பைரவன் சேவை நாட்டுக்குத் தேவை!
சொன்னால் சிரிக்கக் கூடாது.
வாழ்நாள் விருது சாத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர் போலவே, 'கவிஞர்' அகரமுதல்வன் பற்றியும் எனக்கு முன்பின் தெரியாது. (அடடா... வாழ்க்கையில் பாதியை இழந்திட்டீங்களே! வாசிக்காமல் பின் எதுக்கடா கருத்துச் சொல்றாய்?...)
முகநூலில் இந்தச் சர்ச்சை வந்த போது, கதையை வாசிக்க வேண்டி வந்தது.
சிங்கள இராணுவத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்துகிறேன் பேர்வழி என்ற போர்வையில், வெளிவரவிருக்கும் தமிழினியின் புத்தகத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க, தமிழினியின் நம்பகத்தன்மையை உடைப்பதற்காக, நேரம் பார்த்து வெளியிடப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள புலிக்காய்ச்சல் எதுவும் தேவைப்படவில்லை.
முகப்புத்தகத்தில் ஆரவாரம் அதிகமாக, வெளியிட்டவர்கள் வெளியில் தெரியாமலேயே ஜகா வாங்க...
எழுத்தாளரும் தலை மறைவானார்.
பொதுவெளியில் யாரும் கருத்துச் சொல்லலாம். அதற்கான சுதந்திரங்கள் அனைவருக்கும் உண்டு. ஆனால், சொல்லுகின்ற கருத்துக்களை குறைந்த பட்சம் தர்க்கரீதியாக நியாயப்படுத்தவும், தான் சொன்னது தவறு என்று உணரும் பட்சத்தில் 'மன்னிச்சுக்குங்கப்பா, சொதப்பிட்டேன்!' என்று மன்னிப்புக் கோரவும் துணிச்சலும் பக்குவமும் வேண்டும்.
அது இரண்டுமே இல்லாமல் 'தலை' மறைவாக, நியாயம் சொல்ல வால்கள் பலர் களத்தில் குதித்தார்கள்.
அவர்களை இணைத்த பொது இழை...
கண்டனம் தெரிவித்தவர்கள் அனைவரும், புலிக்காய்ச்சல் பிடித்தவர்களாக இருந்தது தான். (புலிவால் பிடித்தவர்கள் சிலரும் இருந்தனர் என்பது உண்மை!)
முன்பு 'எமது மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போதும், எமது பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்ட போதும்' இவர்கள் எங்கிருந்தார்கள் என்ற பாணியில்... இவர்களின் நிலைப்பாட்டை புலிக்காய்ச்சல்காரர்களே தீர்மானித்தார்கள்.
அந்த நிலைப்பாடு அகரமுதல்வனை சல்மான் ருஷ்டி ரேஞ்சுக்கு ஏற்றி, அவரது கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் புலிக்காய்ச்சல்காரர்களின் மீது பாய்ந்தது.
புலிகளின் காலத்தில் கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் எழுப்பிய போதெல்லாம், துரோகிகள், கைக்கூலிகள் என்று கூச்சல் போட்டவர்கள் இன்று அகரமுதல்வனின் கருத்துச் சுதந்திரத்தை புலிக்காய்ச்சல்காரர்கள் மறுப்பதாக புழுங்கினார்கள்.
பிரபாகரன் கொல்லப்பட்ட படத்தை பார்த்து புலம்பி அழுத அக்கா ஒருவர், அகரமுதல்வனைக் காணும் போது, செல்லமாகக் கன்னத்தில் தட்டி 'ஏன் அப்படி எழுதினாய்?' என்று கேட்கப் போவதாக வேறு உறுதி மொழி தந்தார்.
பிரச்சனை கருத்துச் சுதந்திரம் பற்றியதல்ல,. சிங்கள இராணுவம் புரிந்த மானிட விரோத குற்றங்களை நியாயப்படுத்துவதற்காகவோ, மறைப்பதற்காகவோ, அகரமுதல்வன் மீது யாரும் விமர்சனம் வைக்கவில்லை. ஏன் தமிழினி புலிகளோடு இருந்த காலத்தில் நடந்து கொண்ட முறையை நியாயப்படுத்துவதாகக் கூடவும் இல்லை. தமிழினி மூலமாக புலிகள் மீண்டும் வந்து ஈழம் பெறுவார்கள் என்ற கனவைக் கலைக்க பயன்படுத்த முடியும் என்பதற்காகவும் இல்லை. (இதை எதிர்ப்பதற்கும் ஆண்மோலாதிக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை)
விமர்சனம் எல்லாமே, யாழ்ப்பாண முறைப்படி தயாரிக்கப்பட்ட புலி பிராண்ட் தமிழ்த் தேசியம் கேட்க விரும்பும் பொய்களை சோடித்து, பெண் போராளிகளையும், குறிப்பாக தமிழினியையும் கேவலப்படுத்துவதற்காக புனையப்பட்ட விதமும் தற்போது வெளியிடப்பட்டதன் உள்நோக்கமும் குறித்தது தான்.
தமிழ் முகப்புத்தகத்தில் இசைப்பிரியாவின் படத்தைப் போட்டு, 'இந்த அநியாயத்தைக் கேட்போர் யாரும் இல்லையா?' என்று கேட்டு, சிங்கள அரசின் கொடூர முகத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், இசைப்பிரியா தங்கள் சகோதரியாக, மகளாக இருந்தால் அதே ஆக்ரோசத்தோடு செய்வார்களா?
எவரோ பெற்ற பிள்ளையை இழுத்துக் கொண்டு போய் பலி கொடுத்து ஈழம் பெறலாம் என்ற நியாயப்படுத்தல் போல, தன் வாழ்வை பேராட்டத்திற்காக பலி கொடுத்தவர்களுக்கு நடந்த அவலத்தை, வெளிநாடுகளில் வசதியாக தங்கள் பிள்ளைகளை வளர்த்துக் கொண்டு, அருவருப்பூட்டும் விதத்தில் வக்கிர உணர்வுடன் சித்தரிப்பதைப் பற்றிய விமர்சனம் தான் அது.
இது தான் வித்தியாசம்! இது தான் அந்த விமர்சனத்தில் இருந்தது.
இங்கே யாரும் சிங்கள அரசுக்கோ, இராணுவத்திற்கோ வக்காலத்து வாங்கவில்லை.
ஆனால் விமர்சனம் செய்தவர்களை முறியடிக்க, வழமையாக விடும் 'துரோகி' அஸ்திரத்தை இவர்கள் பிரயோகிக்கிறார்கள்.
இவர்கள் எதற்காக குத்தி முறிய வேண்டும்?
எழுதியவரும் பிரசுரித்தவரும் எழுந்து வந்து நியாயப்படுத்த வேண்டியது தானே!
தலை பங்கரூக்குள் இருக்கும் போது, வால்கள் எதற்காக வெட்டப்பட்ட பல்லி வால்கள் போல துடிக்கின்றன?
புலிக்காய்ச்சல்காரர்கள் மீதான கோபத்தால் இவர்கள் 'கவிஞருக்கு' வேண்டுகோள் விடுக்கிறார்கள். 'கொடிய சிங்களத்தை அம்பலப்படுத்த தொடர்ந்து எழுதுங்கள்! இந்தப் புலிக்காய்ச்சல்காரர்களின் விமர்சனத்துக்கு அஞ்சாமல் எழுதுங்கள்!'
(ஏன் நீங்கள் எழுதலாமே என்று நாங்கள் ஒரு போதும் கேட்கப் போவதில்லை)
சரி, எது எப்படி என்றாலும் இதனால் தமிழ் மக்களுக்கு நன்மை என்றால், நாங்கள் குறுக்கே நிற்கவா போகிறோம்?
'கவிஞர்' அகரமுதல்வனே!
மெளனம் கலைத்து எழுந்து வாருங்கள்.
சிங்கள அரச இராணுவத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தி, ஐ.நா வின் மனதை இளகப்பண்ணி, சர்வதேச விசாரணையைக் கொண்டு வந்து, ராஜபக்ஷக்களை கழுவிலேற்றவும், அமெரிக்க அரசின் மனதைக் குமுறச் செய்து, தலையீடு செய்து ஈழத்தை வென்றெடுக்கவுமான பாரிய பணி, உங்கள் தோள் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே தமிழினி, பெண் போராளிகள் பற்றி நீங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தபடி எழுதிய கதை கல் போன்ற அவர்களின் இதயத்தைக் கரைக்க ஆரம்பித்திருக்கிறது.
எப்படியவாது அவர்களைக் களத்தில் குதிக்க வைக்க உங்கள் எழுத்துத் திறன், வைரவன் சேவை நாட்டுக்குத் தேவை மாதிரி, அவசியம் தேவை. உங்களுடைய எழுத்தால் புரட்சி செய்யப் போகிறீர்கள் என்று உங்கள் முகப்புத்தகப் பதிவில் கண்டதை பதிவிட்டிருந்தார்கள்.
எனவே, களத்தில் குதித்து எழுதுங்கள். உங்கள் எழுத்துத் திறமையைப் பாராட்டி 'தட்டுவார்கள், தட்டுவார்கள்'. (என்னங்க, உங்க முதுகையா? இல்லை, கையை!)
ஐரோப்பாவுக்கு அழைத்து வாழ்நாள் சாதனை விருது என்ன, அகதிக் கோரிக்கைக்கே வழி பண்ணுவார்கள்.
உடனடியாக எழுதுங்கள்...
மதிவதனிக்கும் துவாரகாவுக்கும் நடந்த கொடூரத்தை!
You must be logged in to post a comment Login