(எமது உலகு மேலும் மேலும் சந்தைக் கலாசாரமாக மாறிவருகின்றது. இது எமது வாழ்வின் இனிய நிலைகளை உடைப்பது என்பது தெரியாமல் நாம் அங்கு விழுகின்றோம். வாழ்வின் அனைத்துப் பிரிவுகளையும் காலனித்துவப்படுத்திவருவது, அடிமைப்படுத்திவருவது இந்த சந்தைக் கலாசாரம். எழுத்தும் இப்போது இதனது அடிமையே. முன்பு நாம் எழுத்தைத் தேடுவோம். இப்போது எழுத்தின் மீதான விளம்பரம்தான் எமது கதவைத் தட்டும். படைப்பாளிகளின் கவர்ச்சியான படங்களையும், புத்தகங்களின் அழகிய உருவங்களையும் முகப்புத்தகத்தில் நிறையக் காணலாம். பின் முதலாளித்துவ வெளியீடுகள் பரிசுகள் பலருக்குக் கொடுத்து அவர்கள் மூலமாக சந்தைக் கலாசாரத்தை நெறிப்படுத்தும். அரசுகளின் தெரிவுகளையும் மறக்கக் கூடாது. தமிழின் எழுத்து உலகு விளம்பர வீதிகளில் நடக்கின்றது என்பதை பேரா.க.பஞ்சாங்கம் “விளம்பர யுகத்தில் இலக்கிய வெளி படும்பாடு” எனும் காத்திரமான கட்டுரையால் தெளிவாக்கியுள்ளார். “காக்கைச் சிறகினிலே” எனும் இதழில் பிரசுரமான இக்கட்டுரை நன்றியுடன் PDF இல் உங்கள் வாசிப்புக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழின் காத்திரமான படைப்பாளியும், கரிசல் எழுத்தின் மூலகர்களில் ஒருவருமான பா.செயப்பிரகாசம் “விளம்பர யுகத்தில் மனிதனின் மரணம்” எனும் கட்டுரையை பேரா.க.பஞ்சாங்கத்தின் கருத்துக்களின் தொடர்ச்சியாக “காக்கைச் சிறகினிலே” இதழில் எழுதியுள்ளார். இது மிகவும் நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. க.கலாமோகன்)
( காக்கைச் சிறகினிலே -ஜுலை இதழில் வெளியான பேரா.க பஞ்சாங்கத்தின் “ விளம்பர யுகத்தில் இலக்கியவெளி படும்பாடு “ என்னும் கட்டுரைக்கு எதிர்வினைச் செயல் அல்ல ; அதன் தொடர்ச்சி எனக் கொள்க.)
அடிப்படையில் தன்னை வெளிப்படுத்தவேண்டும் என்ற உணர்வில் தோன்றுகிறது பேச்சும் எழுத்தும். பேச்சு- தேவையின் அடிப்படையில் உறவாடல் நிகழ்த்த பிறப்பது . பேச்சின் தொடர்ச்சி எழுத்து. மனித சிந்தனையின் வெளிப்பாட்டுத்தன்மையின் வேறு வேறு வடிவங்கள்தாம் இவை. இவை இரண்டும் பிணைந்த மற்றொரு வடிவம் கலை.
பேச்சையே நயமாக வடிவமைத்துக்கொண்டவர்கள் நமது வட்டார நாட்டுப்புற மக்கள். பேச்சில் ஒருவகை நயம் வெளிப்படுகிற போது இலக்கியமாகிறது. வீட்டில் தாய்- மகள் சச்சரவு நடக்கிறது. வழக்கமாக ”விளக்குமாத்தால அடி” என்று வசைவரும். விளக்குமாத்தாலே அடி – என்பது வசை. ‘உன்னை அடிக்காத வெளக்குமாறு வீட்டில் இருக்கலாமா’- இது கலை.
ஒரு கிராமப்புற மாணவி பள்ளிக்குச் செல்ல பேருந்துக்கு ஓடுகிறாள். பேருந்து புறப்பட்டுப் போய்விடுகிறது. ‘போய்ட்டியா? ஒங்கம்மா குடலறுக்கப்போறியா?’ என்று ஆங்காரம் கொள்கிறபோது அது கலை.
ஒருவன் தனக்குள் சிந்தித்தல், எண்ணுதல் நிகழுகையில் அவன் முதல் மனிதன். முதல் மனிதனை வெளிக்காட்டும் பேச்சு, எழுத்து, கலை – இரண்டாவது மனிதன். தனக்குள் தான் கொள்ளும் எண்ணத்தை, சிந்திப்பை, பிறருடன், சமுதாயத்துடன் தொடர்பாடல் செய்கையில் இரண்டாவது மனிதன் உருவாகிறான்.
தன் எண்ணத்தை, சிந்திப்பை மற்றொருவருக்குக் கடத்தவேண்டும் எனும் தன்முனைப்பு இலக்கியத்துக்கு அடிப்படை. சுயமோக வெளிப்பாடு என இதனைக் கொள்ளலாம்; இந்த சுயமோக வெளிப்பாட்டைத் தீர்த்துக்கொள்வதில் விளம்பர யுக்திகள் எந்த அளவு வினையாற்றுகின்றன?இங்கு சந்தைப்படுத்தல் என்ற குயுக்தி எந்தப்புள்ளியில் பிறப்பெடுக்கிறது?
இன்றைய நவீன யுகத்தில் , நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் நோக்கத்துக்கு இலக்கியவாதிகள் தேவையாகிறார்கள்! தங்கள் ‘சுய பசி’ தீர்த்துக்கொள்ள இலக்கியவாதிகளுக்கு நிறுவனங்கள் (ஊடக நிறுவனங்கள்) தேவைப்படுகின்றன. இதை அப்படியே கலைஞர்கள், சிந்தனைத் தளச் செயல்பாட்டிலுள்ளோர், அறிவியல் ஆய்வாளர் என விரிவுபடுத்திக் கொண்டே போகலாம்.
இந்த முதல் ஆள் இரண்டாவது மனிதனாக முகம் காட்டுகிற இந்தப் புள்ளி தான் சமுதாயத்துடனான உறவாடல். இந்த இடம்தான் சூதானமாய் இருக்கவேண்டிய இடம். தனக்குள் தோன்றுகிற எல்லா நினைப்புகளையும் சிந்திப்புக்களையும் கருதுவன அனைத்தையும் மூன்றாவது ஆளாய் நிற்கிற சமுதாயத்துக்கு கொட்டிவிட முடியாது. முதல் ஆள் தனக்குத்தானே பொறுப்புள்ள சிந்திப்பாளனாக எல்லைகளை நிர்ணயித்துக்கொள்ள கடப்பாடுடையவன். தன் பேச்சு, எழுத்து, கருத்து அனைத்துக்கும் பொறுப்பு கூறுகிற கடப்பாடுடையவன் இந்த முதல் மனிதன். பிறரால் கருதப்படவேண்டும், கவனிக்கப்படவேண்டும் என்ற எல்லைகளை கருதிக்கொள்வது ஓரளவு சரி. ஏனெனில் இது சிறு பிள்ளைகள் விளையாட்டில்லை. ஆட்டத்தில் பிழை செய்தால் அல்லது ஒத்திசைவு ஆகலையெனில் ‘தம்மாட்டை’ என்று சொல்லி சிறு பிள்ளைகள் விலகிக்கொள்வது போல், ஒருதரம் நாம் வெளிப்படுத்திய கருத்தை ‘தம்மாட்டை’ சொல்லி எளிதாய் விலகிக் கொள்ள முடியாது. பேச்சின்- எழுத்தின் அறம் அல்ல. கொட்டம் வைத்து மாடுகளுக்கு மருந்து புகட்டுவதுபோல், நமக்குரிய கருத்துக்களை, வார்த்தைகளை மற்றவர்க்கு புகட்டியபின், அதை அவர்களின் உட்கிரகிப்பில் அருமருந்தாய் ஆகிறதா அல்லது வாந்தி எடுக்கவைக்கிறதா என அவதானிப்பது ,இந்த இரண்டாவது மனிதனின் பொறுப்பு.உதிர்ந்த சருகுக் குப்பைமேல் காற்று நடப்பதுபோல் உள்ளீடற்று கொட்டிய சலசலப்பை அவர்களும் எத்தனை காலம் சுமந்து திரிவார்கள்!இந்நிலையில் சமுதாயத்துக்கு ,அதனுள் இயங்கும் மக்கள் தொகுதிக்கு தன்னுள் இருப்பவைகளைக் கையளிக்க வேண்டியவனாகிறான் முதல்மனிதன்.இந்த முதல்மனிதன் இரண்டாவது மனிதனை வடிவமைக்கிறவனாக ஆகிறான்.
இப்புள்ளியில்தான் சுயசிந்தனை- சுயமோகமற்றதான சுயசிந்தனை அவசியப்படுகிறது.எக்காலத்தும் வளர்முகத்தை நோக்கியே அடிஎடுத்து வைக்கும் சமுதாயத்தை மேலும் மேலும் பாய்ச்சலில் செலுத்தும் சுயசிந்தனை ஆற்றல் பெருக்கெடுக்க வேண்டும்.
இன்றைய தகவல் தொழில் நுட்ப ,தன்மோக விளம்பர யுகத்தில்
எழுத்து அறம்,ஊடக அறம், பதிப்பக அறம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. ‘சந்தை அறம்’ ஒன்றேதான் உண்டு. இவர்கள்தான் வெற்றியாளர்கள். எப்போதும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் இருப்பதாக காட்டிக்கொள்ள ‘சந்தை அறம்’துணை செய்கிறது.
முள்ளிவாய்க்கால் சென்ற நூற்றாண்டிலேயே தீர்மானிக்கப்பட்ட ஒரு சம்பவம். ‘ சிங்கள – பவுத்தம் தவிர அனைத்து இனமும் மதமும் வெறுக்கத்தக்கன; இலங்கையிலிருந்து விரட்டப்படவேண்டியன’ என்ற கொள்கையை முன்வைத்து காரியங்கள் ஆற்றியவர் ‘அநங்காரிக தர்மபாலா’என்ற புத்தபிக்கு.
இன ஒழிப்பு, மத ஒழிப்பு சனநாயக விரோதச் செயல்களுக்கு முதல் வித்திட்டவர் இந்த ‘அநங்காரிக தர்மபாலா’, இவருக்கு புத்தர் வாழ்ந்த உஜ்ஜயனி நகரில் உள்ள சாஞ்சியில் சிலை நிறுவி இலங்கை அதிபர் ‘சிறிபால சேன’ திறந்து வைத்திட இந்தியப் பிரதமர் மோடி கைதட்டி மகிழ்ந்த செய்தி நாம் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் முன்னும் பின்னும் நடந்தேறிய ,நடந்துகொண்டிருக்கிற கொடூரங்களினை தமிழக எழுத்தாளர்களில் பலரும் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ளாதது மட்டுமல்ல, நஞ்சு உமிழ்ந்த எழுத்துக்களால் கிண்டலும் கேலியும் அடித்துக்கொண்டிருந்த ‘ஷோபா சக்தி’ போன்றவர்களின் எழுத்துக்கள் ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டன. எவ்வளவு கலைநுட்பத்தோடு பின்னப்பட்டிருப்பினும் அதன் பளபளப்பான ஒளி அல்ல, அதன் உள்ளிருக்கும் தார்மீகம்தான் தகத்தகாயம் என்று உணரப் படவில்லை.. முள்ளிவாய்க்கால் அவலத்தை நியாயமாகப் பதிவுசெய்த குணா. கவியழகன், சயந்தன், தமிழ்க்கவி, தமிழ்நதி போன்றவர்களின் எழுத்துக்கள் இன்னும் தமிழிலக்கியப் பரப்பில் கொண்டாடப்படவில்லை. கருத்துத்தள எதிர்நிலை சக்திகளை வால்முறுக்கி விடுகிற, கொம்புசீவி விடுகிற காரியார்த்தத்தை தமிழலக்கியத் தளமும், ஊடகத்தளமும் தொடர்ந்து இயக்கிக்கொண்டே இருக்கின்றன. நிறுவனமயமாக்கலுக்கு தாமாக ஆட்படுகிறார்கள்.சுயசிந்தனையை விசைத்திறனாகக் கொள்ளாத இவர்களை நிறுவனமயம் தன்வயப் படுத்துகிறது.
சந்தை விளம்பரங்களால் கண்டுகொள்ளப்படாதவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். புறக்கணிக்கப்படுவதான உணர்வுடன் ஒதுக்கம் கொள்ள தொடங்குகிறார்கள்.
நவீன தொழில்நுட்பம்-என்ற ஒன்று விளம்பர மோகத்திற்கு அற்புதமாக கைகொடுக்கிறது. கணினி வேகம் – கைவேகம் – மூளைவேகம் போட்டி போட்டு முந்துகின்றன. கையால் எழுதிய காலம் மலையேறிவிட்டது. இது கணினியால் எழுதும் காலம். ஒருநூல் இருநூல் அல்ல, ஐந்து, பத்து என ஒட்டுக்க நூல் வெளியிட்டு விளம்பரம் கொள்கிறார்கள். எழுத்தாளனும் பதிப்பகமும் தம்மை பரபரப்பாக வைத்துக் கொள்வதின் வழி தம்மை வாசக மூளைக்குள் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். உண்மைத் தன்மைகளுக்குள் நெடிய பயணம் செய்து அறியும் சுயசிந்தனையற்ற வாசகர்கள் கூட்டம் ஒன்றும் புதிதாக உருவாகி வருகிறது. ஊடக புழுகுகளுக்கும் இலக்கிய பொய்மைகளுக்கும் ஆட்படவைக்கும் வணிக எழுத்தாளர்கள் உருவாகி இருப்பது போல , வணிக வாசகர்கள் என ஒரு புதிய படை உருவாகி இருக்கிறது. தாம் உள்வாங்குவதை சுயசிந்தனை அலசலுக்கு ஆட்படுத்தி தம்மை வாழிப்பாக்கி (செழிப்பாக்கி) வளர்த்துக் கொள்வதில்லை. காது, கண், மூளை வழியாய் உள்வாங்கியதை உடனே மரணிக்கச் செய்வது மட்டுமல்லாமல் அத்தாசமாக தூக்கியெறிந்துவிட்டு, அடுத்த சடலத்துக்காக காத்திருப்பவர்களாக ஆகியிருக்கிறது நுகர்வுக் கலாச்சார வாசகர்கள் கூட்டம்.
ஊடகங்களுக்கு, பதிப்பகங்களுக்கு சந்தை முதன்மை! அறிவுக்கூர்மை எனும் அறமல்ல. ஒரு எடுத்துக்காட்டு சாருநிவேதிதா. மாதொரு பாகன் நாவலை முன்னிறுத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பையொட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சி ‘நேர்படப் பேசு’ விவாதம் ;மாதொரு பாகன் நாவல் இலக்கியத் தரத்துக்கு வடிவம் பெறவில்லையென்ற அவரது முந்திய கருத்தின் வழியில் நாவலின் தராதரம் பற்றி பேசியிருந்தால் ஒரு இலக்கியவாதியின் மதிப்பீடு எனக் கொள்ளலாம். ஆனால் பெருமாள் முருகன் ஒரு சமூகத்தின் பண்பாட்டையே கறைப்படுத்தி விட்டார் என சாதிச் சமூகத்துக்கு ஆதரவாக பரப்புரை நிகழ்த்தினார்.வங்கொடுமைகளையும் வங்கொலைகளையும் பெண்ணடிமைத்தனத்தையும் பேணும் ஒரு சாதிச்சமூகத்தை மென்மையான சமூகம் என வாதாடினார்.மேற்கு மண்டலத்தானுக்கு அது மேன்மையான சமூகம் என காதில் ஒலித்திருக்கும் . சமூக நீதிக்காக நிற்கிற அனைவரையும் முகம் சுளிக்க வைத்து முரண்பட்டுப் பேசுதல் ஒரு விளம்பர யுக்தி! ஆனால் 12.7.2006 தமிழ் இந்து நாளிதழில் ‘இந்திய எழுத்தாளனும் உலகமயமாக்கலும்’ பற்றி சாரு நிவேதிதா உலகமயமாக்கலை பிளந்து கட்டியிருக்கிறார். அவ்வப்போது முரண்பட்டு விகற்பமாய் சொத்தை முத்துக்களைக் கொட்டி எதிர்வினையை ஆளப்பார்ப்பது ஒரு வகை. இதில் கொம்பன்கள் இருக்கிறார்கள். ஊடக வாசகக் கூட்டத்தின் கவனத்திலிருந்து ஒதுங்கிவிடக் கூடாது என்பதற்காகவே எலும்புத் துண்டுகளை வீசியெறியும் உத்தி இது.
இந்த புள்ளியில் நான் தொடக்கத்தில் சுட்டிக்காட்டிய முதல் மனிதன் இரண்டாவது மனிதனை மரணிக்கச் செய்கிறான்.எனில் இவ்விடத்தில் ,சமுதாய தொடர்பாடலின் நோக்கம் வேறொன்றாக மாறிவிடுகிறது எனப்பொருள்.
13.7.2016 விகடன் வார இதழ்முகப்பு அட்டை “ஆண்திமிர் அடக்கு” என்ற தலைப்புடன் வெளியாகியிருந்தது. அதன் கீழே “நான்கு பெண்கள் நான்கு பார்வைகள் என்ற உபதலைப்பு. மென்பொறியாளர் சுவாதி கொலை தொடர்பாக நான்கு பெண் எழுத்தாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் அவரவர் பார்வைகளில் வெளிப்பட்டிருந்தன.
நால்வரின் கருத்துக்களும் எந்த ஆண் திமிரை விமர்சித்தனவோ, அதன் எதிர்நிலையில் வெளிப்பட்டிருந்தது அட்டைப்படம். உள்பக்கங்களில் என்ன கருத்து வெளிப்பட்டாலும் விகடனின் அட்டைப்படம் பெயருக்கும் மாறுவது இல்லை. சினிமா நடிகர் நடிகைகளின் உருவ மோகிப்பு என்ற வழக்கமான பாணியில் ஒரு நடிகனின் நெஞ்சுக்கூட்டுக்குள் காதல் வழிய ஒரு நடிகை பம்மி அணைத்துக்கொண்டிருக்கும் படம். தலைப்பு ‘ஆண் திமிர் அடக்கு’. நினைத்து நினைத்து, சொல்லி சொல்லிச் சிரிக்கும் முரண்நகையாக இல்லையா இது?
சமுதாய முன்னகர்வுக்கானது போல் ஒன்றைத் தூக்கி வீசுவது, கவ்விக்கொள்ளத் தாவுகையில் இந்தா இதைப் புடிச்சுக்கோ என்று வேறொன்றை வீசி பழசை மறக்காட்டுவது நல்லதொரு நயவஞ்சக உத்தி.
‘ஓட்டாஞ்சில்லு தட்டித்தாறேன்
ஓடி ஓடி வெயிலடி
சுக்கான் கல்லு தட்டித் தாறேன்
சுள்ளு சுள்ளுன்னு வெயிலடி’
சிறு பெண் பிள்ளைகள் வெயிலுக்கு படையல் செய்து ஏச்சங் காட்டுவது போல,எதையாவது பேசி, காட்டி வணிகத்தை பெருக்கமாய் வைத்துக்கொள்ளுதலே ஊடக அறம்.இந்த ஏச்சங்காட்டுனான் வேலையை யார் பெரும் அளவில் செய்கிறானோ அவன் பெரிய இலக்கியவாதி, பதிப்பாளி.
இந்த நயத்தகு நாகரீகத்தை சென்ற இதழ் கட்டுரையில் பேரா. பஞ்சு நயமாக காட்டுகிறார். ‘மனிதர்கள் அடிப்படையில் விளம்பரப் பிராணிகள்; தன்னைத், தன் சூழலை, தான் படைத்ததை விளம்பரப்படுத்த பல்வேறு பருண்மையான, நுண்மையான உத்திகளை பயன்படுத்துவதன் மூலம் தன் அதிகாரத்தின் எல்லையை மட்டுமல்ல, பொருளாதார வளத்தையும் விரிவாக்கிக்கொள்ள முடிகிறது. (கவனிக்க – 13.7.2016 விகடன்)
தகவல்தொழில்நுட்ப ஊடகப் பெருக்கமும் அதன் வினையும் – சமுதாய இயக்கம் அனைத்தையும் தீர்மானிக்கிற சக்தியாக திமிரி மேலெழுந்து நிற்கின்றன. ஒற்றைச் சக்தியாய் திகிடு முகுடாய் நிற்கும் அதன் முன் – மற்றவை அனைத்தும் ஒதுக்கம் கொண்டுவிட்டன.தமிழகத்தின் பிரதான ,எரியும் பிரச்சினைகளைக் கூட திசைமாற்றம் செய்துள்ளன.கிராமப்புறத்தில் சிறுபிள்ளைகள் குண்டக்க மண்டக்க படுத்திருப்பதை “ கால்மாடு தலைமாடாய்ப் படுத்திருக்குக” என்பார்கள். அதுபோல் விளம்பரப் பேராற்றல் பிரச்சினைகளை கால்மாடு தலைமாடாய் திசைமாற்றி வைத்துள்ளன என்பதற்கு “ கபாலி” ஒரு சாட்சி !
இன்றைக்கு தமிழ்நாட்டை ஆட்டிப்படைப்பது எது? விசுவரூபமாய் காட்டப்படும் பிரச்சினை எது? அமெரிக்காவில் உட்கார்ந்துள்ள நடிகன் ரஜினியின் ‘கபாலி’. அந்தத் திரைப்படம் இந்தியாவில் வெள்ளை ஆதிக்கத்தை விரட்டி விடியலை வாங்கித் தந்ததல்லவா? அதற்காக அஞ்சல்துறை சிறப்பு உறைகள் வெளியிடுகிறது. சிறப்பு விமானம் மூலம் பெங்களுருலிருந்து சென்னைக்கு ஏர் ஆசிய நிறுவனம் ரசிகர்களை அழைத்து வருகிறது. அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 500 திரைகள், இலங்கை, ஆஸ்திரேலியா, அரபுதேசத்தில் 175 திரைகள், மலேசியா, சிங்கப்பூரில் 200 திரைகள், இதர நாடுகளில் 25 திரைகள் என்று 1000 வெளிநாட்டுத்திரைகளில் தோன்றப்போகிறான் ‘கபாலி’. “உலகெங்கும் பறந்து செல்வீர் கபாலி திரைப்படம் போல் எமது விமானத்தில்”என ‘ஏர் ஆசியா நிறுவனம்’ தொடர்ந்து விளம்பரம் அருளிக்கொண்டிருக்கிறது.
இத்தனை ஆர்ப்பாட்டங்கள், அரங்கேறுகைகளுக்கும் பிதாவான ரஜினி என்ற பிம்பம் அமெரிக்காவில் ஒரு நகரத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஒரு சாமியாரின் ஆசிரமத்தில் அமர்ந்து அட்டகாசமாய் ஒரு ஞானியின் பாத்திரத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது.
‘கபாலி’ செய்த சாதனைப் பட்டியல் கணக்கிலடங்காது.
1. மக்களின் வாழ்வாதாரமான தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கிறது.
2. டிசம்பர் 2015- ஜனவரி 2016- களில் தலைநகர் சென்னையின் மீதும் ஐந்து மாவட்ட மக்களின் மேலும் நடந்த மழை வெள்ள தடுப்புக்கு நிரந்தர உபாயத்தை விரித்துப்பேசுகிறது.
3. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வணிகக்கொள்ளையர்களை வளைத்துப் பந்தாடுகிறது.
4. கனிம வளங்கள் சூறை, ஆற்றுமணல் கொள்ளை, வனம் அழிப்பு செய்யும் மனிதவிரோதிகளை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளியுள்ளது.
5. தூக்குக் கயிற்றின் முன் வாழ்நாள் முழுக்க நின்று பரிதவிக்கும் ஏழு தமிழர் உயிரை மீட்டு வந்திருக்கிறது.
6. சமகால பிரச்சினைகள் அத்தனைக்கும் அறிவியல் பூர்வமான தீர்வுகளை முன்வைத்துச் செல்கிறது .
ஒன்னொன்னா நூறா, ஒருமிக்க நூறா – என்கிற வியப்பு மேலிடுகிற சூழலில் “ரஜினி தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகள் என்ன?” என்று முகநூலில் நண்பர் கே. ராஜாபாலகிருஷ்ணன், நாகையிலிருந்து கேள்விகளைப் பதிவிடுகிறார்:
1. சென்னை வெள்ளம் வந்தபோது எங்கடா கபாலி?
2. தமிழக மீனவர் பிரச்சினை – எங்கடா கபாலி?
3. தமிழ்நாட்டில் கபாலியின் முதலீடு என்ன?
4. நதிநீர் இணைப்புக்கு கொடுப்பதாகச் சொன்ன ஒரு கோடி எங்கே?
5. காவேரி பிரச்சினையில் கபாலி யார் பக்கம்?
கூத்தாடிகளை தூக்கி வைத்து ஆடாதீர்கள். ஏற்கனவே தமிழ்நாட்டை ஒரு கூத்தாடி ஆட்டிவைப்பது போதும்” என்கிறார் நண்பர் ராஜா பாலகிருஷ்ணன் .உங்களுக்கும் சொல்ல நிறைய இருக்கும்.
இது தகவல்தொழில்நுட்ப யுகம்;ஒவ்வொரு தகவல் பரிமாற்றத்துள்ளும் – ஒரு விளம்பரம் உயிர்வாழ்கிறது.
“பத்திரிக்கை, எழுத்து, ஒலி,ஒளி முதலிய பல்வேறு ஊடகங்கள் மூலம் தொடர்ந்துவிடாமல் விளம்பரம் செய்துகொண்டே இருப்பதன்மூலம் நல்லெண்ணெய், ரின்சோப்பு – என்கிற மாதிரி ஒரு பிராண்ட் அந்தஸ்தை இலக்கியத்துறை சார்ந்த மனிதர்களும் கைப்பற்றிக்கொள்கிறார்கள்” என்று சொல்கிறார் பேரா.க. பஞ்சு. “இன்று தமிழ் இலக்கியவெளியில் படைப்பை விட, அதை விளம்பரப்படுத்துவதில்தான் பெருங்கவனம் குவிக்கப்படுகிறது” – என்ற உண்மையை அவர் கொண்டு வந்து நிறுத்துகிறபோது , மூஞ்சி சப்பழிந்த போகிற மாதிரி எழுத்தாளன் அறைவாங்குகிறான் .
படைப்புக் கனத்தை விட விளம்பரக்கனமும் கவனமும் மேற்கை போடுகிறது. கனமற்றவையும் கவனத்திற்குரியனவாக ஆக்கப்படுவதற்கு தொடர்ந்து இயங்கும் விளம்பரயுக்தி காரணம். ஒரு படைப்பு – அதன் தகுதிப்பாட்டின் காரணமாக பேசப்படும் என்ற நினைப்பெல்லாம் புராதனமாகிப் போனது. சங்கச் சுவடிபோல் பொற்றாமரைக்குளத்தில் மேலெழுத்து வந்து காலகாலத்துக்கும் நிற்கும் என்பதெல்லாம் பொய்மை. தானாகவே எல்லாம் நடக்கும் என்பதெல்லாம் பழங்கால நம்பிக்கை. “தானாய் மாறும் எல்லாம் என்பது பழைய பொய்யடா” என்கிற மாதிரி அது ஒரு பொய்மை. “குருடி அவல் திங்க, ஏழு பேர் விளக்குப் பிடிக்க”- என்கிற மாதிரி – பத்திரிக்கை, எழுத்து, ஒலி, ஒளி , டிஜிட்டல்பலகை, மேடை என்று எத்தனை விளக்குகள் உண்டோ அத்தனையயும் தொடர்ந்து தனக்காக ஏந்திக் கொண்டிருப்பதே இலக்கிய படைப்பினை மார்க்கண்டேயமாக ஆக்கும் இன்றைய யுக்தி.
விளம்பரத் தகிடுதித்தங்கள் கற்பனைகளுக்குள்ளும் அடங்காதவை. அது புரட்சியாளர் லெனின் முதல் போராளி சேகுவாரா வரை தின்று ஜீரணித்து கஷாயம் குடிக்கும். தன்னகத்தே உண்மையின் உள்ளீடு இல்லாத ஒவ்வொரு மனிதனாய் புதிதுபுதிதாய்ப் பிறப்பித்துக் கொண்டே இருக்கும்.
தன்னளவிலான சிந்திப்பு, எழுச்சி, தார்மீக அறம்,அறச் சீற்றம், தருக்க நியாயம் – என மனச்சாட்சியுடன் இயங்குபவன்தான் முதல்மனிதன். உலகுடனான தொடர்பாடலில் சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்க வேண்டியது இரண்டாவது மனிதன்.சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்க வேண்டிய இந்த இரண்டாவது மனிதன் மரணமடைய, அவ்விடத்தில் அனைத்தையும் எரித்துச் சாம்பாராக்கி பின்னுக்குத்தள்ளி முதலும் முடிவுமாக தன்னை அகலித்துக் காட்டும் மற்றொருவன் உருவாகிறான். அவனே விளம்பரயுகத்தின் இந்த மனிதன். இவ்விதமே சமூகத்தின் மனச்சாட்சியான இலக்கியவாதியின் மரணம் இன்று நிகழ்ந்துள்ளது .
பேரா.க.பஞ்சாங்கம் அவர்களின் கட்டுரையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
You must be logged in to post a comment Login