புதுசா வீடு வாங்கியிருப்பீர்கள். வீடு வாங்க பார்க்கப் போன போது, கண்ணைக் கவர்ந்து கவர்ச்சியாய் இருந்த குசினியும் குளியலறையும், உங்கள் வீடு குடிபுகுதலுக்கு வந்த உறவினர்களின் நக்கல் பார்வைக்கு ஆளானதால், செலவோடு செலவாக அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்று உங்கள் வீட்டுக்காரன் ஒற்றைக்காலில் நிற்பார். (சே..சே! வீட்டுக்காரி என்றெல்லாம் சொல்வோமா?) வீட்டுக்காரன் கண் கலங்காமல் பார்க்க வேண்டியது உங்கள் கடமை. காதலின் முன்னே இதெல்லாம் பெரிய காசா என்று செலவிடுவீர்கள். ஆனால், வீட்டில் ஏதாவது மின்சார வேலை என்றால், உதுக்கு ஏன் வீணாய் காசைக் குடுப்பான் என்று தமிழ்ப் பண்பாட்டின்படி நீங்களே அதைச் செய்யலாமே என்று முயற்சிப்பீர்கள்.
வேண்டாம் விபரீத விளையாட்டு. பழைய வானும் ஆயுதங்களும் உள்ள பலர் இங்கே பேஸ்பென்ட் செய்கிறோம் என்று திரிகிறார்கள். ஆனால் மின்வேலைகள், எரிவாயு வேலைகளுக்கு அனுமதிப் பத்திரம் பெற்ற அனுபவஸ்தர்களை ((Licensed Electrical Contractor)மட்டுமே பயன்படுத்துங்கள். சிலநேரம் மின்வேலை தெரிந்தவர்கள் என்று உங்கள் நண்பிகள் யாரையாவது பிடித்து செய்யக் கூடும். ஆனால் அனுமதிப் பத்திரம் பெறாமல் மின்வேலைகள் செய்வோரால் உயிர் ஆபத்தே ஏற்படக் கூடும்.
ஒன்ராறியோவில் மின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு (Ontario Electrical Safety Code)) அமையவே, மின் நிர்மாண, திருத்த, மாற்றீடு வேலைகள் செய்யப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் எவ்வாறு மின்வேலைகள் செய்யப்பட வேண்டும், எப்போது நகரசபையின் அனுமதி பெறப்பட வேண்டும், வேலை முடிந்ததும் நகர அலுவலர்கள் பரிசோதிக்க வேண்டுமா என்ற விபரங்களைக் கூறுகின்றன. எனவே சட்டப்படியும், பாதுகாப்பாகவும் இந்த வேலைகள் செய்யப்பட அனுமதி பெற்ற மின்வேலைக் கொந்தராத்துக்காரர்களையே பயன்படுத்துங்கள்.
சாதாரண வீட்டு திருத்த வேலைகள் செய்வோருக்கு மின்வேலைகள் செய்வதற்கு அனுமதியில்லை. காரணம் பல மின் பிரச்சனைகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது. உதாரணமாக, குறிப்பிட்ட சில விளக்குகள் தொடர்ந்தும் செயலிழந்தால், சில நேரம் சாதாரண வீட்டு வேலை செய்பவர் உங்கள் Circuit Breaker ஐ மாற்றி விட்டுப் போய் விடுவார். ஆனால் சில நேரம் தீப்பிடிக்கும் ஆபத்து இதனால் ஏற்படும். காரணம், பிழையாக வயரிங் செய்த காரணத்தினால், பாதுகாப்புக்காக புதியதாய் வந்திருக்கும் Arc Fault Circuit Interrupter மின்சாரத்தை தொடர்ந்தும் துண்டித்திருக்கும் விடயம், உங்கள் பழைய வான், ஆயுத திருத்தக்காரனுக்கு தெரிந்திருக்காது.
சில நேரம் உங்கள் நிலக்கீழ் அறையில் நீர் நிரம்பியிருக்கும். அப்போது வெறுமனே சுவர்களில் உள்ள Drywall ஐ மாற்றி விட்டால் சரி என்று யோசிக்காதீர்கள். உங்கள் மின்கருவிகள் இணைக்கும் outlet களில் நீர் பட்டிருந்தால் அதனால் ஆபத்து ஏற்படலாம்.
சில நேரங்களில் மின்சாரத் தேவைகளுக்கு Extension Cord களை பயன்படுத்தக் கூடும். ஆனால் அவை தற்காலிக பயன்பாடுகளுக்கு மட்டுமே. தவிரவும், அதிகளவு மின் பயன்படுத்தும் கருவிகள், உபகரணங்களை தொடர்ச் சியாக பயன்படுத்தும்போது அவை சூடாகி, நெருப்புப் பற்றும் ஆபத்து உண்டு. அவற்றை நிலவிரிப்புகள், தளபாடங்கள், கதவுகள், ஜன்னல்கள் ஊடாக பயன்படுத்துவதைத் தவிருங்கள். அவை சேதமாகவும், சூடாகவும் வாய்ப்புகள் அங்கே அதிகம். பழுதடைந்த, வெடித்த, நசுங்கிய, எப்போதும் சூடாக இருக்கும் கோட்களை வீசி விட்டு தடித்தவற்றை வாங்குங்கள். டொலர் கடையில் வாங்கும் மலிவானவை நீண்ட நேர பாவனைக்கு உதவாதன. மூன்று பொருத்திகள் உள்ள cord களில் உள்ள மூன்றாம் துண்டை நறுக்கி விட்டு, இரண்டு பொருத்திகள் பொருந்தும் சுவர் Outlet களில் பொருத்தாதீர்கள். மின் அதிர்ச்சிக்குள்ளாகக் கூடும்.
தினசரி பாவனைக்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டி வந்தால், அனுமதி பெற்ற மின்வேலையாளர் மூலமாக நிரந்தர இணைப்பை ஏற்படுத்துங்கள்.
சும்மா ஆயுதங்கள் வைத்திருக்கிறாரே என்று கண்டவர்களிடமும் உயிர் போகும் பொறுப்பான வேலைகளை ஒப்படைக்காதீர்கள்!
You must be logged in to post a comment Login