Recent Comments

    கல்லில் தோய்க்காமல் கிழித்த டெனிம்

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    அட்வான்ஸ்ட் லெவல் படித்த காலத்தில் டெனிமையும், கொட்ரோயையும் நண்பன் கேதீஸ் தான் அறிமுகப்படுத்தி வைத்தான்.

    அவனுடைய அக்கா லண்டனில் இருந்ததால் அவனுக்கு வந்திறங்கியது.

    கியூறியஸ்க்கு அப்படி யாரும் வெளிநாட்டில் இல்லாததால், அவனும் ஏதோ ஒரு புடைவைக் கடையில் துணி வாங்கி, மின்சார நிலைய வீதியில் துரையப்பா கட்டிய நவீன சந்தைக்கு அப்பால், மலாயன் கபேக்கு முன்னால் ஒரு தையல் மெஷினும் ஆளும் நிற்கக் கூடிய பெட்டிக் கடை வைத்திருந்த இஸ்லாமிய சகோதரரிடம் அளவு கொடுத்து ஜீன்ஸ் தைத்தாயிற்று.

    அப்போது சங்கானை, பண்டத்தரிப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சிந்தட்டிக் துணியில் பெல்பொட்டம் போட்டு ஸ்டைல் காட்டியவர்கள் எல்லாம் ஜே.ஆரின் திறந்த பொருளாதாரத்தில் வந்திறங்கிய வெளிநாட்டுத் துணிகளில் பெல்ஸ் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

    ஊருக்குள் முதல் முதலாக டெனிம் போட்டதால் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டேன். அதை விட, ரஜனி, கமலைக் கொப்பியடித்த பெல்பொட்ட இளசுகள் கேவலமாகப் பார்த்தன!

    அவர்களுக்கு ஜீன்ஸ் ஒரு வினோதமான உடையாக இருந்தது.

    நமக்கோ கௌபோய் படங்களில் டெனிம் போட்டிருந்த சார்ள் புறொன்சன்கள் கனவில் வந்தார்கள்.

    தோய்க்கத் தோய்க்க சாயம் போக, இன்னும் வினோதமாகப் பார்க்கப்பட்டேன்.

    சக கிராமவாசிகள் என்னுடைய உள நலத்தைப் பற்றி சந்தேகித்திருக்கக் கூடும்.

    பிறகு நண்பர்களுடன் சைக்கிளில் ஏறிப் பயணம் செய்த போது, பாரில் இருந்து பெடல் போட உதவ, பிரேக் பிடிக்கும் ஹாண்டில் கம்பி உரசி, தொடைப் பகுதியி கிழியத் தொடங்;கியது.

    வேறு வழியில்லாமல், பின் பொக்கட்டைக் கழற்றி, தொடைப் பகுதியில் தைத்து, கிழிந்ததை மறைததாயிற்று.

    பின்புறத்தில் பொக்கட் கழற்றிய இடத்தில் சாயம் போகாத புதிய நீலம் மானத்தை வாங்கும்!

    நம்ம பொருளாதார நிலை அப்படி. உடுத்திருக்கும் உடை கிழிந்த பின்னால் தான் அடுத்த உடை வாங்குவதைப் பற்றி யோசிக்கும் நிதி நிலைமை!

    ஸ்டைல் என்பதை விட, போட்டிருக்க உடுப்பு இருக்கிறதே என்பதே பெரிய விசயம்!

    வெளிநாடு வந்து தலையிடி தந்த முன் பொக்கட் ஜீன்ஸ் மாறி, பாண்ட்ஸ்களின் சைட் பொக்கட்டுகள், முழங்காலுக்கு பக்கத்தில் உள்ள பொக்கட்டுகள் வசதியாக வர, டெனிம் பான்ட்ஸ் உத்தியோகபூர்வ சீருடையாக மாறியிருந்தது.

    கௌபோய் படங்களில் ஜீன்ஸோடு போட்டிருக்கும் பெட்டி வடிவ டிசைன் சேட் கூட வாங்கியிருந்தேன்!

    சாயம் போகும், காலில் பின்பகுதி சப்பாத்தில் அகப்பட்டு தேய, கிழியும்.

    கொண்டு திரியும் திறப்புகள் தேய்த்து பொக்கட் கிழிந்து, சில்லறைகள் தலைமறைவாகும்.

    எறிய மனமில்லாமல் போட, அபிதகுஜாம்பாள் புண்ணியத்தில் துண்டு வைத்து தைத்து கொஞ்சக் காலம் பயன் தரும்.

    பிறகு துன்பம் தாங்காமல் அவளே தூக்கி எறிந்து விடுவாள்.

    தேடும் போது, அப்பாவி போல 'எனக்குத் தெரியுமே, நீ எங்க வைக்கிறாய் என்று?' என்ற கேள்வி வரும்.

    வேறு வழியில்லாமல், அடுத்த டெனிமோடு வாழ்க்கை ஓடும்.

    காலப் போக்கில் டெனிம் மீதான பற்றுக் குறைந்து காக்கிக்கு மாறி விட்டிருக்கிறேன்.

    நமது வேலைகளுக்கு கோட், சூட் தேவைப்படாததால், கனடாவில் தேர்தலில் நிற்கும் கனவும் வருவதில்லை.

    காக்கி வசதியானது. ஜீன்ஸ் துணி போல பாரமாகி இளந் தலைமுறை போல உள்ளாடை தெரிய உரிந்து விழாமல், பாரம் குறைவாகவும் நமது வேலைகளின் போது அழுக்குப் படும் போது தெரியாமலும் சமாளிக்கும்.

    இருந்தாலும் இன்னமும் திறப்புகள் சில்லறைகளைத் தலைமறைவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன.

    இப்படியாகத் தானே நமக்கு வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்க...

    கொஞ்ச நாளாக கண்ணில் படுகிறது!

    ஜீன்ஸ்களை கிழித்து தொங்க விட்டபடி நடமாடும் பெண்கள்!

    ஆண்களை விட பெண்களே அதிகமாய்!

    கல்லில் தோய்த்தது என்று சொல்லி தோய்த்த டெனிமை விற்பது போல, கிழித்தபடியே விற்கிறார்களா, இல்லை இவர்கள் வாங்கிக் கிழிக்கிறார்களா என்பதை அறிவதற்கு, தெரிந்தவர்களாகவும் இல்லை.

    அதை விசாரிக்கப் போனால் நமது உளநலம் பற்றிய சந்தேகம் அவர்களுக்கு எழவும் கூடும்.

    கோடை காலத்தில் காற்றோட்டத்திற்கு வசதியாக இருக்கக் கூடும்.

    என்றாலும், போடும் போது, ஒட்டைகளுக்குள்ளால் கால் போகாமல் போட, தாண்டவம் ஆடித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.

    35 வருடத்திற்கு முன் தேவையும், குடும்ப நிலைமையும் கருதிப் போட்ட கிழிந்த உடை இன்று நாகரிகமாயிருக்கிறது.

    ஊருக்குள் கிழிந்த காற்சட்டையுடன் திரிந்த கியூறியஸை ஒரு மாதிரிப் பார்த்த காலம் போய், இப்போ ஊரே காற்சட்டையைக் கிழித்தபடி அலைகிறது.

    ஆனாலும், இவர்களின் மனநிலை வளர்ச்சி பற்றிய சந்தேகம் கியூறியஸ்க்கு வரவேயில்லை! சிரிப்பு வரும்!

    ஆனால் யாராவது பெல்பொட்டம் போட்டிருப்பதைக் கண்டால் மட்டும் அந்தச் சந்தேகம் மறக்காமல் வந்து விடுகிறது!

    Postad



    You must be logged in to post a comment Login