முடிவு நெருங்கி விட்டது! மனம் திரும்புங்கள்!
(முள்ளிவாய்க்காலில் முடிவு நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
மக்கள் 'கொத்துக் கொத்தாய்' இறந்து கொண்டிருக்க, சூசையில் மரண ஓலம் உலகெங்கும் இதயங்களைத் துளைக்க... தலைவர் என்ன ஆனார் என்ற கேள்விக்கு, விரைவில் துயரச் செய்தி வரலாம் என்று வெளிநாட்டு முகவர்கள் எல்லோரையும் தயார் நிலையில் வைத்திருக்க...
அதிகாரத்தில் இருக்கும் போது ஆட்டம் போட்டவர்களின் முடிவு எப்படியிருந்ததது என்பதை நினைவூட்ட...
இறுதி நேர இரவொன்றில் தாயகம் இணையத் தளத்தில் எழுதியது.
மறுநாள் ஆயுதங்கள் மெளனிக்கச் செய்யப்பட்டன.
அடுத்த தினங்களில் வீடியோக்களும் படங்களும் இணையத்தை நிறைத்தன.
இவ்வாறாக, ஆடிய ஆட்டமும், கூடிய கூட்டமும்...
என எல்லாம் முடிந்தது!)
மனம் திரும்பும் ஒரு பாவியின் நிமித்தம் விண்ணகத்தில் பெரும் இன்ப அதிர்ச்சி உண்டாகிறது!
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
பூமிப்பந்தின் மறுபக்கத்தில் வதியும் முனி, 'என்னடா, கியூறியஸ், தலைவர் தப்பி ஓடி விட்டாராமே?' என்று நேரங் காலம் தெரியாமல் கியூறியஸின் தூக்கம் கலைத்தார். கியூறியஸ் ஏற்கனவே இவ்வாறான வதந்திகளைக் கேட்டு, சிரித்துக் கொண்டிருந்தவன். தலைவர் தீவு வாங்கியிருக்கிறார், ஆபிரிக்கா போறார், மலேசியாவில நிக்கிறார், நோர்வேக்குப் போட்டார் என்று எல்விஸ் பிரெஸ்லியை இப்போதும் உயிரோடு கண்ட கதையாக வெளிவந்த செய்திகளை கியூறியஸ் நம்பவேயில்லை. இந்தக் கதைகள் எல்லாம் கேட்கவும் வாசிக்கவும் ருசியாகத் தான் இருக்கும். ஆனால் துளியளவும் உண்மை இருக்காது.
ஏன்? 'ட்ரை பண்ணினான், சரி வரேலை' என்று சொல்லிக் கொண்டே, பூபா கேட்டரிங்கில் கொத்துரொட்டி அடிக்கிறார் என்று கூட வதந்தி வந்தது. ஆதாரம் இல்லாமல் கியூறியஸ் நம்புவானா?
'உது தலைவரைப் பற்றித் தெரியாத ஆக்களின்ரை கதை!' என்றான்.
முதலாவது, தலைவர் யாரையும் நம்புவதில்லை. தன் நிழலைக் கூட நம்பாதவர் அவர். அத்தோடு தன்னுடைய பாதுகாப்பில்... அதாவது உயிரில் அவ்வளவு அக்கறை. இன்னொரு வகையில் சொன்னால், மரணம் பற்றிய பயம். மற்ற உயிர்களைப் பலி கொடுப்பதும் பலி எடுப்பதும் வெறும் பொழுதுபோக்கு ஆகி விட்ட மனிதனுக்கு தன் உயிர் என்று வந்ததும், அதை இழப்பதற்கு, இனி இல்லை என்ற பயம்.
அஞ்சினர்க்கு சத மரணம், அஞ்சாத நெஞ்சத்து ஆடவனுக்கு ஒரு மரணம்... ஆனால் இந்த மாவீரனுக்கோ தன் உயிர் மீதான பயம் எவ்வாறானது என்பதை நேரடியாக முழு உலகுமே பார்க்கவில்லையா? சர்வதேச ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த போது நடந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் எல்லாம் ஆழ ஊடுருவும் படை மீதான பயத்தினாலாது. ஏன் சமாதான முயற்சி கூட, ஆழ ஊடுருவும் படையின் வெற்றிகளால் ஏற்பட்ட பயத்தினதே. அந்த நிலையில்... சர்வதேச ஊடகங்களின் கேள்விகளுக்கு தலைவர்.. சே.. பாலசிங்கம் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது யாரோ குடிப்பதற்கு தண்ணீர் கிளாஸில் கொண்டு வந்து வைக்கிறார்கள். ஆனால், குடிக்கும்போது தன்னுடைய கிளாஸை எடுக்காமல், கருணாவின் கிளாஸை எடுத்துக் குடிக்கிறார் தலைவர். இது ஒன்றே அவரது சந்தேகக் குணத்தையும் உயிர் மீதான பயத்தையும் காட்டப் போதுமானது.
இயற்கைக் கடனைக் கழிக்கப் போவதாயினும், பாதுகாப்பு வளையம் இல்லாமல் செல்ல முடியாதவர் அவர். இவற்றை எல்லாவற்றையும் விட்டு தனியே செல்ல அவர் தயாராய் இருக்க மாட்டார் என்பது தான் கியூறியஸின் வாதம்.
இவ்வாறாகத் தான் பிரெஞ்சுப் புரட்சியின் போதும் பதினான்காம் லூயி தப்பியோடும் போது, தனியாக அடையாளம் தெரியாமல் தப்பியோடாமல், தன் படையணிகளுடன் ஊர்வலமாய் போகப் போய் புரட்சிக்காரர்களால் கைது செய்யப்பட்டு கில்லட்டினில் வைத்து தலை கொய்யப்பட்டார். எனவே, தலைவர் இப்படி தன் பாதுகாப்பு வளையங்களுடன் ஓட முடியாது. தனியே தான் ஓட வேண்டும். அதைத் தடுப்பதற்குத் தான் சுற்றி வர இருக்கின்றனவே பாதுகாப்பு வளையங்கள்... இலங்கைக் கடற்படை.. அதற்கு பின்னால் இந்தியக் கடற்படை... இதையும் மீறி தப்பியோடுவதற்கு அசாதாரணமான துணிச்சல் வேண்டும். அது தலைவரை வழிபடும் போராளிகளுக்கு இருக்கக் கூடும். ஆனால் தலைவருக்கு இல்லை.
தப்பியோடும் போது யார் கையிலும் அகப்பட்டால் என்ன நடக்கும் என்பது, கிட்டு கடலில் வைத்து தீக்குளித்ததைப் பார்த்தவருக்குப் புரியாதா? சரி... அப்படித் தான் தப்பிப்போனாலும், அவர் ஓடிக் கொண்டே இருக்கலாம். ஆனால் ஒளிக்க முடியாது. எந்தக் கட்டத்திலும் அடைக்கலம் கொடுத்தவர்கள் இவருக்கு துரோகம் இழைக்கலாம். சதாமின் புத்திரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரே அவரைக் காட்டிக் கொடுத்து பணம் பெற்றதாக செய்தி. அந்தப் பயத்தில் கே.பி கூட தன்னை விற்று விடுவாரோ என்ற பயம் அவருக்கு இருக்கும்.
அதிகாரத்திலிருந்து தப்பியோடி தஞ்சம் புகுந்தவர்கள் சர்வதேச சட்டங்களினால் மீண்டும் அந்த நாடுகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்ட அனுபவம் பேரு நாட்டு பியூஜிமோரியைப் பற்றி அறிந்தவர்களுக்குப் புரியும்.
எனவே, மொத்தத்தில் 'மேலே போனாலும் மரணம், கீழே போனாலும் மரணம்' என்று இவர் புறப்படும்போது செத்தைக்குள் இருந்து பல்லி பலன் சொல்லும்.
இவருடைய இயல்பை வைத்தே இவர் என்ன செய்வார் என்பதை தீர்க்கதரிசனமாய் சொல்ல முடிகிறது.
இதை விட, தற்போதைய கோளாறுகளும் குளறுபடிகளுமே 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதைக் காட்டிக் கொடுக்கவில்லையா?
தலைவர் பத்திரமாய் தாய்லாந்து போய்ச் சேர்ந்திருந்தால், இன்று உலகம் முழுவதும் தெருத்தெருவாய் ஊளையிடும் சொறிநாய்கள் போல கூச்சல் போடும் கும்பல் இப்படி வேகம் கொண்டு ஊளையிடுமா? 'போராட்டம் எண்டால் சனம் சாகும் தானே' என்றும், 'சனம் செத்தால் தானே ஈழம் கிடைக்கும்' என்று தத்துவம் பேசிக்கொண்டு மூலையில் போய் அனுங்கிக் கொண்டு படுத்திருக்குமே?
அல்லது தான் பத்திரமாய் போய்ச் சேர்ந்திருந்தால், 'நான் தப்பினாலும், அங்க எங்கட போராளியள் நிக்கிறாங்கள். எப்பிடியாவது அவங்களைக் காப்பாற்ற வேணும்' என்று அவர் வெளிநாடுகளுக்குப் போன் அடித்து உரிமைப்போர் நடத்தச் சொல்வார் என்றா நினைக்கிறீர்கள்? கப்பம், கொலை, கள்ளக்கடத்தல், கோயில் என உலகெங்கும் வியாபித்திருக்கும் தன் வியாபார சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் முழுமூச்சாய் இறங்க மாட்டாரா?
அல்லது போராளிகள் தான் 'தலைவர் போட்டார், நான் அடிபட்டுச் சாகப் போறன்' என்று தற்கொலை செய்வார்களா? இத்தனை மூர்க்கமாய் சண்டையிடுவார்களா? வன்னித் தளபதிகளும் தளம் செல்லாத பதிகளும் புலன் பெயர்ந்த கூட்டத்தை உசுப்பேத்தி இப்படி 'இந்த வார ஸ்பெஷல்' போராட்டம் நடத்துவார்களா? தயா மாஸ்டரின் பின்னால் வெள்ளைக் கொடியோடு நடேசன் தன் மனைவியை முன்னே அனுப்பி 'மனைவி எவ்வழி கணவன் அவ்வழி' என்று நந்திக்கடலில் ஒரு ஆழிக்குமரனாய் வந்து சேர்ந்திருக்க மாட்டாரா? ஏற்கனவே இந்திய இராணுவத்திடம் சரண் அடைந்த அனுபவம் அவருக்கு இல்லையா?
எனவே, தலைவர் 'உள்ளுக்கை விசயம் தெரியாமல் அம்பிட்டுப் போனார்' என்பதை வெளியில் சொல்ல முடியாமல், இன அழிப்பு நடக்கிறது என்று பாதை மறியல் போராட்டம் வரை சென்றிருக்கும் நிலையில், இத்தனை ஊகங்களையும் மீறி, தலைவர் தப்பிச் சென்றிருந்தால்.... 'பாத்தியே, பெரிசாப் புழுகினாய் தலைவர் தப்பேலை எண்டு. பார் உச்சிப் போட்டுப் போட்டார்' என்று கியூறியஸ்க்கு சவால் விடுவீர்கள் என்றும் தெரியும். அப்போது கூட, 'அட பேமானிப்பயல்களே, உது ஏற்கனவே தெரிஞ்சால் எதுக்குடா இவ்வளவு சனத்தையும் அநியாயமாய் பலி குடுத்தீங்கள்' என்று கியூறியஸ் உங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிற மாதிரி, நாலு வார்த்தை கேட்க மாட்டானா?
எனவே, தலைவர் மாட்டுப் பட்ட நிலையில், 'பிரபாகரனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும்வரை யுத்தம் தொடரும்' என்று கோத்தபாயா அறிவித்த பின்னால், தலைவரின் முடிவு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் மீது அரசுகள் தாக்குதல் நடவடிக்கை எடுக்கும்போது, எச்சரிக்கையும் கண்டனமும் விடுக்கும் சர்வதேச சமூகம் பச்சைக்கொடி காட்டி ஓரமாய் நிற்பதிலிருந்தே, தேசியத் தலைவரின் பெருமையையும் மகிமையையும் அவர்தம் வழிநடத்தல், நெறிப்படுத்தல் பற்றிய சர்வதேசத்தின் மதிப்பீடு பற்றியும் புரிந்து கொள்ளலாம். 'வன்னியிலிருந்து எந்த நேரமும் ஒரு அவலமான செய்தி வரலாம்' என்று மந்தைக் கூட்டத்திற்கு மேய்ப்பர்கள் அறிவித்ததிலிருந்தே, இவர்களும் நெஞ்சிடியோடு எதிர்பார்த்து நிற்பதை உணரக் கூடியதாக உள்ளது. எனவே வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சவும் வயிற்றுக் கலக்கத்துடன் நெளிந்து கொண்டிருப்போருக்குப் பேதி கொடுக்கவுமாய், நாளிதுவரையில் குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் ஓட ஓட விரட்டிப் பிடிக்கப்பட்டு சிறையும் மரண தண்டனையும் என பரிசில் பெற்ற காதைகளை தன் மண்டையைக் கிளறி கியூறியஸ் தொகுத்துத் தர உத்தேசித்துள்ளான்.
பழந்தமிழ் இலக்கியங்களில் படித்த கனகவிசயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்த சேரன் மகன் முதல் நேற்று கண் முன்னால் கண்ட தூக்குமேடை சதாம் வரைக்கும் அதிகாரத்தில் இருந்தவர்கள் எவ்வாறான முடிவுகளுக்கு உள்ளாவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். அதிலும் அதிகாரத்தில் இருந்த காலங்களில் வெறி பிடித்து ஆட்டம் போட்டவர்களின் முடிவு மிகவும் குரூரமானதாகவே இருக்கும்.
போரில் வென்றாலும் தோற்ற மன்னனின் வீரத்திற்கு கௌரவம் கொடுத்த கதைகள் சிங்களத் துட்டகைமுனு எல்லாளனுக்கு நினைவுத் தூபி கட்டியது முதல் புருஷோத்தமனுக்கு மகா அலக்சாண்டர் கௌரவம் அளித்தது வரை உண்டு. இதைத் தான் கருணாநிதியும் பிரபாகரனை அவ்வாறே நடத்த வேண்டும் என இறைஞ்சிக் கேட்டதுண்டு.
இதெல்லாம் வென்ற மன்னனின் இரக்கம் முதல் தோற்றவர் அதிகாரத்திலிருந்த போது கடைப்பிடித்த யுத்த தர்மம் வரைக்குமான காரணிகளின் தங்கியிருக்கும். தலைவர் தன் எதிரிகளை தற்கொடையாளிகளைப் பலி கொடுத்து சிதறடித்த பின்னால் அவருடைய வீரத்திற்கு கௌரவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? இதனால் தான் தலைவர் குப்பி அ(க)டிப்பது தான் சரியான வீரம் என்று தலைவரின் பக்தகோடிகள் முடிவு செய்திருக்கக் கூடும்.
ஆனால் தலைவரைப் பொறுத்தவரைக்கும் இத்தனை உயிர்களை பொழுதுபோக்காகப் பலி எடுத்தும் கொடுத்தும் கொண்டிருந்தாலும், தன்னுடைய உயிரை எடுக்கும் அளவுக்கு வீரம் இருக்காது. எனவே தலைவர் உயிரோடு சிறைப்பிடிக்கப்பட்டாலும், 'தலைவர் குப்பியைக் கடிச்சவர் தான். உவன் பொட்டன் தான் சயனைட் குப்பியை எடுத்துப் போட்டு தேன் குப்பியை மாட்டி விட்டவன்' என்று தலைவரை பெயில்அவுட் பண்ண ஒரு கூட்டம் மைக்குகளோடும் கீபோட்டுக்களோடும் தயாராக இருக்கும்.
அன்னியர் ஆட்சிக்கு எதிராகப் போரிட்டதாக சினிமா மூலமாக வீரம் பெற்ற கட்டப்பொம்மனும் கடைசியில் தூக்கிலிடப்பட்டான். பாயும் புலி பண்டார(க)வன்னியனும் அவ்வாறே தூக்கிலிடப்பட்டான். இருந்தாலும், பழியைப் போட காக்கை வன்னியனும் எட்டப்பனும் வந்து அகப்பட்டதால், 'தலைவரில பிழையில்லை, உந்த துரோகிகளால தான் தலைவர் தோற்றவர்' என்று இன்றும் படிக்கப்படும் பாராயணம் அப்போதே அரிச்சுவடி ஆக்கப்பட்டிருந்ததை அறிந்து கொள்ளலாம். இந்தச் சிற்றரசர்கள் தங்கள் குடிகளை நீதி வழுவா நெறிமுறையில் தான் அரசாண்டார்கள் என்பதற்கு எந்த விதமான வரலாற்றுச் சான்றுகளும் இல்லை. ஆனால் எதிரியின் வீரத்திற்கு கிறடிட் கிடைக்கக் கூடாது என்பதில் புறநானூற்றுக் காலம் தொட்டு வரலாற்றாசிரியர்களுக்கு எப்போதும் அக்கறை இருந்ததால் நம்ம பக்கமாய் ஒரு துரோகி எப்போதுமே அகப்பட்டுக் கொள்வான். ஆனால் நம்ம கதையில் தலைவரின் அழிவுக்கு முன்பாகவே எட்டப்பர்கள் லிஸ்ட் எக்கச்சக்கம். டக்ளஸ், கருணா தொடங்கி போதாக்குறைக்கு சங்கரி என நீளும் பட்டியலில் தப்பித்துக் கொண்ட மண்டையன் குழு பிரேமச்சந்திரனும் அடைக்கலநாதனும் மற்ற துரோகிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தமிழன் செய்த பூர்வ புண்ணியமன்றி வேறேது?
யாழ்ப்பாணத்து சங்கிலிய மன்னன் கூட போர்த்துக்கேயரால் கைது செய்யப்பட்டு கோவாவுக்கு (?) கொண்டு செல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டான். அவனைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் யாழ்ப்பாணிகள் என்பதாக கதை. அதன் பின்னால், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வந்த பின்னாலும் யாழ்ப்பாணத்தில் வீரம் விளைந்து போராட்டம் நடந்த வரலாறு எதுவும் இல்லை. யாழ்ப்பாணிகள் போட்டி போட்டுக் கொண்டு இங்கிலிஸ் படிச்சு கவர்மேந்து உத்தியோகம் பார்ப்பதில் அக்கறை இருந்ததால், அவர்களுக்கு சுதந்திரம் என்ன சோறா போடும் என்ற யதார்த்த உணர்வு மிஞ்சியிருந்திருக்கலாம்.
நாயக்கர் வம்சத்து விக்கிரமராஜசிங்கன் கண்டியின் கடைசி மன்னனாக இருந்து, கடைசியில் ஆங்கிலேயரால் இழுத்துச் செல்லப்பட்டு வேலூருக்கு கடத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட படம் அந்தக் காலத்து லீலா கலண்டரை வீடு தோறும் சொருகி வைத்து நாட் கிழித்த தமிழர் அனைவருமே ஞாபகத்தில் வைத்திருப்பர்.
இப்படியாக நம்ம பக்கமாய் அதிகாரத்திலிருந்தவர்களின் முடிவுகள் பெரும்பாலும் பெருமைப்படத்தக்கதாய் இருக்கவில்லை.
தலைவர் மாதிரியே கிடங்குக்குள் இருந்து கொண்டு, தன்னுடைய பிரசாரத்தை தானே நம்பி, நம் படை கண்டு திசையெல்லாம் பயங் கொண்டு ஓடுகிறது என்று கனவு கண்டு கொண்டிருந்த ஹிட்லர் கடைசியில் கூண்டோடு கைலாயம் போன கதை நம்ம கூட்டத்திற்கு வரலாறு காட்டும் வழிகளில் ஒன்று. தலைவர் கூட வீரம் விளைந்து அவ்வாறு ஒரு முடிவை எடுத்துக் கொண்டாலும், அது தலைவருக்கும் நல்லது. தமிழ்ப்போராட்டத்திற்கும் நல்லது. உடல் கிடைக்காத நிலையில், தலைவர் தப்பியோடி தாய்லாந்தில் இருக்கிறார் என்று கதையைக் கிளப்பி அவர் பெயரை வைத்தே போராட்டத்தையும் நடத்தி இந்தப் புலன் பெயர்ந்த கூட்டத்தையும் சுத்தி என இன்னொரு கூட்டம் பிழைப்பு நடத்த நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. இவ்வாறாக சுபாஸ் சந்திரபோஸ் மாதிரி காட்டுக்குள் 'சன்னாசியாக' வாழ்கிறார் என்றெல்லாம் வதந்திகள் தலைவருக்கு நூறு வயது கடந்த பின்னாலும் பரவிக் கொண்டே இருக்கும்.
தலைவர் தான் இறந்தாலும் தன் உடல் எதிரிகளின் கையில் சிக்கக் கூடாது என்ற சிந்தனையில் அவரோடு எப்போதும் ஒரு போராளி பெற்றோல் டின்னுடன் திரிவதாக புலிவால்கள் கதைகளை அவிழ்த்து விட்டதுண்டு. தலைவர் தீர்க்கதரிசி தான், ஆனாலும் இதற்கான சாத்தியங்கள் எப்படி? இராணுவம் சுற்றி வளைத்துத் தாக்கும்போது முதலில் கொல்லப்படுவது, பெற்றோல் போராளி தான். இல்லாது போனால், ஷெல் தாக்குதலில் இறந்தால் இரண்டு பேரும் இறந்து போவதற்கான சாத்தியம் அதிகம். அப்போது இருவருடைய உடல்களையும் எரியூட்ட யாருமே இல்லாமல் போய் விடுமே!
அதிலும் தலைவருக்கு கொள்ளி வைக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்தது தமிழ்ச்செல்வனுக்குத் தான் என்று தமிழ்ச்செல்வன் ரசிகர் யாரோ புரளியைக் கிளப்பி விட்டிருந்தார்கள். உண்மையோ பொய்யோ, தமிழ்ச்செல்வன் நித்திய புன்னகை மன்னனாய் இருந்தது பற்றி, கியூறியஸிற்கு ஒரு தியறியே உண்டு. தலைவரை நிழல் போல தமிழ்ச்செல்வன் பின்தொடர்கிறார், பெற்றோல் டின்னுடன். காட்டில் அடிக்கடி தங்க வேண்டி வரும். உட்கார்ந்திருக்கும் தலைவர் திரும்பிப் பார்ப்பார். அங்கே தொலைவில் த.செ பெற்றோல் டின்னுடன்! அட, இவன் நான் குறையுயிரில் இருக்கும்போதே, இதயத் துடிப்பைப் பார்க்காமல் பெற்றோல் ஊத்திக் கொழுத்தி விடுவானோ என்ற எண்ணத்தில் தலைவர் பார்க்க... தமிழ்ச்செல்வன் முகத்தை என்ன சீரியஸாகவா வைத்திருக்க முடியும்? எஜமானைப் பார்த்து அடிமைகள் சிரிக்கும் அசட்டுச் சிரிப்பை முகத்தில் வரவழைத்து வாயெல்லாம் பல்லாக சிரித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், 'வாரும், உமக்கு என்னை உயிரோட கொழுத்திற பிளானோ?' என்று தலைவர் த.செயை உயிரோடேயே கொழுத்தியிருப்பார். எனவே, இப்படியே சிரித்துப் பழகி, தமிழீழத்தின் வெளிநாட்டமைச்சராக உலக வலம் வரும் வரைக்கும் த.செ சிரித்துச் சிரித்தே இந்த புலன் பெயர்ந்த கூட்டத்தை சிறையிலிட்டார்.
அதிகாரங்களிலிருந்து விரட்டப்பட்டு சாதாரண வாழ்வு வாழக்கூடிய நிலையில் இருந்தவர்கள் பலர். சூரியனின் வம்சம் என்று புகழப்பட்ட சூரியதேவன் ஜப்பானியச் சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோ அமெரிக்க அணு குண்டோடு, தன்னுடைய 'புனிதத் தன்மையை' மறுதலித்து வெறும் சம்பிரதாய சக்கரவர்த்தியாக வாழ்ந்தார். சர்வாதிகாரிகளிலேயே இறுதிவரைக்கும் அதிகாரத்தில் இருந்து மறைந்தவர்கள் ஸ்பானிய பிராங்கோவும் வடகொரியாவின் கிம் இல் யொங்கும் தான். இதில் கிம் தன் மகனை ஆட்சியில் அமர்த்தியதால் கடைசிக்காலத்தை சிறையில் கழிக்க நேரிடவில்லை.
சமீப காலத்தில் அதிகாரம் இழந்த பின்னாலும் சகலரின் கவனத்திலிருந்தும் தப்பியவர் முஷாரப். தன் கையாளை இராணுவத் தளபதியாக்கிய புத்திசாலித்தனத்தின் விளைவு அது. நேபாள மன்னர் போராட்டத்தில் ஜனநாயகம் மலர்ந்த பின்னால், கட்சிகளுக்கு இடையிலான இழுபறியில் இப்போது மாளிகை இழந்து இந்தியாவுக்கு தஞ்சம் தேடும் நிலையில் உள்ளார்.
பாவம் தலைவர். பெரும் மாஸ்டர் பிளானுடன் கருணாநிதி பாணியில் வாரிசு உருவாக்கி, மகனுக்கு தளபதி உடை போட்டு படம் எடுத்தது தான் மிச்சம். பிடரியில் கால் அடிபட ஓடிய ஓட்டத்தில் கைவிட்ட அல்பம் இராணுவம் கையில் சிக்க, இப்போது இராணுவம் வெளியிட்ட படத்தை விடியன் பத்திரிகை போட்டு, 'ஆக்கிரமிப்புப் படையை எவ்வாறு விரட்டியடிப்பது? தலைவனும் தனயனும் ஆலோசனையா?' என்று தலையங்கம் போடுகிறது.
மன்னர்கள் முடியும் முடி சூடிய தலையும் இழந்த கதைகளில் ரஷ்யாவின் சார் மன்னர் பரம்பரை ஒன்று. நம்ம தோழர்கள் அவர்களின் குடும்பத்தையே அழித்த போது வீட்டு நாயையும் விட்டு வைக்கவில்லை. தோழர்கள் சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்த அந்த நாயை சீனாவுக்கு அன்பளிப்பாக அனுப்பியிருக்கலாம். அல்லது இரவுணவு விருந்துபசாரம் வைத்து நட்புறவைப் பேணியிருக்கலாம்.
ஈரான் மன்னர் ஷா கொமெய்னியின் புரட்சிக்குப் பயந்து தப்பியோடிப் போய் இறுதிக்காலத்தை அன்னிய நாடுகளில் அகதியாய் கழித்தார்.
ஆப்கான் மன்னர் இத்தாலி சென்ற சமயம் அவரது மைத்துனர் தாவூத் அவரைப் பதவி கவிழ்த்து ஆட்சியமைத்தார். தாவூத் பின்னால் நூர் முகமது தராக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னால் அமின் தராக்கியைக் கொன்று பதவிக்கு வந்தார். பின்னால் அமின் கொல்லப்பட்டு ரஷ்யர்கள் பார்பரா கமாலைப் பதவியில் அமர்த்தினர். கடைசியில் ரஷ்யா வெளியேறிய போது நஜிபுல்லா பதவியில் இருந்தார். கடைசியாக நஜிபுல்லா முஜாஹிதீன்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் ஐ.நா கட்டடத்தில் தஞ்சம் புகுந்து, கடைசியில் ஐ.நா வெளியேறியதும் தற்கொலை செய்யப் பயந்து முஜாஹிதீன்களின் கையில் அகப்பட்டு அடித்துக் குற்றுயிராக நகரின் மத்தியில் கட்டித் தூக்கப்பட்டு சாக விடப்பட்டார்
சர்வாதிகாரிகளில் பேர் போன இடி அமின் கடைசியில் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சம் தேட வேண்டிய நிலை. கம்யூனிசத்திற்கு எதிரான சி.ஐ.ஏயின் முயற்சிகளுக்கு விலை போன இராணுவ ஜெனரல்கள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட தலைவர்களைக் கொன்றது மூன்று நாடுகளில். சிலியில் அலண்டேயின் சீர்திருத்தங்களுக்கு எதிராக பினோசே. கொங்கோவில் லுமும்பாவைக் கவிழ்த்த மொபுட்டு. இந்தோனேசியாவில் சுகர்னோவின் ஆட்சியைக் கவிழ்த்த சுகார்ட்டோ. இவர்கள் பலவந்தமாய் ஆட்சியைப் பிடித்து தலைவர்களைக் கொன்ற பின் நடந்தது என்ன?
பினோசே பதவியிழந்து விசாரணைகளுக்கு தப்ப, சாகும்வரை நோயைக் காரணம் காட்டி காலத்தை ஓட்டினார். மொபுட்டு ஐரோப்பாவிற்கு பெரும்பணத்துடன் தப்பியோடி புற்றுநோயால் இறந்தார். சுகார்ட்டோ பதவியிழந்து பிள்ளைகள் சிறை செல்ல, நோயைக் காரணம் காட்டி தப்பித்துக் கொண்டார். ஆக மொத்தத்தில் இவர்கள் அனைவருமே இறக்கும்போது இராணுவ மரியாதைகளுடன் இறக்கும் நிலை வரவேயில்லை.
கிழக்கு ஜேர்மனியின் தலைவரான எரிக் கொனேக்கர் ஆட்சியிலிருந்த போது செய்த அடக்குமுறை காரணமாக ஜேர்மன் இணைப்பின் பின்னால் சிறையில் இறந்தார்.
மார்க்கோஸ் பிலிப்பைன்சிலிருந்து மக்கள் புரட்சியில் அமெரிக்க உதவியுடன் தப்பியோடி ஹாவாயில் இறந்தார்.
எதியோப்பிய ஜனாதிபதி மெங்கிஸ்து ஆட்சியிழந்து தென்னாபிரிக்காவுக்கு தப்பியோடி, அங்கு வைத்து எரித்திரியர்களால் கடத்தப்பட இருந்த நிலையில் அங்கும் இருக்க முடியாமல் முகாபேயிடம் தஞ்சம் புகுந்திருந்தார். இப்போது முகாபேக்கு எதிராய் கிளம்பிய புதிய பிரதமர் வைத்த முதல் கோரிக்கைகளில் ஒன்று... மெங்கிஸ்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதே.
எனவே, உயிருக்குப் பயந்து தப்பியோடினாலும் நிம்மதியாக வாழ முடியாத நிலையிலேயே இவர்கள் பலரும் காலத்தைப் போக்கினர்.
ஆனால் அதை விடப் பலர் மீது வரலாறு இரக்கம் காட்டவில்லை. இவ்வாறு தப்பியோடும் சந்தர்ப்பம் இல்லாமல், பலர் உயிரை விட நேர்ந்தது.
இதில் உலகின் கண்களுக்கு முன்னாலேயே கழுவிலேற்றப்பட்ட சதாம் முதன்மையானவர். குர்திஷ் மக்களுக்கு இரசாயன குண்டுகள் வீசிக் கொன்றவர், கடைசியில் தான் தேர்ந்தெடுத்த பாதை தனக்குத் தந்த பரிசு பற்றி முணுமுணுத்துக் கொண்டே போய்ச் சேர்ந்தார்.
ரூமேனியாவில் நிக்கொலாய் சௌசெஸ்கு மக்கள் புரட்சியில் கைது செய்யப்பட்டு, மனைவியுடன் பகிரங்கமாய் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் பூட்டோவைக் கைது செய்து தூக்கிலிட்ட சியா உல் ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
எண்பதுகளில் லைபீரியா இன்னொரு பெரும் உதாரணம். ஆட்சியிலிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு கடற்கரையில் கம்புகளில் கட்டப்பட்டு உயிரோடும் பின்னர் கொல்லப்பட்ட பின்னாலும் எடுக்கப்பட்ட படங்கள் அந்தக் காலத்தில் பிரபலமானவை. பின்னால் ஆட்சியைப் பிடிப்பதில் போட்டி போட்டவர்கள் கடைசியில் ஆளுக்காள் சண்டை பிடித்து, அதில் ஒருவரான சாமுவேல் டோ என்பவரைப் பிடித்து அரை நிர்வாணமாக்கி கட்டி காது, மூக்கு எல்லாம் அறுத்து சித்திரவதை செய்து கொன்றார்கள். கடைசியில் நம்ம தேசியத் தலைவர் போலவே குழந்தைகளை போருக்கு பயன்படுத்திய சார்ள்ஸ் ரெய்லர் ஐ.நாவினால் கைது செய்யப்பட்டு யுத்தக் குற்றங்களுக்காக ஒல்லாந்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் போராட்டக் குழுக்கள் என்றால் பேருவின் ஒளிரும் பாதைத் தலைவர் அபிமேல் குஸ்மான் கைது செய்யப்பட்டு நிலக்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
குர்திஷ் தீவிரவாத தலைவர் ஓஜாலான் கென்யாவில் வைத்து துருக்கியரால் கைது செய்யப்பட்டு துருக்கியில் விசாரணைக்கு உள்ளாகி சிறையில் உள்ளார். பிடிக்கப்பட்டு தன் கழுத்துக்கு கத்தி வந்ததும் ஞானம் பெற்று சமாதானம் பேசியும் பலன் இல்லாமல் போய் விட்டது.
இதெல்லாம் வரலாற்றில் இருந்தாலும் மூவருக்கு நடந்த கதி தலைவருக்கு நடக்கக் கூடாது என்பது தான் கியூறியஸின் பிரார்த்தனை.
அங்கோலாவில் கிடைத்த அத்தனை சமாதான முயற்சிகளையும் தன் சுயநலத்திற்காக சிதைத்த சாவிம்பி கடைசியில் ஒரு நாயைப் போல ஓட ஓட விரட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டது பெரிய விடயமல்ல, கொல்லப்பட்ட செய்தி கேட்டதும் பொதுமக்கள் வீதிகளில் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது போல, யாழ்ப்பாண மக்களும் ஆரவாரம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எதற்கும் இணையத்தில் இதை ஆவலோடு எதிர்பார்க்கலாம்.
அடுத்து நம்ம விஜேவீர... ஆடிய ஆட்டத்திற்கு இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு கைகள் அடித்து முறிக்கப்பட்டு, தொலைக்காட்சியில் எழுதிக் கொடுத்த உரையை வாசித்த பின்னால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் கடற்படை முகாமில் நீண்ட காலம் வாழ நேரிட்டது.
சமீப காலங்களில் இறந்த புலிகளின் உடல்களுக்கு இழைக்கப்பட்ட கொடுரம் பலரும் கண்டதே. இதே போல தலைவரின் உடலுக்கும் அவமானம் ஏற்படக்கூடாது என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருக்கும்.
ஆனால் இதில் எல்லாம் மோசமானது முசோலினிக்கு நடந்தது. கைது செய்யப்பட்ட முசோலினியும் காதலியும் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னால் தலை கீழாக தூக்கிலிடப்பட்டு கடைசியில் கீழே கிடந்த முசோலினியின் உடலில் பகிரங்கமாக ஒரு இத்தாலியப் பெண் சிறுநீர் கழித்தாளாம். இந்த நிலை தங்கள் தேசியத்தலைவருக்கு ஏற்படக் கூடாது என்று புலிவால்கள் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொள்வார்களாக!
(இச்செய்தியைப் படிக்கும்போது அந்த 'அவலச்செய்தியை' நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக் கூடும்)
You must be logged in to post a comment Login