Recent Comments

    நினைவு மறந்த கதை –  கதைகளின் தொகுப்பு  

    பூங்கோதை 

    சஞ்சயன் எழுதிய  ‘நினைவு மறந்த கதை’ வேரல் புக்ஸ்வெளியீடாக மாசி மாதம் 2023 இல் சென்னையில்ப் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளது.  லார்க் பாஸ்கரனின் சிறப்பான அட்டை வடிவமைப்போடும் அலெக்ஸ் பரந்தாமனின் முன்னுரையோடும்,  கவிஞர் கருணாகரனின் பின் அட்டைக் குறிப்போடும், நினைவு மறந்த கதைக்குள் நுழைந்தேன்.  சஞ்சயனின் ஐந்தாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கதாசிரியரின் தாயின் வயோதிபம், அவருடைய வயோதிபத்தால் அவருக்கு ஏற்பட்ட உடல், உள பாதிப்புக்கள், அவரைச் சுற்றியிருக்கும் அவருக்காகவே முதுமையால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு உலகம், அதைப் பாதுகாப்பதில் முனைப்பாக இருக்கும் மகன் சஞ்சயன் என உண்மைச் சம்பவங்களால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது இந்நூல் . 

    கடந்த சில வருடங்களாக, தன் தாய் பற்றி, தான் நேரில்ப் பார்த்தும், கேட்டும், அனுபவித்தும் வந்த  பல்வேறு நாட்களை சஞ்சயன் தன்னுடைய முகநூல்ப் பக்கத்தில் பதிவு செய்து வந்திருந்தார். அவற்றின் கோர்வையே இந்நூலாக இன்று பரிணமித்துள்ளது.  கதாசிரியர் தன் சுவாரசியமான பத்தி எழுத்துக்களால் தனக்கான,  ஒரு காத்திரமான வாசகர் குழுவை முகநூலிலும் சேமித்து வைத்திருப்பதை பலரும் அறிவர். நானும் இந்நூலிலுள்ள பல பதிவுகளைக் கனத்த மனதுடன்வாசித்திருந்திருக்கிறேன். 

    ஒரு காலத்தில் ஆளுமை மிகுந்த வைத்தியராக வலம் வந்த சஞ்சயனின் தாய், வயோதிபராகும் போது மெல்ல மெல்ல, டிமென்ஷியா ( Dementia)   வின் தாக்கத்தால் தடுமாற்றத்துக்குள்ளாகுவதும், அதன் காரணமாக அவருடைய நினைவுகளை இழந்து, தன் அன்றாட வாழ்வை அவதிக்குள்ளாக்குவதும், அவருக்கு மட்டுமல்ல அவரைச்சுற்றியிருப்பவர்களுக்கும் பெருந்துயராக மாறுகிறது. முதியவர்கள் நினைவு மறக்கும் காலப் பகுதியில் குழந்தைகளாகவே மாறி விடுகிறார்கள்,  ஆதலால் அவர்களைக்  கண்ணும் கருத்துமாக 24 மணி நேரமும் பாதுகாக்க வேண்டி வந்து விடுகிறது.

    இத்தனை துயரத்தை, நகைச்சுவை கலந்து எழுதுவதென்பது இலகுவான விடயம் அல்ல.  இருந்தாலும் சஞ்சயனின் எழுத்திற்கு அறிமுகமானவர்களுக்கு இந்த நகைச்சுவையோடு இணைந்த மொழிநடை புதிதானதல்ல. 

    தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு கதை போல் அல்லாது, சம்பவங்கள் அவ்வப்போது நடந்தவற்றின் சாட்சியங்களாக  உள்ளன.  எவ்வாறு ஒருவர் சிறிது சிறிதாக தன் நினைவுகளை இழந்து போகிறார்  என்னும் அவலத்தை,  நகைச்சுவை கலந்த  சுவையான உரையாடல்கள் மூலமாகவும், தீர்க்கமான ஆனால் இலகு மொழி நடையின் வாயிலாகவும், வாசிப்பு ஆர்வத்தை எங்கும் குறையவிடாது இந்நூல் கொண்டு செல்கிறது. 

    முதியவர்கள், வயோதிபம் சார்ந்த நோய்களோடு அல்லற்படுவதை பல சிறுகதைகளில் வாசித்திருக்கிறேன். உதாரணமாக தோப்பில் முகம்மது மீரானின் சிறுகதைத் தொகுப்பில் ‘அன்புக்கு முதுமை இல்லை’ என்கின்ற சிறுகதையும், அம்பையின்  “ தொண்டை புடைத்த காகம் ஒன்று’ சிறுகதையும் முதுமை பற்றியும், முதுமையில் ஏற்படும் நினைவு மங்கும் அவலம் பற்றியும் பேசுவது நினைவில் வந்தாலும், புனைவுகள் அல்லாத, அன்றாட வாழ்வில்  முதுமையின் கோரப்பற்களை அடையாளம் காட்டும்  தனி ஒரு நூலாக, தமிழ் இலக்கியபரப்பிற்கு டிமென்ஷியா பற்றி முனைப்பாக பேசும், புதியதொரு முயற்சியாக ‘ நினைவு மறந்த கதை’  வந்திருக்கிறது.  

    கவிஞர் கருணாகரன் ‘நினைவு  மறதி’ என்ற ஒரு புதிய தமிழ்ச் சொல்லை, டிமென்ஷியா(  Dementia) பற்றிக் குறிப்பிடுவதற்கு இந்நூலின் பின் அட்டைக் குறிப்பில்  பாவித்தமை மகிழ்விக்கிறது. இன்னுமே நாம் சுகாதாரம்,  மருத்துவம் சார்ந்த பல சொற்களைத் தமிழ் மொழிக்குள் கொண்டு வரவேண்டிய கடமைப்பாடு ஒன்று இருக்கிறது. முக்கியமாக பரிச்சயமற்ற பல நோய்கள், உடல் உளம் சார்ந்து ஊடுருவும் போது அவற்றைப் புரிய வைப்பதற்கு போதுமான அளவில் தமிழ்ச் சொற்கள் இல்லாமல் இருப்பதையும் நாம் அவதானத்திற்  கொள்ளல் அவசியம்.

    பல வருடங்களின் முன்னர், நான் இங்கு பிரித்தானியாவில், ஆசிரியையாகப்  பயிற்சி பெற முன்னர், ஒரு இளம் சமூக விஞ்ஞான - சுகாதார விஞ்ஞான பட்டதாரியாக,  ஒரு முதியோர் இல்லத்தை முகாமைத்துவம் செய்யும்  அனுபவம் வாய்த்தது .  பத்து வருடங்களில் எனது நேரடிக் கவனிப்பின் கீழ்  வாழ்ந்த முதியோர்கள் பலரின் வாழ்வை இந்த ‘நினைவு மறதி’ கொன்று தின்ற போது நான் அனுபவித்த வேதனையும், அதே வேளை அவர்களோடு சேர்ந்தே சிரித்து, அவற்றைக் கடந்து சென்ற  அனுபவமும் இந்நூலை வாசித்த போது நினைவில் வந்து போனது.  அதேபோல இங்கு சஞ்சயனின் அம்மா சோதியோடும்  நாமும் வாழ முடிகிறது. அவரது பழக்க வழக்கங்கள் என்ன, அவரது அன்றாட எதிர்பார்ப்புகள் என்ன என்பதெல்லாம் எமக்கும் அத்துப்படியாகிறது. அதற்கு நூலாசிரியரின் எழுத்து வன்மையே காரணம் எனலாம். அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று வாசிக்கும் ஆர்வத்தை வளர்த்துச் செல்லும் கைக்கடக்கமான122 பக்கங்கள் கொண்ட நூல் இது. 

    முதுமையை நாம் தவிர்க்க முடியாவிட்டாலும், எமது பண்புகள், உணர்வுகள், வாழ்க்கை முறைமைகள் தாம் முதுமையில் எம்மையறியாமலே எமது நடவடிக்கைகளில்த் தீவிரமடைகின்றன. இது  நினைவு மறந்த தாய், சோதி அம்மா  இன்னமுமே எத்தனை இரக்கமும், மனித நேயம் நிறைந்தவராயும், நெறிப்படுத்தப்பட்ட வாழ்வியலை இன்னமுமே தொடர்பவராயும் இருப்பதில் இருந்து நாம் காணக்கூடியதாய் இருக்கிறது. 

    இனி, வாசிக்கும் போது நெருடலாக இருந்த ஒரு சில விடயங்களையும் இங்கு கூறவேண்டியிருக்கிறது. அதில் முதலாவதாக இருப்பது சொற்களின் சேர்க்கை. இரண்டு அல்லது மூன்று சொற்கள் சேர்ந்து வருவது வசனங்களின் அழகையும், வாசிப்பின் சரளத்தையும் குறைப்பதாக இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது.  தமிழ் இலக்கண விதிகளில் என் புரிதல் தவறாகவும் இருக்கலாம். ஒரு வேளை அச்சில் வரும் போது தவறுதலாக அவை ஒன்று சேர்ந்தும் இருக்கலாம். இது தொடர்ச்சியாக பலபக்கங்களிலும் இருப்பதை, ஒவ்வொன்றாக பக்கத்தின் இலக்கம் வரை எழுதி நூல் ஆசிரியருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். 

    அடுத்ததாக, கூறப்பட்டிருக்கும் சில சம்பவங்கள் அல்லது சோதி அம்மாவுடைய குணாதிசயங்கள், அவர் சார்ந்த சில பண்புகள் மீள் பதிவுக்குள்ளாகி இருக்கின்றன. நூலில் ஒன்றிப் போகும் போது, அம்மாவோடு நாமும் ஒன்றி விடுவதால், அவர் பற்றிய விடயங்கள் எமக்கும் தெரிந்து விடுகிறது. அவற்றை மீண்டும் வாசிக்க நேர்வது அனாவசியம் என்னும் எண்ணம் மேலிடுகிறது.

    முதுமை குறித்த விசனத்தோடு இந்நூல் படைக்கப்பட்டிருந்தாலும், எப்படி சில விடயங்களை நாம் கையாள்வதால் முதியோரின் தேவையற்ற மனக்கிலேத்தைக் குறைக்கலாம் என்பதும், முதுமை என்பது இயல்பாக அனைவருக்கும் நேரக் கூடியது என்பதும், தனியொருவர் தன்பெற்றோர்களைப் பராமரிப்பதை விட, ஒத்த கருத்துக் கொண்ட பலர் சேர்ந்து பராமரிப்பது தேவையற்ற மன உளைச்சலைக் குறைக்க வழி செய்கிறது என்பதும் போன்ற பல விடயங்களை ‘நினைவுமறதி’ சார்ந்து  எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்நூல் எல்லோருடைய கைகளுக்கும் கிடைக்க வேண்டும். 

    (அல்சைமெர்ஸ் நோய்- Alzheimer's disease  எனப்படும் நிலைக்கும் இதற்கும்தொடர்புண்டு. Alzheimer's disease is the most common cause of dementia) இதுகுறித்த விழிப்புணர்வு எம்மத்தியில் இல்லை என்பது மட்டுமல்ல சில குடும்பங்களில் ‘ அவருக்கு வாக்கு மாறிப் போச்சு’ என்ற பதம் பாவிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். வயோதிபத்தில் நேர்கின்ற  'நினைவு மறதி' குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.   ஆகையினால் இந்நூலை ஒரு சுகாதார விழிப்புணர்வு சார்ந்தஒரு நூலாகவும் பார்க்க முடிகிறது. 

    முக்கியமாக,  நோய்கள், உடல், உள சீரின்மை பற்றி பெரும்பான்மையான உறவுகள், நட்புகளுடன் பேசி மன ஆறுதல் கொள்ள முடியாதபடிக்கு, எதிர்மறைக் கருத்துக்களால்த் தம்மை மூடி வைத்திருக்கும் எமது சமூகத்திற்கு இப்படி ஒரு வாழ்வியலின் மாற்றத்தை வெளிப்படையாகக் கூறும் நூல் வரப்பிரசாதமே. 

    Postad



    You must be logged in to post a comment Login