மனிதர்களுக்கு இடையிலான பேதங்கள் என்னில் எப்போதும் பல கேள்விகளை எழுப்பி வந்திருக்கிறது. அதிலும் யாழ்ப்பாணத்து வர்ணாசிரம தர்மத்துக்குள்ளும், பொருளாதார வேறுபாடுகளுக்கும் இடையில் மிகவும் கீழேயுள்ள மட்டங்களில் இருந்து வந்து, இந்த பேதங்களின் பாதிப்பை நேரடியாக கண்டு அனுபவித்து வந்தாலும், அந்த அவமானங்களால் வந்த கோபத்தை விடவும், மனிதன் இன்னொரு மனிதனை மனிதனாகவேனும் ஏற்க மறுப்பதன் காரணம் என்ன என்ற கேள்வி எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது.
நான் இன்ன சாதியில் பிறந்தேன், இன்ன மதத்தில் பிறந்தேன், இன்ன இனத்தில் பிறந்தேன், இன்ன மொழி பேசுகிறேன், இன்ன நாட்டில் பிறந்தேன் என்ற விடயங்கள் நான் தெரிவு செய்து வந்தவையல்ல. ஆனால், நான் யார், அதாவது மனிதன் என்ற வகையில் எனக்கு இருக்கும் பண்புகள் என்பது இந்த காரணிகளாலும் வடிவமைக்கப்பட்டவையே. என்னுடைய குண நலன்கள், செயற்பாடுகள் போன்றவற்றில் இந்த விடயங்களின் பாதிப்பு நிறைய இருக்கிறது. ஆனால் இந்த விடயங்கள் என்னை இன்னொருவரில் இருந்து மேலானவராகவோ, அல்லது தீண்டத் தகாதவராகவோ ஆக்குவதற்கான காரணங்களை விளங்கிக் கொள்வது தான் நான் முதலில் சொன்ன, எனக்குள்ளே எழுந்த கேள்விகள்.
என்னைப் பொறுத்தவரைக்கும் எனது சாதியோ, மதமோ, இனமோ, நாடோ எது என்பது குறித்து பெருமைப்படவோ, வெட்கப்படவோ வேண்டிய தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் இதெல்லாம் நான் தெரிவு செய்து கொண்டவை அல்ல. நான் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் இருந்தாலும், எல்லாவற்றிலும் உச்சமான குழு ஒன்றில் பிறக்க முடிவு செய்திருப்பேன் என்பதும் இல்லை. மனிதன் என்ற ரீதியில் நான் யார், என்னுடைய பண்புகள் எது என்பது தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது.
இங்கே என்னை மற்ற இனத்தவர்கள் ஒரு இந்தியன் என்ற வகைக்குள் தான் வரையறுக்கிறார்கள். நான் இலங்கையன் என்பதும் தமிழன் என்பதும் நான் சொல்லித் தான் தெரிய வரும். அதுவும் புலிகளின் புண்ணியத்தில் தமிழ் ரைகர் என்ற பெயருக்கான வியாக்கியானமும் அந்தப் பயங்கரவாதத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற கைகழுவலும் இதற்குப் பின்பானது.
பிறகு என்னுடைய கிறிஸ்தவப் பெயர் என் உண்மையான பெயர் தான், ஏதோ ஒரு தமிழ்ப் பெயரைத் திரித்து வந்தது அல்ல என்ற விளக்கம் இதற்குப் அடுத்ததானதாக இருக்கும். இதில் எந்தக் கட்டத்திலும் என்னுடைய சாதி எது என்ற கேள்வி வராது. மற்ற இனங்களைப் பொறுத்தவரைக்கும் தமிழனின் ஆண்டானும் அடிமையும் வெறும் அகதிகள், வந்தேறு குடிகள் மட்டும் தான்.
எங்களுடைய ஊரில் பெரிய கடை ஒன்றை வைத்திருந்த ஒருவரைச் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். நான் வீட்டில் இருந்து வீரகேசரி வாங்க தொலைதூரம் நடந்து போகும் போது, இவர் காலையில் ஒரு கதிரையில் உட்கார்ந்திருப்பார். மலையகச் சிறுவன் ஒருவன் கடைக்கு முன்னால் கூட்டி, சந்தனம் தெளித்து, சாம்பிராணி பிடித்து முடியும் வரைக்கும் அதில் உட்கார்ந்திருப்பார். மடிப்புக் கலையாத சேட், புதிதாக தோன்றும் சாரம், கை மணிக்கூடு, மோதிரம் சகிதம் உட்கார்ந்திருப்பார். கடையில் வேலைக்காரர்கள், சொந்தமாய் லொறி வைத்திருந்து கூலிக்கு ட்ரைவர் வைத்து வியாபாரம் செய்த உயர்சாதியினர் அவர்.
வீரகேசரி பேப்பர் வாசித்த காலம் போய், கனடாவில் நான் பேப்பர் விட்டு ஒரு கடைக்குக் கொண்டு போன போது ஒரு கடையில் மீன் வெட்டிக் கொண்டிருந்தார், சம்பளத்திற்கு. உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு பரிதாபமும் கவலையும் தான் வந்தது, இப்படிச் செல்வாக்கான மனிதனுக்கு இந்தக் கதியா என்று.
ஒரு வெள்ளை இனவெறியன் எங்கள் இரண்டு பேரையும் இங்கே கண்டால், அகதி என்று தான் சொல்வான். அவர் உயர்ந்த சாதி என்பதற்காக நீயும் ஆரியன் என்று அவருக்கு மரியாதை தரப் போவதில்லை. ஆனால் இதையும் விளங்கிக் கொள்ளாமல், இன்னமும் கனடாவில் சாதித் தடிப்புடன் பலர் இருக்கிறார்கள்.
அடுத்த மனிதனை மனிதனாக மதிக்கும் பழக்கம் இல்லாமல் அடக்கிக் கொண்டு, என்னை இன்னொருவன் அடக்கும் போது அநீதி என்று கூக்குரல் இடுவது எந்த விதமான நியாயமும் இல்லாது என்பது தான் என்னுடைய கருத்து.
மனிதம், மானிடம் என்று நாங்கள் சொல்கிற, மரத்தில் தொங்கிப் பாய்ந்து பின்னால் நிமிர்ந்து நடக்கின்ற மனிதன் என்ற நிலைக்கு வந்த முழு மனித இனத்திற்குள், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய யாழ்ப்பாணத்து முதல் குரங்குக்கு, வவுனியாக் குரங்கை விட தான் மேலானவன் என்ற எண்ணம் எப்படி வந்திருக்கும்? ஆய்வாளர்கள் கண்டறிந்த மனித இனத்தின் முதல் தாயான ஆபிரிக்க ஏவாள் குரங்கின் வழித் தோன்றல்களைப் பார்த்து 'கறுவல்' என்று இழித்துச் சொல்வதற்கான கூர்ப்பு, அல்லது திமிர், இந்த யாழ்ப்பாணக் குரங்குக்கு எங்கிருந்து வந்தது? தானும் அந்த ஏவாளின் வழித் தோன்றலான 'நீக்ரோயிட்' குழுவுக்குள்ளே இருக்கும் விஞ்ஞான உண்மை தெரியாமல், இந்த யாழ்ப்பாணக் குரங்கு, மொங்கலோயிட் குரங்குகளைப் பார்த்து 'சப்பட்டை' என்றும் சொல்லிக் கொள்ளும்.
வெளிறிப் போன கோக்கோசொயிட் குரங்கு தன்னைப் பார்த்து 'அகதி' என்று சொல்லும்போது மட்டும் இதற்கு மனித இனத்தின் வேறுபாடு பற்றிக் கோபம் வரும். எல்லா வந்தேறு குடி அகதிகளும் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற எண்ணம் வரும். தன்னை இன்னொருவன் அடக்காத வரைக்கும் இதற்கு இன்னொருவனை ஏறி மிதிப்பதில் எந்த வெட்கமும் இல்லை.
விலங்குகளும் பறவைகளும் கூட்டமாக செயற்படுவது போல, மனிதர்களும் கூட்டம் கூட்டமாய் சேர்ந்து வாழும் பழக்கம் வந்ததிலிருந்தோ என்னவோ, இந்த பேதங்கள் காலாகாலமாய் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரே சிறகைக் கொண்ட பறவைகள் ஒன்றாக திரிவது என்பது போல, மற்ற இறகு கொண்ட பறவைக் கூட்டங்களைப் புறக்கணித்தே வருகின்றன.
தங்களை ஒரு குழுவின் அங்கத்தவர்களாக நினைத்துக் கொண்டு அந்த குழு மற்றவர்களை விட ஏதோ விதத்தில் உயர்ந்தது என்பதை நிலை நாட்ட எல்லாக் குழுக்களுமே வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லாக் குழுக்களுமே தங்களை மற்றவர்களை விட மேலானவர்கள் என்று கருதிக் கொண்டாலும், இந்த பிரமிட் படிநிலையில் அதி உச்சத்தில் என்று எந்தக் குழுவுமே இல்லை. காலாகாலமாய் வந்த அடக்குமுறையால், இந்த படிமுறையில் இடைமட்டங்களில் இருப்பவர்கள் கூட தங்களை விட கீழே இருப்பவர்களை அடக்குபவர்களாயும் கேவலமாய் நோக்குபவர்களாகவும் உள்ளனர்.
தங்களுக்கு பலம் இருக்கும்போது தங்களுக்கு கீழே இருப்பவர்களை மிதிப்பவர்களாயும், தங்களுக்கு மேலான குழுக்கள் தங்களை அடக்கும்போது, ஏதோ கருத்தின் அடிப்படையில் தங்களுக்குள் ஒற்றுமையை வேண்டுவதாயும் இந்த மனித இனம் ஒரு தர்க்க ரீதியான அல்லது தர்ம ரீதியான நிலைப்பாடில்லாமல், சந்தர்ப்ப வாதக் கருதுகோளின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதையும் விட, மனித இனம் வேறுபாடு என்பதை வெறுப்பு அதாவது hatred என்ற நிலைக்கு மாற்றி விட்டிருக்கிறது. இந்த வெறுப்பு என்பது தன் குழுவைச் சாராத எதையும் அடக்கலாம் என்பதை விட, கொல்லலாம், அழிக்கலாம் என்ற நியாயப்படுத்தலுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. பல நாடுகளில் persecution எனப்படும் ஒதுக்கல்கள் மதம், நிறம், மொழி, கருத்துச் சுதந்திரம் என்று ஏதோ காரணங்களின் அடிப்படையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணக் கிணத்தை விட்டு வெளியில் வந்த நாளில் இருந்து, இவ்வாறான பல்வேறு வேறுபாடுகளை நேரில் கண்டிருக்கிறோம். வெள்ளையர்களுக்கு கறுப்பர்களைப் பிடிக்காது. ஆனால் வெள்ளையர்களில் ஜேர்மானியர்களுக்கு தாங்கள் ஆரியர்கள் என்ற கர்வம் இருக்கிறது, மற்ற வெள்ளையர்களை விட தாங்கள் மேலானவர்கள் என்ற எண்ணம் உண்டு. ஆனால் வட ஜேர்மனியர்களுக்கு தென் ஜேர்மனியர்களைப் பிடிக்காது. பிரிட்டிஷ்காரருக்கு ஸ்கொட்டிஷ், ஐரிஷ்காரர்களைப் பிடிக்காது.
கிரேக்கர்களுக்கு துருக்கியர்களைப் பிடிக்காது. மசடோனியர்களைப் பிடிக்காது. மசடோனியர்களுக்கு கிரேக்கர்களைக் கண்ணில் காட்ட முடியாது. மகா அலக்சாந்தர் மசடோனியர், அவரைக் கிரேக்கர்கள் உரிமையாக்கிக் கொள்வதை மசடோனியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
என் பக்கத்து வீட்டு மசடோனியக் கிழவிக்கு என்னைப் பிடிக்காது. என்னுடைய நிறத்தைப் பார்த்து, நான் ஏதோ தன்னுடைய வீட்டை உடைத்து களவெடுத்து விடுவேன் என்ற பயத்தில் கிழவி என் வீட்டுப் பக்கமாய் இருந்த வேலி மரங்களையும் வெட்டி, வீட்டுப் பின்பக்கமாய் போகும் கேட்டுக்கும் பூட்டுப் போட்டு வைத்தது. என்னுடைய தோல் நிறத்தைத் தவிர, அந்தக் கிழவிக்கு வேறு எந்தத் தகவலும் என்னைப் பற்றித் தெரியாது. ஆனால் இந்தக் கிழவியின் மகள் ஒரு கறுப்பரோடு தொடர்பு வைத்திருந்தாள்.
அந்தக் கிழவியின் வீட்டை வாங்கிய கிரேக்கனுக்கு மசடோனியர்களைப் பிடிக்காது. நான் கேட்டபோது சொன்னார், அவர்கள் பல்கேரியாவுடன் தொடர்புள்ளவர்கள், அந்த மொழிக்கும் மசடோனிய மொழிக்கும் தொடர்பு இருக்கிறது என்றார். இதனால் அவர்கள் கிரேக்கர்கள் இல்லை என்பதே அவருடைய வாதம். பிறகேனப்பா மகா அலக்சாந்தரை கிரேக்கன் என்று புழுகுகிறீர்கள் என்று கேட்க முடியவில்லை.
இந்தக் கிரேக்கர் என்னை எந்த நாட்டினர் என்று கேட்ட போது நான் இலங்கையன் என்று சொன்னேன். அப்போது சொன்னார், தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு தமிழரைச் சந்தித்த போது தான் தமிழீழம் என்ற நாட்டைச் சேர்ந்தவர் என்று சொன்னதாகவும் 'நீ அந்த நாடு இல்லையோ?' என்றும் கேட்டார். இதற்கு நான் என்னத்தைச் சொல்ல முடியும்?
புதிதாக வீடு வாங்கிய போது அவரின் தகப்பன் வேலிப் பக்கமாய் வந்து தன்னை அறிமுகப்படு;த்துகிறார். மிகவும் பண்பான, வயதான மனிதர். இவர் வந்தபோது பக்கத்து வீட்டு இத்தாலியர் என் முன்னால் அவருக்கு அறிமுகம் செய்து கொள்கிறார். இவர்கள் இரண்டு பேருமே என்னை தன் மகன் போல கருதுபவர்கள். நான் எப்போதுமே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பதால், அவர்களுக்கு என்னில் ஒரு பட்சம். எனது வீடு நடுவில்.
இத்தாலியர் நினைத்தார், அவரும் இத்தாலியர் என்று. தன்னை அறிமுகம் செய்யும் போது சொன்னார், தான் கலபிரியன் என்று பெருமையாக. அதாவது இத்தாலியர்களுக்கு நியாப்பொலித்தர்கள், கலபிரியர்கள், சிசிலியர்கள் என்று வேறுபாடு இருக்கிறது. ஆனால் இந்த இத்தாலியர்கள் எல்லாருக்குமே போத்துக்கேயர்களைப் பிடிக்காது. ஆனால் பெரும்பாலான இத்தாலியர்களுக்கு ரொனி என்று புனித அந்தோனியார் பெயர் இருக்கும். அந்தோனியார் உண்மையில் ஒரு போர்த்துக்கேயர்.
ரஷ்யாவின் முன்னாள் குடியரசு வாசிகளுக்கு ரஷ்யர்களைப் பிடிக்காது. ரஷ்யர்களுக்கு ஜோர்ஜியர்களைப் பிடிக்காது. காரணம் ஸ்டாலின் ஒரு ஜோர்ஜியன். இந்த ஐரோப்பிய வாசிகள் எல்லாருக்குமே ஜிப்சிகளைப் பிடிக்காது.
எனக்கு எத்தியோப்பியர்களும் எரித்திரியர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் எல்லோரும் சகோதரர்கள். அவர்களும் என்னை அப்படித் தான் நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்குள்ளே கண்ணில் காட்ட முடியாத வெறுப்பு. அதை இரண்டு தரப்பினரும் என்னிடம் சொல்வார்கள். காரணம் அவர்களுக்கு நான் சகோதரன். எதியோப்பியர்களுக்கு எரித்திரியர்களைப் பிடிக்காது. எரித்திரியர்களுக்கு திக்கிரியர்களைப் பிடிக்காது. திக்கிரியர்களுக்கு யாரைப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியாது, ஏனென்றால் என்னோடு திக்கிரியர்கள் வேலை செய்ததில்லை. ஆனால் இவர்கள் எல்லாருக்கும் ஜமெய்க்கர்களையும் சோமாலியர்களையும் பிடிக்காது.
ஆபிரிக்காவில் இன அழிப்பே இந்த இன அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆபிரிக்காவில் சகாராவின் இருபுறமாய் இருக்கும் கறுப்பர்களுக்கும் அராபியர்களுக்கும் பகை. சூடானில் நடக்கும் இன அழிப்பு இதன் அடிப்படையானது.
ஜப்பானியர்களுக்கு சீனர்களைப் பிடிக்காது. கொரியர்களுக்கு ஜப்பானியர்களைக் கண்ணில் காட்ட முடியாது. சீனர்களுக்கு வியட்னாமியர்கள் இழிவானவர்கள்.
இந்தியாவில் இந்துக்களுக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது. முஸ்லிம்களில் சுன்னி முஸ்லிம்களுக்கு ஈரானிய சியா முஸ்லிம்களையோ, அகமதியர்களையோ, பகாய்களையோ பிடிக்காது.
ஆப்கானிஸ்தான், யெமன், பாகிஸ்தான், சோமாலிய நாடுகளில் உள்ள tribalism வேறுபாடு இன்னொரு கதை. ஒரு ஐநூறு வருடத்திற்கு முன்னான வேலிச்சண்டையின் தொடர்ச்சி இன்றைக்கும் தொடரும். ஆப்கானிஸ்தானில் தெற்கில் உள்ள பாஸ்ருன்களுக்கு வடக்கில் உள்ள உஸ்பெக், ராஜிக் ஆட்களைப் பிடிக்காது. ஆனால் இவர்கள் எல்லாருக்குமே அமெரிக்கர்களையும் ரஷ்யர்களையும் பிடிக்காது.
கரிபியன் நாடுகளில் இந்தியர்களுக்கும் கறுப்பர்களுக்குமான வெறுப்பு சொல்லி மாளாது. கனடாவின் ஆதிக்குடிக் கூட்டங்களுக்குள்ளான மோதல்கள் பழைய கதை.
யூகோஸ்லாவியால் குறோவேஷியர்களுக்கும் பொஸ்னியர்களுக்கும் சேர்பியர்களுக்கும் நூற்றாண்டுப் பகை. ஒட்டோமான் சாம்ராஜ்யத்தினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ இனங்களுக்கு முஸ்லிம்கள் மீது ஜென்மப் பகை. கிறிஸ்தவ சிலுவைப் போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்கள் infidels. அதாவது தன்னுடைய மதத்தை நம்பாதவர்களை கேவலமாகக் குறிக்கும் வார்த்தை.
என்னோடு வேலை செய்த குறோவேசியன் ஒருவன் தோல் தலையன். Skin head. அவனுக்கு கறுப்பர்களையும் யூதர்களையும் பிடிக்காது. என்னைப் பார்த்து உன்னை எனக்குப் பிடிக்கும் என்றான். கொஞ்சநாள் அவனைக் காணவில்லை. யூதர்களின் ஆலயத்தின் சுவரில் எழுதியதற்காக ஒரு தடவை கைது செய்யப்பட்டிருந்தான் என்று சண் பேர்ப்பரில் செய்தி வந்திருந்தது..
நான் மேல் சொன்ன உலகத்தில் உள்ள எல்லா இனத்தவர்களுக்கும் யூதர்களைப் பிடிக்காது. ஆனால் யாழ்ப்பாணத்தானுக்கு உலகத்தில் ஒருவரையுமே பிடிக்காது.
உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும் ஒவ்வொரு குழுவுக்கும் இன்னொரு குழு ஒன்றுடன் ஏதோ ஒரு கோபம் இருக்கிறது. அந்தக் கோபமும் ஏதோ ஐநூறு வருடங்களுக்கு முந்திய பகைமை காரணமாகவோ, அடக்குமுறை காரணமான கோபமாகவோ, அல்லது தர்க்கரீதியாக விளங்கிக் கொள்ள முடியாத சித்தாந்தங்களாலோ வந்ததாக இருக்கிறது.
ஒரு தனிமனிதனின் இயல்புகளைப் பழகி அறிந்து கொள்ளாமல், ஒருவர் இன்ன குழுவைச் சேர்ந்தவர் என்று கண்டறிந்ததும், அவரது இயல்பு இன்னதாக இருக்கும் என்று நினைப்பதும், அவர் தன்னை விடக் கீழானவர் என்றால் அதைக் காரணம் காட்டி வெறுப்பதும், ஏதோ காரணங்களால் மேலானவராக இருந்தால் அவரது இனம் பற்றிய வெறுப்பான கருத்தைக் கக்குவதுமாக மனிதர்கள் இருக்கிறார்கள்.
முழு மானிடத்தின் ஒருமை மட்டும் தான் வெறும் கனவாக இருக்கிறது, மற்றும்படி மனிதர்கள் தங்கள் குழுக்களுக்குள்ளேயே ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதும் இல்லை. தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை பெரிதுபடுத்தி தன்னை மேலானவனாகக் காட்டிக் கொள்ளும் இயல்பு கொண்ட குழு தனக்குள்ளேயே ஒற்றுமையாக இல்லையே என்றால் இந்த வேறுபாட்டில் பெருமை கொள்வதன் நோக்கம் தான் என்ன?
நான் விளங்கிக் கொண்ட விதம் இப்படித் தான். எந்தக் குழுக்களோடும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், மனிதர்கள் சுயநலத்துடன் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் தன் பிறப்புக் காரணமாக, பல்வேறு குழுக்களுக்குள் தங்களை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார்கள். தோல் நிறம் தொடக்கம் மதம் வரைக்கும் என்று ஒன்றோடொன்று தொடர்பில்லாத பல குழுக்களுக்குள் இவர்கள் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்.
விலங்குகளும் பறவைகளும் கூட்டமாய் இருப்பது போல தனியான குழுக்களாக ஒரே புவியியல் பிரதேசத்திற்குள் இவர்கள் இருக்க முடியாதபடிக்கு இன்றைக்கு பல்வேறு இடங்களுக்கு பரம்பலாயிருக்கிறார்கள். ஏதோ ஒரு குழுவுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வது தனது சுயநலத்துக்குப் பயன் தருமாக இருந்தால், தனக்கு லாபம் தரும் என்று கருதும்போது, அதனுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஒரு குழுவில் தன்னை அடையாளம் காட்டுவதால், தனக்கு கிடைக்க வேண்டிய ஏதோ ஒன்று கிடைக்காமல் போனதும், அது தான் ஒரு குழுவைச் சார்ந்ததாக இருந்ததால் தான் கிடைக்காமல் போனது என்ற எண்ணம் மனிதனுக்கு மேலிடுகிறது. உண்மையிலேயே கிடைக்க வேண்டிய ஒன்று, பாரபட்சம் காரணமாக கிடைக்காமல் இருந்திருக்கலாம். அப்போது திரும்பிப் போராடுவதற்கு தன்னால் தனியே முடியாமல் போகும் போது தனது குழுவின் பலத்தைத் தேடும் முயற்சி தொடர்கிறது.
ஆனால் இந்த வெறுப்பு என்பது எப்படி வருகிறது?
சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ தனது நாட்டை அமைத்த போது, கட்டிய வீட்டுத் தொகுதிகள் எல்லாவற்றிலும் சகல இனத்தவர்களும் நாட்டில் உள்ள விகிதப்படி வீடுகளைக் கொடுத்திருந்தார். ஏன் அவர்களைத் தனியாக பிரித்து வைக்காமல் எல்லா இனங்களையும் ஒன்றாக வைக்கிறீர்கள், அதனால் பிரச்சனை வருமே என்று கேட்ட போது சொன்னாராம்... இனம் இனமாக வட்டாரங்களைப் பிரித்தால் வேறுபாடு அதிகரிக்கும். எல்லா இனத்தவர்களும் ஒரே கட்டடத்தில் ஒன்றாக இருந்தால், அவர்களின் குழந்தைகள் ஒன்றாக விளையாடும். அவர்களுக்கு அந்த வேறுபாடு தெரியாமல் இருந்தால் அடுத்த தலைமுறை சமத்துவத்துடன் இருக்கும்.
பிள்ளைகள் சேர்ந்து விளையாடும் போது அவர்களுக்கு தோற்ற ரீதியான வேறுபாடு தெரியும். சீனக்குழந்தைக்கு தமிழ்க் குழந்தையை விட தனது தோற்றம் வித்தியாசமானது என்று தெரியும். அதை யாரும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் அதையும் மீறி நட்பு நாடிச் சிரித்து, சேர்ந்து விளையாட அந்தப் பிள்ளையால் முடியும். கறுப்பு என்றால் அருவருப்பு என்று அந்தக் குழந்தை நினைக்காது. ஆனால், தமிழ்க் குழந்தையோடு சேராதே, நாங்கள் மேலான இனம் என்று பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் வரைக்கும் அந்தப் பிள்ளைக்கு தோற்ற ரீதியான வேறுபாடு வெறும் இயற்கையான ஒன்றாகத் தான் இருக்கும்.
தமிழ்க்குழந்தைக்கும் கறுப்பு இனக் குழந்தைக்குமான தொடர்பும் இவ்வாறானது தான்.
பெற்றோரும் சரி, ஆசான்களும் சரி, அது மத குருக்களாக இருந்தால் என்ன, இனவாதிகளாக இருந்தால் என்ன, இந்த வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாத வரைக்கும், இந்த மனங்களில் நச்சு விதையை ஊன்றும் வரைக்கும் இனங்கள் சமத்துவமாக வாழவே முயற்சிக்கும். ஹிட்லர் ஆரிய வாதத்தை முன்னெடுக்கும் வரைக்கும் யூதர்கள் ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள். யூதர்கள் வட்டி வாங்குவது பற்றி ஷேக்ஸ்பியர் காலத்திலேயே எதிர்ப்பு இருந்தது. ஆனால் அவர்களை அழிக்க வேண்டும் என்று ஹிட்லரின் அரசு தான் முயன்றதே தவிர, மக்கள் இல்லை. தமிழர்கள் சிங்களப் பிரதேசங்களில் வேலை செய்த போதும், அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டும் வரைக்கும் கலவரங்கள் எழவில்லை.
கிராமவாசியாக இருந்த நான் பட்டணத்துக்கு படிக்கப் போன போது எனக்கு பத்து வயதிருக்கும். அந்த வயதிலேயே நகர வாசியான, இன்றைக்கு கனடாவில் இருக்கிற, அதே வயது மாணவன் நேரடியாகவே கேட்டான், நீ என்ன சாதி என்று? எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாங்கள் இன்ன சாதி என்று என் குடும்பத்தினர் எனக்கு சொல்லித் தரவில்லை. அதன் பின்னர் தான் வீட்டே வந்து கேட்டேன் இப்படி ஒருவன் கேட்டான் என்று.
ஆனால் என் வயதான அந்தச் சிறுவனுக்கு சாதியைப் பற்றி சொல்லிக் கொடுத்தது யார்? என் காலில் உள்ள செம்பாட்டு மண்ணைத் தவிர, அவனுக்கும் எனக்கும் எந்த தோற்ற வித்தியாசமும் இல்லை. தமிழர் என்ற மொழி பேசும் கூட்டம் வாழ்கின்ற வடக்கு கிழக்கில், ஊரையும் சாதியையும் காட்டி மனிதர்களை வேறுபடுத்தும் விதத்தை அவனுக்கு சொல்லிக் கொடுத்தது யார்?
அதன் பின்னால், பதின்மூன்று வயதாய் இருக்கும்போது, என்னோடு படித்த இன்னொருவன், இவன் யாழ்ப்பாணத்தில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவன், ஒரு தடவை ஒரு கத்தோலிக்க சுவாமியாரை, அவனது ஊரைச் சேர்ந்தவர் என்று நான் சொன்ன போது, சொன்னான் அவர் இந்தச் சாதியில் இன்ன பிரிவு. சாதாரணமாக ஒருவர் இன்ன சாதி என்று சொல்வது வட்டாரங்களை வைத்து சொல்லப்படுவது. அதையும் விட மிகவும் துல்லியமாக இந்தச் சாதியில் இன்ன பிரிவு என்ற விடயத்தை ஒரு பதின்மூன்று வயதுப் பையனுக்கு தெரிய வைத்தது அந்தக் குடும்பம் இல்லாமல் யாராக இருக்க முடியும்?
எனக்குத் தெரிந்த ஒரு பெண் பிள்ளை ஒருவர் ஐரோப்பிய நாட்டில் உள்ள உறவினர்கள் வீட்டுக்குப் போனார். அவரது உறவினப் பெண் அவருக்கு புத்திமதி சொல்கிறார்... நீ காதல் பண்ணுவது பிரச்சனை இல்லை. ஆனால் எங்கட சாதியாகப் பார்த்து காதல் பண்ணு என்று. அதற்கு அந்தப் பெண் சொன்னாள்... அப்படியென்றால் அது காதல் இல்லையே, அன்ரி என்று.
காதல் பண்ணும் போது சாதி பார்ப்பது ஒருபுறமிருக்கட்டும். இதற்குள் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு எழுபதுகளுக்குப் பின்னால் நியூமரோலொஜி வியாதி வேறு ஒட்டிக் கொண்டு விட்டிருக்கிறது. காதல் பண்ணும்போது, சாதியும் பார்த்து, நியூமரோலஜியும் பார்ப்பது என்றால் பிள்ளைகள் எவ்வளவு அவஸ்தைப்படுமோ?
என்னுடைய மகனுக்கு நான் சாதி பற்றிச் சொல்லிக் கொடுத்ததில்லை. சொல்லிக் கொடுப்பதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளையிடம், நாங்கள் இப்படியெல்லாம் மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறோம் என்று என்ன வகையான தர்க்க நியாயத்தைச் சொல்ல முடியும்? தேவைப்பட்டால் அந்த்ரோப்பொலஜி படிக்கும் போது கற்றுக் கொள்ளட்டும். அதைவிட, என் மனைவி மலையகத்தைச் சேர்ந்தவர். அவரைக் கேட்டால் தங்கள் தாத்தா கொடிகால் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பார். நான் சொல்வேன், நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால் தோட்டக்காட்டார் தான், அவர்களுக்கு நீங்கள் வெள்ளாளர் என்றாலும் வீட்டுக்கு வேலைக்குத் தான் வைத்திருப்பார்கள்.
நான் நல்லூரில் உள்ள பிள்ளை ஒன்றுக்கு ஆங்கிலம் கற்பிக்க அழைக்கப்பட்டிருந்தேன். அந்த வீட்டிற்கு வரும் சிலர் படிகளிலே உட்கார வைக்கப்படுவார்களே தவிர, வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. சில நேரம் நான் ஆங்கிலம் தெரிந்தவன் என்பதால் கட்டாயமாக உயர்சாதியாக இருப்பேன் என்பது அவர்களின் அனுமானமாக இருக்கக் கூடும்.
வெளியாகவே தெரிகிற வேறுபாடுகள் பிரிவுகளாக இருக்கும்போது, அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒரு இனத்தவர்கள் இந்த தொழிலைச் செய்கிறார்கள், இன்ன மொழியைப் பேசுகிறார்கள், இந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பது ஒரு சாதாரண விடயம். இதில் நான் மேலானவன், மற்றவர்கள் கீழானவர்கள் என்ற எண்ணம் வராதவரைக்கும் அதில் பிரச்சனை இருக்காது.
நான் மேலானவன் என்பதால் ஒரு sense of entitlement என்ற உணர்வு வரும்போது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. நான் இன்ன சாதியைச் சேர்ந்தவன், நான் மேலானவன், அந்த ஒரே தகுதிக்காக தான் மதிக்கப்பட வேண்டும், அதிகாரம் தன் கையில் மட்டும் இருக்க வேண்டும், மற்றவர்கள் தனக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், அல்லது முழுச் சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் போது பிரச்சனை வருகிறது.
தன்னை விட மற்றவன் மேலானவன் என காணப்படும்போது, அவனை மட்டம் தட்டுவதற்கான வழியாகத் தான் இந்த வேறுபாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குறித்த சாதியைச் சேர்ந்த குருவானவர், கல்வி கற்றவர், மிகவும் மரியாதைக்குரியவர் என்ற உண்மையைப் பொறுக்க முடியாத ஒருவரால் தான் தன் பிள்ளைக்கு அந்த குருவானவர் இந்தச் சாதியில் இன்ன பிரிவைச் சேர்ந்தவர் என்ற நஞ்சைப் புகுத்த முடியும்.
இதை சாதாரண மனித இயல்பாகத் தான் நான் பார்க்கிறேன். மற்றவனை விட தன்னை மேலானவன் என்று காட்ட, ஒருவனைப் பற்றி இன்னொருவர் புகழ்ந்து சொல்வதைப் பொறுக்க முடியாமல், அவரை மட்டந் தட்ட அவர் குறித்த இழிவான ஒரு தொடர்பைக் குத்திக் காட்டுவது அடிப்படைப் பொறாமை உணர்வு. இது தான் வைத்திருக்கும் வீடு, கார் தொடக்கம் தனது உத்தியோகம் வரைக்கும், தன் சாதி முதல் மொழி வரை பெருமை கொள்வதன் அடிப்படை. இதனால் தான் நீங்கள் யாரையாவது ஒருவரைப் பற்றி நல்ல எதையாவது சொன்னால், சிலரால் பொறுக்க முடிவதில்லை. அவர் சார்ந்த குறைவான எதையோ குத்திக் காட்டாவிட்டால் சிலருக்கு நித்திரையே வராது.
60 மினிட்ஸ் நிகழ்ச்சியில் வந்து, அண்மையில் இறந்து போன அன்டி றூனி தன்னுடைய புத்தகம் ஒன்றில் எழுதியிருந்தார். தனக்கு காருக்கு ஒயில் மாற்றத் தெரியும் என்பதைப் பெருமையாக நினைக்கும் ஒருவருக்கு இன்னொரு விமானிக்கு ஓயில் மாற்றத் தெரியாது என்பது மட்டம் தட்டும் அளவுக்கு கேலியாக இருக்கும். அந்த விமானிக்கு கார் ஓட்டுவது மட்டுமல்ல, விமானம் ஓட்டவும் தெரியும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத பொறாமை உணர்வு அது.
எங்களுடைய யாழ்ப்பாணப் பாரம்பரியச் சாதி முறை என்பது இன்னொரு ரகம். இது கிட்டத்தட்ட சோமாலியர்களைப் போன்றது. என்னுடைய நெருக்கமான நண்பன் ஒருவன் சோமாலிய வம்சாவளி எதியோப்பியன். இவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பன் எரித்திரிய கிறிஸ்தவன். அவன் சொன்னான், தனக்கு சோமாலிக்காரர்களைப் பிடிப்பதில்லை என்று. ஏனென்றால், தானும் சோமாலியன் என்றதும் உடனே கேட்கத் தொடங்குவார்களாம், உனக்கு அவரைத் தெரியுமோ என்று. யாழ்ப்பாணத்தவர் 'அப்ப ஊரில நீர் எவடம்?' என்பது போல. நான் இன்ன குலம் என்று தெரிந்ததும் பின்னால் கதைக்கவே மாட்டார்களாம்.
சட்டம் ஒழுங்கைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத சோமாலியர்கள், அதே போல சட்டம் ஒழுங்கைப் பற்றி கவலைப்படாத யாழ்ப்பாணத்தவர்கள் போலச் சிந்திக்கிறார்கள். சோமாலியர்கள் பற்றி ஒரு சோமாலியப் பத்திரிகையாளர் ஒரு தடவை எழுதியிருந்தார்... legendary individualists என்று. அவர்களுக்கு வேறு யாரைப் பற்றியும் கவலை கிடையாது, தன்னைப் பற்றி மட்டும் தான் கவலை. சமூகம் என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லாதபடிக்கு அவர்கள் Tribal குலங்களாகப் பிரிந்திருக்கிறார்கள். யார் மேல், கீழ் என்ற பிரச்சனை இல்லாமல் சகல குழுக்களுக்கும் மற்றக் குழுக்கள் மீது வெறுப்பு. இன்னொரு சோமாலியன் என்னோடு வேலை செய்பவன் சொன்னான், நான் சோமாலியன் இல்லை, சோமாலிலாண்டைச் சேர்ந்தவன் என்று. அந்தப் பிரதேசம் சண்டைகள் இல்லாமல் அமைதியான இடம். அவனுக்கு மற்ற சோமாலியர்களுடன் அடையாளம் காட்டிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது.
இவர்களை எல்லாம் முகமட் சியாட் பார் என்ற சர்வாதிகாரியால் தான் ஒருமைப்படுத்தி வைக்க முடிந்தது. அவர் இறந்ததும் இன்று வரைக்கும் அவர்களால் ஒரு அரசை அமைக்க முடியவில்லை.
இன்றைக்கு தமிழன் இத்தனை அடி வாங்கிய பின்னாலும், இவ்வளவு ஒற்றுமை பேசுகிற தமிழனால் ஏன் இன்னமும் சாதி என்ற அமைப்பைத் தூக்கி எறிய முடியவில்லை? நீங்கள் எதைத் தான் சொன்னாலும், இன்றைக்கு இத்தனை வெளிநாடுகளுக்கு வந்தாலும், ஒரு கலியாணம் பேசுவதாக இருந்தால் முதல் கேள்வி சாதியாகத் தான் இருக்கும்.
அங்கே எவ்வளவு உயர்சாதியாக இருந்தாலும், இங்கே வந்தால் அகதி, உன் நாட்டுக்கு திரும்பிப் போ என்று தான் வெள்ளையன் சொல்வான். அதே போல, அங்கே தொழில் ரீதியான சாதிப்பாகுபாட்டுக்கு காரணமான தொழில்களை இங்கே எந்தச் சாதியினரும் செய்யத் தயார். எனக்குத் தெரிந்து, இங்கே ஹோட்டல்களில் இருந்து வரும் துணிகளைத் துவைக்கும் நிறுவனத்தில் வேலை செய்கின்றவர்கள் சிலர் அங்கே வேலை செய்கின்ற மற்றவர்களை தங்களுக்குள் சாதியைக் காட்டிப் பேசுவது தெரியும்.
நான் ஜேர்மனியில் இருந்த போது, அகதிகளாக நாங்கள் இருந்த வீட்டுக்கு முன் வீட்டில் ஒரு ஜேர்மானியப் பெண் இந்த அகதிகள் மேல் அனுதாபப்பட்டு உதவி செய்தார். அந்தப் பெண் தொழில் ரீதியாக சிகையலங்காரம் செய்பவர். அந்தப் பெண்ணுக்கு, இந்த அகதிகள் போய் 'எங்கள் நாட்டில் சிகையலங்காரம் செய்பவர்களை நாங்கள் வீட்டுக்குள் விடுவதில்லை' என்று விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
அங்கே துணி துவைப்பவர் கக்கத்தில் சால்வையைக் கட்டி நிற்க வேண்டும் என்றால், இங்கே அதே தொழிலைச் செய்பவர் டொலருக்காக அதைச் செய்தாலும், அடிப்படையில் அவருக்கு தான் ஒரு உயர்ந்த சாதி என்ற எண்ணம் ஏன் வருகிறது?
தன்னைச் சூழ உள்ளவர்களிலும் பார்க்க, தன்னை மேலானவனாகக் காட்ட இங்கே அவருக்கு இருக்கும் ஆயுதம் அந்த சாதி மட்டும் தான்.
தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைக்கவும் அடிமனதில் உள்ள பொறாமைக் குணத்தைக் காட்டவும் பயன்படும் நாகாஸ்திரம் அது.
நண்பர் ஒருவர் சொன்னார். எங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரைப் பற்றி. அவர் ஒருநாள் சேர்ந்து குடித்துக் கொண்டிருந்த போது பிரச்சனை வந்து அவர் இப்போதும் சேர்ந்து இருக்கும் நண்பர்களோடு வாக்குவாதம் வருகிறது. பிரச்சனை முற்றி ஏடாகூடமாய் கலாட்டாவில் முடிகிறது. கடைசியில் நண்பர் ஒருவர் இவரை காரில் ஏற்றிக் கொண்டு போகிறார். போகும்போது வெறியில் தன்னோடு பிரச்சனைப்பட்ட நண்பர்களைப் பற்றி சாதியையும், அவர்களது ஊரையும் பற்றிக் கேவலமாகப் பேசியிருக்கிறார். இதில் சிரிப்புக்குரிய விடயம் என்னவென்றால், இவரைக் காரில் ஏற்றிக் கொண்டு போனவர் இவர் கேவலமாகப் பேசிய ஊரைச் சேர்ந்தவர். வெறியில் இவருக்கு அந்த உண்மை உறைக்கவில்லை.
ஆனால் வெறி முறிந்த பின்னால் இவர் அதே நண்பர்களுடன் எதுவும் நடக்காதது போல நடந்து கொள்கிறார். இவர் ஒன்றும் சாதிக் கட்டமைப்பில் உயர் சாதியைச் சேர்ந்தவரும் இல்லை. இது எதைக் காட்டுகிறது?
அந்த வாக்குவாதத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல், அவர்களை மட்டந்தட்டக் கிடைத்த நாகாஸ்திரம் சாதியும் ஊரும் தான். அதை அந்த தருணத்தில் பாவிக்கிறார். நாளைக்கு அவர் தனக்கு அந்த நண்பர்களின் உதவி தேவை என நினைக்கும்போது அந்தச் சாதி வேற்றுமை பற்றிப் பேச மாட்டார்.
இந்த வேறுபாடுகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரைக்கும் தனிமனிதர்கள் தங்கள் இயலாமை, பொறாமை, தங்கள் தோல்விகளுக்கு மற்றவர்களைக் காரணம் காட்ட பயன்படுத்துகின்ற விடயங்கள். இது ஒன்றும் தாங்கள் மேலானவர்கள் என்ற எண்ணத்தில் வருவதில்லை. உண்மையிலேயே தன்னைப் பெரியவன் என்று நினைப்பவனுக்கு தன்னம்பிக்கை இருக்கும். அவன் தனக்கு கீழேயோ, மேலேயோ இருப்பவர்கள் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டான். தன்னம்பிக்கை இல்லாமல், தாழ்வு மனப்பான்மையோடு இருப்பவர்கள் காட்டுவது தான் இந்த வேறுபாடுகள்.
பகுத்தறியத் தெரிந்த எவனுக்கும் இந்த வேறுபாடுகளின் முட்டாள்தனம் நன்றாகப் புரியும். இதனால் அந்த வேறுபாடுகள் அவன் கண்களுக்குத் தெரிவதில்லை என்பது மட்டுமல்ல, இந்த நாகரீக உலகத்தில் இவ்வாறான வேறுபாடுகளுக்கு இடம் இல்லை என்பதும் தெரியும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன இனத்திற்குள்ளேயே மானிடத்தின் ஒருமை வெறும் கனவாகவே இன்று வரைக்கும் இருந்து வருகிறது. மனித இனம் தன்னை முரண்பாடுகளுக்குள் உடன்பாட்டைத் தேடி ஒருமைப்படுத்துவதற்கான வழிகளை விட்டு, உடன்பாடுகளுக்குள் முரண்பாடுகளைத் தேடி சிதறிக் கொண்டிருக்கிறது. நிறம் போன்ற உடற்கூற்றியல் ரீதியான வேறுபாடுகள் தொடக்கம், இனம், நாடு என்னும் பூகோளவியல் வேறுபாடுகள் வரைக்கும், மதம், கொள்கை என்ற கருத்து ரீதியான வேறுபாடுகள் தொடக்கம் சாதி போன்ற தொழில் ரீதியான வேறுபாடுகள் வரைக்கும் இந்த முரண்பாடுகள் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
எப்போதோ, எங்கேயோ ஏதோ காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பிரிவுகள் தவறானவை என்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும். இன்றைய நவீன உலகத்தில் கல்வியும், செல்வமும் யாரும் பெற முடியும் என்ற நிலையில், சமூக அந்தஸ்து என்பது எல்லாப் பிரிவினருக்கும் சாத்தியமானது என்ற உண்மையும் எல்லாருக்கும் தெரியும். அடக்கப்பட்ட இனங்களும் என்றைக்கும் அடங்கிப் போகத் தயாராக இல்லாமலும் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான சூழலைக் கொண்டவையாகவும் இருக்கின்றன.
இந்தச் சூழ்நிலையிலும் இன்னமும் இந்த இனவெறி hatred என்ற நிலையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தன்னுடைய பிடி விலகிப் போகின்றது என்ற உணர்வில், தன் அதிகாரம் கைநழுவப் போகிறது என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கும் போது, கொலை செய்வது நியாயப்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இன்றும் இதே ஆதிக்கக் கனவோடு இருக்கும் சில பெரியவர்களால் இன்றைய மாற்றங்களை ஜீரணிக்க முடியாமல் இருப்பதன் அடிப்படையும் இது தான்.
சுத்திச் சுத்திப் பார்த்தால் கடைசியில் எல்லாமே தனிமனிதர்களின் அதிகாரமும் பொறாமையும் சம்பந்தப்பட்ட விடயங்கள் தான்.
இன வெறியின் உச்சத்தில் இருப்போர்கள் காட்டுமிராண்டிகள் போல, இன அழிப்பைச் செய்கிறார்கள். வெளியில் காட்ட முடியாதவர்கள், குடிவெறியில் தங்கள் நண்பர்களையே சாதியும் ஊரும் சொல்லிப் பேசுகிறார்கள்.
You must be logged in to post a comment Login