உங்கள் பிள்ளைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, குழந்தைகளுக்கு பாதுகாப்பான, சரியான ஆசனங்களைப் பயன்படுத்தா விட்டால், விபத்துக்களின் போது பெரும் ஆபத்துக்களை உங்கள் குழந்தைகள் எதிர்நோக்கலாம். இந்த ஆசனங்களைப் பயன்படுத்தும் பலரும் அதைச் சரியான முறையில் வாகனத்தில் பொருத்துவதில்லை. இந்த ஆசனங்களில் உள்ள வித்தியாசமான வகைகள், குழந்தைகளின் நிறை, உயரம் போன்ற பல்வேறு விபரங்களை அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கான சரியான வாகன ஆசனத்தைப் பெற்று, சரியான முறையில் உங்கள் வாகனங்களில் பொருத்த வேண்டும்.
இந்த ஆசனங்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கான கால எல்லை உள்ளதைப் பலரும் அறிய மாட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட திகதி ஆசனத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது. காலாவதியாகும் அந்தத் திகதிக்குப் பின்னர் அந்த ஆசனங்களைப் பயன்படுத்த முடியாது. எனவே, முதல் குழந்தைக்குப் பயன்படுத்திய ஆசனம் இருக்கிறதே, அதை வீணாக்கக் கூடாது என்பதற்காக, இன்னொரு குழந்தை பெறுவோர் அடுத்த குழந்தைக்கு அந்த ஆசனத்தைப் பயன்படுத்த முடியாமல், புதிய ஆசனம் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.
அத்துடன் இந்த ஆசனங்கள் உள்ள வாகனங்கள் ஒரு தடவையாகிலும் விபத்துக்குள்ளானால், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது. விபத்தின் போது குழந்தை வாகனத்தில் இல்லாவிட்டாலும், அந்த ஆசனம் சேதத்துக்குள்ளாகியிருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்த முடியாது. வாகனம் விபத்துக்குள்ளானால், காப்புறுதி நிறுவனங்கள் குழந்தை களுக்கான ஆசனங்களுக்கான பணத்தைத் தரும். எனவே, விபத்தின் போது, அந்த விபரத்தையும் காப்புறுதி நிறுவனங்களுக்குத் தெரிவியுங்கள்.
கனடாவில் உள்ள புதிய சட்டங்களின்படி, 2012 தை மாதத்திற்கு முன் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாகன ஆசனங்களை விற்க முடியாது. எனவே தனியாரிடம் இவற்றை வாங்கும்போது இந்த திகதிகளைப் பார்த்தே வாங்குங்கள்.
சில நேரம் பணத்தைச் சேமிக்க, எல்லையைக் கடந்து அமெரிக்காவில் வாங்கினால், அந்த ஆசனம் விதிகளுக்கு முரணானதாக இருந்தால் பொலிசார் உங்களுக்கு 240 டொலர் அபராதமும் இரண்டு புள்ளிகளும் கழிக்கலாம்.
National Safety Mark உள்ள சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட கார் சீட்டுகளை மட்டுமே நீங்கள் வாங்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் இந்த ஆசனங்கள் தயாரிக்கப்பட்ட போது, குறைபாடுகள் இருந்தால், அவை மீளப் பெறப்படலாம். அப்போது உங்களுக்கு அறிவிக்கப்படும். வெளியிடங்களில் வாங்கினால் உங்களுக்கு அது பற்றித் தெரியாது.
பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதே என்பதற்காக பாவித்தவற்றை வாங்கவோ, மற்றவர்களுக்கு கொடுக்கவோ வேண்டாம்.
இந்த ஆசனங்களை வாகனங்களில் எப்படி பொருத்துவது என்பது பற்றிய நேரடி விளக்க நிகழ்வுகளை விபரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
உங்கள் குழந்தைகளை எவ்வாறு வாகன ஆசனத்தில் பொருத்துவது என்பது பற்றிய விபரங்களை கீழுள்ள வீடியோக்களில் பார்வையிடலாம். மூன்று விதமான கார் சீட்டுகளை வாகனத்தில் பொருத்தும் விதங்கள் இங்கே காண்பிக்கப்படுகின்றன. இந்த தகவலை குழந்தைகள் உள்ள உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அந்தக் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க வழி செய்யுங்கள்.
சுவடி வைகாசி 2015
You must be logged in to post a comment Login