இடுக்கண் களையும் செல்பேசி
செல்பேசிகள் எல்லாம் இன்றைக்கு உடம்பின் ஒரு அவயவமாகவே மாறி விட்ட பின்னால், உடுக்கை இழந்தவன் கை போல, செல்பேசியை இழந்தாலும், அதனால் ஏற்படும் மன உளைச்சல் சொல்லி மாளாது. அருகில் இருக்கும் இடுக்கண் களையும் நட்புக்கே, குறுஞ்செய்தி அனுப்ப உதவும் உயிர்காப்புக் கருவி அல்லவா! உங்கள் செல்பேசி வேறு யார் கைபட்டாலும், உங்கள் மனைவிக்குத் தெரியாமல் காதலிக்கு அனுப்பும் குறும் செய்திகள், உளம் கவர்ந்தவருக்கு அனுப்ப பதிவு செய்த நிர்வாண வீடியோ என்றெல்லாம் மற்றவர்கள் பார்க்க முடியாதபடிக்கு நுழைவுச் சொற்களைப் போட்டு, பூட்டி வைத்திருப்பீர்கள்.
இதனால் உங்கள் செல்பேசி தொலைந்து, வேறு யாராவது கையில் பட்டால், அது யாருடைய செல்பேசி என்று நுழைவுச் சொல் இன்றிப் பார்வையிட முடியாது. அதையும் விட, நீங்கள் விபத்துக்குள்ளாகியோ, மயக்கமுற்றோ பாதிப்புக்குள்ளாகும்போது, உங்களைப் பற்றி அவசர மருத்துவத் தகவல்களையோ, அல்லது உங்களது உடல் நிலை பற்றி அறிவிக்க வேண்டிய உறவுகளின் விபரங்கள் பற்றியோ யாருக்கும் தெரியாமல் போகலாம். எனவே, உங்கள் செல்பேசிகளில் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகள், மருந்துகள், உடல்நிலை பற்றிய மருத்துவத் தகவல்கள், உங்களையோ, உங்கள் உறவுகளையோ தொடர்பு கொள்ளக் கூடிய அவசரத் தொலைபேசி இலக்கங்களையோ பதிவு செய்து விட்டால், உங்கள் இரகசியங்களை அறிந்து கொள்ளாமலேயே, உங்களைப் பற்றிய விபரங்களைப் பார்வையிடலாம். குறிப்பாக பாடசாலை தொடங்கப் போவதால், உங்கள் பிள்ளைகளின் செல்பேசிகளில் இந்த விபரங்களைப் பதிவு செய்வது முக்கியம். அவர்கள் அடிக்கடி செல்பேசிகளைத் தொலைக்கக் கூடும். அல்லது ஏதாவது ஆபத்து, அந்தரம் என்றால் உங்களைத் தொடர்பு கொள்வதற்கு உங்கள் இலக்கங்களை அவர்களின் செல்பேசியில் பதிவு செய்வது ஆபத்துக்கு உதவும்.
ICE எனப்படும் அதாவது In Case of Emergency (ஆபத்துகளின் போது) என்று இந்த விபரங்களை செல்பேசிகளில் பதிவு செய்வது எப்படி?
நீங்கள் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அலையும் ஐபோன் ரசிகத் தமிழராயின்...
iOS 8 க்கு பின்னான செயலிகள் கொண்ட ஐபோன்களில் Apple Health App பை திறவுங்கள். அதில் கீழே வலப்பக்க மூலையில் உள்ள Medical Info வில் தட்டுங்கள். Create Medical ID யில் தட்டுங்கள்.
மேல் பகுதியில் Show When Locked என்பது பச்சை நிறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பொருத்தமான சகல தகவல்களையும் அதில் பூர்த்தி செய்யுங்கள். ஏதாவது அலர்ஜிகள் ஒத்துக் கொள்ளாமைகள், பாவிக்கும் மருந்துகள் போன்ற விபரங்கள் உட்பட.
உங்கள் Contact App பில் ஆபத்து நேரங்களில் தொடர்பு கொள்ளக் கூடிய உறவுகளின் பெயர்கள், இலக்கங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது Health App பில் அந்த உறவுகளின் பெயர்களைச் சேர்க்க முடியும்.
முடிந்ததும் Done என்பதை அழுத்தி நிரந்தரப் பதிவு செய்யுங்கள். (Save), நீங்கள் பதிவு செய்ததை உறுதி செய்து கொள்ள, உங்கள் செல்பேசியை Lock பண்ணுங்கள். திரும்பவும் அதை துயில் எழுப்பி, அதை பாஸ்கோட் போடாமல், Slide பண்ணுங்கள். அப்போது எமர்ஜன்சி என்பது மேல் பகுதியில் தெரியும். அதை Press பண்ணும்போது, புது திரைஒன்று தொலைபேசி அழைப்புக்கான இலக்க Key Pad உடன் உங்கள் மருத்துவ தகவல்கள் கீழே இடப் புறத்தில் தோன்றும். Medical ID ஐ அழுத்துங்கள். அதில் நீங்கள் பதிவு செய்த விபரங்களுடன் ஒரு தொலைபேசிப் படமும் இருக்கும். அதை அழுத்த அது தானாகவே அந்த இலக்கத்தை அழைக்கும்.
Apple App Store ல் ICE App கள் இருக்கின்றன. ஆனால் Lock பண்ணிய செல்பேசிகளில் ஆபத்து நேரங்களில் பயனற்றவை. எப்போதும் உங்கள் செல்பேசிகளை Lock பண்ணியே வைத்திருங்கள்.
பணம் இல்லாமல் தலையைச் சொறியும் நம்மைப் போன்ற அன்ட்ரோய் பாவனையாளர் எனின், அன்ட்ரோய்ட் செல்பேசிகள் கடவுச்சொற்களை விட, விரலால் கீறும் வடிவங்களாலேயே திறக்கும்.
அதில் உங்கள் Settings இல் Security யை அழுத்துங்கள். அதில் Owner Info பகுதியில் உங்கள் மருத்துவ விடயங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய விடயங்களை பதிவு செய்யுங்கள். செல்பேசி மூடப்பட்ட வேளைகளில் அவை முன் திரையில் அந்த விபரங்களைக் காண்பிக்கும். உங்கள் காணாமல் போன செல்பேசியைக் கண்டெடுத்தவர்களுக்கும் ஆபத்து நேரங்களில் முதல் உதவி செய்வோருக்கும் இது உதவியாக இருக்கும்.
எதற்கும் உங்கள் சொந்த செல்பேசியில் கவர்ச்சிப் படங்கள் எடுப்பதைத் தவிருங்கள். யாராவது தவறானவர்களின் கையில் பட்டால் முகப்புத்தகத் தாரகையாக ஒரே இரவில் மாறும் வாய்ப்பு அதிகம்.
You must be logged in to post a comment Login