ஓர் உடல்
இது பல உடல்கள்
தேசத்திலும்
வெளியிலும்
வெளி
இது வெளியிலும்
வெளிநாடுகளிலும்
கேடு
இந்த ஓர் உடல்
முன்பு தேசம்…
பின்பு தேசங்கள்
தேசத்தில் எங்கள் வெறி,
மொழி, இனம்.
தேசங்களிலும் எங்கள் வெறிகள்
எங்கள் மொழிகள்
எங்கள் இனங்கள்
பின்பு தேசிய வாதம்…
மொழி வாதம்
இன வாதம்
பிறகு
குக்கிராம வாதங்கள்
குக்கிராம வெறிகள்
இவைகளில் பல
தேசிய வெறிகளிற்கும்
மேலானவை…
பிறகு
பின் நவீனத்துவம்
பிறகு
முன் நவீனத்துவம்
பிறகு
கால் நக்குகள்
பிறகு
பக்கத்தில் இருந்தவரும்
எதிரி
நான் செய்த தவறு
ஓர் சிங்களப் பெண்ணுடன்
வாழ்வைத்
தொடங்காமல் விட்டது.
அழி!
இந்த நாட்டை
இப்போது ஜனநாயகமாம்…
அங்கு எப்படி இன்றும்
தேசத்தை எரிப்போர்
இல்லாதுள்ளோர்
எனச் சொல்வது?
இன்றும்
எனது முகத்தின் முன்
அழகிய யஸ்மின்
இன்றும் அவளது
முகம் எனக்குள்
ஓர் வெள்ளை உடையுடன்
பள்ளிக்குப் போவதை
என் இளம் தினங்களில்
ரசித்தேன்…
முத்தங்களை
ஆண்களும் பெண்களும் உடைத்தார்கள்
போர் வெறியினாலும்,
பேசுதல் தெரியாமலும்
முத்தங்கள்
எமது போரினாலும்
தேசிய வெறிகளினாலும்
போக்கிரிப் படைப்புகளினாலும்
பாஸிசத் தத்துவ மொழிகளாலும்
அழிக்கப்பட்டுள்ளன
ஏன் எனக்கு நாடு தேவை?
அழி!
போரின் விதைகள்
இப்போதும் காக்கப்படுகின்றது
எனச் சொல்லல் பொய்யா?
பதவித்துவம்
போரின் விதைகளை
நக்குவனவே…
புசிப்பனவே…
ஒவ்வொரு
நல்ல மழையும்
எமது பதவித்துவத்தால்
எரிக்கப்படுகின்றன.
அழி
இந்த நாட்டை
இது தேசிய வாதத்தாலும்
கிராம வாதத்தாலும்
போலி இலக்கிய வெறியர்களாலும்
போலிப் பரிசை
அங்குமிருந்தும்
இங்குமிருந்தும்
நக்கி நக்கி
நாட்டை உலகமாக்காமல்
நாட்டைத் தேசமாக்கிக் கொண்டுள்ளது…
இந்த நாட்டை அழி!
இனிய முத்தங்களையும்,
இனிய மனிதர்களைப்
பிணமாக்கியதுமான
இந்த நாட்டை……………..
அழி .
(நன்றி, புதிய கோடாங்கி, 02-2016, தமிழ்நாடு )
You must be logged in to post a comment Login