விபத்துக்குள்ளாக்கும் செல்பேசிகள்
ஒன்ராறியோவில் குடித்து விட்டு வாகனம் செலுத்தி, விபத்துக்குள்ளாகி மரணித்தவர்களின் தொகையை விட, செல்பேசி போன்றவற்றினால் கவனத்தை இழந்து விபத்துக்குள்ளாகி மரணமானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தத் தொகை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னர் விபத்துக்கள் ஏற்படுவதற்கு சாரதிகள் போதையில் இருப்பது முக்கிய காரணமாக இருந்து வந்திருக்கிறது. அதைவிட, வீடியோ பார்த்தபடியும், பின்னால் திரும்பி பின்வாகன பயணிகளுடன் உரையாடியும் கவனத்தை இழந்த நிலையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளானவர்கள் உண்டு.
ஒரு தடவை பெருந்தெரு ஒன்றில், காரில் பெரிய இடவரைபடம் ஒன்றை விரித்து வைத்துப் பார்த்தபடியே வாகனம் செலுத்திக் கொண்டிருந்த டாக்ஸி சாரதி ஒருவரைக் கண்டதுண்டு. முன்பு நண்பர்களுடன் வேலைக்குப் பயணம் செய்யும் போது, பின்னால் திரும்பிக் கதைக்கும் சாரதி நண்பருக்கு அடிக்கடி வீதியைப் பார் என்று ஞாபகமூட்ட வேண்டி இருந்தது.
தற்போது செல்பேசிப் பாவனை அதிகரித்ததிலிருந்து, வாகனம் செலுத்தும்போது, ஒரு கையால் தொலைபேசி பேசுபவர்கள் முதல், அதில் படம் பார்ப்பவர்கள், குறுஞ் செய்தி அனுப்புபவர்கள் என பலரும் அதனால் வரும் ஆபத்துக்களை உணர்ந்து கொள்ளாமல், நடந்து கொள்கின்றனர். கவனம் திசை திருப்பப்பட்ட சில கணங்களுக்குள்ளேயே உயிராபத்தை வருவிக்கக் கூடிய விபத்துக்களில் சிக்கக் கூடும் என்பதை அறியாமல் தங்கள் உயிர்களையும் மற்றவர்களின் உயிர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடக்கூடிய வகையில் வாகனம் செலுத்துகின்றனர்.
ஒன்ராறியோ மட்டுமன்றி, உலகின் பல இடங்களில் வாகனம் செலுத்தும்போது, கவனத்தைத் திசை திருப்பும் வகையில் செல்பேசிகளையோ, மற்றும் உபகரணங்களையோ பயன்படுத்துவது சட்டமூலமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ரொறன்ரோ மேயர் இவ்வாறாக சட்டத்தை மீறி நடந்து கொண்டது பல தடவைகளில் தெரிய வந்தது.
இவ்வாறாக, நீங்கள் விபத்துக்களில் மாட்டிக் கொண்டு, சில தடவைகளில் உயிரிழப்புகளுக்குக் காரண மாகினால், பொலிஸ் விசாரணையின் போது, உங்கள் செல்பேசிப் பாவனை பற்றிய பதிவுகளை தொலைபேசி நிறுவனத்திடம் விசாரணையாளர்கள் பெற்று, விபத்து நடக்கும்போது, உங்கள் செல்பேசி பாவனையில் இருந்ததா என்பதை பொலிசார் இலகுவில் அறிந்து கொள்ள முடியும்.
எனவே வாகனம் செலுத்தும்போது, வாகன ஒலிபெருக்கிகளில் தொலை பேசி உரையாடலை நடத்தக் கூடியதாகவோ, அல்லது காதில் கொழுவக் கூடியதாகவோ புளுரூத் வகை இயர்போன்களைப் பயன்படுத்துங்கள். அருகில் உள்ளோருடனான உரையாடல்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் விட, முட்டாள்தனமாக வாகனம் செலுத்திக் கொண்டே குறுஞ்செய்தி அனுப்பும் விளையாட்டுக்களை அடியோடு நிறுத்துங்கள். தேவையேற்படின் ஓரமாக நிறுத்தி விட்டு உரையாடலைத் தொடரலாம். அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம்.
அப்படி தலைபோகிற அலுவல்கள் என்று வாகனத்தைச் செலுத்திக் கொண்டே குறுஞ் செய்தி அனுப்பப் போனால், தலையும் போகலாம்.
சுவடி சித்திரை 2015
(இவ்வாறானவர்களின் கவனம் சிதறிய வாகனச் செலுத்துகையினால் ஏற்படும் விபத்துக்களில் உங்கள் பிள்ளைகளும் அகப்பட்டுக் கொள்ளலாம். கீழுள்ள பட்டன்களை அழுத்தி எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்)
You must be logged in to post a comment Login