எஸ்.பொ மீது…
க.கலாமோகன்
(பாரிஸில் எஸ்பொ விற்கு 04 ஜனவரி 2015 இல் அஞ்சலி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எழுதிப் பேசிய சிறிய உரை பெரிய திருத்தங்கள் இல்லாமல் “தாயகம்” இதழுக்காக.)
சில கணங்களில் நான் மொழிமீது நினைப்பதுண்டு. இது ஓர் குறியீட்டு விதியாக எனக்குள் வசித்தாலும், மொழிகள் மனித கலாசாரங்களின் அடையாளங்களாக இருக்கும் என்பது என் நினைப்பு. எஸ்பொ மீது சொல்லத்துடிக்கும் சில நிமிடங்களில் மொழி மீதான நினைப்பு வருகின்றது. மொழியின் காப்புத்துவத்தில் நிறைய அக்கறை கொண்டவர். ஆம், தமிழ் மொழியின் காப்புத்துவம் அவரது இலக்காகவும், இந்த மொழி அவரது இலக்கிய முன்னணிகளது நிகழ்வுகளின் தளமாகவும் இருந்தது. ஒவ்வொரு மொழிகளும் அழகானவை. இவர் தமிழ் மொழியின் அழிவின்மைக்கு உழைத்த சிலர்களில் ஒருவர், இவர் இலக்கியத்தின் திடமான நிலைகளைத் தமிழ் மொழிக்கு அறிமுகப்படுத்தியவர். “தீ” உம் “வீ” உம் தமிழில் மிகவும் காத்திரமான படைப்புகள் என்பது என் கருத்து.
எஸ்பொவின் மீது நிறையப் பேசும் அளவுக்கு என்னிடம் தகமைகள் இல்லை. ஆனால் இந்தப் பெரிய இலக்கியகாரர்கூட எனக்குள் நீண்ட ஆண்டுகள் இலக்கிய நட்பு இருந்ததுண்டு. இவர் காவிய எழுத்துகளைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். படைப்புகளை விதம் விதமாக எழுதும் பாணியில் எங்களுக்கு நிறைய வாசிப்புகளைத் தந்தவர். எனக்கும் அவருக்குமிடையிலான உறவு எனது இலக்கிய ஊடலுடன் சம்பந்தப்பட்டது. தமிழில் உசத்தியான வாசிப்புகளைத் தந்த படைப்பாளிகளில் ஒருவராக எஸ்போ இருக்கின்றார்.
இன்றும் எஸ்பொ வுக்கு இந்தக் கணத்தில் அஞ்சலி தெரிவிக்கின்றேன். எஸ்பொ தன்மீது நிறையப் பேசியுள்ளார், நிறைய எழுதியுள்ளார். எஸ்பொவின் இலக்கிய நிலைகள், புனைவுப் பதிவுகளின் மீது நிறைய எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துகள் ஆதரவையும் எதிர்ப்பையும் சந்தித்தவை . ஆதரவும் எதிப்பும் இல்லாமல் வாழ்வு இருக்காது, இலக்கியமும் இருக்காது. இலக்கியம் வாழ்வின் சுத்தமானதும் அசுத்தமானதும் வெளிப்புகள் என நான் கருதுகின்றேன். இந்த வெளிப்புகள் வாழ்வின் நிலைகளே. தமிழ் மொழியில் தமிழ் நிலங்களின் இயல்புகளை, நிலைகளை இலக்கியமாகத் தந்திருக்கின்றார் “தீ”யின் ஆசிரியர்.
சிறுவனாக இருந்தபோது எஸ்பொ வை அறியும், படிக்கும் இலக்கில் அவர் தொடர்பைக் கொள்ளக் கடிதம் எழுதினேன். தொடர்புகளை நிறையைக் காக்கும் நாகரீகம் அவருக்கு உண்டு. என்னை யாழ்ப்பாணம் வந்த தடவை சில நிமிடங்கள் சந்தித்தார். இந்த முதல் சந்திப்பு பெரிய சந்திப்பாகத் தொடரும் என நான் நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்தது. இலங்கையில், கொழும்புக்கு வரும்போது, நீண்டகாலங்கள் அமைதியாகவும் ஆக்கமாகவும் எழுதும் எனது சித்தப்பா மா.பாலசிங்கத்தின் வீட்டில்தான் தங்குவார். நான் இந்தக் கணங்களில், மதிப்பு நோக்கில் நிறைய அவருடன் பேசியதில்லை.ஆனால் இந்தக் கணங்கள் உவப்பானவை. கொழும்புச் சந்திப்பில்தான் இவர் இலங்கை அரசின் தமிழ் சினிமாவின் பொறுப்பாளராக இருந்தார் எனத் தெரிய வந்தது. இந்த சேவை தடைப்பட்டது அவர் நைஜீரியா போகும் பணியால். இலங்கை அரச சினிமா இலாகாவால் அவரது சேவைக்கு நன்றி சொல்ல கூட்டம் போடப்பட்டது. அங்கே நான் நிருபராகவும் நட்பினாலும் சென்றேன். எஸ்பொ நிறைய வரவேற்கப்பட்டார். அந்த செய்தியை தினபதியில் பதிவாக்கினேன்.
எஸ்பொ வுக்கும் எனக்கும் கிடைத்தது இலக்கிய உறவும் மிக நேசமானதும் உறவுகள் . எனக்கு எஸ்போ வின் இலக்கிய வித்துவத்தில் மதிப்பும் அக்கறையும் உள்ளது. அவரது நட்பின் பண்பாடு போற்றப்படவேண்டியது.. பாரிசில் நான் இரண்டு தடவைகள் அவரைச் சந்தித்தேன். முதல் சந்திப்பு 1986 ஆம் ஆண்டு நடந்தது. இந்தப் பதிவில் அவர் இலக்கியம் அரசியல் மீது பேசிய விசயங்கள் “பாரிஸ் பகிர்வுகள்” எனும் மகுடத்தில் அவர் 1980 ஆம் ஆண்டில் வெளியிட்ட “இனி” தொகுப்பில் வெளியாகி உள்ளது. இந்தப் பகிர்வுகள் கனடாவின் ஜோர்ஜ்.இ.குருசேவினது “தாயகம்” இதழில் தொடக்கத்தில் வாராவாரம் பிரசுரமாகியுள்ளன.
சிறுவனாக நான் இருந்தபோது எஸ்பொ வின் எழுத்துகளை தமிழ் வகுப்பில் வாசித்ததுண்டு. நான் வாசித்தவர் எனது நீண்ட கால நண்பராக இருப்பார் என எப்போதுமே நினைத்ததில்லை. இந்த நட்பு மிகவும் ஆக்கமானது. வழிபாட்டு நிலையில் இது இருந்ததில்லை. இந்த நட்பு நமது சுதந்திரமான சிந்தனைப் போக்குகளின் பகிர்வுத் தளமாக இருந்தது.
எஸ்பொ நைஜீரியாவில் ஆங்கிலப் பேராசிரியராக தொழில் செய்தவர். ஆனால் அவரது முதலாவது ஆபிரிக்கப் பயணத்தின் முந்தியே அவருக்கு கறுப்புக் கண்டத்தில் அக்கறை இருந்தது. இலங்கை அரசின் கல்விப் பாடத்திட்டத்துக்கு “ஆபிரிக்கா" எனும் தலைப்பில் மிகப் பெரிய நூலை எழுதியுள்ளார். இந்த நூலை பல ஆண்டுகளின்முன் விஜி, ஞானம் வீட்டில் பார்த்தேன். இந்த மொழிபெயர்ப்பு எஸ்பொவின் மிகப் பெரிய மொழிபெயர்ப்பு நூல்.
இந்தியாவில் “மித்ரா” பதிப்பகத்தைத் தொடங்கிய பின்னர் எஸ்பொ இன்னும் எழுதியுள்ளார், நிறையத் தமிழ் எழுதுவோரைப் பிரசுரித்தும் உள்ளார். இவர் நிறைய ஆபிரிக்கப் படைப்பாளிகளைத் தமிழ் மொழியில் வாசிப்புக்குத் தந்துள்ளது போற்றத் தக்கது. . கமெர லேய் இன் “ஆபிரிக்கக் குழந்தை”, சினுஆ ஆசெபியின் “மக்களின் மனிதன்”, நஹிப் மஹ்பூஸ் இன் “மிரமார்”, ஜீ எம் கேட்ச்தியின் “மானக்கேடு”, செம்பென் ஒஸ்மானின் “ஹால”, ஜோன்னி வீராவின் “வண்ணத்துப் பூச்சி”, வோல்லே சொயிங்காவின் “மரணமும் மன்னனின் குதிரை வீரனும்”, யஸ்மினா ஹத்ராவின் “காபுலின் தூக்கணாங்குருவிகள்” என்ற புத்தகங்களும், மீளவும் மொழிபெயத்துள்ளார்.
2014 ஜூலை மாதம் தமிழ் நாடு சென்றபோது எஸ்பொ வைச் சந்திப்பது என் திட்டம். ஆனால் அவர் அங்கு இல்லை என்னும் செய்தி வந்தது. பயணத்தின் சில தினங்களின் முன்னர் அவர் அங்கு வருவார் எனும் செய்தி கிடைத்ததால் மகிழ்ந்தேன். முதல் தடவை அங்கு அவரைச் சந்தித்தபோது முதுமைக் களைப்பில் இருந்தார். ஆனால் இலக்கியம் பேசுவதில் அவருக்கு எப்போதுமே களைப்பு இருக்கவில்லை. இந்த சந்திப்பில் “சமூக ரீதியான வாழ்வியலைப் பாதிக்கும் அநீதிகளுக்கு எதிராக எழுதவேண்டும்” என்று என்னிடம் சொன்னார். தமிழ் மொழி சாகிறதா எனும் கேள்வியை நான் அவரிடம் கேட்டபோது “தமிழ் மொழியின் பாதுகாப்பு தேவையானது. இந்தப் பாதுகாப்புத் தேவையால்தான் எனது எழுத்து கூர்மையானது.” என்றார். இரண்டாவது சந்திப்பு நேரம் இல்லாததால் குறுகியது. இது எனக்கும் அவருக்கும் இடையிலான கடைசிச் சந்திப்பாக அமைந்தது.
எஸ்பொ வின் உலகம் பெரியது. பல தெரிவுகளைக் கொண்டுள்ளவர். படைப்பாளியின் உலகம் போற்றுதல் தாக்குதல் இரண்டின் இடையிலும் ஓடுவது. இது நிச்சயமாகப் படைப்பாளியின் உலகு மட்டுமல்ல. அனைத்து உடல்களினதும் உலகு. வித்தியாசங்கள் இல்லாமல் வாழ்வு இல்லை. எழுத்து அநீதிகளின் எதிர்பாக இருக்கவேண்டும்.தமிழ் மொழியின் இருத்தலுக்கு அடையாளமாக உள்ளார் எஸ்பொ.
இந்திரா பார்த்தசாரதி “ எஸ்போ வின் இலக்கிய ஆர்வத்தின் பரப்பு, பூகோள வரையரைகளால் குறுகிவிடவில்லை.ஈழத்தைத் தாண்டி இலங்கையைத் தாண்டி, உலகமளாவி நிற்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
04-01-2015 பாரிஸ்
(படங்கள்: க.கலாமோகன்)
You must be logged in to post a comment Login