Recent Comments

    தூக்கம் கலைக்கும் தூள்!

    thayagam featured-thoolபேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    அம்மையப்பனை எல்லாம் ஊரில் அம்போ என்று விட்டு விட்டு, உலகத்தையும் அதில் உள்ள சகல ஜீவராசிகளையும் சுத்தோ சுத்தென்று சுத்தி வரும் தமிழனுக்கு இரண்டு விடயங்கள் தெரியாது. முதலாவது உலகம் உருண்டை என்ற உண்மை. இரண்டாவது, தூள் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு என்ற விடயம். முதலாவது, உலகம் உருண்டை என்பதால், ஒரு பக்கத்தில் பகலாக இருக்கும் போது அதன் மறுபுறத்தில் இரவாக இருக்கும் என்ற உண்மை ஈழத்தமிழனுக்குத் தெரியாது. தெரிந்தால், நள்ளிரவில் போன் அடித்து 'என்ன நித்திரையாய் இருக்கிறியோ?' என்று நலன் விசாரிப்பானா? பின்னே என்னவாம்? ஊரில் நித்திரை தவிர்ந்த மற்ற நேரம் எல்லாம் செல்போனும் மோட்டோர் பைக்குமாய், அல்லது ஆட்டோவுமாய் திரியும் தமிழனுக்கு காசு இல்லாமல் அரிப்பு எடுக்கும் நேரம் எல்லாம் வெளிநாட்டில் உள்ள உறவுகளின் எண்ணம் ஒரு நாளும் இல்லாமல் வரும். சரி, வந்தால் வந்து விட்டுப் போகட்டுமே? இவன் எங்களை சுக நலன் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் அவனது கோலை எதிர்பார்த்துக் கொண்டு நித்திரையில்லாமலா இருக்கிறோம்? தேவை என்றால் நாங்களே போன் அடித்து, அதுவும் அவன் தூங்காத நேரமாய் பார்த்து, 'சரி, என்னை சுக நலம் விசாரி' என்று சொல்ல மாட்டோமா? வேறு நேரம் எதுவும் கிடைக்காமல், நட்ட நடுச்சாமமாய் பார்த்து, நித்திரை விட்டெழுப்பி, சுகநலம் விசாரிப்பான்... 'என்ன நித்திரையாய் இருக்கிறியோ?'. ஊரில் கடன்காரனைப் பிடிப்பதென்றால் நித்திரைப் பாயில் வைத்துப் பிடிக்கும் பாரம்பரியத்தை நன்றாகத் தெரிந்த இந்த ஈழத் தமிழன், தூக்கம் கலைத்து... நித்திரையாய் இருக்கிறியோ? அட, 'நித்திரையைக் குழப்பிப் போட்டனோ?' என்று தவறுக்கு வருந்துவோம் என்று கூடக் கிடையாது. அவன் போன் அடிக்கும் போது, நித்திரையாய் இருந்தது எங்களுடைய பிழை என்ற மாதிரி... நித்திரையாய் இருக்கிறியோ? அதிலும் கியூறியஸ் நித்திரையாய் இருக்கும்போது, அவனை தூக்கம் கலைக்கக் கூடாது என்பதற்காக, அபிதகுஜாம்பாள் அவர் நித்திரை என்று சொன்னாலும், 'எப்ப கேட்டாலும் அவன் நித்திரையாம். அவள் அவனைக் கதைக்க விடாமல் ஒளிக்கிறாள்' என்று குடும்பத்திற்குள்ளேயே கலகம் விளைவித்து விடுகிறார்கள். இந்த விசயத்தில் கியூறியஸ்க்கு ஈன இரக்கம் கிடையாது. 'நான் இப்ப நித்திரையாய் இருக்கிறன். பிறகு அடி!' ஒருநாள் இப்படித் தான் கியூறியஸின் அண்ணன் வாங்கிக் கட்டினான்... என்ன நான் எடுக்கிற நேரம் எல்லாம் நித்திரை எண்டிறாய்? 'நீ இருபத்தைஞ்சு வருசமாய் எனக்கு போன் அடிக்கிறாய். உனக்கு இப்பவும் கனடாவில என்ன நேரம் எண்டு தெரியாதோ?' அதன் பின்னால் கியூறியஸ்க்கு அவனிடம் இருந்து போன் வந்ததாய் ஞாபகம் இல்லை. ஈழத்தமிழன் தூக்கம் கலைத்து தொ(ல்)லை பேசுவது ஒன்றும் பாசத்தினால் அன்று. வெளிநாட்டுக்கு பேசும்போது மட்டும் உலகத்தில் இல்லாத துன்பம் எல்லாம் அவனைச் சூழும். அவனுக்கு செல்போனுக்கு காசு இருக்கும். ஆட்டோவில் அரைக் கிலோ மீட்டர் போகவும் காசு இருக்கும். பிள்ளைகளை பிரைவேட் ஸ்கூலில் விடவும் காசிருக்கும். ஆனால் வீட்டில் சாப்பாட்டுக்கு மட்டும் காசிருக்காது. சாப்பாடு வாங்குவதற்கு என்றே திறைசேரியில் தனியாக காசு அடிக்கிறார்களோ தெரியாது. அந்தக் காசு மட்டும் இந்த தமிழனுக்கு கிடையாது. சரி, கேட்பது தான் பிச்சை, அதைக் கூட பவ்வியமாகக் கேட்போம்? அதுவும் கிடையாது. ஏதோ தன்னுடைய பிள்ளைகள் பட்டினி கிடப்பதற்கு நாங்கள் தான் காரணம் என்று குற்ற உணர்வு வர வேண்டும் என்பதற்காக, வீட்டில் உள்ள பாட்டன், பூட்டன் எல்லாரையும் கூப்பிட்டு, கஷ்டத்தைச் சொல்லியழுவான். அதை நாங்கள் அதிகாலை இரண்டு மணிக்கு கேட்க வேண்டுமாம்! இரக்கம் இல்லா விட்டாலும், பணம் கொடுக்காவிட்டால் பீடை நிறுத்தாது என்று தெரிந்து, 'சரி, போ, நாளைக்கு விடிய அனுப்பி விடுறன்' என்று சொல்லியாவது முறிந்த நித்திரையை ஒட்டலாம் என்றால்... பிறகெப்படி நித்திரை வரும்? பணம் கிடைத்தால் அது கிடைத்ததைக் கூடச் சொல்லாத இந்த ஈழத் தமிழனுக்கு, அடுத்த தடவை அரிப்பு எடுக்கும் வரைக்கும் சுகநலன் விசாரிக்கும் ஆசையே வராது. இந்தப் பீடைகளின் தொல்லையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தாயகம் தனது இணையத் தளத்தில் தமிழர்கள் வாழும் முக்கிய நாடுகளின் நேரங்களை ஒரே இடத்தில் பார்க்க வழி செய்திருக்கிறது. இந்த இணைப்பை நீங்கள் தாராளமாகவே ஈழத்தமிழனுக்கு அனுப்பலாம், 'உதைப் பாத்திட்டு எண்டாலும் நேரத்தைப் பாத்து போன் அடி'. அந்தத் தமிழன் அந்த நேரத்தைப் பார்க்க, தனக்கு கம்பியூட்டரும் இணைய இணைப்பும் இல்லை, அதற்கும் காசு வேண்டும் என்று மூக்கால் அழுதால் அதற்கு கியூறியஸ் எந்த விதத்திலும் ஜவாப்தாரி அல்ல. இப்படியாகத் தான், ஒரு நாள் நள்ளிரவு தூக்கம் கலைத்து கியூறியஸ்க்கும் ஒரு போன் வந்தது, உறவு ஒன்றிடமிருந்து. 'உனக்கு தூள் அனுப்பியிருக்கிறன்'. கியூறியஸ் சட்ட விரோத நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுவதில்லை. அதிலும் இந்த தூள் கடத்தல் என்றெல்லாம் போய் ஆயுட் தண்டனையில் போய் முடியும் எண்ணம் கியூறியஸ்க்கு இருந்ததில்லை. இருந்தாலும் அனுப்பியிட்டான், வந்து கிடைத்தது என்றால் ஒரு பெருந்தொகை தேறும். கடன்களை ஆவது கொடுக்கலாம் என்று மூளையின் ஒரு மூலையில் ஒரு நப்பாசை வராமலும் விடவில்லை. ஆனால் அதைச் சந்தைப்படுத்த ஆபிரிக்க சகோதரர்கள் வேண்டுமே, கியூறியஸ்க்கு தெரிந்த ஆபிரிக்க சகோதரர்கள் எல்லாம் ஒரிஜினல் ஆபிரிக்க சகோதரர்கள், இந்த விடயங்களை கையாலும் தொடாதவர்கள். நடைபாதை வியாபாரிகளோடு கியூறியஸ்க்கு எந்த சகவாசமும் இல்லை. நம்ம தமிழர்கள் இதில் பெரிய சாகசம் காட்டுகிறார்கள் என்று கேள்வி. ஆனால் தமிழனை நம்ப கியூறியஸ் தயாராக இல்லை. இதையெல்லாம் விசாரிக்காமல் எதற்கு இந்தத் தூளை அனுப்பினான்? யார் மூலமாக அனுப்பினான்? வந்தவன் விமான நிலையத்தில் பிடிபட்டு, கியூறியஸிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று உண்மையைக் கக்கினால் க(தி)தை என்ன? நித்திரை மயக்கம் வேறு. மூளை சரியாக வேலை செய்ய மறுத்தது. 'ஆரிட்ட குடுத்து விட்டனி?' 'உவன் சின்னத்தம்பி வந்தவனல்லே, அவனிட்டத் தான்' நாசமாய் போச்சு. இங்கே இருக்கும்போது, கியூறியஸை விட தான் ஏதோ பணக்காரன் என்று தம்பட்டம் அடிக்கிறவன் அவன். ஊருக்குப் போய், 'உவர் எனக்கு எவ்வளவு காலத்துக்கு முன்னம் கனடாவுக்கு வந்தவர், நான் இப்ப மில்லியன் டொலர் வீடு வைச்சிருக்கிறன்' என்று ஊரில் கதை சொல்லி, கியூறியஸின் உறவுகள் எல்லாம் போன் அடித்து... பிறகென்ன... நள்ளிரவில் தான்... 'உங்க உவன் சின்னத்தம்பி கோடீஸ்வரனாம், நீ உங்க என்ன பண்ணிறாய்?' என்று திட்டு வாங்க வைத்த உந்தச் சின்னத்தம்பியிட்ட தூள் குடுத்து விட்டிருக்கினம்... சரி... ஆர் உங்க நல்ல லோயர்? பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு முன்னாலே, பளிச்சிடும் சிவப்பு, நீல வெளிச்சத்தோடு வீட்டை முற்றுகையிட்டு, கைவிலங்கு சகிதம், டிவியில் முகம் வருவதற்கு முன்னாலேயே, முதலிலேயே போய் சரணடைவோம். 'என்னத்துக்கு அவனிட்ட அனுப்பினனீ? நான் உந்த தூளை வைச்சு என்ன செய்யிறது?' 'ஏன் நீயும் வீட்டில சமையல் காட்சி இல்லையே?' பரதேசி... மிளகாய்த்தூளே? கியூறியஸின் மச்சான் முன்பு ஒரு தடவை ஊருக்குப் போய் வந்த போது, அழைத்து வர கியூறியஸ் விமான நிலையம் போயிருந்தான். வந்த மச்சான் பெரிய பெட்டிகளுடன் வந்திறங்கினான். பெட்டிகளை ஒருவாறாக காருக்குள் ஏற்ற, மச்சான் சொன்னான்... உந்தப் பெட்டி முழுக்க மிளகாய்த் தூள்! இதென்ன அநியாயம்? முன்பு இப்படித் தான் ஒருமுறை கியூறியஸ் கொழும்பில் உள்ள தன் அக்காவுக்கு போன் அடித்தான். அக்காவுக்கு போன் கிடையாது. பக்கத்து வீட்டுக்குத் தான். 'ஐயோ, அவுங்க வீட்ட பெறிய பிறச்சனை?' கியூறியஸ்க்கு திகில் பிடித்தது. நெஞ்சம் துணுக்குறக் கேட்டான் கியூறியஸ் 'என்ன பிரச்சனை?'. 'இல்லை, அவங்க தம்பி கனடாவில இருக்கிறாங்களாம். அவங்களுக்கு அனுப்ப மிளகாய்த்தூள் இடிக்கிறாங்களாம்'. பரிநாசமாய் போச்சு! கனடாவில் இருக்கிற தம்பிக்காக, பக்கத்து வீட்டுக்காரன் தும்மித் தொலைக்க வேண்டியிருக்கிறது. உடனே அக்காவைக் கூப்பிட்டு 'என்ன வேலை செய்யிறியள்?' என்று கோபமாய் கேட்க... 'ஐயோ, ராசா, உனக்கு நாங்கள் ருசியாய் சமைச்சுத் தர முடியேலை. நீயும் வர மாட்டன் எண்டிறாய். அதுதான் மிளகாய்த் தூள் இடிச்சு அனுப்புறம்' 'அக்கா, உங்கட மிளகாய்த் தூளை எல்லாம் தூக்கிச் சாப்பிடுற மாதிரி இங்க நிரு பிராண்ட் மிளகாய்த் தூள் கிடக்குது. நாங்கள் அந்தக் காலம் தொடக்கம் அது தான் வாங்கிச் சமைக்கிறனாங்கள். உந்த மிளகாய்த் தூள் அனுப்பிற வேலை வைச்சுக் கொள்ள வேண்டாம்'. அக்கா கொஞ்ச நேரம் பேசவே இல்லை. 'சரி, அப்ப என்ன அனுப்பிறது, ராசா?' 'அக்கா, இங்க எனக்கு எல்லாம் கிடக்குது. உங்க இருந்து ஏதும் அனுப்பிறதெண்டால், பற்றிக் சேட், சாரம், பாகல் விதை... மற்றும்படி எனக்கு வேற ஒண்டும் வேண்டாம்'. இப்படியாக அக்கா வீட்டு 'பெறிய பிறச்சனை' முடிவுக்கு வந்தது. இந்தத் தமிழனுக்கு அப்படி என்ன பிரச்சனை? இங்கே கடை முழுவதும் மிளகாய்த் தூள் என்ன, பத்தியத் தூள் வரைக்கும் கிடைக்கிறது. (நிரு பிராண்ட் தான்! நிரு பிராண்ட் ரசத் தூள் மான்மியம் பற்றி கியூறியஸ் எப்போதாவது சொல்வான்!) இதற்குள் எப்படி 'தாயகத்திலிருந்து வருவிக்கப்பட்ட' மிளகாய்த் தூளில் அப்படி ஒரு ருசி? இதையெல்லாம் மினக்கெட்டு வறுத்து இடிச்சு, யாரோ ஒருத்தனிடம் கொடுத்து விட்டு, அவனும் வேலை மினக்கெட்டு தூக்கி வந்து, சுங்க வரி கடந்து, விமானம் ஏறி... பாதுகாப்புப் படைக்கு விளக்கம் சொல்லி... இதெல்லாம் தேவையா? இங்கே இருந்து சும்மா கண்டதுக்கும் காசை அனுப்பி சனத்தைப் பழுதாக்கிற தமிழனுக்கும், அங்கே வேலை வெட்டியில்லாமல் சும்மா வெளிநாட்டுப் பணத்தில் சொகுசு காட்டுகிற தமிழனுக்கும்... இந்த மிளகாய்த் தூளாலே... கண்ணில் அடிக்க வேண்டும். இது வரை காலத்தில் ஒரு தமிழனும் அங்கே போன் அடித்து 'என்ன அனுப்ப?' என்று கேட்பவனிடம் சொல்வதில்லையா நிரு பிராண்டின் பெருமையை? இங்கே மட்டும் என்ன வாழுதாம்? இங்கேயும் வீட்டில் மிளகாய் வறுத்து மில்லில் இடிப்பவர்கள் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரன் பாவம்... தீயணைக்கும் படைக்கு Feeling Hot! Hot! என்று அவசர அழைப்பு விடுத்தாலும், தீயணைப்பவன் வந்து 'எங்கேயப்பா நெருப்பு?' என்று தேடித் திரிவான். அப்புறமாய் எரிவு தாங்காமல் கொண்டு வந்த தண்ணீரிலேயே முழுகித் தோய்வான். நெருப்பில்லாமலேயே எரியப் பண்ணும் இந்த கொடுந் தீ மேல் தமிழர்களுக்கு காதல் வந்ததற்கு காரணம் இருக்க வேண்டும். சும்மா இல்லை. அங்கே இருந்து பணம் வாங்குபவனுக்கும் வாங்குகிற பணத்திற்கு பிராயச்சித்தமாக எதையாவது கொடுத்து கடன் கழிக்க வேண்டும். அதற்கு பெறுமதியான பொருள் ஒன்றை அனுப்ப வேண்டும். அந்தப் பொருளை கனடாவில் உள்ளவன் விற்று காசாக்குவான், தன் கடன் கழியும் என்பது தான் ஈழத்தமிழன் கணக்கு. அதற்காகத் தான் அவன் தூள் அனுப்புகிறான். ஆனால் அவன் அதை அனுப்புவதற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. கியூறியஸின் நீண்ட கால ஆராய்ச்சியின் பின்னான ஊகப்படி இதற்கு ஒரு சாத்தியமான விஞ்ஞான விளக்கம் ஒன்றுண்டு. எழுபதுகளின் இறுதிப் பகுதியில் பேர்லின் சுவரைக் கடந்து சில பல தமிழர்கள் புலன் பெயர்ந்தனர். வந்தவர்களில் சிலர் போதைப் பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டனர். சிலர் இதற்காகவே பாகிஸ்தான் வரைக்கும் போய் வயிற்றுக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்தி வந்து (எப்படி என்று கேட்கக் கூடாது!) பெரும் பொருள் சம்பாதித்தனர். சிலர் இதனால் சிறையும் சென்றனர். முன்பு கியூறியஸ் சிங்கமாய் சிங்கிளாக இருந்த காலத்தில், அடிக்கடி பார்ட்டிகளில் புதியவர்களைக் காண்பதுண்டு. அப்போது வந்தவர்களை அறிமுகப்படுத்துவார்கள். 'இவர் பேர்ளினில தூள் செய்தவர்' 'இவர் பரிஸில உள்ளுக்க இருந்தவர்'. இந்த சிறை மீண்ட செம்மல்கள் எல்லாம் கியூறியஸைப் பார்த்து, அர்த்த புஷ்டியோடு சிரிப்பார்கள். ஏதோ ஹார்வாட், ஒக்ஸ்போட்டில் படித்த மாதிரி, தங்களுடைய தராதரத்தின் பெருமை உனக்கெல்லாம் விளங்காது என்பது போல! இப்படியாகப் பிடிபட்டு சிறை மீண்டு, நாடு கடத்தப்பட்ட யாரோ தமிழ்த்திருமகன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். பெல்பொட்டம், ஹிப்பித் தலை, கையில் ஓடியோ கசட் சகிதம் வேம்படிப் பாடசாலை முடியும் நேரமாய் பஸ் நிலையத்தில் வந்துலாவியவர்களில் ஒருவராக இருக்கக் கூடும். இவரைக் கன காலத்தின் பின்னால் கண்ட யாரோ சுக நலம் விசாரித்திருக்க வேண்டும். 'என்னடாப்பா, கன காலமாய் காணேலை? நீ எங்கயோ வெளிநாட்டுக்கு போட்டியாம் எண்டாங்கள்?' 'ஓமோம், திரும்பி வந்திட்டன்' சிறை மீண்ட கதையைச் சொல்லியிருக்க மாட்டார். 'அப்ப நல்லா உழைச்சிருக்கிறாய் போல' 'ஓம், தூள் செய்தனான்'. தூள் விற்றவரும் கிடையாது, கடத்தியவரும் கிடையாது. தூள் செய்தவராம்! ஏதோ தமிழ்ப் படத்தில் வருகின்ற முனிவர்கள் குகைக்குள் சோதனைக் குழாய்களும் குடுவைகளும் வைத்து மூலிகை ஆராய்ச்சி செய்து 'சக்சஸ்' என்று கத்துவது போல, இவரும் ஏதோ பரிசோதனைச் சாலை வைத்து தூள் செய்தவராம். கேட்ட யாழ்ப்பாணக் கிராமவாசிக்கு தூள் என்றால் என்ன என்றே தெரியாது. போதைப் பொருள் என்றாலும், தக்காளிக்கு நடுவில் நட்ட கஞ்சா, புளிக்குள் வைத்து விற்ற அபின், தினகரன், வீரகேசரி இரண்டிலும் முன்பக்கத்தில் பத்திரிகைப் பெயரின் பக்கத்தில் பெரிதாகப் போடுகின்ற லேகியம்... இவற்றைத் தவிர வேறு வகையறாக்களைக் கேள்விப்பட்டே இருக்க மாட்டார். கள்ளும் கசிப்பும் அடித்த கூட்டத்திற்கு கொக்கெய்ன், ஹெரோயின் பற்றி என்னதான் தெரியும்? 'அப்ப என்ன, தூள் அங்க நாய் பேய் விலையோ?' யாழ்ப்பாணத்தில் நாய், இரவில் அதில் ஏறுகின்ற பேய் இரண்டும் மிகவும் மலிவு. இருந்தாலும் பிரமிப்போடு கேட்டிருப்பார். 'அது ஒரு கிராம் இத்தனை ஜேர்மன் மார்க்' இது இரண்டு பேருக்கும் இடையில் நடந்திருக்கக் கூடிய உரையாடல். இதை இந்த பஸ் ஸ்ராண்டில் நின்ற அத்தனை பேரும் காதை எறிந்து விட்டு கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள். ஆள் மைனர் மிடுக்காய்... நெஞ்சைத் திறந்து காட்டி, கழுத்தில் தொங்கும் சங்கிலி, கையில் அம்மிக் குளவி பாரத்தில் மணிக் கூடு. ஆறங்குலம் உயர்த்தும் பிளட்போர்ம் சப்பாத்து, பெல் பொட்டம்... 'வெளிநாட்டில நல்லா அள்ளியிட்டு வந்திருக்கிறான்' கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேரும் வாய் ஊறியிருப்பான். இந்தக் கதை இப்படியே குடாநாடெங்கும் பரவியதால் தான் குடாநாட்டுத் தமிழன் இன்றைக்கும் வெளிநாட்டுக்கு வரும்போது மறக்காமல் இரண்டு கிலோ தூள் கட்டிக் கொண்டு வருகிறான். கொண்டு வந்தால் நாய் பேய் விலைக்கு விற்கலாம் என்று. இதனால் தான் அங்கிருந்து போன் அடித்துப் பணம் வாங்கியதற்கு பிராயச்சித்தமாய் 'அலுகோசுகளின் ஆட்சியில் கலர் காட்டி வரும்' ஒவ்வொருவரிடமும் தூள் கொடுத்து விடுகிறான். இப்படியாகத் தான் தமிழன் பாரம்பரியத்திலும் வரலாற்றிலும் தூள் என்ற சொல் திரிபடைந்திருக்க வேண்டும். அந்தத் தூளின் மான்மியம் தெரிந்ததால் தான் தமிழன், நட்ட நடுநிசியில் போன் அடித்து 'தூள் அனுப்பிய' கதையை மிகவும் உற்சாகத்தோடு சொல்லி தூள் கிளப்புகிறான். இப்போது தாயகம் இணையத் தளத்தில் உலகில் தமிழர்கள் வாழும் நாடுகளில் நேரங்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. இனிமேல்,  ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கும் கியூறியஸை மவனே... எவனாவது இன்னொரு வாட்டி நித்திரைப் பாயில் எழுப்பி, 'தூள் அனுப்பியிருக்கிறன்' என்ற இனிப்பான செய்தியை... சே... உறைப்பான செய்தியைச் சொன்னால்...நடக்கிறதே வேறை! பூபாளம்-செப்டம்பர் 2012 இந்தத் தூள் விபரம் தெரிந்தால்தான் ஊரில் உள்ள உறவுகள் உங்கள் தூக்கத்தைக் கெடுப்பதை நிறுத்தும். எனவே தயங்காமல் கீழுள்ள பட்டன்களை அழுத்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login