்தேன்'.
இதை வாசித்ததும் என் மனதில் எழுந்தது... அட, முட்டாள் பயலே, உன்னையும் இப்படித் தானே அந்த இருவரும் நினைத்திருப்பார்கள்!
* * *
பெரியாரின் பிள்ளையார் சிலை உடைத்த பகுத்தறிவுப் பாசறையின் தொடர்ச்சியாக, தெய்வங்களை வணங்கும் கலாசாரம் போய், மனிதர்களின் காலடியில் விழுந்து வணங்கும் கலாசாரத்தை எம்.ஜி.ஆர் தொடக்கி வைத்தார்.
எம்.ஜி.ஆர் அரசியலில் வந்த பின்னால் தான் அவரின் காலில் விழுந்து வணங்குவது ஆரம்பித்தது என்று இல்லை. சினிமாவில் கோலோச்சிய காலத்தில் அவர் காலில் கண்ணதாசன் கூட விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும், தோட்டத்திற்கு அழைத்து சிலருக்கு 'விருந்து கொடுத்ததாகவும்' கதைகள் உண்டு.
தலைமைக்கு கூழைக்கும்பிடு போடும் பாரம்பரியம் இவ்வாறாக ஆரம்பித்து, காலில் விழுந்து கும்பிடுவதை வரைக்கும் வந்தது.
கூர்ப்பில் குனிந்தே நடந்து கொப்பு தாவிய குரங்கு மனிதனாக நிமிர... பகுத்தறிவால் நிமிர்ந்து நின்ற திராவிடப் பெருமகன்கள் எதிர்கூர்ப்படைந்து கூனிக் குறுகி குனிந்து, கடைசியில் சாஷ்டாங்க நமஸ்காரம் வரைக்கும், குரங்கையும் கடந்து வயிற்றால் அசையும் பாம்பு நிலைக்கு சென்று விட்டார்கள்.
ஜெயலலிதாவுக்கு கூட அதிகாரம் இருந்ததால் தான், அம்மா என்று காலில் விழுந்தார்களே தவிர, அதிகாரத்தில் இருந்திருந்தால் சினிமா நடிகைகளை 'வைத்திருப்பது போல' கனவுக்கன்னி அம்முவை படுக்கையில் விழுத்தியிருக்கக் கூடியவர்கள் தான் இவர்கள் எல்லாம்!
இவர்கள் எல்லாம் உண்மையான தலைமை விசுவாசத்தால் தான் தலைவர்களை வணங்கினார்கள் என்று நம்புவது படுமுட்டாள்தனம்.
நேற்றைக்கு ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர்கள் இன்றைக்கு சசிகலாவின் காலில் விழுவதால் இந்த விசுவாசம் நீடிக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.
அடுத்த தேர்தல் வந்து தொகுதிகளுக்கான சீட்டுகள் ஏலத்தில் விடப்படும் போது, அதிகம் பணம் கொடுத்து வேட்புரிமையைப் பெற்றவர்கள் தவிர்ந்து மற்றவர்கள் எல்லாம் இந்த சின்னம்மாவை திட்டித் தீர்க்கப் போகிறவர்கள் தான்.
* * *
சீமானுக்கு பெண் கொடுத்த மாமன் காளிமுத்து முதல் பலரும் புர்ச்சித் தலைவரின் போர்வாட்களாக இருந்து, சீட் கிடைக்காத போதெல்லாம் கருணாநிதிக்கு துண்டு போர்த்தி, எம்.ஜி.ஆரைத் திட்டித் தீர்த்தவர்களே.
கருணாநிதி கழட்டி விடும் போது, திரும்பவும் புரட்சித் தலைவருக்கு துண்டு போர்த்தி, காலில் விழுந்து, பாவம் கழுவ கருணாநிதியின் பிறப்பை சந்தேகித்து மேடையில் முழங்கியவர்கள்.
அதே வழியில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டு கட்சி மாறி, திரும்பவும் தாய்க்கழகத்தில் சேர்ந்தவர்கள் நிறைய உண்டு.
இவர்களின் தலைமை விசுவாசத்தை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நம்பினார்களோ தெரியாது. ஆனால் கடமையும் கண்ணியமும் இருக்கிறதோ இல்லையோ, கட்டுப்பாட்டுக்கு உதவும் என்றோ, இவர்கள் உண்மையான ஒரு அடிமைக் கூட்டம் என்பதைக் குத்திக் காட்டவோ, செய்த, செய்யப் போகும் கட்சி தாவும் குற்றங்களுக்கு தண்டனையாகவோ என்னவோ, காலில் விழுவதை தடுத்ததில்லை.
இது கடைசியில் ஹெலிகொப்டருக்கு குனிந்து வணங்கிய கோமாளித்தனத்திலிருந்து, சின்னம்மாவுக்கு காலில் விழுவது வரைக்கும் கூர்ப்படைந்திருக்கிறது. * * *
மாலை போட வரிசையாக நிற்பவர்களில் முதலாவது ஆள் காலில் விழுந்தால், பின்னால் வருபவர்கள் யாரும் சுயமரியாதையோடு மாலையைக் கையில் கொடுத்து விட்டு, அப்பால் போக முடியாது.
தேசியத் தலைவர் மாதிரி, சந்தேகத்தில் மண்டையில் போடும் அளவுக்கு போகாவிட்டாலும், 'உனக்கு அப்படி ஒரு நினைப்போ?' என்று அடுத்த முறை சீட்(டு) கிழியும் என்பது நிச்சயமாகத் தெரியும்.
போதாக்குறைக்கு தமிழ்ச்செல்வன் மாதிரி போட்டுக் கொடுக்க ஆளுக்கும் அங்கே குறைவில்லை.
எனவே, பின்னால் வருபவர் விசுவாசத்தைக் காட்ட அல்ல, தன் பதவியைக் காத்துக் கொள்ள காலில் விழுந்தே ஆக வேண்டும்.
பிறகென்ன, வரிசையாகவே தடால்!
இதுதான் அங்கிருந்த காலில் விழும் கலாசாரத்தின் ரிஷிமூலம்!
* * *
ஜனநாயகத் தலைவர்களுக்கு இந்த காலில் விழும் கலாசாரங்களில் நம்பிக்கையில்லாதபடிக்கு கொஞ்சமாவது பகுத்தறிவார்ந்தவர்களாக இருந்தார்கள். பெரியாரோ, காமராஜரோ, அண்ணாதுரையோ இவ்வாறான நாடகங்களுக்கு இடம் அளித்ததில்லை. கருணாநிதியும் துண்டு போர்த்துவதை ஏற்றுக் கொண்டாரே அன்றி, காலில் விழுவதை பாரம்பரியமாக்கவில்லை.
சர்வாதிகாரப் போக்குக் கொண்டவர்களுக்குத்தான் தன்னம்பிக்கை குறைவாகவும் மற்றவர்கள் மீது எப்போதும் சந்தேகமாயும் இருக்கும். அவர்களுடைய கொடுங்கோல் அதிகாரத்தில் அவர்களின் கோபத்துக்குள்ளாகி சிறை முதல் மரணம் வரையான தண்டனைகள் நேரலாம் என்ற பயம் சூழ உள்ளவர்களுக்கு வரும் போது, அவர்கள் நடித்தே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது. அந்தச் சர்வாதிகாரியைக் குஷிப்படுத்துவதன் மூலம் தங்கள் வாழ்வை வளமாக்கலாம் என்று நினைக்கும் அயோக்கியர்கள் இதை ஒரு கலையாகவே ஆக்கி விடுகிறார்கள்... தமிழ்ச்செல்வன் போல!
* * *
புலிகளின் காலத்தில் ஊடகங்கள் என்று தம்மை அழைத்துக் கொண்ட பல இருந்தன.
இந்த 'ஊடக ஜாம்பவான்கள்' பலரை எனக்கு நேரடியாகவே தெரியும். இவர்கள் எல்லாருமே போட்டி போட்டுக் கொண்டு புலிகளை ஆதரித்தவர்கள். இறந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கற்பனையால் உயர்த்தி, புலிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக நடித்தவர்கள்.
இவர்களில் ஒருவரைப் பற்றி வேறு ஒருவர் (ஊடகக்காரர் தான்!) எனக்கு சொன்ன போது... 'அவன் பிரபாகரன்ரை படத்தை வரவேற்பறையிலும் அமிர்தலிங்கத்தின்ரை படத்தை சாமியறையிலும் வைச்சிருக்கிறான்!' இந்த ஈனப்பிறவி, சிங்களவனை நம்ப முடியாது என்றும், துரோகிகள் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட வேண்டும் என்று இங்கே எழுதி விட்டு, பின்னர் ஊருக்குப் போகும் போது, கடற்படை வள்ளத்திலேயே போய் வரும்!
இன்னொருவர் மீதான புலிகளின் நடவடிக்கை பற்றி நான் எழுதிய போது... என்னைக் கூப்பிட்டு எனக்குத் தகவல் சொன்ன அவரே, இன்னொரு ஊடகக்காரருக்கு என்னைப் பற்றி சொன்னதை இவர் எனது காதில் போட்டார்... 'சில பேர் இதில குளிர் காயப் பாக்கிறாங்கள்!' காரணம் மற்றவர் புலிகளுக்கு நெருக்கமானவர். புலிகளுக்கு, நான் எழுதியதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று காட்ட இந்த பக்கா வியாபாரியின் தந்திரம் அது!
வேறு ஒருவர் 'தாயகத்தில்' எழுதியதால் பிரபலமானவர். என்னை ஒரு பகிரங்க இடத்தில் கண்ட போது, 'சில சந்தர்ப்பம், சூழ்நிலைகளால தற்போதைக்கு சில இடங்களில நிக்க வேண்டியிருக்கிறது' என்றார். இவர் எதற்கு என்னிடம் பாவமன்னிப்புக் கேட்கிறார் என்ற நினைப்பே எனக்கு வந்தது. பிழைப்புக்கு வால் பிடிக்கத் தோன்றினால், எதற்கு என்னிடம் பாவ மன்னிப்பு கோர வேண்டும்?
மாவீரர் தினத்திற்கு போய் காட்போட் கல்லறைக்கு விளக்கு கொழுத்தும் வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இங்கு தேர்தலில் நின்ற முக்கியஸ்தர் ஒருவர் காட்போட் கல்லறையை தொட்டுக் கும்பிடும் அவலத்தை பார்க்க நேர்ந்தது. அதே நபர் வேறு ஒரு இயக்கப் பின்னணியில் இருந்து வந்து பிழைப்புக்காக புலிகளுக்கு துதி பாடுபவர்.
இப்படி கனடாவில் ஊடகக்காரர்களும் ஊடகங்களில் முகம் காட்டி சிந்தனையாளர், புத்திஜீவிகள், அரசியல் ஞானிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்து வலம் வந்தவர்களும் புலிகளுக்கு வாலையும் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் தலையையும் காட்டிய கதைகளை இங்கே விலாவாரியாக அவிழ்த்து விட முடியும்.
ஆனால் எல்லாமே பிழைப்புக்காக நடந்த நடிப்பு என்று ஒரு சாதாரண மனிதனுக்கு கூட விளங்கக் கூடிய இந்த விடயத்தை, புலிகளும் அவர்களின் புலன் பெயர்ந்த மந்தைகளும் உண்மை என நம்பியது தான் மிகவும் ஆச்சரியமானது. தங்களுடைய பிரசாரத்தை தாங்களே நம்பிய புலிகளுக்கு இந்த புகழ்ச்சிகள் குஷியை ஏற்படுத்தி, கண்ணை மறைத்து, கடைசியில் அவர்களின் அழிவுக்கு வழி கோலியது.
இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு காட்டிய ஆதரவு நடிப்பும், More catholic than the Pope என்ற பாணியில் புலிகளை விட அதிகமான தமிழ்த் தேசிய வாதிகளாக வலம் வந்த பித்தலாட்டமும் வெளியே தெரிந்தாலும், இவர்கள் எல்லாரையும் தனியே பேசும் போது கேட்பீர்களாயின் புலிகளின் மிரட்டல்களால் தங்கள் பிழைப்புக்கு மண் விழுந்ததை கதை கதையாய் சொல்வார்கள்.
இது ஒரு கூட்டம்.
* * *
மாவீரர் தினம், மற்றும் சிதறிப் போன புலிகளின் எதிர்க் கோஷ்டிகள் கும்பல்கள் நடத்தும் விழாக்களாயினும், இங்குள்ள வானொலிகள் ஒரு நாடகம் நடத்தும்...
அதில் புலிகளுக்கு கப்பம் கொடுத்தவர்களும், புலிகள் முதலிட்டவர்களுமான கடைக்காரர்கள் முதலில் வானலையில் வந்து 'உயிரைக் குடுத்த எங்கட பிள்ளையளுக்காக கடையைப் பூட்டுறம்' என்று பகிரங்க அறிவிப்பு விடுவார்கள்.
ஒருவர் வானலையில் வந்து கடையைப் பூட்டினால், மற்றவர் என்ன இன உணர்விலா வந்து கடையைப் பூட்டுகிறார்? தன்னையும் துரோகி என்று விட்டால், கடைக்கு சனம் வராது என்ற எண்ணத்தில் அவரும் ரேடியோவுக்கு போன் அடித்து தனது கடையும் மாவீரர்களுக்காக அடித்துச் சாத்தப்படுவதை மகிழ்ச்சியுடன் அறியத் தருவார்.
(கனடிய சுதந்திர தின விடுமுறைக்கே கடை பூட்டியறியாத இந்தக் கூட்டம், இன்றைக்காவது ஒரு நாளைக்கு வீட்டை படுக்கலாம், எல்லாரும் பூட்டுறபடியால் எங்கட கஷ்டமர்ஸ் வேற இடத்துக்கு போகேலாது தானே என்றுதான் கடையைப் பூட்டுவார்கள்.)
இப்படியாக போட்டி போட்டுக் கொண்டு காலில் விழும் நாடகம் அரங்கேறும்.
இதே கடைக்காரர்களை இறைச்சி வெட்டும் இடத்தில் சாவகமாக பேச்சுக் கொடுத்தால் 'ஒரு நாள் பிசினஸ் போச்சு, அண்ணை' என்று உங்களை தங்களை விட வயதான முதியவர் ஆக்கி விடுவார்கள்.
புலிகள் வந்து மிரட்டும் போது, 'உங்கட போராட்டத்திற்கு தரத் தானே வேணும்' என்று கொடுத்து விட்டு, 'எங்களிட்ட காசையும் பறிச்சுப் போட்டு, எங்களுக்கு போட்டியா கடையளையும் திறந்து போட்டு, இப்ப எங்களைக் கடையையும் பூட்டச் சொல்றாங்கள்' என்பவர்களை நேரே கண்டிருக்கிறேன்.
இது யாவாரி கூட்டம்.
* * *
இங்கே என்ன நிகழ்ச்சி நடந்தாலும், தொடக்கத்தில் ஒரு ஒரு நிமிட சம்பிரதாய மெளன அஞ்சலி நடக்கும். அதுவும் மாவீரர்களுக்கு மட்டும் தான். தேசியத் தலைவருக்குக் கூட அஞ்சலி கிடையாது. 'போராட்டத்தில் உயிர் நீத்த அனைவருக்கும்' என்று சொல்லக் கூடப் பயம்!
இந்த அர்த்தமில்லாத சம்பிரதாயம் கூட, அவ்வாறு செய்யாவிட்டால் 'வீண்பிரச்சனைகளுக்குள்ளாக வேண்டி வரும்' என்ற நினைப்பில் காலில் விழுதலே அன்றி, உண்மையாகவே உயிரிழந்தவர்களுக்கானது அல்ல.
இது இலக்கியக் கூட்டம்!
* * *
சரி, புலன் பெயர்ந்த மகாஜனங்களுக்கு வருவோம்.
இதில் எத்தனை பேர் புலிகளின் அலுவலகத்திற்கு தேடிப் போய் போராட்டத்திற்கு பணம் கொடுத்தவர்கள்?
எனக்குத் தெரிந்தவரை, ஊருக்குப் போக முதல் அங்கே ஓமந்தையிலும் தாண்டிக்குளத்திலும் துன்பம் நிகழும் என்ற பயத்தில் கொண்டு போய் கொடுத்து றிசீட் வாங்கியவர்களும், 'காசு தரேல்லாட்டி, தரேலாது எண்டு தலைவருக்கு கடிதம் எழுதித் தாங்கோ' என்ற மிரட்டலுக்கு பயந்து, அடைவு வைச்சு கொண்டு போய் கொடுத்தவர்களும் தான் உண்டு. மற்றவர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து மிரட்டிய போதெல்லாம் பணம் கொடுத்தவர்களே.
இவர்களில் எத்தனை பேர் தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்வார்கள்... நாங்கள் போராட்டத்திற்கு விரும்பிப் பணம் கொடுத்தோம் என்று!
எல்லாருமே, கொடுக்காவிட்டால், 'ஊருக்கு வா, கவனிக்கிறம்' என்பது உண்மையாகும் என்று கொடுத்தவர்கள் தானே. இதைச் செய்யாவிட்டால் துரோகிகள் ஆக்கப்படுவோம் என்பதற்காக செய்யப்பட்ட நடிப்புகளே.
* * *
ஒருவேளை, தமிழ் நாட்டு பாமரர்கள் மாதிரி, படித்த யாழ்ப்பாணத்தில் காலில் விழும் கலாசாரம் இல்லைத் தானே என்று புலன் பெயர்ந்தோர் மெய் சிலிர்த்திருக்கக் கூடும்.
கையை பிளேட்டால் வெட்டி இரத்தத் திலகம் இட்ட வீரப் பரம்பரை இது. இப்போது கத்தியால் கேக் வெட்டும் அளவுக்கு கூர்ப்படைந்திருக்கிறது.
பிரபாகரன் கூட தன்னை புகழும் ஜால்ராக் கூட்டத்தைப் பார்த்து கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு புல்லரித்தவரே!
பிரபாகரன் காதில் விழ வேண்டும் என்பதற்காக, பேபி சுப்பிரமணியம் 'தம்பியை நாம் தொழுதால் தமிழீழம் கிடைத்து விடும்' என்று பாடியதாக அருகில் நின்ற ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்.
தன்னைத் தேசியத் தலைவர் என்பதை மட்டுமல்ல, முருகனாகவும், சூரிய தேவனாகவும் புகழ் பாடிய போது, உள்ளூரக் குஷியுடன் கேட்டு ரசித்தவர் தான் பிரபாகரன்.
இவ்வாறாகப்பட்டவர் யாராவது காலில் விழுந்திருந்தால், 'சீ, எழுந்திரு, எனக்கு இதெல்லாம் பிடிக்காது' என்று எச்சரித்திருப்பாரா?
(அவ்வளவு தூரத்திற்கு யாரையும் நெருங்க விட்டிருப்பாரா என்ற கேள்வி ஒரு புறமிருக்கட்டும்.)
இந்தச் சூழ்நிலையில், காலில் விழும் கலாசாரம் இங்கே கால் ஊன்றாமல் போனதற்கு தமிழ்ச்செல்வனைத் தான் நாங்கள் நன்றியோடு நினைவு கூர வேண்டும்.
* * *
ஒரு தடவை இந்திய உளவுப் பிரிவின் அனுசரணையுடனோ என்னவோ, இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர், புலிகளில் பிளவு ஏற்படுத்தும் நோக்கில், 'பிரபாகரனை விடுத்து, தமிழ்ச்செல்வன் போன்றோர் தலைமைப்பதவியை ஏற்றால், இந்தியா புலிகளை அங்கீகரிக்கும்' என்பது போல எழுதியிருந்தார்.
இது தமிழ்ச்செல்வனின் வயிற்றைக் கலக்கியிருக்கும்.
ஹி... ஹி... என்ற சிரிப்போடு இருக்கும் நித்திய புன்னகை மன்னனுக்கு மனதில் தன்னில் தலைவர் சந்தேகம் கொள்கிறார் என்ற சந்தேகம் வந்து, பயத்தில் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தோன்றியிருந்து, பகிரங்கமாக தலைவரின் காலில் விழுந்திருந்தால்...
பாலசிங்கம் மட்டுமல்ல, பொட்டம்மானும் தலைவரின் காலில் விழுந்திருக்க வேண்டியிருந்திருக்கும்.
கருணா முதல் சூசை வரை, பேபி சுப்பிரமணியம் முதல் பாலகுமார் வரை வன்னிக் குரங்குகளுக்குப் போட்டியாக கூனிக் குறுகியிருப்பார்கள்.
இதுவும் போதாதென்று, புலன் பெயர்ந்த மந்தைக் கூட்டமும் மாவீரர் தினக் களியாட்டங்களில் சபாரி சூட்டுக்கு முன்னால் அங்கப்பிரதிஷ்டம் செய்யத் தொடங்கியிருக்கும்.
ஏதோ நல்ல காலம், பிரபாகரனை முருகனுக்கு ஒப்பிட்ட கூட்டம், வெள்ளைக் கொடி வேந்தன் கௌபீனதாரியாக போகும்போது, 'தலைவா, ஏன் இப்படி கோவணத்தோடு கண்டு கொண்டின்புற்றோர் ஆண்டியானாய்?' என்று காலில் விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கும் அவலம் நிகழாமல் போய் விட்டது.
இதற்கு தமிழ்ச்செல்வனுக்கு மானசீகமாகவேனும் நன்றி சொல்லித் தான் ஆக வேண்டும்.
* * * நிலைமை இப்படியிருக்க... புரட்சித் தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும் காலில் விழுந்தவர்கள், சின்னம்மாவுக்கு காலில் விழுந்ததை ஏதோ ஒன்பதாவது உலக அதிசயம் மாதிரி, (ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த!) இவர்கள் எல்லாம், கொத்துரொட்டியையும் கேக்கையும் ஒன்றாக முழுங்கியது போல, ஜீரணிக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
You must be logged in to post a comment Login