Recent Comments

    அழிநானூறு

    (1990 களில் “தாயகம்” இதழுக்கு நிறைய எழுதியவர் எஸ்.கௌந்தி . இவர் புகலிடத்தின் தொடக்க கால பெண் கவிஞர்கள் மீது காத்திரமான தகவல்களை “இருத்தலியல் விசாரணைகள்” எனும் தொடர் பகுதிக்குள் எழுதியுள்ளார். இவரது அராஜக எதிர்ப்பினை “அறிமுகம்” எனும் தொடருக்குள் அறியலாம். கடந்த 15 வருடங்களின் முன்னர் இவர் “தாயகம்” இதழுக்காக “அழிநாநூறு” எனும் தலைப்பில் 400 கவிதைகளை எழுதும் திட்டத்தைத் தொடங்கினார். சில சூழல்களால் முழுக் கவிதைகளும் எழுதப்படவில்லை. 52 எழுதப்பட்டது. இந்தக் கவிதைகள் இப்போது தரப்படுகின்றன.)

    Ali40052 கவிதைகள்
    (கனவு, நனவு, புரட்சி)

    எஸ்.கௌந்தி

    (1)
    கேள்!
    கேள்!!!!
    கேள்வி கேட்காதே!
    கேட்டால்
    திறக்கப்படாது
    நீ தட்டப்படலாம்
    தட்டப்படுவாய்.

    (2)
    புலி
    பசுவைத் தட்டலாம்
    பசுவைத் தட்டும்
    தமிழனைப் புலி தட்டும்
    எப்போது
    பசு
    புலியைத் தட்டுமாம்?

    (3)
    எலிக்கும்
    போர் வெறி
    ஏன்?
    ஓ!
    அது வடக்கில் பிறந்த
    எலியாக இருக்கலாம்.

    (4)
    அழித்தோர்
    தலைவர்கள்
    அழிக்கப்படுவோர்
    மக்கள்

    (5)
    பிராணிகள் பாதுகாப்பில்
    தலைவருக்கு வெறி
    மாட்டைக் கொன்றவனிற்கும்
    அவர் வைப்பார்
    பொட்டு

    (6)
    கூட இருந்தவனும்
    குழி பறிப்பதாகத்
    தலைவர் கனவு கண்டால்
    அவனுக்கும் பொட்டு

    (7)
    பொட்டாயிரம் எனப்
    புலவர் ஒருவர்
    தனது சுயபெயரைப் போட்டு
    எழுதினால்
    அவருக்கும் பொட்டு

    (8)
    நாறுவது தேசம்
    சீறுவது புலி
    சீறு! சீறு!
    நீயும் நாறிக்
    கருகும் வரை

    (9)
    புலி
    தலைவர் சின்னம்
    அவர் தலைக்குள்
    ஓர் மிருகமிருப்பதெனல்
    தப்பா?

    (10)
    இது அழி உலகு
    இலக்கணத்தையும்
    இலக்கியத்தையும்
    அடிக்குறிப்புகளையும்
    தூக்கி
    குப்பைக் கூடத்துள் எறி

    (11)
    புலியூர்க்கேசிகனை
    நான் வாசிக்கேன்
    அவர்
    புலியாக இருக்கலாம் எனும் பயம்.

    (12)
    நான் இலக்கியத்தைத்
    திட்டுவேன்
    தலைவரைத் திட்டேன்
    இது எமது
    புதிய இலக்கிய இலக்கணம்

    (13)
    அழிக்கத் தெரியும்
    படைக்கத் தெரியாது
    இதுவே
    தமிழீழ மாயமான்

    (14)
    ஏன் தலைவர்
    மன்னராகவில்லை?
    குண்டுவைத்த கிரீடம்
    தலையில்
    சூட்டப்படலாம்
    எனும் பயமா?

    (15)
    தலைவர்
    ஓர் ஒளிவிளக்கு அல்ல
    ஒழிக்கும் விளக்கு
    தலையையும் காட்டார்
    திரியையும் காட்டார்

    (16)
    மனிதப் புத்தகத்தை
    நாங்கள் வாசிப்பது
    சுடலைகளில்
    தேசத்தைச் சுடலையாக்கியது
    இயக்கம்

    (17)
    அன்பும் இல்லை
    காதலும் இல்லை
    எங்களை
    நவீன அடிமைகளாக்கியது
    இயக்கம்

    (18)
    வை
    என்றால் வை
    இல்லையேல்
    இயக்கம்
    வைத்துவிடும்

    (19)
    பிரிவைத் தழுவி
    பிரீதியைத் தள்ளி
    கொலைக் கலையை
    கலியாணம் செய்தது
    என் தேசம்

    (20)
    கூறுபடு நிலத்தில்
    காலங்களும் இல்லை
    பாலங்களும் இல்லை
    பொய்ப் பிரகடனங்களை வாசித்து
    நாங்கள் குருடர்களாக
    கூறுபடு நிலத்தில்

    (21)
    வா என்றது கரை
    போ என்றது கடல்
    கேள்!
    மூடு!
    தா!
    என்றது இயக்கம்

    (22)
    தந்தவன் தப்பலாம்
    தட்டப்பட்டால்
    தியாகியாகலாம்
    தராதவன்
    தட்டப்படுவான்
    துரோகியாவான்

    (23)
    இயக்கம்
    மனிதைப் பாடாது
    அதனது மரணத்தில்
    கொக்கரிக்கும்

    (24)
    ஓர் சின்னப்புலி
    பசி என்றபோது
    அதனை நான்
    மக்டோவிற்கு
    இழுத்துச் சென்றேன்
    இரண்டு
    பிக்மக் சாப்பிட்டபின்
    அது என்னைக்
    கடிக்க வந்தது

    (25)
    பிக்மக்
    புலிகளிற்கு மட்டுமல்ல
    எலிகளிற்கும்
    சுவையானவை
    கடிக்;க வந்த புலிகளை
    எலிகள் வெருட்டின
    புலிகள் போனபின்
    எலிகள்
    என்னைக் கடிக்கவந்தன
    என்னோடு
    ஓர் பூனையைக் கண்டு
    எலிகள் ஓடித் தப்பின.

    (26)
    எனது அருகில்
    இருந்த பூனை
    என்னது அல்ல
    உனது அருகில்
    இருக்கும் புலிகூட
    உன்னதும் அல்ல

    (27)
    பாசத்தை வளர்க்காமல்
    பாஸ் ஜக் காட்டியது இயக்கம்
    பாஸிசம்
    அதனது காலைத் தேநீர்

    (28)
    எங்களிற்கு
    தேயிலை வளர்க்கத் தெரியும்
    குடிக்கத் தெரியாது
    இன்று எங்களிடம்
    தேயிலையும் இல்லை
    தேசமும்
    இல்லை

    (29)
    நான் எனது தேசத்தில்
    வாழாமல்
    காட்டில் அல்ல
    வேறு தேசத்தில்
    தம்பியோ காட்டில்
    ஏன் இன்றுவரை
    தான்
    அகதியெனாதிருக்கின்றார்?

    (30)
    பாடு தம்பியை
    பாடாதிரு
    பௌத்தர்களை
    சிறில் மத்தியூவும்
    வே.பியும்
    குடித்த இரத்தம்
    இனவாதம்

    (31)
    கடலின் நிறம் எங்கள்
    கண்ணுக்குத் தெரியாது
    நாங்கள்
    தீவினதும்
    தேசத்தினதும்
    புத்திரர்களா?
    புத்திரிகளா?
    புத்திஜீவிகளா?

    (32)
    கட்டுப்பாடுகள்
    கனவுகளை உடைக்கும்
    கட்டுப்பாடுகள்
    களவுக் கேள்விகளால்
    இருத்தலைத் தியானிக்க
    அழுவது
    எனது தேசம்

    (33)
    மண்ணின்
    இயற்கை மணம் மாறிவிட்டது
    மண்ணில் இன்று
    இரத்த மணம்
    பங்கர்கள்
    தலைவர்களதும்
    தலைகளை நாளை போடும்
    மாவீரர்களினதும்
    சொர்க்கமாக…
    (34)
    ஒப்பாரிகளையும்
    அடக்குவன துப்பாக்கிகள்
    மரணங்கள்
    மர்மமாகவும்
    குரூரமாவும்
    அம்மா!
    நீ ஏன் இவர்களைப்
    பெற்றாய்?

    (35)
    அம்மா!
    நீ உனது மகனின்
    எதிரிக்குத்
    தண்ணீர் கொடுத்தால்
    நீ
    எதிரியாகுவாய்
    கண்ணீர் விடு
    நாளைய குழந்தைகள்
    உனது மாவீர மகன்களாக
    இல்லாதிருக்க.

    (36)
    தோட்டத்தைத் தேடாமல்
    காட்டைத் தேடியது இயக்கம்
    ஆம்! மிருகவெறி
    மலர்கள்
    இயக்கத்திற்குத் தெரியாதன
    காடும்
    மலர்களை விழுங்கியது
    இயக்கம் காட்டினினுள்
    மிருகங்களையும்
    மிரட்டுகின்றது

    (37)
    படி!
    எனது இயக்கத்தின்
    அரசியல் பொய்களை
    படி!
    எனது இயக்கம் தரும்
    கவிதைகளை
    கேள்!
    பேசத் தெரியாத் தலைவர்
    பேய்ப் பேச்சுகளை

    எழு!
    நீ புதிதாகப் பிறப்பதிற்கு

    (38)
    குடங்களும்
    உடைந்தன
    எனது அழகிய பெண்களின்
    மெல்லிய
    இடைகளையும் உடைத்தன
    போர்
    இந்த இடைகளின்
    உடைவுகளின் போது
    எனது களவுகளும்
    கனவுகளும் உடைந்தன

    (39)
    காற்று வரும்
    போகும்
    திரும்பவும் வரும்
    போர் வரும்
    போகாது

    (40)
    மீன் வாசத்தைச்
    சுவைத்த
    எனது கரைகளில்
    இன்று
    பிணவாசம்
    கடலும் என்னை இனம்காண
    மறுக்கின்றது

    (41)
    வேலிகளின் பின்னே
    அழகிய பெண்கள்
    தாலிகளின் பின்
    அடிமைகள்

    (42)
    அவள் விழிகள்
    என்னைக் கடித்தன
    கடிக்கவிட்டேன்
    சாதிக் கேள்விகளால்
    அவள் ஊமையாக்கப்பட்டாள்
    எனக்குள் இன்றும்
    அவள் விழிகள்

    (43)
    அழி காடு
    அழி நாடு
    அழி இயக்கம்
    அழி தலைவர்
    அழி ராணுவம்
    அழி சாதிகள்
    அழி ஆணவம்
    உனது விழிகள்
    விழித்திருக்கட்டும்
    என்னை அழிக்கட்டும்

    (44)
    பங்கர்கள்
    தலைவர்களிற்கு
    சுடலைகள்
    மக்களிற்கு

    (45)
    மக்கள்
    மனத்தின்
    மனிதாபிமானத்தை
    மிரட்டின இயக்கங்கள்
    மக்கள் அழிவில்
    இயக்கப் பிரகடனங்கள்
    தயாரிக்கப்பட்டன

    (47)
    எனது வீட்டின்
    அழிவில்
    லாபம் அடைந்தது
    இயக்கமும்
    அரசும்
    இரண்டும் எனது தேசத்தின்
    எதிரிகள்
    (49)
    கடல் பாடும் கவிதையை
    எங்களிடம் இருந்து
    திருடியது இயக்கம்
    இனவெறிக் கவிதைகளால்
    எங்கள் கடல்களை
    அழித்ததும் இயக்கம்

    (50)
    தீண்டாமையைத்
    தின்னும் இயக்கத்தின் போர்
    தீர்வுகளையும்
    தின்றுகொண்டுள்ளது

    (51)
    கடலின் வழியாகக்
    கடத்தல்
    நிலத்தில் நடப்பது
    குழந்தைகள் கடத்தல்
    (52)
    இயக்கத்திற்கு
    மரணபயம்
    தனது நிழலையும்
    எதிரி என நம்பித்
    தட்டுகின்றது

    Postad



    You must be logged in to post a comment Login