தூக்கிக் காட்டும் கார்!
'தனியே இருக்கும் போது இந்த அக்காவும் தம்பியும் செய்ததைப் பாருங்கள்' என்று தலையங்கம் போட்டு, ஆர்வத்தோடு பார்க்கப் போனால், முகப்புத்தகத்தில் மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொண்டால் தான் படத்தைப் பார்க்க அனுமதிப்பேன் என்று சொல்லி 55 செக்கன் காத்திருக்க வைத்து, இணையத் தளத்திற்கு ஆட்பிடிக்கும் தளங்களோடு தாயகத்தை எப்படிப் போட்டி போட வைப்பது என்று நீண்ட நாளாக முடியைப் பிய்த்து, நோ தாங்காமல் இப்போது மொட்டையும் அடித்தாயிற்று.
இப்போது தமிழ் இணையத் தளங்களைத் திறந்தால் ஏ9 பாதையில் நடந்த இரத்தம் சொட்டும் கோர விபத்துக்களின் படங்கள் நிறைக்கின்றன. அவர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. வித்தியா கொலைக்குப் பின்னால் வேறு ஏதாவது அப்படி நடக்காதா என்று வாயில் நீர் ஒழுகக் காத்திருக்கிறார்கள்.
அதைப் போல ஏதாவது செய்தியை முந்தித் தந்தால் என்ன என்றும் தோன்றும்.
இப்படியாக செய்திகளை முந்தித் தர தற்போது ஒரு செய்தியும் அகப்பட்டாயிற்று. அதை என்ன செய்வது என்று தான் தெரியவில்லை. 'எண்ணெய் சொட்டச் சொட்ட' கிடைத்த செய்தி!
அப்படி ஒன்றும் பெரிய விடயமில்லை. கொத்துரொட்டித் தெருவிழா நடந்த தெருவில் உள்ள நம் வேலைத் தலத்தில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருக்கும் போது, (ஆமா, வாடிக்கையாளர்கள் வெளியில் கியூவில் காத்திருக்கிறார்கள்!) திடீரென்று ஒரு சத்தம். ஏதோ அடிபட்டது போல!
பார்த்தால் நமக்கு முன்னால் உள்ள உள்வளவுப் பாதையில் ஒரு கார் முன் பகுதி மேலெழுந்து சாரதியின் பார்வையை மறைக்க வேகமாய் மறுவளவுக்குள் நுழைந்தது.
இதென்னடா! எந்த மாங்காய் மடையன் பார்வையை மறைத்து வாகனம் ஓட்டுகிறான் என்று முடியைப் பிய்க்கத் தேடிக் கொண்டிருக்கும்போது...
இன்னொரு வாடகைக் கார். வேகமாய் திரும்பி பக்கத்துக் கடைக்காரரிடம் ஏதோ கேட்க... அவரும் உந்தப் பாதையால் தான் போனது என்று பாதையைக் காட்ட...
எட்டிப் பார்த்தால்...
அவரின் காரின் பின்பகுதி பெரும் சேதத்துடன்!
திரும்புவதற்கு நின்ற அவரின் வாகனத்தை பின்னால் மோதி விட்டு, எண்ணெய் சொட்டச் சொட்ட... அப்பால் மறுவளவுக்குள் காரைக் கைவிட்டு, ஓட்டி வந்தவர்கள் ஓடித் தப்பி விட்டார்கள்.
கார் நம்ம ஊர் கிணற்றடிச் சண்டைக் களமுனைப் பெண் போராளிகள் போல தூக்கிக் காட்டிக் கொண்டிருக்கிறது.
வாடகைக்காரில் சக்கரவண்டியில் வயதான கிழவி. பாவம், ஒன்றரை மணி நேரங்களின் பின்னால் தான் இன்னொரு வாடகைக் காரில் ஏற்றி அனுப்பினார்கள்.
சாரதி சோமாலியர். உனக்கு எப்படி என்று பக்கத்துக் கடைக்காரர் கேட்க,
'ஒன்றுமில்லை, நாரிக்குள் தான் நோ'
அப்ப சரி, செத்தான்டா காப்புறுதிக்காரன்!
வழமை போல, தமிழ்ப்படப் பொலிசார் மாதிரி, நீண்ட நேரத்தின் பின் நாலைந்து வாகனங்களில் பொலிசார்.
தடயவியல் நிபுணர்கள் கைரேகை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அட, இந்த வாகனங்களுடன் செல்பி எடுத்து முகப்புத்தகத்தில் விளாசியிருக்கலாமே என்றால், பொலிஸ்காரர்கள் விரட்டுவார்களோ என்ற பயம் வேறு!
முன் கட்டடத்திற்கு முன்னால் நிறுத்தியிருந்த ட்ரக் கொஞ்ச நேரம் முன்னால் தான் புறப்பட்டிருந்தது. அந்த ட்ரக்கிற்கும் நிறுத்தப்பட்டிருந்த நம்முடைய காருக்கும் இடையில் தான் இதுவரை நேரமும் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. அது நின்றிருந்தால் நம்முடைய காரும் பக்கத்துக் கடைக்காரர் காரும் நொருங்கியிருக்கும்.
நம்ம காருக்கு கொஞ்ச நாளாய் நேரம் சரியில்லை. அது பெரிய கதை. இப்போது தான் வைத்தியசாலையிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. அதை அப்புறமாய் எழுதலாம்.
விக்கரமாதித்தன் ஒருவாறாக கண்ணைக் குத்தும் சூரியனையும் மீறி படம் எடுத்தாயிற்று! செல்பி எல்லாம் நம் பழக்கம் இல்லை!
சரி, இந்தச் செய்தியை வைத்து என்ன செய்வது?
பரபரப்பான விடயம்!
முன்பு புலோலி வங்கிக் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட பஸ் ஒன்று நம்ம பக்கத்து ஊர் ராச வீதிப் பனை மரங்களுக்கு நடுவில் தீ மூட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த மாதிரி, நம்ம வளவுக்குள் காரை விட்டுத் தப்பியோடினால் அது செய்தியா?
இதை வைத்து என்ன பண்ணலாம் என்று முடியைப் பிய்த்ததில்...
நம்ம பக்கத்து ஜாகையில் தான் நேற்று ராத்திரி, ரொறன்ரோ திரைப்பட விழாவுக்கு வந்த சோபா சக்தியுடன் 'இலக்கியச் சந்திப்பு' நடந்ததாய் முகப்புத்தகத்தில் பார்த்தேன். (அல்லது வாழ்நாள் சாதனை விரு(ந்)தோ?)
அது நடந்தது இராத்திரி, இது நடந்தது பின்னேரம் மூன்று மணிக்கு!
'மயிரிழையில் உயிர் தப்பிய அந்த சர்வதேசப் பிரபல தமிழ் சினிமா நட்சத்திரம்' என்று தலையங்கம் போடலாமா?
அல்லது நம்ம இலக்கியக் கூட்டத்தின் இரு பக்க அணிகளுக்கும் கடுப்பேத்தவும் குஷிப்படுத்தவும், 'சோபா சக்திக்கு கிடைக்கவிருந்த வாழ்நாள் சாதனைக்கான தோட்ட விருதுடன் கம்பி நீட்டிய கார் திருடர்கள்..'
இப்படி ஏதாவது தலையங்கம் போட்டு, அதை முகப்புத்தகத்தில் பங்கீடு செய்ய 54 செக்கன் அவகாசமும் கொடுத்து....
சில நேரம், சிங்கனுக்கு மூளை மணியாத் தான் வேலை செய்கிறது!
You must be logged in to post a comment Login