Recent Comments

    மாற்று உளவளர்ச்சிக் (Autism)குழந்தைகள் கருத்துப் பரிமாற உதவும் இலவச செயலி

    Autism குழந்தைகளுக்கு இலவச கணிபலகை பெறவும் வாய்ப்பு

    thayagam featured-autism Autism எனப்படும் மாற்று உளவளர்ச்சிக் குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய உதவும் செல்பேசி, கணிபலகைகளில் பயன்படுத்தப்படும் செயலி ஒன்று தற்போது இலவசமாகக் கிடைக்கிறது. அன்ட்ரோய்ட் வகை செல்பேசி, கணிபலகைகளில் செயற்படும் LookAtME எனப்படும் இந்த செயலியை சம்சுங் நிறுவனம் வழங்குகிறது. தென் கொரியாவில் உள்ள உளவியலாளர்கள், உளவியல் மருத்துவர்கள் குழு ஒன்று வடிமைத்த இந்தச் செயலி ஏழு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக் கூடியது. இதை play.google.com இல் உங்கள் செல்பேசி, கணிப்பலகையில் நேரடியாகவோ, கணனி மூலமாகவோ தரவிறக்கம் செய்ய முடியும். கணனி மூலம் தரவிறக்கம் செய்வோர் USB,Bluetooth மூலமாக செல்பேசிக்குள் தரவிறக்கம் செய்யலாம். மாற்று உளவளர்ச்சிக் குழந்தைகள் நேரே கண்ணுக்குக் கண் பார்ப்பதைத் தவிர்க்கும் இயல்புடையவர்களாக இருப்பின், அவர்கள் பெற்றோருடனும் மற்றவர்களுடனும் நேரே பார்த்து முகபாவங்களை அவதானிக்க வைப்பதுடன், மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு பழகுவதையும் இந்தச் செயலி ஊக்குவிக்கிறது. வீடியோ விளையாட்டு (Video Games) போன்று, புள்ளிகள் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயலி, செல்பேசிக் கமெராவைப் பயன்படுத்தி இந்தப் பிள்ளைகளை தங்களது முகபாவங்களை போட்டோ எடுக்க வைக்கிறது. அத்துடன் மற்றவர்களுடன் சேர்ந்து முகபாவங்களைப் படமெடுக்கவும் வைக்கிறது. இந்தக் குழந்தைகள் மற்றவர்களின் கண்களை நேரில் பார்த்து, மற்றவர்களின் முகபாவங்களை விளங்கிக் கொண்டு, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை விட, இந்தச் செயலியில் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தைப் பெற்றோர்கள் அவதானிக்கலாம். தினசரி பிள்ளைகள் சுமார் இருபது நிமிடம் வரை இச் செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. சம்சுங் கனடா நிறுவனம் இந்தச் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட 200 கணிபலகைகளை மாற்று உளவளர்ச்சிக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குகிறது. samsung.com/LookAtMe என்ற இணையத் தளத்தில் உங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். தை 16ம் திகதி வரைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய பிள்ளைகள் இவ்வாறான நிலையில் இருந்தால் அவர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள். இச்செயலி சம்சுங் நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டதனால், ஐபோன், ஐபாட் போன்றவற்றிற்கு இந்தச் செயலி இல்லை. இந்தச் செயலியை தரவிறக்குவதில் சிரமப் படுபவர்கள் பாம் பிரிண்ட் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரையில் உதவி செய்வோம். இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்கான கைநூலை (App User Guide)  நீங்கள் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, பதிவிறக்கம் செய்யலாம். இதே கைநூலை பாம் பிரிண்ட் இலவசமாக அச்சிட்டு வழங்குகிறது. பலர் ஆர்வம் காட்டினால், இந்த கைநூலைச் சுருக்கமாகத் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டு இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளோம்.

    Postad



    You must be logged in to post a comment Login