Recent Comments

    குடிமகளே, பெருங் குடிமகளே! நான் கொடுக்கட்டுமா, கொஞ்சம் உனக்கு!

    thayagam featured-woman drinkஅமைதி, அமைதி! எந்த விதமான எழுத்துப் பிழையும் இல்லை. குடிமகனே அல்லது குடிமக்களே என்பது தான் எழுத்துப்பிழையுடன் தவறுதலாகத் தலையங்கத்தில் வந்து விட்டதோ, அல்லது உங்களுக்குக் 'கொஞ்சம் உள்ளே போனதால் வாசிக்கும்போது ளகர, னகர பேதம் தெரியாமல் போகிறதோ' என்ற சந்தேகமோ தேவையில்லை. சும்மா போகிற போக்கில் 'தமிழன் ஒரு இளிச்சவாயன்' என்று எழுதினாலே, 'ஏன் பெம்பிளையள் தமிழர் இல்லையோ?' என்று போர்க்கொடி தூக்கி, ஆண்மேலாதிக்கவாதி என்று முத்திரை குத்தும் பெண்ணிய - புத்திஜீவிக் கூட்டணியின் துன்பம் தாங்காமல்,  பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கும் நோக்கிலேயே எழுதப்பட்டதே அன்றி, தாய்க்குலம் குடித்துக் கூத்தடிக்கிறது என்று கேவலப்படுத்துவதற்காக எழுதப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளல் நலமாமே. ('குடிமகனே' என்று தலையங்கம் போட்டால், உண்மையான குடிமகன்கள் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்! 'இன்னும் கொஞ்சம் கொடுக்க மாட்டோமா' என்று தான் கவலைப்படுவார்கள்.) குடிவகைகளால் உடல் நலத்துக்கு மட்டுமன்றி, குடும்ப உறவுகளுக்கும் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பதை, தமிழீழத்தில் கசிப்பின் தலைநகரில் பிறந்து வளர்ந்த யாம் முழுமையாகவே அறிந்துள்ளோம். சம்சார சாகரத்துக்குள் மாட்டுப்பட்டு மு(த்து)க்குளிப்பதற்கு முன்னால், நீண்ட நாட்களுக்கு முன் சுதந்திரமாய் வாழ்ந்த பிரமச்சாரிய காலங்களில் வார இறுதிகளில் அப்பார்ட்மெண்டுகளில் நடந்த பார்ட்டிகளில், தண்ணீரில் மூழ்கி, 'ம(து)ரக்குரல் மன்னன்களுடன்' சுப்பர் சிங்கர் போட்டியாளராக இருந்த அனுபவம் வேறு உண்டு. அதெல்லாம் பழைய கதை. இப்போது பக்கத்து வீட்டுக்காரர் தரும் வீட்டுத் தயாரிப்பு திராட்சை ரசப் போத்தலை முடிக்க குறைந்தது ஆறு மாதமாவது எடுக்கிறது. இங்கே பிறந்த நாள், திருமணச் சடங்குப் பார்ட்டிகளிலும் குடித்துக் கும்மாளம் போடுபவர்கள் நிறைய உண்டு. நண்பர்களின் சந்திப்புப் பார்ட்டிகளில் குடிபோதையில் பேசக் கூடாதவைகள் பேசப்பட்டு, அதனால் வரும் பாதிப்புகள் அதிகம். வெறும் கைகலப்புகள் மட்டுமன்றி, உறவு முறிவுகளும் அனாவசியமாய் ஏற்படுகின்றன. சிலருடைய தொழிலே, போதையில் பேசியவற்றை மறுநாள் காலை முதல் வேலையாக சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்துவது தான். பார்ட்டிகளில் குடித்த பின்னால் நடக்கும் பல சண்டைகள், முன்னரே திட்டமிட்டு நடப்பவையாகத் தான் தெரிகின்றன. குடிவெறியைச் சாட்டி, கோபத்தைத் தீர்த்துக் கொள்வதும், மறுபாலாருடன் சேட்டைகள் விடுவதும் பல தடவைகளில் போதையைப் போர்வையாகப் பயன்படுத்தும் முயற்சியாகத் தான் படுகிறது. அதெல்லாம் இருக்கட்டும். அளவோடு குடிக்கிறீர்களோ, காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல மொடாக் குடியர்களாக அளவுக்கு மீறி மண்டுகிறீர்களோ, அல்ககோல் உங்கள் உடல் நிலையில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியில் பங்காற்றும் சைடோகின்களில் (Cytokines) பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சைடோகின்கள் உங்கள் தலையிலும் வேறு பகுதிகளிலும் உள்ள உடல் உறுப்புகளில் வீக்கங்களை ஏற்படுத்துவதை  ஊக்குவிக்கின்றன. உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதால், பல்வேறு நோய்களால் நீங்கள் இலகுவில் பாதிப்புற நேரலாம். வாய், தொண்டை, ஈரல், குடல், மார்புப் புற்றுநோய்கள் ஏற்படுவதற்கும் அல்ககோல் காரணமாக இருக்கும். திராட்சை இரசம், மற்றும் நிறம் கூடிய குடிவகைளில் உள்ள இரசாயனப் பொருட்கள் குடித்த பின்னால் வரும் தலையிடிக்குக் காரணமாகின்றன. குடிப்பதுடன் சிகரெட்டும் புகைத்தால் இதன் பாதிப்பு அதிகமாகும். உங்களுடைய ஈரல் ஒரு மணி நேரத்தில் ஓரளவு அல்ககோலையே  சுத்திகரிக்க (Detoxify) முடியும். அளவுக்கு அதிகமாகும்போது, அது ஈரலைப் பாதிப்பதன் காரணம் இதுதான். அதிகம் குடிப்பதால் ஈரல் வீங்கி, திருத்த முடியாதளவு பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் ஈரலில் இருந்து குளுக்கோஸ் விடுபடுவதை அல்ககோல் பாதிப்பதால் இரத்தத்தில் குறைய குளுக்கோஸ் இருக்கும் நிலை வரலாம். ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்து, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்க இன்சுலின் எடுப்போருக்கு இது ஆபத்தில் முடியக் கூடிய ஒன்று. அல்ககோல் வழமையான நித்திரையின் போது மூளைக்குக் கிடைக்கும் ஓய்வையும் குழப்பக் கூடியது. இதனால், குடிவெறியில் தூங்கும்போது, களைப்புத் தீர்ந்த உணர்வு ஏற்படாது. அல்ககோல் அதிகளவு உணவு உட்கொள்ள வைப்பதுடன், உடல் நிறை அதிகரிப்பதற்கும் வழி வகுக்கிறது. அத்துடன் குடல் தொகுதியின் சுவர்களை வீங்கப்பண்ணும். இதனால் விட்டமின் பி போன்ற உயிர்ச்சத்துக்களை உறுஞ்சும் தன்மையை உங்கள் சமிபாட்டுத் தொகுதி இழக்கலாம். போதையில் சாப்பிடாமல் தூங்க வேண்டி வந்தால், வயிற்றுப்புண் நோய்களுக்கும் காரணமாகலாம். அத்துடன் உங்கள் சமிபாட்டுத் தொகுதியைக் கட்டுப்படுத்தும் ஓமோன்களையும், சமிபாட்டுக்கான சுரப்புகளையும் சுரக்கும் சதையத்தைப் பாதிப்புக்குள்ளாக்கி, அதன் வீக்கத்திற்கு வழிவகுக்கலாம். அதிகளவு குடிப்பதால் இரத்த அழுத்தம் கூடி, இதயம் பெருத்தல், மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படலாம். ஆண்களில் பாலியல் வீரியத்தைக் குறைப்பதுடன், பெண்களில் மாதவிடாய் ஏற்படுவதிலும் பாதிப்புகளை அல்ககோல் ஏற்படுத்தக் கூடியது. கர்ப்பிணிப் பெண்கள் குடிப்பதால், குறைபாடுடைய குழந்தைகள் பெறச் சந்தர்ப்பங்கள் உண்டு. நீண்ட காலம் குடிப்பவர்களுக்கு, அடிக்கடி கண் சிமிட்டும் நோய், தயமின் குறைவால் கண் தசைகள் செயலிழத்தல் போன்ற கண் நோய்கள் வர வாய்ப்புண்டு. எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால், எலும்புகள் வலு குறைந்து இலகுவில் உடையக் கூடும். நரம்புத் தொகுதியைத் தாக்கி, மூளை சரியான முடிவுகளை எடுப்பதை அல்ககோல் குழப்புவதால் தான், நிதானமாக நடந்து போக முடியாமல் ஆட வேண்டி ஏற்படுவதுடன், குடிவெறியில் சண்டைகளும், பல்வேறு பிரச்சனைகளும் உருவாகின்றன. குடிக்க ஆரம்பிக்கும்போது, உற்சாகமாக இருந்தாலும், போதை அதிகரிக்க, சிந்தனையும் உணர்வுகளும் குழம்பி, மயக்க நிலை ஏற்பட்டு, முடிவெடுக்கும் தன்மை இல்லாது போகிறது. அத்துடன் பேச முடியாமல் குழப்புவதுடன், தசைகளின் செயற்பாட்டையும் பாதிக்கிறது. முடிவெடுக்கும் தன்மை குழம்புவதால், வாகன விபத்துக்கள், குடும்பத்தில் சண்டை, வேலையிடத்தில் செயற்பாடுகளில் பாதிப்பு, சில நேரங்களில் வன்முறைக் குற்றங்களிலும் ஈடுபட குடிபோதை வழிவகுக்கிறது. பதின்ம வயதினரில் குடிபோதைப் பழக்கம் இருந்தால் அதனால் வரும் ஆபத்துக்கள் அதிகம். குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகும் இவ்வயதினர் அதிகம். நீரில் மூழ்கி இறத்தல், தற்கொலை, கொலைகள் என்பவற்றுக்கும் இவ்வயதினரின் குடிபோதை காரணமாயிருக்கிறது. அத்துடன் குடிபோதையில் பாதுகாப்பில்லாத பாலியல் உறவு காரணமாக பால் நோய்களும், வேண்டாத கர்ப்பங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. விருப்பமில்லா பாலுறவுக்கு பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுவதும், வன்புணர்வுக்குள்ளாகுவதும் குடிபோதையில் அதிகம். போதையில் இவ்வயதினர் விபத்துக்குள்ளாகுவதும், அடிபிடிகளில் ஈடுபடுவதும், பொருட்களைச் சேதப்படுத்துவதும் அதிகம். ஆண்கள் தான் எங்கள் சமூகத்தில் இவ்வாறான குடிப்பழக்கத்தில் ஈடுபட்டாலும், தற்போது பார்ட்டிகளில் பல்கலைக்கழக மாணவிகளும், குடும்பத் தலைவிகளும் குடித்து அட்டகாசம் பண்ணுவதாக ஊரில் கதைகள் அடிபடுகின்றன. இவற்றை நேரில் காணும் அளவுக்கு பெரியளவில் பார்ட்டிகளில் கலந்து கொள்ளாததால் இந்த வதந்திகளை அச்சுக்குப் போகும் வரை எங்களால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. ஆனாலும், குடிபோதையில், 'வாடா மாப்பிள்ளை, வாழைப்பழத் தோப்புக்கை' என்று வொலிபோல் ஆட அழைக்கும் பாணியில் நடந்த சில நடனங்களைக் கண்டு களித்ததுண்டு. (அழைப்பு நமக்கல்ல!) இந்தப் போக்கில் போனால், 'குடிக்காதே, தங்கச்சி குடிக்காதே, நீ குடிச்சுப் புட்டு குடும்பம் கெட்டுக் கிடக்காதே, நீ குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே' என்று யாராவது முகப்புத்தகத்தில் எழுதினால், அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை முன்கூட்டியே இத்தால் சகலரும் அறியத் தருகிறோம். (வேறொன்றுமில்லை, 'ஏன் பெண்கள் குடிக்கக் கூடாதோ?' என்று பின்னூட்டம் விடுபவர்களின் தொல்லைகளில் இருந்து முற்காத்துக் கொள்வதற்காகத் தான்!) சுவடி - மாசி 2015   மற்றக் குடிமக்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ள கீழுள்ள பட்டன்களில் அழுத்துங்கள்.

    Postad



    You must be logged in to post a comment Login