ட்ரகுலாவும் தேசியத் தலைவரும்
உள்ளிக்கு வைக்கப் போகும் முற்றுப்புள்ளி!
ஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து!(3)
தமிழுணர்வாளர்கள் மாதிரி, வெறுமனே தலையங்கத்தை வாசித்து விட்டு, ட்ரகுலா இரத்த வெறி கொண்டு உயிர் குடிப்பதால் தான், தேசியத் தலைவருடன் ஒப்பிட்டதாக வியாக்கியானம் கொடுத்து இரத்த வெறி கொண்டு அலையாதீர்கள்.
இப்படித் தான் முன்பு ஒரு தடவை, கியூறியஸ் எதையோ எழுதப் போக... தேசியத் தலைவரை பண்டிட் சேதுராமனுடன் ஒப்பிட்டு நிந்தனை பண்ணி விட்டார்கள் என்று குற்றம் சாட்டி, ஒரு புடைவைக் கடையில் சமூக உதவிப் பணம் பெற்றுக் கொண்டு சில டொலர் சம்பளத்திற்கு கொத்தடிமை வேலை செய்த அகதித் தமிழர் ஒருவர் பூபாளம் பத்திரிகையை தடை செய்திருந்தார். ('உந்தப் பேப்பர் இங்க வைக்கேலாது!')
நேற்று மெதுவாய் சில்லென்ற குளிர். வேலை முடிந்து வந்து களத்தில் இறங்கினால், களைகள் நிறைந்தபடி...
தோட்டம் உழப்பட வேண்டியது. கனரக ஆயுதங்களை வெளியில் எடுப்பதாயின், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்தாக வேண்டும். கராஜ் இல்லாத காரணத்தால், கொட்டகை வாசம் செய்யும் கனரக ஆயுதங்கள் குளிர் காலத்தில் அள்ளி, தள்ளி வைக்கப்பட்ட பல்வேறு பொருட்களின் பின்னால்...
எனவே அப்புறமாய் உழலாம் என்று அவசரமாய், பூத்தபடி இருக்கும் களைகளை வேரோடு பிடுங்காமல், மண்வெட்டியால் தோட்டம் பூராவும் நில மட்டத்தில் வெட்டியாயிற்று.
தோட்டத்தில் வேண்டாத களைகளை விட, வளர விடவோ, வெட்டி எறியவோ முடியாதபடிக்கு...
பயிர்கள் களைகளாய்!
நம்ம கீரை, Orach எனப்படும் ஊதா நிறக் கீரை (நம் தோட்டத்தில் பச்சையாயும் உண்டு. எந்த garden catalog கிலும் கண்டதில்லை. புது இனம் நம்ம தோட்டத்தில் உருவாகியிருக்கக் கூடும். கீரை போலச் சமைக்கலாம்.) என பல்வேறு பயிர்கள் சென்ற வருடம் கொட்டிய விதைகளில் முளைத்திருக்கும். அவற்றை கொஞ்சம் வளர விட்டு, பிடுங்கிச் சமைக்கலாமே என்று பிடுங்க மனமில்லாமல், கொத்துவதைத் தாமதப்படுத்த, வேண்டாத களைகள் நிறைத்து விடும்.
இவற்றை விட தோட்டத்தில் களை போல நிறைந்திருக்கிறது... உள்ளி!
பக்கத்து வேலி மசடோனியக் கிழவி மேல் உலகம் போவதற்கு முன்னால், தோட்டம் நிறைய உள்ளி நடும். கிழவியின் தாயகத்து மண்ணில் விளைந்த உள்ளியாக இருக்கலாம். ஊதா கலரில் இருக்கும். கிழவி போய்ச் சேர்ந்ததுடன், தோட்டம் கவனிப்பாரற்றுப் போக... உள்ளி வளர்ந்து, பூத்து, பூவில் உள்ளிகள் தோன்றி, அவை விழுந்து முளைத்து... படிப்படியாக நமது எல்லையையும் தாண்டி உள் நுழைந்து விட்டது...
கூடாரத்துக்குள் ஒட்டகம்...
நாட்டுக்குள் அகதியாய் தமிழன்...
வேலியைக் கடந்து பாய்ந்த உள்ளி!
எல்லாமே ஒன்று தான். உள்ளே இருப்பவனைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கொஞ்ச நாளில் taking over the place.
சொந்தக்காரன் வாழ வழியில்லாமல், துன்பம் தாங்காமல் அலைய, வந்தேறியவை முழுவதற்கும் உரிமை கோரும்!
வந்த உள்ளிகளைப் பிடுங்கினாலும், அடுத்த வளவில் இன்னமும் தொப்புள் கொடி உறவுகள்... இனப்பெருக்கம் செய்தபடிக்கு! அகதிகளாய் அனுப்பி, ஒரே தொகுதியிலேயே மூன்று பேரையும் தமிழராய்... சே... உள்ளியாய் தேர்தலில் நிறுத்த!
தற்போதைய வீட்டுக்காரருக்கு தோட்டம் பற்றி எந்த அக்கறையும் இல்லை.
எப்படியாவது இன அழிப்புச் செய்யலாம் என்றால்... சர்வதேச விசாரணை, யுத்தக் குற்றம் அது இது என்று கொடி பிடித்தபடி புதுத் தலையிடி தோன்றி விடும் என்ற பயம் வேறு.
கிழவியின் உள்ளி போதாதென்று நான் வேறு 'புதிய இன உள்ளி வளர்க்கிறேன் பேர்வழி' என்று வாங்கி வந்து நட்டு...
துன்பத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்.
உள்ளியில் உடலுக்குப் பயன்படும் பல்வேறு விடயங்கள் இருப்பதாக, இணையத்தில் புதிதாய் தோன்றி உள்ள பல சித்த வைத்தியர்கள் அடிக்கடி முகப்புத்தகத்தில் மருந்து சொல்கிறார்கள். (இணைய சித்த வைத்தியர்கள் பற்றி சுவடியில் வாசித்திருக்கக் கூடும். விரைவில் தாயகத்திலும் வரும்!)
எங்கள் ஊரிலும் உள்ளிப் பரியாரி என்று ஒருவர் இருந்தார். அவர் எந்த வருத்தத்திற்குப் போனாலும் உள்ளி பிரஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுப்பாராம்.
பேசாமல்... தோட்டத்தில் நிறைந்திருக்கும் உள்ளியை, இணையத்தில் சர்வரோக நிவாரணி என்று விற்பனை செய்தால் பணம் வரக் கூடும்.
மசடோனியக் கிழவிக்கு ட்ராகுலாவின் ட்ரான்சில்வேனியா கல்லெறி தூரமாக இருந்திருக்கும். உள்ளி மணத்திற்கு ட்ரகுலா அண்டாது என்பது அந்தப் பக்க ஐதீகம். நான் வந்து சேர்வதற்கு முன்பாக கிழவி உள்ளி வளர்த்ததோ தெரியாது. துவேசத்தை உள்ளே வைத்துக் கொண்டு, முகம் நிறையச் சிரிக்கும் கிழவிக்கு என்னைப் பார்க்க சில நேரம் ட்ரகுலா போல இருந்திருக்கக் கூடும். அதிலும் மாலை இருட்டிய பின்பும் தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும் என்னைக் கண்டால் சந்தேகம் வராமலிருக்குமா? நான் வந்து சேர்ந்ததுமே, என் வீட்டுப் பக்கத்தால் தனது வீட்டுப் பின்புறத்திற்கு போகும் வேலிக் கதவுக்கு பூட்டுப் போட்டு பூட்டிய கிழவி. யாரும் குனிந்து மறைந்திருந்தால் தெரியாத முழங்கால் அளவு வேலிச் செடிகளை நான் வந்த பின்னால் நில மட்டத்துடன் வெட்டிய கிழவி.
அப்படி ஒன்றும் திருட்டு முழி இல்லா விட்டாலும், நம் முகராசி அப்படி! சனி பகவான் அனுக்கிரகம். எங்கு போனாலும் அள்ளிக் கொட்டுவார்.
உள்ளியில் பிரதானமாய் இரண்டு வகைகள் உண்டு. Soft Neck, Hard Neck. இதில் Hard Neck ல் உள்ளிக் குமிழ்த் தொகுதியின் நடுவில் கழுத்துப் பகுதியில், வெங்காயப் பூ மாதிரி உள்ளிப்பூ தோன்றிக் காய்ந்து தடி போல இருக்கும். இது குளிர் பிரதேசங்களில் செழித்து வளர்வதால் கனடிய விவசாயிகளின் favorite. மற்றது நுவரெலியா மாதிரி சாதுவான குளிர் உள்ள பகுதிகளுக்கானது.
இதில் கனடிய இனங்களில் மியூசிக் பிரபலமானது. உள்ளிக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம் என்பது நமக்குத் தெரியாது.
Garden சென்டர்களிலும் பெரும் பெட்டிக்கடைகளிலும் செப்டம்பரில் விற்பனைக்கு வருவனவற்றில் பெரிய உள்ளிகளை வாங்கி நடலாம்.
கடைகளில் வாங்குபவற்றைக் கூட நீங்கள் நடலாம். ஆனால் கடையில் விற்பவைகளுக்கு அவை முளைக்காதபடிக்கு இரசாயனக் கலவைகள் தூவுவார்கள். அதிலும் சீனாவிலிருந்து மலிவாக வந்திறங்கும் சிறியவைகளுடன் அதிகம் நேரம் செலவிடாதீர்கள். இந்தச் சிறியவைகளில் நுண்ணியவை அறுவடை செய்யும் போது தப்பிப் பிழைத்து பல்கிப் பெருகி, பெரும் துன்பம் தரும்...அகதித் தமிழன் மாதிரி!
உள்ளியும் டியூலிப் போன்றதால், ஒரு குளிர் காலம் பூராவும் மண்ணுக்குள் இருக்க வேண்டும். எனவே, அக்டோபரில் உள்ளியை தனித் தனியாகப் பிரித்து, உள்ளியின் உயரத்தை விட மூன்று மடங்களுக்கு ஆழத்தில், ஆறு அங்குல இடைவெளியில் நட்ட பின்னால், குப்பைகளால் மூடி விட வேண்டும்.
(குளிர் விட்ட பின்பும் நடலாம். ஆனால் வீரியமாய் வளராது!)
பனி விலகி, வெயில் எறிக்க முளைக்கத் தொடங்கும். அப்போது குப்பைகளை விலக்கி விடலாம். பின்னர் பூக்கும் போது, பூவில் சிறுமணிக் கணக்கில் உள்ளிகள் தோன்றும் முன்னால், இலகுவாக முறியக் கூடிய பதத்தில் கையால் முறித்து, (முறிக்க முடியாதன நார்த்தன்மை கொண்டவை.) வெங்காயப் பூப் போலச் சமைக்கலாம். சாதுவான உள்ளி ருசி தென்படும்.
சாப்பிடுகிறீர்களோ இல்லையோ, பூக்களை முறித்து விட வேண்டும். இல்லாவிட்டால் பூவில் உள்ள விதைகளுக்குச் சத்துப் போக, மண்ணுக்குள் உள்ளவை மெலிந்து போகலாம். அப்புறமாய் ஆடி மாதம் போல, இலைகள் கருகத் தொடங்க கிண்டி, வெயிலில் காய வைத்து பின்னர் நிலக் கீழ் அறைகளில் சேமிக்கலாம்.
அதில் நல்லவற்றை மீண்டும் அக்டோபர் குளிர் தொடங்க நடலாம்.
பூக்களில் உருவாகும் நுண்ணிய உள்ளி விதைகளையும் நடலாம். ஆனால் அவை முழு அளவிலான உள்ளியாக உருவெடுக்க மூன்று ஆண்டுகளுக்கு மேலாகும்.
இதையும் விட, Elephant Garlic என்று பெரிய சைஸ் உள்ளியும் உண்டு. இது உண்மையில் லீக்ஸ் வகையினது. விலையும் கூட. ஒரு நாலு 'உள்ளிப் பல்லு' ஆறேழு டொலருக்கு வாங்கி நட்டு இப்போது பல்கிப் பெருகியுள்ளது. தலையிடி என்னவெனில் பெரிய சைஸ் உள்ளி இன்னொரு இனத்தையும் வாங்கி நட்டதால் எது எது என்று வித்தியாசம் பிடிக்க முடியவில்லை. இம்முறை எப்படியாவது ஆராய்ச்சி பண்ணி இனச்சுத்திகரிப்பு செய்வதாக உத்தேசம்.
ரொறன்ரோவில் கடந்த ஐந்தாண்டுகளாக உள்ளி விழா (Garlic Festival) நடைபெறுகிறது. முதல் வருடம் போய், துன்பத்தை விலை கொடுத்து வாங்கி வந்து, அடுத்த வருடம் உள்ளி வியாபாரியாக இருந்த உத்தேச திட்டம் சனி பகவான் திருவருளால் கைகூடாமல் போயிற்று. இப்போது இரத்த வெறி கொண்டலையும் தமிழுணர்வு ட்ராகுலாக்களுக்கு முகப்புத்தகத்தில் உ(அ)ள்ளி வைப்பு நடக்கிறது.
இந்த உள்ளி விழா இந்த வருடம் புதிய இடத்தில். 601 Christie Street (at St. Clair Ave West), Toronto. Ontario. M6G 4C7, செப்டம்பர் 20ம் திகதி, ஞாயிறு நடைபெறும்.
www.torontogarlicfestival.ca/ இல் விபரங்களைப் பெறலாம். பல்வேறு வகையான உள்ளிகள் விற்பனை, உள்ளி பயன்படுத்தும் பிரபல சமையல்காரர்கள் என பெரும் கொண்டாட்டம்.
இம்முறை எப்படியாவது உள்ளியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் எடுப்பதாய் உத்தேசம். முற்றுப்புள்ளி வைப்பதாயின் தொப்புள் கொடி உறவுகளோடு சேர்த்து இன அழிப்புச் செய்ய வேண்டும்.
இங்கே தான் நம் தேசியத் தலைவர் உதவிக்கு வருகிறார்.
களையெடுப்பு என்று வந்தால் தேசியத் தலைவர் வழியைப் பின் தொடர்வது தான் நல்லது போலிருக்கிறது.
ஈன இரக்கமில்லாமல் போட்டுத் தள்ள வேண்டியது தான்!
You must be logged in to post a comment Login