நீங்கள் இணையத்திற்கும் முகப்புத்தகத்திற்கும் அடிமையாகி விட்டீர்களா?
அடிமை விலங்கை உடைக்க வழி இதோ!
'இந்தா, உதில முகப்புத்தகத்தில ஆர் என்ரை படத்தை லைக் பண்ணியிருக்கினம், யூரியூப்பில போட்ட பாட்டை ஷெயர் பண்ணியிருக்கினம் எண்டு ஒருக்கா பாத்திட்டுச் சமைப்பம்' என்று உட்கார்ந்து தட்டப் போய்... நேரத்தைப் பார்க்க நள்ளிரவைத் தாண்டியிருக்கும். கடைசியில் பயனுள்ள எந்த வேலையும் நடக்காமல், பசியும் தாங்காமல் பூசணி விதையை வறுத்திருந்தால் சாப்பிடலாமே என்று மனம் வெதும்புவீர்கள்.
இணையம் வந்த பின்னால், நேர விரயம் அதிகமாகி, பயனுள்ள வேலைகள் செய்வதற்கு நேரமில்லாமல் போகக் கூடும். அத்துடன் இணையம் வாழ்வு முழுவதையும் ஆக்கிரமித்து நிம்மதியில்லாமல் போகச் செய்யவும் கூடும்.
இணையத் தளப் பாவனையைக் குறைக்க வழி இதோ!
1. படுக்கைக்கு அருகில் செல்பேசி இருந்தால் அடிக்கடி யாராவது முகப்புத்தகச் செய்தி அனுப்பியிருக்கிறார்களா என்று பார்க்கச் சொல்லும். அதிலிருந்து வரும் நீல ஒளி, உங்கள் தூக்கத்தைத் தூண்டும் மெலட்டோனின் என்ற இரசாயனப் பொருளைச் செயற்பட விடாமல் செய்வதால், உங்கள் தூக்கம் கலையும்.
எனவே, உங்கள் செல்பேசியை அணைத்தபடி தூங்காமல், அப்பால் கவனிப்பாரற்றுக் கிடக்கும் வாழ்க்கைத் துணையை அணைத்தபடி தூங்குங்கள். கதகதப்பாயும் இருக்கும். வாழ்வும் செழிக்கும்.
2. உங்கள் மின்னோலைகளை அடிக்கடி செக் பண்ணுவதை நிறுத்துங்கள். அதிலும் பலர் தங்கள் வேலையிட மின்னோலைகளை வேலை முடிந்த பின்னாலும் செக் பண்ணுகிறார்கள். வேலை முடிந்து வீட்டில் ஆறுதல் பெறாமல், வேலையிடத் தலையிடிகள் உங்கள் வீடு வரை தொடரும்.
3.புத்தகங்களை கணிபலகைகளில் படிப்பதை நிறுத்தி, அச்சிட்ட புத்தகங்களைப் படியுங்கள். கணிபலகைகளில் படிப்பதை விட, புத்தகங்களில் படிப்பவை அதிகமாய் மனதில் நிற்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
4. எவ்வளவு நேரம் இணையத்தில் செலவிடுகிறீர்கள் என்பதை அவதானியுங்கள்.
அப்போது உண்மையில் நீங்கள் விரயமாக்கும் நேரம் எவ்வளவு, பயன்படுத்திய நேரம் எவ்வளவு என்பது தெரியவரும். இவற்றைக் கணக்கிட RescueTime, Moment ஆகிய இரண்டு செயலிகளைப் பயன்படுத்தலாம். இதில் RescueTime (
www.rescuetime.com) கணனியிலும் செல்பேசியிலும் பயன்படுத்தக் கூடியது. Moment (
inthemoment.io) ஐபோனில் மட்டும் தற்போதைக்கு செயற்படுகிறது. இவற்றைக் கணனியிலோ, செல்பேசியிலோ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தினால், நீங்கள் இணையத்தில் எவ்வளவு நேரம், என்ன செய்தீர்கள் என்பது பற்றி விரிவான அறிக்கைகளைத் தரும்.
உங்கள் வாழ்க்கைத் துணையும் உங்களை விட்டு செல்பேசியை அணைத்துக் கொண்டிருந்தால்.... கண்ணா, லட்டுத் தின்ன ஆசையா? என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள். செல்பேசியை வீசி விட்டு ஆவலோடு திரும்பும் உங்கள் கண்ணாளனுக்கு அன்பைப் பாகாய் ஊற்றி லட்டுச் செய்து கொடுங்கள். ஜொள்ளு வடிந்தபடியே ஆள் நித்திரைக்கு வருவார்.
இவ்வாறாக உங்கள் நேரத்தைப் பயனுள்ள வழியில், (வாழ்க்கைத் துணையை அணைத்தல்), பயன்படுத்துங்கள்.
வாழ்வு செழிக்கும்.
சுவடி, மாசி 2015
இந்த தகவலை பகிர்ந்து உங்கள் நண்பர்களின் வாழ்வு செழிக்க உதவலாமே! பயப்படாமல் கீழுள்ள பட்டன்களை அழுத்தி பகிருங்கள்.
You must be logged in to post a comment Login