மனித வாழ்வு பரிசுகள் இல்லாமல் நடக்காதிருக்குமா? அனைத்து மனிதக் குழுக்களுக்குள்ளும் பரிசுகள் இருந்திருக்கின்றன. தமிழில் மன்னர்கள் தமக்குப் பிடித்தமான கவிஞர்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் தந்துள்ளனர். பிடிக்காதோரைத் தட்டாமல் விட்டார்களா? இது உலக அனைத்து மனனர் ஆட்சிக்குள்ளும் நடந்தது. கிரேக்கம் தத்துவம் தந்தது, ஆனால் அதனது மன்னர் ஆட்சிக்குள் பட்டங்கள் கருத்துச் சுதந்திரத்துக்காக கொடுக்கப்படவில்லை, அவைகளைக் கொண்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவைகள் கலையை உயர்த்துமா? கவிஞர்களை உயர்த்துமா? அரசியலை உயர்த்துமா? எனும் கேள்விகளை இப்போதும் கேட்கலாம். மன்னர்கள் ஆட்சி முடிந்தபின்பு “மனிதர்கள்” ஆட்சி வந்த காலத்திலும் பரிசுகள், பட்டங்கள், விருதுகள் … பின் பேச்சுகள், அதன் பின் பேச்சின் மீதான கருத்துரைகள்….
மக்களின் மூச்சை முறித்த அரசியல்வாதிகளும், இயக்கவாதிகளும், பயங்கரவாதிகளும் பட்டங்களைத் தம்மை “நக்கியவர்களுக்குக்” கொடுப்பதில் இன்பம் கண்டனர். பட்டங்கள் கலை இருப்பை அழிப்பன. கொலைத்துவ வெறியரான தம்பி பிரபாவின் பயங்கரவாத இயக்கமும் மாவீரர் பட்டத்தைப் “போராளி”களுக்கும், படைப்பாளிகளுக்கும் அளித்தது… ஆனால் புலிகளது வக்கிரமான மாவீரத்தனம் தமிழ் நிலங்களையும் அழித்தது, பல பல படைப்பாளிகளுக்கும் பொட்டு வைத்தது.
படைப்பு உலகுள் இந்தப் பரிசு விஷம் இருக்கவேண்டுமா? பட்டமும் பரிசும் பெறாதா படைப்பாளிகளைத் தட்ட வேண்டுமா? அல்லது அவர்களுக்கு “அ, ஆ , இ “ கற்பிக்க வேண்டுமா? படைப்புலகத்தை அழித்துக் கொண்டிருப்பது பரிசும், பட்டங்களுமே. மனிதமும், இலக்கியமும் வாழ பட்டங்கள் அவசியமா?
எமது படைப்பிலக்கியத்திலும், அரசியலிலும் புரண்டோர் வீடுகளுக்குள் உள்ளிட்டால் அவர்களது வீட்டுச் சுவர்களுள் படங்கள் இருக்காது, பட்டங்களே இருக்கும், விருதுகளின் சின்னங்களும் தூசியால் மூடப்பட்டுக் கிடக்கும். இந்தப் பட்டங்கள், விருதுகள் ஓர் மனிதனின் இதயத்துக்கு இன்பம் தருவதாயினும், இவைகளை நிச்சயமாக ஓர் மனிதக் கலைத்துவமாகக் கொள்ளமுடியாது. தமிழில் பட்டங்கள், பரிசுகள், விருதுகள் பல பேர் பெற்றவர்களுக்குக் கிடைக்கின்றது.
மனிதக் கலைத்துவம் இயல்பானது. இது பட்டத்தை நக்கும்போது அழிகின்றது எனலாம்.
ஒருவர் 10000 சிறுகதைகள் எழுதிவிட்டார். ஆ! அட இது பெரிய விசயமல்லவா? இந்தப் படைப்பாளியை நிச்சயமாக வேறு மனிதர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்த வேண்டும். இவரை மனிதராக, படைப்பாளியாக நாம் நினைக்காது இருக்கவேண்டும். ஆம்! இவருக்கு ஓர் பரிசும் பட்டமும் கொடுக்கப்பட்டுவிட்டது. இவர் இப்போது எழுதுவதில்லை. கூட்டங்களில் அவரது மூக்கைப் பார்ப்பதற்கே படை படையாக வரும்… ஹ்ம்ம் இலக்கியப் படை மீதே கூறுகின்றேன்.
தமிழிலும் பட்டங்கள் , விருதுகள் கொடுக்கச் சபைகள் உள்ளன. இந்தச் சபைகள் தெரிவு நடத்தியே தலைகளைத் தேர்வதுண்டு. தெரிவோர் தலைக்குள் இலக்கிய மேதமை உள்ளதா அல்லது துரோகத்தனம் உள்ளதா என்ற கேள்விகள், தமக்குப் பட்டங்கள் கிடைக்காது விட்டோரால் எழுப்பப் படுகின்றன. கிடைத்தோர் சந்தோசப்படுவர், கிடைக்காதோர் மக்கர்களா? பட்ட, விருதுக் கொடுத்தல் நோய் நமது மனிதக் கலாசாரத்தையும், படைப்பு மேன்மைகளையும் அழித்துக் கொண்டுள்ளது.
நிறைய இலக்கியப் படைகளுள்ளன. ஆனால் வாசகர்கள் கொஞ்சமே. படைப்பாளிகளும், படைப்பின் மீதான பொழிப்பாளிகளும் அதிகம்…. அவர்களுள் பேட்டிகள் இருக்காது…. நிச்சயமாகப் போட்டிகள் இருக்கும். மறைப்பிலும் விழிப்பிலும் நடத்தப்படுவன இந்தப் போட்டிகள்.
இலக்கியம் என்ற வகை நிச்சயமாகப் பரிசுகளாலும், பட்டங்களாலும் அழிந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பரிசுகளும் பட்டங்களும். இவைகள் தர நோக்கைக் காட்டிலும் வியாபார நோக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளன. நோபெல் பரிசு மிகப் பெரிய இலாபமான விஷயம். இந்த பரிசைப் பெற்ற எழுத்தாளர் தனது பின்வரும் பத்துச் சந்ததியையையும் (இந்தச் சந்ததிகள் இலக்கிய நோக்கம் கொண்டனவல்ல, வங்கி முதலாளிகளாக இருக்கலாம்) பண நெருக்கடி இல்லாமல் பாதுகாக்கலாம். இந்தப் பரிசை நக்கியே நிறையப் படைப்பாளிகள் எழுதுவதுண்டு. நன்றி சொல்லலாம் பிரெஞ்சுப் படைப்பாளியும், தத்துவஞானியுமான Sartre உக்கு. இவர் நோபல் பரிசைத் திருப்பி எறிந்தவர். அதில் டைனமெட் வெடியின் மணம் உள்ளதாம் என்பது இவரது கருத்து.
இந்த வரிகள் மனித உலகில் இலக்கியம், இலக்கியம் ஆக இல்லை, அது இலக்கிய வெறியாகி உள்ளது என்பதைச் சொல்லவே. இந்த வெறி அனைத்து நிறங்களுக்குள்ளும் உள்ளன. இந்த வெறி மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்படுவது.
மேற்கு நாடுகளில் மொக்குத்தனமாக எழுதப்படுவன மூன்றாம் உலகில் மேதைத்தனமாகக் கொள்ளப்படுகின்றன. மொக்குத்தனம் மொழிபெயர்ப்பு என்ற நோயிலேயே தங்கியுள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மட்டும் நிறையப் பரிசு அமைப்புகள். இந்தப் பரிசு அமைப்புகளால் இலக்கியம் வாழுமா? மனிதம் வாழுமா?
இலக்கியம் பரிசுகளாலும் பட்டங்களாலும் அது வாழ்வதல்ல. அது வாசக உள்ளங்களுக்குள் வாழ்வது.
பட்டங்களும்,பரிசுகளும், விருதுகளும் மதிக்கப்படவேண்டியனவல்ல, எரிக்கப்படவேண்டியன என்பது என் சிறு கருத்து.
You must be logged in to post a comment Login