Recent Comments

    திருவிழாவில் திருட்டுக் கூட்டம்!

    Cheat(28.09.2012 வெளிவந்த பூபாளம் இதழில் வந்த ஏடு இட்டோர் இயல். சில நேரம் தற்போதைக்கும் அது பொருந்தலாம்.) எங்கள் வாழ்வில் கோயில் திருவிழாவிற்கு தனியான இடம் உண்டு. தன்னுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் மேலே உள்ளவன் விடுதலை பெற்றுத் தருவான் என்று நம்புகிற ஒவ்வொரு மனிதனும் கடவுளின் பெருமையை முழு ஊரோடு கூடிக் கொண்டாடுகின்ற விழாவே திருவிழா. விழாக்கோலம் என்பது போல, கோலாகலமாக இறைவனைக் கூடித் தொழுது, தேரில் வைத்து ஊரைச் சுற்றி முழு ஊரையுமே தன் அருளால் அந்த இறைவன் நிறைக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடவுள் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு மனிதனும் திருவிழாக்களில் பக்தி சிரத்தையுடன் கலந்து கொள்கிறான். நொந்து போயிருக்கும் ஏழை, எளியவர்களும், செல்வச் செழிப்போடு இருக்கும் செல்வந்தர்களும் வேறுபாடின்றி, இறைவன் சந்நிதானத்தில் வந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, தன் மனவேதனைகளையும் சொல்லி அழுது அவற்றிற்கு அந்த இறைவனிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொழுகிறார்கள். ஆனால், திருவிழா வெறுமனே இந்தப் பக்தகோடிகள் கலந்து கொள்கிற நிகழ்வு அல்ல. மதங்களும் கோயில்களும் மக் களை ஏமாற்றுகின்றன என்னும் சீர்திருத்த வாதிகளும், மதம் ஒரு போதைப்பொருள் என்று கூறும் தத்துவவாதிகளும், கடவுள் இல்லையென்று வாதிடுகின்ற நாத்திகர்களும் கூடத் தான் ஓரமாய் நின்று போவோர் வருவோருக்கு எல்லாம் 'உங்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள், இந்த தெய்வங்களும் சாமிகளும் பொய்' என்று கூறிக் கொண்டிருப்பார்கள். தூய்மையான மனதுடன் கடவுள் மீது நம்பிக்கை வைப்போரைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக, 'கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது' என்று கூறும் பகுத்தறிவு வாதிகளும் இருப்பார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் இதையெல்லாம் பொருட்டுத்துவதில்லை. தங்களையுடைய நம்பிக்கையைக் கடவுள் சிதறடிக்க மாட்டார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. இவர்களை விட, அங்கே திரளும் கூட்டத்தைப் பார்த்து வியாபாரிகள் கடை விரிக்கிறார்கள். கடவுளுக்குத் தீபம் காட்டியும் மலர் தூவியும் வழிபட, கற்பூரம் மற்றும் பூக்கள் விற்கும் வியாபாரிகள் மட்டுமன்றி, அதை ஒரு சந்தையாகவே நினைத்து சகல பொருட்களையும் விற்கும் வியாபாரிகளும் அங்கே கூடத் தான் செய்கிறார்கள்.இவர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பதால் வேண்டியவர்கள் தங்களுக்குத் தேவைப்பட்டதை அங்கே போய் வாங்கிக் கொள்ள முடியும். அவர்களின் வியாபாரம் கோயிலின் புனிதத்தைக் கெடுப்பதில்லை. வழிபாட்டுக்குரிய இடத்துக்குள் வியாபாரம் தலையை நுழைப்பதில்லை. ஆனால் திருவிழா இந்தப் பக்தர்களையும் வியாபாரிகளையும் நாத்திகர்களையும் மட்டும் வர வைப்பதில்லை. அங்கே தீய நோக்கங்களுடன் உள்ளவர்களும் வருகிறார்கள். இளம் பெண்களுடன் அங்க சேஷ்டை செய்யும் வக்கிரபுத்தி கொண்ட இளைஞர்கள் வருகிறார்கள். கோயில் பிரகாரத்துக்குள் செருப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன். கும்பலோடு கும்பலாக சன நெரிசலுக்குள் பைகளுக்குள் கை விட்டுத் திருடும் முடிச்சுமாறிகள் வருவார்கள். இந்தத் திருடர்கள் எல்லாம் கறுப்பு உடை அணிந்து முகமூடிகளுடன் வருவதில்லை. இவர்கள் எல்லாம் பக்தர்களைப் போலவே வேசம் போட்டு, பக்தர்களோடு பக்தர்களாக நெரிசலுக்குள் உருவிக் கொண்டு போய் விடுவார்கள். இங்கே கூட, கூட்டத்திற்குள் கழுத்து நகையைத் திருடும் திருடர்கள் நிறையவே திருவிழாக்களில் உள்ளனர். இந்தச் சிறிய திருடர்களுக்கெல்லாம் அப்பனான திருடர்களும் இருப்பார்கள். கடவுளுக்கும் தங்களுக்கும் நேரடியான தொலைபேசி இணைப்பு இருப்பதாகக் காட்டும் கூட்டம். இறைவனைத் தரிசிப்பதற்காக வரும் ஏழை, எளியவர்களுக்கு இறைவனின் அருள் தங்கள் ஊடாகத்தான் கிடைக்கும் என்று நம்ப வைக்க முயற்சிக்கும் கூட்டம். திறந்த மேனியராய், சந்தனம், விபூதி சகிதம் பக்திப் பழங்களாய், இறைவன் சந்நிதானத்தில் தங்களுக்குத் தான் முதலிடம், இறைவன் தங்களுக்கு எல்லாம் வரம் கொடுத்து, அருள் பாலித்து முடிந்து எஞ்சியதைத் தான் இந்த ஏழை, எளியவர்களுக்கு கொடுப்பான் என்பது போல நடிப்பவர்கள். ஐந்து ரூபா கொடுத்து அர்ச்சனை செய்யும் ஏழையை விட, ஆயிரம் ரூபாய் கொடுத்து யாகம் நடத்தும் பணக்காரனுக்கு அதிகமாய் அருள் பாலிக்கும் கடவுளோடு எங்களுக்கும் கூடத் தான் பிரச்சனை. அந்த இறைவன் பக்தர்கள் கொடுக்கும் பணத்திற்குத் தகுந்தது போலத் தான் அருள் பாலிப்பான் என்று கூறுகின்ற இந்த ஆசாமிகள் உண்மையாகவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். மனிதனுடைய கடவுள் நம்பிக்கை பயமும் சார்ந்தது. தான் செய்கின்ற அநியாயங்களுக்கும் பாவங்களுக்கும் கடவுள் தண்டனை தருவான் என்ற பயம் இருப்பது தான் இந்த உலகத்தில் நடைபெறும் அநியாயங்களை ஓரளவுக்காவது இந்த மட்டத்தில் வைத்திருக்கிறது. அப்படியாக இந்தப் பிறவியில் செய்யும் பாவங்களுக்கான தண்டனை அடுத்த பிறவியில் கிடைக்கும் என்று பயப்படுபவன் அந்தப் பாவங்களைச் செய்யத் துணியான். ஆனால், ஏழைகளும் அப்பாவிகளும் கடவுளை நம்பிக் கொடுக்கின்ற பணத்தைத் திருடுபவன் உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாதவன். தன் பாவங்களுக்கு கடவுளிடம் தண்டனை கிடைக்கும் என்று நம்பாதவன். தான் செய்கின்ற கெட்ட காரியங்களை மேலே இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற பயம் இல்லாதவன். இப்படியாகக் கடவுளை நம்பாதவன் தான் அந்தத் திருவிழாவில் பக்திப் பழமாய் வேடம் போட்டு வருவான். உள்ளத்தைப் பார்க்கிறவன் கடவுள் என்று நம்புகிறோம். அந்தக் கடவுளுக்கு இந்த வேடம் எல்லாம் புரியாமல் இருக்குமா? ஆனால் இந்தப் பக்திப் பழங்கள் வேடம் போடுவது கடவுளுக்காக அல்ல, தன்னைப் பார்க்கிற மற்றவர்களுக்காக. உன்னை விட நான் கடவுளோடு நெருக்கமானவன், என்னுடைய தோற்றம் அதற்கு சாட்சி என்பது போல கடவுளின் கர்ப்பக்கிருகத்திற்கான கதவுத் திறப்பு தன்னிடம் இருப்பது போலத் தான் இந்தப் பக்திப் பழங்கள் பாசாங்கு செய்கின்றன. கடவுளையும் கடவுள் வாழும் அந்தக் கோயிலையும் சொந்தம் கொண்டாடி, அதில் வருகின்ற வருமானத்தை தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தாமல், கடவுளைக் காட்டிச் சேர்க்கும் பணத்தை விழுங்கி ஏப்பம் விடுகிற இந்த ஆசாமிகள் அப்பாவிகளான பக்தர்களை விட, கடவுளுக்கு ஒன்றும் நெருக்கமானவர்களும் அல்ல. வேண்டப்பட்டவர்களும் அல்ல. கடவுளின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றால், கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பயத்திற்குள்ளாக்கி, அப்பாவி மக்களின் பணத்தைக் கறப்பது தான் இந்தப் பக்திப் பழங்களின் நோக்கம். இந்தப் பக்திப் பழங்களுக்கு எல்லாம் திருவிழாவில் தெருவோரத்தில் கடை விரிக்கும் வியாபாரிகள் மீது கோபம் இருக்காது. காரணம், அவர்களின் வியாபாரத்தில் பங்கு கிடைக்கும் என்பதால். போலிப் பொருட்களை விற்றுவிட்டு, திருவிழாவோடு திருவிழாவாக மறைந்து விடுகிற வியாபாரிகள் பற்றியும் அவர்களுக்கு அக்கறை கிடையாது. மக்கள் ஏமாந்தால் அவர்களுக்கு என்ன? தங்களுடைய பங்குப் பணம் பற்றிய கவலை அவர்களுக்கு. இந்தக் கடவுளின் ஏகபிரதிநிதிகளுக்கு திருவிழாவில் முடிச்சுமாறும் திருடர்கள் பற்றியும் கவலை கிடையாது. இந்த ஏமாளிக் கூட்டத்தின் பணத்தைத் திருடும் இன்னொரு திருடனோடு பகைக்கக் கூடாது என்ற தொழில் தர்மம். ஆனால் இவர்களுக்கு ஒரு கூட்டத்தோடு மட்டும் கோபம் வரும். இறைவனின் நாமத்தினாலே அந்தக் கூட்டத்தைப் பகிரங்கமாகவே சபிப்பார்கள். அதுதான் அந்த பகுத்தறிவாளர் கூட்டம். காரணம் தங்கள் பிழைப்புக்கு குந்தகமாய் இருப்பவர்கள் என்பதால். பகுத்தறிவாளர்கள் கடவுளை நம்பாதது அவர்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. தாங்களே, கடவுளை நம்பாமல் தானே கடவுள் பற்றிய பயம் இன்றி கோயிலில் திருடுகிறார்கள். தங்கள் திருட்டு அம்பலமாகிறதே என்பதால் தான், முடிந்தவரைக்கும் அந்தப் பகுத்தறிவு வாதிகள் மேல் வசைமாரி பொழிவார்கள். எங்கள் மதத்தை இழிவுபடுத்துகிறார்கள், நிந்திக்கிறார்கள், அந்நிய மதத்தினர் இவர்களுக்கு எல்லாம் பணம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டுவார்கள். இந்தத் திருவிழா போன்றது தான் எங்கள் போராட்டத் திருவிழாவும்! இந்தப் போராட்டத் திருவிழாவில், தலைவருக்கும் தங்களுக்கும் நேரடித் தொடர்பு என்று கதை விட்ட ஆசாடபூதிகள் அதிகம். கடவுளின் ஏகபிரதிநிதிகள் தாங்களே என நடிக்கும் திருட்டுக் கூட்டம் போல, போராட்டத்தை தாங்கள் மட்டுமே காப்பாற்றுவதாக நடித்து, பையை நிறைத்த முடிச்சுமாறிகள் இங்கே அதிகம். மதத்தின் பெயரால் கொள்ளை யடித்தவர்கள் போல, போராட்டத்தின் பெயரால் பணம் சேர்த்தவர்கள் எங்கள் சமூகத்தில் நிறைய! போராட்டத்தின் இறுதியில் அங்கே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாத நிலையிலும், கப்பல் அனுப்புவோம், ஆயுதம் அனுப்புவோம், உணவு அனுப்புவோம் என்று தலைவரைக் காட்டிச் சுருட்டியவர்கள் இவர்கள். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பது போல, தேசியத் தலைவர் அவர்கள் அங்கே இருக்கிறார், இங்கே இருக்கிறார் என்று பட்டப்பகலில் ஏமாற்றுவித்தை காட்டுபவர்கள் இவர்கள். அவர்கள் எல்லாம் இரகசியமாக கரந்துறைந்து போராட்டம் நடத்தியவர்கள் அல்ல. பகிரங்கமாகவே வந்து, கடவுளின் பிரதிநிதிகள் நாங்கள், தரப்படும் பணத்தின் அளவுக்கேற்ப அருளும் கிடைக்கும் என்று கதை சொல்லி மிரட்டிக் கறந்தவர்கள் இவர்கள். இந்தத் திருடர்கள், எல்லோரையும் எங்களுக்குத் தெரியும். தங்கள் பிழைப்புக்கு குந்தகமாக இருக்கும் எவரையும் பற்றி, தங்கள் குட்டை அம்பலமாக்கும் எவரைப் பற்றியும் அவதூறு சொல்ல இவர்கள் தயங்குவதில்லை. தமிழ்த் தேசியத்திற்கு எதிராக இருக்கிறார்கள், தமிழினத்தை இழிவுபடுத்துகிறார்கள், அன்னிய சக்திகளிடம் பணம் வாங்கிக் கொண்டு செயற்படுகிறார்கள் என்றெல்லாம் இந்தப் பகற் கொள்ளைக்காரர்கள் குற்றம் சாட்டுவார்கள். பகுத்தறிவு வாதிகள் தாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக கடவுள் இல்லை என்று சொல்வதில்லை. அவர்கள் இந்த அப்பாவி மக்களைத் திருடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காகவே, 'கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விட்டது' என்கிறார்கள். திருவிழாவில் பக்தரைப் போலவே பகல் வேசம் காட்டி, தேசியத் தலைவரின் பெயரால், போராட்டத்தின் பெயரால், இனவிடுதலையின் பெயரால், பாமர மக்களை வலையினில் மாட்டி இன்னமும் பிழைப்பு நடத்த முயலும் இந்தத் திருட்டுக் கூட்டத்தை இனம் காணுவோம்! பணத்தைக் கொடுங்கள், ஈழம் கிடைக்கும் என்று இன்னமும் கொள்ளையிட முயலும் இந்தக் கூட்டத்தை கேள்வி கேட்போம். கடவுளைக் காட்டு என்பது போல, தேசியத் தலைவர் எங்கே என்றெல்லாம் கேட்க வேண்டியதில்லை. கொடுத்த பணம் எங்கே? அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது என்பதைத் துணிந்து கேட்போம்! இப்போது கேட்கும் பணத்திற்கு என்ன திட்டம் இருக்கிறது என்பதையும் கேட்போம்! கடவுளின் பேரால், மதத்தின் பேரால் மக்கள் பணத்தைச் சுருட்டுபவர்கள் போல, போராட்டத்தின் பெயரால், தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் இரத்தத்தின் மேல், பணத்தைச் சுருட்டிய இந்தத் திருட்டுக் கூட்டத்தை, தன் வாழ்நாளையே விடுதலைக்காய் ஈந்த தலைவரின் உயிரைக் காப்பாற்றக் கூடப் பணத்தைக் கொடுக்காமல் சுருட்டிய இந்த பகற்கொள்ளையர்களை அடையாளம் காணுவோம்.

    Postad



    You must be logged in to post a comment Login