(எச்சரிக்கை! இது ஒரு வயது வந்தவர்களுக்கு மட்டுமான பதிவு!)
எண்பதுகளின் ஆரம்பத்தில் Lee Van Cleef உடன் கறுப்பின நடிகர்களான ஜிம் பிரவுண், பிரெட் வில்லியம்சன், என்டர் த ட்ராகன் புகழ் ஜிம் கெலி ஆகியோர் நடித்த Take A Hard Ride என்ற படம் வந்தது.
கௌபோய் படங்களில் Spaghetti Western என்ற ஒரு வகையுண்டு. Spaghetti நூடில்ஸ்க்கு பெயர் போன இத்தாலிய இயக்குனர்கள், தயாரிப்பார்களால் எடுக்கப்பட்ட கௌபோய் படங்கள் இவ்வாறு அழைக்கப்பட்டன.
இதே போல Bud Spencer, Terrence Hill நடித்த நகைச்சுவை கௌபோய் படங்களும் அந்த நாளில் பிரபலம்.
இந்த Take A Hard Ride ம் அந்த ரகம் தான். அதில் வந்த சில நகைச்சுவைக் காட்சிகள் அப்போது பிரசித்தம்.
அதில் ஒரு பாலியல் தொழிலாளி (விபசாரி என்றால் புத்திசீவிகளோடு கம்பு சுத்த வேண்டியிருக்கும்!) தன் வாடிக்கையாளர்களை தனது பின்புறத்தில் கையெழுத்து வைக்கச் சொல்வார். அதில் ஏற்கனவே பலரின் கையெழுத்துகள் இருக்க, நடிகர் தேர்தல் வாக்களிப்பு மாதிரி புள்ளடி போடுவார்.
நான் சொல்ல வந்த விடயம் இன்னொரு காட்சி சம்பந்தப்பட்டது. ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முயற்சித்தால், அந்தப் பெண்ணின் கணவன் அவள் வேறு யாருடனும் உறவு கொள்ள முடியாதபடிக்கு கற்புக் கவசம் ஒன்றை பூட்டுப் போட்டு மாட்டி விட்டுப் போயிருப்பார். அவதிப்பட்ட நாயகன் அதைத் துப்பாக்கியால் சுட்டு உடைத்து தனது வேட்கையைத் தீர்த்துக் கொள்வார்.
Chastity Belt எனப்படும் இந்த உபகரணம் உலோகத்தினால் செய்யப்பட்டிருக்கும். இயற்கைக்கடன்களை நிறைவேற்றுவதற்கு மட்டும் இடைவெளி விட்டு, வேறெந்த ஆணும் அந்தப் பெண்ணை நெருங்காதபடிக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கவசங்கள். யுத்தத்திற்கு சென்ற ஆண்கள் தாங்கள் திரும்பி வரும்வரைக்கும் தங்கள் துணைவியின் கற்புக்கு களங்கம் வராமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் இவற்றை அணிந்து அதற்கு பூட்டு போட்டு திறப்பைக் கொண்டு சென்று விடுவார்களாம்.
இது தொடர்பான இன்னொரு ஜோக்…
மன்னர் ஒருவர் யுத்தத்திற்கு போகும் போது, தன் மந்திரியை அழைத்து ‘மந்திரியாரே, யுத்தத்தில் நான் இறந்தால் அந்தப்புரம் உமக்குத் தான், இந்த திகதிக்குள் நான் திரும்பி வராவிட்டால் அந்தப்புரத்தை திறக்கலாம்’ என்று சாவியைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.
மன்னர் யுத்த களத்திற்கு கஜ, ரத, துர, பதாதிகளுடன் நாட்டு எல்லைக்கு சென்று கொண்டிருக்க…
‘மன்னா, சற்றுப் பொறுங்கள்’ என்று மலைகள் எங்கும் எதிரொலிக்க ஒரு சத்தம்…
புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவசரமாய் குதிரையில் துரத்திக் களைத்து விழுந்து வந்த மந்திரி சொன்னாராம்…
‘மன்னா, திறப்பை மாறித் தந்து விட்டீர்கள்!’
அந்த கற்புக் கவசம் அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தது. கிட்டத்தட்ட சித்திரவதைக்கான உபகரணங்கள் போல தோற்றத்திலும் செயலிலும் இருந்த இந்தக் கவசம் பெண்களுக்கு நோய்களைக் கொண்டு வரக் கூடியது.
அதுசரி, இப்போது அந்தக் கதைக்கான அவசரம் என்ன? திறப்பை யாராச்சும் மாறித் தந்து விட்டார்களா? என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும்.
‘புனிதப் போராட்ட
புலி’வால் தமிழ்த்தேசியத்தின்
கன்னித்திரைச் சவ்வு கிழிந்து
கற்புக்கு களங்கம் வராதிருக்க…
திரைப்பட விழாவில்
படத்தை திரையிட மறுத்த
அறிவுக் கொழுந்துகள்,
பின்னுக்கு நின்று
முறுக்கி விட்ட
குள்ள நரிகளைப் பார்த்த போது…
இந்தக் கற்புக் கவசத்தின் நினைவு வந்து தொலைத்தது.
You must be logged in to post a comment Login