Recent Comments

    புண்ணியம் தேடும் அன்னதானம்

    annathanamபேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    வீட்டுக்காரியின் ஜீவகாருண்யம் பற்றி எனக்கு என்றைக்கும் சந்தேகம் வந்ததில்லை. அதிதீவிரமான அந்த ஜீவகாருண்யம் சில நேரங்களில் அளவுக்கு மீறியதோ என்ற எண்ணம் ஏற்பட்டாலும், அப்பாவி ஜீவன்களான கணவர்கள் மீதே காருண்யம் இல்லாமல் துவைத்து எடுக்கும் சாடிஸ்டிக் வீட்டுத் தலைவிகளைப் பார்த்த பின்னால், கடவுள் நம் மீது வைத்திருக்கும் ஜீவகாருண்யம் பற்றி பெரிய நன்றியுணர்வு!

    அதிகாலையில் வேலைக்கு கொண்டு போய் விடப் போகும் போதெல்லாம், நம்ம வீட்டுத் தெருமூலைப் பாடசாலையின் பனி மூட்டம் மூடிக் கிடக்கும் மைதானத்தில் கூட்டமாய் வந்திறங்கி உணவு தேடும் பறவைக் கூட்டத்தைக் காணும் போதெல்லாம் ‘வீட்ட கிடக்கிற பழைய பாணைக் கொண்டு வந்து இதுகளுக்குப் போட வேணும்’ என்று சொல்லும்போது மட்டும் நான் அதை நம்புவதில்லை.

    இப்படியாக எத்தனையோ தடவை கேட்டிருக்கிறேன். ஒரு நாளுமே அந்த ஜீவகாருண்யம் செயல் வடிவம் பெற்றதில்லை… கடன் அட்டை உபயத்தில் ஊருக்கு விலாசம் காட்டப் போகும் புலன் பெயர்ந்தவர்கள், அங்கு வாழும் ஏழை எளியவர்களுக்கு வழங்கும் ‘போய் காசு அனுப்புறன்’ என்ற உறுதி மொழி மாதிரி!

    சனிக்கிழமைகளில் காகத்திற்கு சாப்பாடு போட்டு, சனியைக் கழிக்க இங்கே காகங்கள் பெரிதாக இல்லை. நம் மேல் தீரா அன்பு பூண்டு, தன் முழுக்கண் பார்வையையும் நம் மேலே திருப்பி, அருள் பாலிக்கும் சனி பகவானின் கடாட்சத்தை கழிப்பதற்கும் நம் உழைப்பை முழுமையாகக் கொடுத்தாலும் தீராது.

    இதற்குள் புறாக்களுக்கும் வாத்துக்களுக்கும் எதற்கு அனாவசியமாய் என்று, நானும் அது பற்றி அக்கறைப் படுவதில்லை.

    ஒரு நாள் ஏதோ எண்ணத்தில் தாயும் மகனும் வாசலில் தட்டு வைத்து, பாண் துண்டுகளைப் பிய்த்துப் போட்டிருந்தார்கள்.

    நமக்கும் ஜீவகாருண்யம் இல்லாமல் இல்லை. ஆனால் இந்தக் கூத்து சில நாட்கள் நடக்கும், அதற்கப்பால் அந்தத் தட்டு தேடுவாரற்று இழுபடும் என்பது தெரிந்த விடயம். இதனால், முன்னெச்சரிக்கையாக அதையும் சொல்லி வைத்தேன்.

    எந்தத் தீர்க்கதரிசியும் தன் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இதற்குள் சொந்த வீட்டில் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

    ‘நீ சும்மா இரு, அது நாங்கள் வைப்பம்’. ஒருமையில் பதில் வந்தது!

    இப்படி நாய் வளர்க்கும் ஆசை மகனுக்கு வர, வீட்டுக்காரி ஒத்தூத, கடைசியில் கொட்டிய பனிக்குளிருக்குள் நாய்க்கு இயற்கைக் கடன் கழிக்க வடலி தேடுவது நான் என்பதில் முடியும் என்பதால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் இருந்தும், தனி ஒரே ஒரு வாக்கினால், திட்டவட்டமான வீட்டோ அதிகாரம் பிரயோகிக்கப்பட்டது.

    அதிக பட்சம் ஓரிரு வாரங்கள் நடந்தது, அன்னதானம்!

    வேலை முடிந்து வரும் வேளைகளில் தட்டு அனாதரவாய் கிடக்க… அயலட்டைப் பூனைகள் வந்து எட்டிப் பார்த்துப் போகத் தொடங்கின. சில நேரங்களில் எட்டி நின்று காத்திருந்தன.

    பிறகென்ன? சனி கழிக்கிறது இருக்கட்டும், இந்த வாய் பேசா ஜீவன்களின் சாபம் நம் மேல் வந்து விழாமல் இருக்கட்டுமே என்று, நமது ஜீவகாருண்யம் விழித்துக் கொண்டது.

    மகன் பாடசாலைக் காலங்களில் காலையுணவாய் பாலோடு உண்ட கோதுமை நார்த் தகடுகளும் உருண்டைகளும் கவனிப்பாரற்றுக் கிடக்க, முடிவுத் திகதி எட்டியதால், முதலில் அவை தட்டை நிறைத்தன.

    ஊரில் உள்ள மிருகங்கள் ஆயின் சாப்பிட்டு மிஞ்சிய சோற்றைப் போடலாம்.

    அதுசரி, இங்குள்ள பூனைகள் நாறின மீனை எப்படிப் பார்க்கும்? முன்பின் சாப்பிட்ட அனுபவம் இருக்காது! பிடிப்பதற்கும் ஏரியாவில் எலிகள் இல்லை. ஒரு தடவை மரத்தில் இருந்த பறவை ஒன்றை கரந்தடி முறையில் தாக்க முயன்ற பூனையை கொல்லைப்புறத்தில் கண்டது, அவ்வளவு தான்!

    சுப்பர்மார்க்கட்டில் பைகளில் அடைத்து, அதற்கென விசேடமான தட்டுகளில் மட்டுமே உபசரிக்கும் உணவைச் சாப்பிட்டு, பஞ்சு மெத்தையில் உறங்கும் பூனைகளுக்கு மண்ணில் சாப்பிடும் நம் பூனைகளில் தலையெழுத்து எப்படிப் புரியும்?

    வளர்ப்பு விலங்குகளுக்கான விசேட உணவெல்லாம் விலைக்கு வாங்கி தானம் பண்ண சனி பகவான் விடாவிட்டாலும், இருக்கிறதே நம் தேசிய உணவு, பாண்!

    அருகில் உள்ள வெதுப்பகரிடம் றோஸ்ட் பாண் வாங்கும் போது, நமக்குப் பிடித்தமானது வெந்து கருகிய கரைப் பகுதிகளே! ஆனால் அந்தப் பகுதி தமிழர்களால் தீண்டத் தகாததாகக் கருதப்படுகிறது.

    ஏனோ நமக்குப் பிடித்தது தமிழனுக்குப் பிடிப்பதில்லை!
    தமிழனுக்குப் பிடித்ததும் நமக்குப் பிடிப்பதில்லை!

    அதனால் வெதுப்பகரும் இரண்டு துண்டுகளுக்குப் பதிலாக மூன்றாம் துண்டை போனசாகத் தருவார்… யாருக்குமே பயன்படாததை நமக்கு பாண் தானமாக!

    எனவே பாண் வாங்கிய ஓரிரு நாட்களுக்குள் எஞ்சியவை தட்டை நிறைக்கும்.

    தட்டுக்கு ரெகுலர் விசிட்டர்கள் வரத் தொடங்கினார்கள். அயலட்டையில் அகதித் தஞ்சம் மறுக்கப்பட்ட, வீடற்ற பூனைகள் அடிக்கடி வந்து போகும். அவற்றில் சில சதா கர்ப்பிணிகளாக இருக்கும்… நம்ம பகுதியில் அதிகமாய் உலவும் முகமூடிப் பெண்கள் போல!

    அதில் ஒன்று கொல்லைப்புறக் கொட்டகைக்கு கீழ் பகுதியை பிரசவ விடுதியாக வேறு மாற்றியிருந்தது. தாயும் குட்டியுமாக உரிமையோடு கொல்லைப் புறத்தில் கொஞ்சக் காலம் உலவின. மகன் அவற்றுக்குப் பெயர் கூட வைத்திருந்தான். இன்னொரு பூனை கார்பீல்ட் படப் பூனை போலிருந்ததால் அதற்கு கார்பீல்ட் என்று வைத்திருந்தான்.

    பக்கத்து வீட்டுக்காரர் ஒரு பூனையின் அகதி மனுவை ஏற்றுக் கொள்ள, அந்தப் பூனை ஜன்னலோரமாய் இருந்து மற்றப் பூனைகளை ஏளனப் பார்வை பார்க்கும்… குடியுரிமை பெற்ற தமிழனைப் போல!

    தற்போது பறவைகள் வரத் தொடங்கின. அவற்றின் வசதி கருதி துண்டுகளைச் சிறிதாகப் பிய்க்க வேண்டியிருந்தது. கூட்டமாய் வந்து, தாக்குதல் நடத்தி அவை வெற்றிகரமாக வேகமாய் பின்வாங்கின.

    அணில் ஒன்று ஒன்பது மணியளவில் வரும். கொல்லைப் புறமிருந்து வேலியோரமாய் வந்து, கதவோரமாய் இருந்த தட்டில் இருந்த உணவை எடுத்து வந்து வேலியிலோ, ஜன்னலோரமாய் இருந்த குப்பை வாளியிலோ ஏறி இருந்து, ஜன்னலூடாக உள்ளே பார்த்து, கும்பிடுவது போல நின்று சாப்பிடும்.

    தந்த உணவுக்கு நமக்கு நன்றி செலுத்துவதாக இருக்கலாம்.

    பின்னர் இந்த விசிட்டர்கள் தங்கள் விருந்தாளிகளையும் அழைத்து வரத் தொடங்கினார்கள். அணிலுடன் இன்னொரு அணில். காதலியாக இருக்கக் கூடும். வீதியைக் கடந்து எதிர்ப்புறமிருந்து கூட அணில்கள் வந்தன.

    ஆனால் இந்த மிருகங்கள் எல்லாம் ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்திலேயே வந்தன.

    அந்த உணவுக்காக அவைகள் சண்டையிட்டதையோ, உணவுண்ண வந்த அணிலையும், பறவைகளையும் உணவாக்க பூனைகள் முயன்றதையோ கண்டதில்லை.

    நேற்று காலை வேலைக்குப் போகும் போது தட்டில் உணவை வைத்து விட்டுச் சென்றேன்.

    மாலை வரும் போது, தட்டில் மீதி இருந்தது.

    புத்தருக்கு போதிமரம் மாதிரி… நமக்கும் நிர்வாணம் கிடைத்தது!

    பசி எடுக்கும் போது உணவைத் தேடுதல். கிடைத்த உணவில் பசியாறுதல். அடுத்த நேர உணவைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத வாழ்வு.தேவைப்பட்டால் பிள்ளைகளுடன் வந்து பசியாறுமே தவிர, பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை.

    மனிதனின் பிரச்சனைகள் பல தனது தேவைகளுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள நினைப்பதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.

    மிஞ்சியதை அடுத்த வேளைக்காக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நினைப்பு அந்தப் பிராணிகளுக்கு இல்லை. குளிர் காலங்களில் உண்பதற்காக அணில்கள் பருப்புகள் கொண்ட விதைகளைத் தேடிச் சேமிக்கின்றன. மற்றும்படி உணவைத் தேடிக் கிடைத்ததை உண்பதுடன் அவற்றின் எதிர்பார்ப்புகள் முடிகின்றன.

    வானத்துப் பட்சிகளைப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை. அறுப்பதுமில்லை. களஞ்சியத்தில் சேர்ப்பதுமில்லை. இறைவனே அவற்றுக்கு உணவளிக்கிறார்… என்றார் இயேசு.

    தேவைக்கு மிஞ்சியதை அந்த இடத்திலேயே மற்றவர்களுக்காக விட்டுச் சென்ற அந்த மிருகங்கள் பற்றி ஆச்சரியப்பட வேண்டி வந்ததன் காரணம்…

    ஏழை எளியவர்களுக்கு அன்னதானமாய், கோவிலில் கொடுக்கும் சாப்பாட்டை தங்களுக்கும் வாங்கி, போகும் வழியில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்கும் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்த கோயில் சாப்பாடு ஒன்று, அவர்களுக்கும் அதிகமாய் போனதாலோ, எனக்கு நேற்றுக் கிடைத்தது. ஏற்கனவே சாப்பாடு கொண்டு வந்ததால், அதை வைத்து இன்றைக்கு வைத்து சாப்பிட வேண்டி வந்தது!

    பூனைக்குப் போட்ட சாப்பாட்டின் புண்ணியம், நமக்கு கோயில் மூலமாகக் கிடைக்கிறது.

    விதி ஒரு சுற்றுச் சுற்றி வருகிறது.

    அங்கே அன்னதானம் வழங்கிய பெருமகனுக்கும், பெண்டாட்டி ‘உங்க சாப்பாடில்லாமல் இருக்கிற சனத்துக்கு ஒரு நாளைக்கு கோவில்ல சாப்பாடு குடுக்க வேணும்’ என்று போகிற போக்கில் சொல்லியிருக்கக் கூடும்!

    Postad



    You must be logged in to post a comment Login