Recent Comments

    ஷரியா சட்டமும் ஆசியாவில் ஓர் கொடூரமான சுல்தானும்

        க.கலாமோகன்

    அரசியல் எதுவாம்? இது மதவெறியிலும் பண வெறியிலும் தோன்றுவதில்லையா? அனைத்து மதங்களும் மனித சிந்தனைச் சுதந்திரங்களுக்கு நிச்சயமாக எதிரானவை. காலனித்துவங்கள் யாவும் மதங்களுடன் இணைந்து மனிதர்களை மனிதர்களுக்கு எதிரிகள் ஆக்கியவைகளே.

    எமக்கு அதிகமாகத் தெரியாத ஆசிய தேசமான புருனேயில் இப்போது இஸ்லாமிய ஷரியா சட்டங்களால் மனிதக் கொலைகள் நடத்தப்படும் என்பதை இந்த தேசத்தின் ஜனாதிபதியாக 1967 இல் இருந்து இப்போதும் இருக்கும் சுல்தானின் அரசு தெளிவாகச் சொல்லும்போது மதங்கள் மீது கூறுவது மிகவும் அவசியமானதே.

    சுல்தானின் பெயர் இது : Hassan al Bolkiah. இது மிகவும் சிறிய நாடு. 2017 கணிப்பீட்டின் பின்பு இங்கு வாழ்பவர்கள் 428 697 பேரே. ஆனால் இந்த தேசத்தில் பெட்ரோல் உள்ளது. இதனால்தான் சுல்தான் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகின்றார். பல நாடுகளில் இவரின் பெயரால் மசூதிகள் இல்லை, பணக்காரர்களுக்கான ஹோட்டல்கள் உள்ளன. இவைகளுள் வறியவர்கள் நிச்சயமாகப் போக முடியாது. போனால் நிச்சயமாக இஸ்லாமிய மத எதிர்ப்பாகக் கருதப்படலாம்.

    ஆனால் செல்வர்கள் இந்த ஹோட்டல்களுக்குள் சென்று விபச்சாரங்கள் செய்தால் அவைகள் தூயனதாகத் தெரியும் சுல்தானுக்கு. நான் விரும்பும் நடிகர் George Clooney, அண்மையில் இவரது ஹோட்டல்களுக் குத் தான் போயிருந்தாலும், எவருமே இங்கு போவதை நிறுத்தவேண்டும் என்று பிரகடனம் விடுத்துள்ளார்.

    ஏன் இந்தப் பிரகடனம்? காரணம் ஷரியா சட்டமே. இது கொடூரமான சட்டம். ஹோமோசெக்ஸுவல்களைக் கல்களால் எறிந்து கொல்லவேண்டும் என வெறியுடன் சொல்வது. பெண்கள் தமது கணவர்களுடன் இல்லாமல் வேறு ஆண்களுடனோ, பெண்களுடனோ செக்ஸ் உறவு செய்தால் கொடூரமான தண்டனைகளே. களவு செய்தால் கை அல்லது கால் வெட்டு.

    சரி, சுல்தான் எத்தனை பெண்களை தனது அதிகாரத்தால் மறைமுகமாகக் கெடுத்தும், கொன்றும் இருப்பாரோ? நிச்சயமாக இந்தக் கொடுமைகள் நடக்கும். இவைகள் வெளியே வராது. இந்தக் கொடூரங்கள் இஸ்லாம் மதத்துக்கு விரோதமானவை என்றும், இஸ்லாமியத்தின் பெயரில் கல்லால் எறிந்து மனிதர்களைக் கொல்லுவது மிருகத்தனம் என்பதை எனது இஸ்லாமிய நண்பர் சொன்னார். ஆம், அவர் இப்போது பிரான்சில் அகதி.

    மதங்கள் ஆதிக்கத்தின் காப்பாளர்களே. கத்தோலிக்க பாதிரியார்கள் நிறையச் சிறுவர்களைக் கெடுத்தார்கள் எனும் செய்திகள் நிறைய வந்து கொண்டு உள்ளன. இஸ்லாமிய கலாசாரம் காக்கப்படும் நாடுகளில் பெண்களது சுதந்திரங்கள் இல்லை. கம்யூனிசம் பேசும் முதலாளித்துவ நாடான சீனாவில் இஸ்லாமியர்கள் மூளைக் கழுவல் சிறைகளுள் உள்ளனர். இந்தியாவில் நிறைய மதக் கொலைகளும் சாதிக் கொலைகளும். ஆபிரிக்காவின் மொரித்தானிய நாடு இப்போதும் அடிமைகளைக் கொண்டு உள்ளது சரியா? சூடானிலும், சவூதி அரேபியாவிலும் சுதந்திரம் கொல்லப்பட்டு உள்ளது. இங்கு கல்லால் எறிந்து மனிதர்களைக் கொல்லும் கொடூர சட்டங்கள் உள்ளன.

    எமது உலகம் நிச்சயமாகச் சுல்தான்களின் உலகமே. அனைத்து மத எழுத்துகளும் ஓர் உடலைக் கொல்லுவது சரி எனில், இந்த மதங்கள்தாம் உலகில் நிறையப் புண்களை பரப்பிக் கொண்டுள்ளன எனலாம். அனைத்து அரசியல்களும் மதங்களைத் தமது லாபங்களுக்காகப் பயன்படுத்தும் நிலையில் இருக்கும்போது எப்படிச் சுல்தான்களின் உலகம் மறையும்?

    ஆண்களது செக்ஸ் சேர்க்கையை வெறுக்கும் வெறுக்கும் புரூனேயினது சுல்தான், இந்த சேர்க்கையில் ஈடுபடுவோரைக் கல்லால் எறிந்து கொல்லலாம் எனச் சொல்லும்போது இவரை நான் ஓர் இஸ்லாமியராகக் காணவில்லை, ஹிட்லராகத்தான் காண்கின்றேன்.

    இப்பொது இவரது கல்லெறிதல் கொடூரத்தைக் கண்டிக்கும் மேற்கு நாடுகள், அப்போது இவரைத் துதித்தன. நிறையப் பல்கலைக்கழகங்கள் கௌரவ பட்டங்களைக் கொடுத்தன.

    அவைகளில் ஒன்று பிரபலமான ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்.

    நிச்சயமாக இதனை ஓர் பல்கொலைக்கழகம் என்றே நான் சொல்வேன்.

    Save Save

    Postad



    You must be logged in to post a comment Login