கனடாத் தேர்தல் 2015
ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்
எனக்கு இப்போதும் சரியாக நினைவிருக்கிறது. மாலை வேலை முடிந்து நெடுந்தெருவில் வந்து கொண்டிருக்கிறேன். வானொலியில் 2011 கனடியப் பொதுத் தேர்தலுக்கான கட்சித் தலைவர்களின் விவாதம். லிபரல் கட்சித் தலைவர் மைக்கேல் இக்னாட்டிப் பேசுவதை இடைமறித்த புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜாக் லேட்டன், 'நான் எனக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்றால் அந்த வேலைக்கு ஒழுங்காகப் போக வேண்டும். கனடியப் பாராளுமன்றத்தில் மோசமான வரவு (Worst attendance record) உம்முடையது தான்' என்று மூக்குடைக்கிறார்.
லிபரல்களின் முதுகெலும்பு முறிவுக்கான கடைசி வைக்கோல் துண்டு வைக்கப்பட்டது அந்தக் கணமாகத் தான் இருக்கும். பாராளுமன்றத்திற்கு ஒழுங்காக வரவு வைக்காத ஒருவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி கனடிய வாக்காளர்களின் மனதில் பெரும் கேள்வியை எழுப்பியிருக்கக் கூடிய விடயம் அது.
ஹார்ப்பர் வெற்றி பெறக் கூடாது என்பதில் இருந்த ஆர்வம் அத்தோடு தவிடு பொடியானதுடன், லிபரல்களின் தோல்வியை உறுதி செய்த லேட்டனால் தன்னால் அந்த வெற்றியை உறுதி செய்ய முடியாமல் போகும் என்பதுடன் மீண்டும் ஹார்ப்பரிடம் ஆட்சியை ஜாக் லேட்டன் தங்கத் தட்டில் கையளிக்கிறார் என்ற எண்ணமே மேலிட்டது.
புதிய ஜனநாயகக் கட்சி கருத்துக் கணிப்புகளில் முதலிடத்தில் நிற்கிறது என்றதும் பலரும் இம்முறை அரசு அமைக்கக் கூடிய சந்தர்ப்பம் கட்சித் தலைவர் தோமஸ் மல்கெயருக்கு கிட்டப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். வரலாறு இந்த எதிர்பார்ப்புக்கு சாதகமாய் இருந்ததில்லை. 1988ல் பல கருத்துக் கணிப்புகளில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் எட் புறோட்பென்ட் முன்னணியில் நின்றார். ஒவ்வொரு தடவையும், தேர்தல் இன்றைக்கு நடைபெற்றால் அவர் தான் பிரதமர் என்று ஊடகங்கள் எதிர்வு கூறிக் கொண்டிருந்தன. மக்கள் மத்தியில் அவரே பிரதமராவதற்கு தகுதி வாய்ந்தவர் என்ற எண்ணம் இருந்த போதிலும் இறுதியில் மல்றோனியே வெற்றி பெற்றார்.
இதே போல, கருத்துக் கணிப்புகளை நம்பிய ஜாக் லேட்டனும், 'அடுத்த செவ்வாய்க்கிழமை நான் பிரதமராகும் போது...' என்று பலத்த நம்பிக்கையோடு கருத்துக் கூறிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, லிபரல்களின் சரிவினால் வாக்குகளைச் சம்பாதித்த லேட்டன் வரலாற்றில் இல்லாதபடிக்கு கியூபெக்கில் பெரும் வெற்றியைப் பெற்ற போதும், வெற்றிக்கனியை முழுமையாகச் சுவைக்க முடியவில்லை. லிபரல்களைக் கவிழ்த்ததன் மூலம் ஜாக் லேட்டன் மீண்டும் கனடியர்களை ஹார்ப்பரின் பிடிக்குள் வைக்க வழி வகுத்தார்.
அந்த ஜாக் லேட்டன் அலையில் முன்பின் தெரியாதவர்கள், தங்கள் தொகுதிகளுக்கே போகாதவர்கள், சும்மா பெயரைப் போட்டு வைத்தவர்கள் என பலரும் புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஒட்டாவாவுக்கு அள்ளுப்பட்டு, கனடிய ஜனநாயகத்தின் மீதே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் கியுபெக்கிற்கு மேற்கே அந்த அலையினால் ஒன்ராறியோவைக் கடக்க முடியவில்லை. இதனால் ஆட்சிக்கனவு சென்.லோறன்ட் நதியில் சங்கமமானது.
புதிய ஜனநாயகக் கட்சி சஸ்கச்சேவான் மாநிலத்தில் நீண்ட காலம் ஆட்சியமைத்திருந்தது. பழமைவாத அல்பேட்டா மாநிலத்தில் இம்முறை வரலாறு படைத்திருந்தது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்தியரான உஜ்ஜால் டொசான்ஜ் தலைமையில் ஆட்சியமைத்திருந்தது. ஒன்ராறியோவில் பொப் ரே, மனிட்டோபாவில் என்று இப்படி பல்வேறு மாநிலங்களில் ஆட்சியமைத்திருந்தாலும், முழுக் கனடாவுக்குமான சமஷ்டிப் பாராளுமன்றத்தில் லேட்டன் அலையில் எதிர்க்கட்சியாகத் தான் முடிந்ததே ஒழிய, ஆட்சி அமைக்க முடியவில்லை. இது வரை காலமும் மத்திய அரசில் புதிய ஜனநாயக் கட்சி கியுபெக் பிரெஞ்சுக் கட்சிக்குப் பின்னால் நாலாம் கட்சியாகவே தான் இருந்தது. சென்ற தேர்தலில் மட்டுமே ஜாக் லேட்டன் அலையின் புண்ணியத்தில் எதிர்க்கட்சியாக முடிந்தது.
என்னவோ கனடியர்கள் கனடிய சமஷ்டி அரசை நடாத்தக் கூடிய அளவுக்கு இன்னமும் இக்கட்சியில் முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை. எந்த அரசியல் லாபமும் கருதாமல்,தொழிலாளர்களுக்கும், சமூகத்தின் கீழ்நிலையிலும், ஓரங்களிலும் இருப்போருக்கும் சார்பாகக் குரல் எழுப்பி, எந்த வித நிபந்தனையுமற்ற ஆதரவு வழங்கும் கட்சிக்கு அந்தக் குழுக்களில் உள்ளவர்களே வாக்களிப்பதில்லை.
லேட்டன் அலையில் கூட, வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் தரிப்பிடத்தில் நிறுத்தி (Park பண்ணி) வைத்திருப்பதாகவே வர்ணித்திருந்தார்கள். அதாவது லிபரல்களா, கன்சர்வேட்டிவ்களா என்று முடிவு எடுக்க முடியாத நிலையில், எதற்கும் இவர்களுக்கு போட்டு வைப்போம் என்பதாகத் தான் இருந்ததே தவிர, கட்சிக்கான ஆதரவானதாகவோ, ஆட்சியமைப்பதற்கானதாகவோ அல்ல.
இம்முறை மூன்றாம் இடத்தில் நின்ற லிபரல்களுக்கான ஆதரவு தற்போது அதிகரித்திருப்பது, தரிப்பிடத்தில் நிறுத்தி வைத்திருந்தவர்கள் தங்கள் வாக்குகளை நகர்த்தியதால் ஏற்பட்டிருக்கக் கூடும்.
புதிய ஜனநாயகக் கட்சி தனது எதிரியாக கன்சர்வேட்டிவ் கட்சியையே பிரதான எதிரியாகக் கருதி வருகிறது. ஜஸ்டின் ரூடோவிற்கு எதிரான விளம்பரங்கள் மூலம் ஹார்ப்பருக்கு எதிரானவர்களின் வாக்குகளைப் பெறலாம் என்று நம்புகிறது.
கனடிய அரசியலில் எதிர்மறைப் பிரசாரங்கள் பெரிதும் எடுபடுவதில்லை. ஏற்கனவே ஹார்ப்பர் ஜஸ்டின் ரூடோ மீது நடத்திய எதிர்மறைப் பிரசாரங்கள் எடுபடாத நிலையில், புதிய ஜனநாயகக் கட்சியும் தற்போதைய கருத்துக் கணிப்பு மாற்றங்களால் அச்சமுற்ற நிலையில் அதே வழியைப் பின்பற்ற முயல்கிறது.
இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஆதரவைத் திரட்ட முடியுமா என்பது சந்தேகமே!
ஆனால் சிறுபான்மை அரசுகளில் பலத்தை நிர்ணயிக்கும் கட்சியாக இருந்து அந்தக் கட்சி சாதித்தவை பல. சிறுபான்மை அரசு ஏற்படும் பட்சத்தில் புதிய ஜனநாயகக் கட்சி பலச் சமநிலையைக் கட்டுப்படுத்தும் நிலை வந்தால், சாதிக்கக் கூடியவை அனேகம்.
லிபரல்களின் வாக்குகளை அள்ளலாம் என்று புதிய ஜனநாயகக் கட்சி நினைத்தால், புதிய ஜனநாயகக் கட்சியின் வாக்குகளை நுள்ளலாம் என்ற நினைப்பில் பசுமைக் கட்சி உள்ளது. அதன் தலைவர் எலிசபெத் மே மட்டுமே பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். புதிய ஜனநாயகக் கட்சியின் தீவிரவாதம் போதாது என்று நினைக்கும் அதிதீவிரவாதிகளின் வாக்குளைப் பங்குபோட பசுமைக் கட்சி முயன்றாலும் அதற்கான ஆசனங்கள் தலைவருக்கு மட்டுமானதாகவே இருக்கும்.
லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ரூடோ (கொத்துரொட்டி புகழ்!) பியர் ரூடோவின் மகன். இளையவர் என்பதால் அனுபவம் இல்லாதவர் என்பதை வைத்து கன்சர்வேட்டிவ் கட்சி, அவர் ஆளுவதற்கு இன்னமும் தயாராக வளர்ச்சியடையவில்லை என்பதை வைத்தே பிரசாரம் செய்து வந்தது. ஆனால், நடைபெற்ற விவாதங்களில் அவரது திறமையைக் கண்டவர்கள் பலத்த எதிர்பார்ப்புகள் இல்லாததாலோ என்னவோ, அவரில் நம்பிக்கை வைக்கத் தொடங்கியிருப்பதையே சமீபத்திய கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
இதுவரை காலமும் வந்தேறுகுடிகளின் வாக்குவங்கியை 'தன்னுடைய அப்பன் வீட்டுச் சொத்து' மனநிலையில் இருந்த லிபரல் கட்சிக்குப் போட்டியாக, கன்சர்வேட்டிவ் கட்சி வந்தேறுகுடிகளுக்குள் ஊடுருவி தனது வாக்குவங்கியை அதிகரித்திருக்கிறது. அதில் தங்கள் சமூகங்களின் முதுகில் குதிரைச் சவாரி செய்ய விரும்புவோர் முதல் கன்சர்வேட்டிவ்கள் போன்றே பிற்போக்குத்தனமாக சிந்தனைகள் கொண்டோர் வரைக்கும் அவர்களின் பின்னால் சென்றிருக்கிறார்கள்.
மேற்கு மாநிலங்களில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தும் கன்சர்வேட்டிவ் கட்சி, இங்கே குடியேற்றவாசிகளின் நண்பன் என்ற உருவகத்தை ஏற்படுத்த விரும்புகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி, அமெரிக்காவில் ஜோர்ஜ் புஷ்ஷை ஆட்சியில் ஏற்றிய கார்ல் றோவ் போன்றோரின் சிந்தனைகளை கனடிய அரசியலிலும் புகுத்தி ஒரு சாராரை எதிரிகளாக்கி மற்றவர்களை ஒன்று திரட்டச் செய்யும் முயற்சிகளில் ஒன்று தான் இஸ்லாமியப் பெண்களின் முகம் மூடும் நிகாப் விவகாரம். அது சிலநேரங்களில் வேலை செய்யக் கூடும்.
ஆனால், நீண்ட காலமாக அரசில் இருந்து திமிர் நிறைந்த பலர் கடைசியில் தங்கள் கட்சிகளுக்குத் தோல்விகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அமோக ஆதரவு பெற்று ஆட்சியமைத்தவர்கள் தங்கள் ஆட்சிகளின் இறுதிக்காலங்களில் கருத்துக்கணிப்புகளில் மக்கள் ஆதரவை இழந்து, பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே தலைமையைக் கையளித்து வெளியேறியிருக்கிறார்கள்.
கன்சர்வேட்டிவ்களில் இது மல்றோனிக்கு நடந்தது. ஒன்ராறியோவில் மைக் ஹரிஸ்க்கு நடந்தது. லிபரல்களின் கிரெட்ஷியனுக்கும் நடந்தது.
இவ்வளவு காலமும் ஆட்சியிலிருந்த ஹார்ப்பருக்கு கருத்துக் கணிப்பில் அவ்வளவு மோசமான சரிவு ஏற்படாவிட்டாலும், ஆட்சியை இழக்கும் பட்சத்தில் அவரது தலைமைப்பதவிக்கு வேட்டு வைக்கப்படலாம்.
சிறுபான்மை அரசு அமைக்கும் பட்சத்தில் அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்க விரும்பாமல் ஹார்ப்பரே பதவியை விட்டு விலகலாம்.
கருத்துக்கணிப்புகள் எதையும் சொல்லாம். ஆனால் தேர்தல் தினத்தன்று உண்மையில் அளிக்கப்படும் வாக்குகள் தான் வெற்றியை முடிவு செய்கின்றன. அதிலும் தேர்தல் இறுதி நாட்களின் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்று தீர்மானித்தவர்களை விட, கடைசி நேரம் வரை காத்திருப்பவர்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். காற்றடிக்கும் பக்கம் சரியக்கூடிய Swing voters எனப்படும் இவர்கள் கடைசி நேரத்தில் ஏற்படுத்தும் அலைகள் கோபுரவாசிகளைக் குடிசைக்கும் குடிசை வாசிகளைக் கோபுரங்களுக்கும் வைக்கும் வலிமை வாய்ந்தன.
எனவே தேர்தல் தினத்தில் அதிர்ச்சிகளும் காத்திருக்கலாம்.
(
அப்போ தேர்தலில் குதித்திருக்கும் தமிழர்கள் பற்றி..? தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? கனடியர்களாக நினைத்து வாக்களிப்பீர்களாயின் மன உழைச்சல் குறையும். தமிழர்களாக மட்டுமே நினைப்பீர்களாயின் ஏமாற்றமே மிஞ்சும்! வேறு எதைச் சொல்ல?)
You must be logged in to post a comment Login