T.சௌந்தர்.
இயற்கையின்உயிர்த்துடிப்பும்வரைமுறையற்றதொழில்துறையும் :
சென்ற பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன தத்துவஞானி லாஸே [ Laozi ] என்பவர் கூறிய " இயற்கைக்குத் திரும்புவோம் " [ Back to Nature ] என்ற புகழ்பெற்ற வாசகத்துடன் முடித்திருந்தேன்.
எல்லையற்ற இயற்கை என்பது மனிதனது ஆய்வுகளுக்குப் அற்புதமான வளமாகவும் பெரும் சவாலாகவும் இருக்கிறது. ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை அதன் ரகசியத்தையும், விநோதங்களையும் வியந்து, வியந்து மனிதர்கள் ஆராய்ந்து வந்திருக்கின்றார்கள்.
மனிதன் சிந்திக்கத் தலைப்பட்ட காலத்திலிருந்து புதிராக இருக்கும் இந்த உலகத்தின் அல்லது இயற்கையின் தோற்றம் பற்றிய சிந்தனையே அவனில் மிகப்பெரும் ஆளுமை செலுத்தி வந்துள்ளது. இயற்கை மீதான வியப்பினாலோ, தேவைகளாலோ அல்லது அச்சத்தினாலோ அது குறித்த சிந்தனைகள் எழுகின்றன. சிந்தனைகளின் விளைவுகளால் மாற்றங்கள் நிகழ்கின்றன. இயற்கையை உற்றறிவது அல்லது அதன் உண்மைத் தன்மைகளை உணர்வதென்பது வாழ்க்கையை புரிந்து கொள்ளவும், வளப்படுத்தவும் உதவுகின்றது.
இயற்கையில் அதீதசக்தி இருப்பதாக எண்ணிய மனிதன் கண்ணுக்கெட்டாத அந்த இயக்கத்தை கடவுளின் செயல் எனக் கற்பனை செய்ததுடன் அந்தக் கடவுளை ஆற்றுப்படுத்தும் சடங்குகளை செய்து, நடக்கும் தீங்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் நினைத்தான். அப்படி செய்த சடங்குகள், பூஜைகள் எல்லாம் இன்றுவரை நம்பிக்கையாகவும், அடையாளமாகவும் பழங்குடி மக்களிடம் மட்டுமல்ல மட்டுமல்ல நாகரீகம் அடைந்துவிட்டோம் என நினைக்கும் மக்கள் கூட்டத்தினர் சிலரிடமும் இன்றுவரை தொடர்வதையும் நாம் காண்கிறோம். தொடர்ச்சியாக உயிர்ப்பான சிந்தனைகளை இயக்கிச் செல்லும் தன்மையினை ஒரு வகையில் ஆன்மிகம் என்று சொல்லலாம்.அது வெறுமனே கடவுள் சார்ந்ததும் அல்ல.இயற்கை பற்றிய உயிர்ப்பான சிந்தனை மனிதனை தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருக்கிறது!
மிகப்பழங்காலத்து மக்களிடம் தோன்றிய கதைகள், புராணங்கள், இதிகாசங்கள் இனமத எல்லைகளையெல்லாம் கடந்து, அக்காலத்து அறிவு நிலைகளுக்கேற்ப இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பேசியிருப்பதை காணமுடியும்.
வளர்ச்சி நிலையில் அறிவுத்துறையின் காலம் என கருதப்பட்ட 15,16 ம் நூறாண்டுகளில் அதாவது மறுமலர்ச்சிக்காலத்தின் ஆரம்ப காலத்தில் இயற்கை பற்றிய சிந்தனை
“ இறைவனின்திட்டம் “, “பிரபஞ்சவியல் “ [ Cosmology ] அல்லது “அண்டத்தின்இயக்கம் “ என அழைக்கப்பட்டது. பின் வர வர அறிவுத்துறையின் வளர்ச்சி கூர்மையடையத் தொடங்கிய காலத்தில் ஏற்பட்ட ஆய்வுகள் புதிய பாய்ச்சலான கண்டுபிடிப்புகளைக் கண்டடைந்தன.
விஞ்ஞான அறிவு அரும்பிக்கொண்டிருந்த 18,19ம் நூற்றாண்டில் மனிதநேயம் சிந்தனை
[ Humanism ] என்ற சிந்தனை வலுப்பெற தொடங்கியது. அதாவது, இறைவன் என்ற சிந்தனையைப் பின்தள்ளி மனிதனை நடுநாயகமாகக் கொண்டு சிந்தனை செய்யும் போக்கு உருவானது. இயற்கையை மையமாகக் கொண்ட தத்துவமாக "இயற்கை மையவாதம்" இக்காலத்தில் தோன்றியது.
ஐரோப்பாவின் தோன்றிய “ இயற்கைமையவாதம்“ [ Naturalism ] என்பது அடிப்படையில் ஆழ்ந்த மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கின்ற இந்த இயற்கையை அல்லது பிரபஞ்சத்தை உணர்தல் எனவும், எல்லாவிதமான கேள்விகளுக்கும் இயற்கையில் பதில் இருக்கிறது எனக் கருதியது. இதன் வளர்ச்சி என்பது அமெரிக்க சிந்தனைப்பள்ளியில் தனிமனித வாதத்தை முன்னிறுத்திய ஆன்மிகம் சார்ந்த” ஆழ்நிலைவாதம்“
[ Transcendentalism ] ஆக உருவானது.
இந்த “ ஆழ்நிலைவாதம் ” என்பது பூமிக்கு அப்பால் உள்ள பகுதிகளுடன் [ Ethereal ] தொடர்புடையது, மிகத்தூய்மையானது என்ற நிலைப்பாட்டையும் முன்வைத்தது. அச்சிந்தனையின் நாயகனாக எமர்சன் [ Ralph Waldo Emerson ] வருகிறார்.
19ம் நூற்றாண்டில் இச்சிந்தனைப் போக்கு உருவாகிய இதே காலத்திலேயே மார்க்சிய தத்துவமும் உருவானது.
ஆழ்நிலைவாதம் [ Transcendentalism ] சார்ந்த சிந்தனைகளை முன்வைத்தவர்களும், மார்க்சியம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்தவர்களும் வெவ்வேறு நோக்கில் இயற்கை, மற்றும் மனித வாழ்க்கை பற்றி பேசினர்.
ஆழ்நிலைவாதம் வாழ்வின் பிரச்சனைகளுக்கு உள்ளுணர்வு, இலட்சியம், படைப்பாற்றல் என்பவற்றை மதவாத அணுகுமுறையுடன் இணைத்துப்பார்த்தது.ஆனால் மார்க்சியம் அறிவியல் துணை கொண்டு பொருள்முதல்வாத அறிவியல் , பொருளாதார, தத்துவம் மற்றும் மத எதிர்ப்பு அணுகுமுறையை முன்வைத்தது.
ஆழ்நிலைவாதம் மக்களின் மீதான உண்மையான கரிசனையை நிராகரிப்பதாகவும், தேவாலயங்களின் சீர்திருத்தங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் துணைபோவதுடன் முதலாளித்துவத்திற்குத் தொண்டாற்றுவதாகவும் மார்க்சியர் கருதினர்.
ஆழ்நிலைவாதி ரால்ப் வால்டோ எமர்சன், “நாங்கள் சொந்தக் காலில் நடப்போம்; நாங்கள் எங்கள் சொந்த கைகளால் வேலை செய்வோம்; எங்கள் சொந்த கருத்துகளை பேசுவோம். மனிதர்களின் தேசம் முதன்முறையாக ஒவ்வொருவரும் தன்னை தெய்வீக ஆத்மாவால் ஈர்க்கப்பட்டதாக நம்புகிறார்கள், இது எல்லா மனிதர்களையும் ஊக்குவிக்கிறது.” என்றார்.
“We will walk on our own feet; we will work with our own hands; we will speak our own minds. A nation of men will for the first time exist because each believes himself inspired by the Divine Soul which also inspires all men.” - Ralph Waldo Emerson
19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக மனம் சார்ந்த அனுபவங்கள் மட்டுமல்ல, எல்லாவற்றையும் விஞ்ஞான அணுகுமுறை கொண்டு விளக்கமுடியும் என்ற நிலை உருவானது. தொடர்ந்து டார்வினின் [ Charles Darwin ] பரிணாமக் கோட்பாடு, மார்க்சியத்தின் இயங்கியல் [ Dialectical Materialism ] கோபாடுகளின் வருகையோடு பொருளியல் சார்ந்த அறிவார்ந்த கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன.
கார்ல் மார்க்சின் முன்னோடியான ஹெகல் [ Georg Wilhelm Friedrich Hegel ] இயற்கையின் இயக்கவியல் பற்றிய சிந்தனையை முன்வைத்தார். இயற்கை உட்பட எல்லாமும் மாறிக் கொண்டே இருப்பதுடன் அவை உருமாறியும், இன்னொன்றாகவும் மாறுவதுடன் அதனூடாக உணர்வுகளும் மாறிக் கொண்டிருக்கின்றன என்பதையும் அவை தவிர்க்க முடியாதவை எனவும் கூறினார்.
கடவுள் பற்றிய தீவிரமான நம்பிக்கை மிகுந்த காலத்தில் கடவுளா. இயற்கையா முந்தியது என்ற விவாதங்களில் இயற்கை தான் கடவுளை படைத்தது என்றும் இயற்கை இல்லாவிட்டால் கடவுள் என்ற தேவை இல்லை என்றும் ஹெகல் கருதினார். அதுமட்டுமல்ல மாறும் இந்த உலகில் மாறாத்தன்மை உண்டென்றால் அது ஆட்சியும், மன்னரும் அதாவது மன்னனின் அதிகாரமும், அவன் வைத்த சட்டமும் மாறாது என்றார். இது ஒருவகையில் சர்வ வல்லமைமிக்க கடவுளுக்கிணையாக மன்னன் பார்க்கப்பட்டதன் விளைவு ஆகும். நிலவும் சமூகக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாறாமல் தொடர்ந்து இருந்து வருகின்ற அதிகாரமிக்க மன்னரை வைத்தே நிறைவேற்றலாம் என எண்ணினார்.
தனக்கு முன்னால் இருந்த சிந்தனையாளர்களின் தொடர்ச்சியாகவே மார்க்ஸ் வருகிறார். ஹெகல் போன்றோரின் அடியொற்றியே வந்தாலும் மார்க்ஸ் தனது ஆய்வுகள் மூலம் சிலவற்றை நிராகத்து தனது சிந்தனையை முன்வைத்தார். ஆன்மீக வாதியான ஹெகல் வகுத்தளித்த இயக்கவியல் Dialectical Spiritualism [ இயங்கியல் ஆன்மீகம் ] என அழைக்கப்பட்டது. இது இயற்கையையும் சமூகத்தையும் ஆத்மீகம் சார்ந்து விளக்கும் ஒரு முறையாகக் கொண்டது.
மார்க்ஸ் காலத்து முதலாளித்துவ வளர்ச்சிக் காலகட்டத்தில் உருவான இந்த சிந்தனைகள் தனியே இயற்கையின் இயக்கத்தையும், பொருட்களின் அல்லது பருப்பொருள் [ Matter ] இயக்கம், அதன் மாற்றம் பற்றியும், அது போலவே சமூகத்திலும் நிகழ்கிறது என்பதையும் அவற்றோடு மனித மேம்பாடு சார்ந்த பொருளியல் வாழ்வின் முன்னேற்றம்பற்றியும் மார்க்ஸ் விரிவாக விளக்கினார். விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சின் இப்புதிய சித்தாந்தம் இயக்கவியல்பொருள்முதல்வாதம் [ Dialectical Materialism ] என அழைக்கப்பட்டது.மதம் சார்ந்த ஆன்மிகம், கடவுள் போன்ற கருத்தியல் வாதத்திற்கு இது எதிராக அமைந்தது.
இயற்கையிலுள்ள அனைத்தும் மாறும் என்பதன் மூலம் இந்த உலகமே மாறிக் கொண்டிருக்கிறது என்று கார்ல் மார்க்ஸ் கூறும் கருத்தின் சாராம்சம் என்னவென்றால் மாற்றம்ஒன்றேமாறாதது என்ற உலக நியதி ஆகும். அந்த அடிப்படையில் நிலையான ஒரு கடவுளும் இல்லை என்பதாகும். மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த உயிர்ப்பியல் விஞ்ஞானியான சார்ள்ஸ் டார்வினின் உயிர்களின் “ உயிர்களின்பரிணாமவளர்ச்சி ” [ On the Origin of Species ] பற்றிய ஆராய்ச்சிகள் அதை நிரூபித்தன.
இந்த உலக நியதி சமூக வாழ்விலும் பிரதிபலிக்கிறது என்ற அடிப்படையிலேயே மனிதர்களுக்கு இடையேயும் சமூகத்தில் உண்டாகும் மாறுதல்களும், வளர்ச்சியும் நிகழ்கின்றன என்றார் மார்க்ஸ். மனித உறவுகளிலும் பொருளியல் சார்ந்த மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் இயங்கியல் பொருளியலை மார்க்ஸ் முன்வைத்தார்.
இயற்கையும்,சமூக வாழ்வும் சிந்தனையைத் தூண்டுகின்றன அல்லது சிந்தனைக்கு அடிப்படையாக உள்ளன. இந்த அடிப்படையில், அதையெல்லாம் தாண்டி இதுவரை இருந்த தத்துவங்கள் எல்லாம் உடமை வர்க்கத்தின் அல்லது பணக்காரவர்க்கத்தின் குரலாக இருந்த வேளையில் உலகத்தில் முதன்முதலாக தொழிலாளி வர்க்கத்திற்கான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவமாக மார்க்ஸ் தனது தத்துவத்தை உருவாக்கினார்
19ம் நூற்றாண்டில் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ தொழிற்துறையால் வரன்முறையற்று சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளிகளின் துயரங்கள் ஒரு புறமும், மறுபுறம் ஐரோப்பாவில் நிகழ்ந்து கொண்டிருந்த அரசியல் கொந்தளிப்பான நிலைகளும் மார்க்சின் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்தன. மனிதர்கள் பற்றிய அக்கறை மட்டுமல்ல, முதலாளித்துவ உற்பத்தி முறையால் ஏற்படும் இயற்கைக்கு ஏற்படும் தீங்குகள் குறித்தும் மார்க்ஸ் அக்கறை காட்டினார்.
முதலாளித்துவ தொழில்துறையின் விரிவாக்கத்தில் வரன்முறையற்று இயற்கை வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதைத் தனது காலத்திலேயே அதாவது முதலாளியத்தின் ஆரம்பகாலத்திலேயே அது குறித்து எழுதியதுடன, அவை நிகழ்த்தப்போகும் தீய விளைவுகள் குறித்தும் மார்க்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மார்க்ஸ்,ஏங்கல்ஸ் எழுதிய சில பகுதிகள்.
“ முக்கிய விஞ்ஞானிகளில் குறிப்பாக, ஜெர்மன் விஞ்ஞானியான லைபிக் என்னை பெரிதும் கவனிக்க வைக்கிறார். மண்வளத்தை சுரண்டும், கொள்ளையடிக்கும் இம்முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பு குறைவான காலத்தில் அதிக லாபம் அடைகிறார்கள். பழமையான வேளாண் சமூகமான சீனா, எகிப்து, ஜப்பான் போன்ற நாடுகளில் அறிவார்ந்த வகையில் வேளாண்மையை மேற்கொண்டு இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரம்
ஆண்டுகளாக மண்ணின் வளங்களை பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் மண்வளத்தை அதிகரிக்கவும் செய்து வந்ததை, முதலாளித்துவ கொள்ளை முறையானது உலகின் சில பகுதிகளில் உள்ள மண்வளத்தை அரை நூற்றாண்டில் சுரண்டியது. “
- மார்க்ஸ் [ மூலதனம் ]
“ இயற்கை விஞ்ஞானங்கள் எல்லா அறிவுக்கும் அடிப்படிவமாக உள்ளன "என்று மார்க்ஸ [1863 ]
“….மெசப்பொட்டேமியா, கிரீஸ், ஆசியா மைனர், இன்னும் பிற இடங்களிலும் சாகுபடி நிலங்களை பெறுவதற்காக மக்கள் காடுகளை அழித்ததுடன் நீர்த்தேக்கங்களையும், அது ஒருங்கு சேரும் இடங்களையும், ஒழித்ததனால் அவர்கள் அந்த நாடுகளின் தற்போதைய திக்கற்ற நிலைக்கு அடிகோலியதாகக் கனவும் கூடாக காணவில்லை. ஆல்ப்ஸ் மலைகளில் குடியுள்ள இத்தாலியர்கள் வடபுறச் சரிவுகளில் பரிவுடன் பேணிக்காக்கப்பட்ட பைன் மரக்காடுகளைத் தென்புறச் சரிவுகளில் பூரணமாக வெட்டிப் பயன்படுத்திவிட்ட பொழுது அவ்விதம் செய்ததன் மூலம் அப்பிரதேசத்துப் பால் பண்ணைத் தொழிலின் அடிவேர்களையே வெட்டிவிட்டதன் சூசகத்தையும் கூடக் காணவில்லை; அதன்மூலம் வருடத்தின் பெரும்பகுதியில் மலைச் சுனைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் செய்து விட்டதை பற்றியும், மழைக் காலங்களில் கூடுதலான வெள்ளப்பெருக்குடன் அவை சமவெளிகளில் பாய்வதற்கு வகை செய்யப்பட்டது என்பதை பற்றி அந்த அளவு சூசகமும் கூடாக காணவில்லை. ஐரோப்பவில் உருளைக் கிழங்கை யார் பரவ வைத்தனரோ அவர்கள் அந்த மாச்சத்துள்ள கிழங்குடன் அதே சமயத்தில் கண்டமாலை என்கிற வியாதியையும் கூடப் பரப்ப ஏதுவாயினர் என்பதை அவர்கள் அறியவில்லை.” - எங்கெல்ஸ் [ கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்]
“ மனிதன் இயற்கையினால் வாழ்கிறான்- அதாவது இயற்கை தான் அவனது உடல்- மேலும் அவன் சாகாமல் இருக்கவேண்டுமென்றால் அவற்றுடன் தொடர்ச்சியாக உரையாடலை மேற்கொண்டு வரவேண்டும் . மனிதனின் புற மற்றும் அக வாழ்வானது இயற்கையுடன் இணைந்தது என்பதை எளிதாகச் சொல்வதென்றால் . இயற்கை அதனுடனேயே இணைக்கப்பட்டுள்ளது. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி.” - என்பார் மார்க்ஸ். [1844ம் ஆண்டின் பொருளாதார - தத்துவ ஞான கையேடுகள் ]
நவீனவேளாண்மைமீதானவிமர்சனம் :
மார்க்சிய மூலவர்கள் தங்கள் காலத்தில் வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ உற்பத்தியின் உபவிளைவுகளாக ஏற்பட்டுக்கொண்டிருந்த சமூக அவலங்களையும், இயற்கை மீதான அத்துமீறல்களையும் சாடியுள்ளனர்.
01.
பெருவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடற்பறவைகளின் எச்ச்சத்தைக் கொண்டு இங்கிலாந்தின் வயல்களை வளப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
மண் சந்தைப்படுத்தப்படக்கூடிய பண்டமாகி விட்டது. மண்ணைச் சுரண்டுவது பொதுவான
வரத்தக விதிகளின் படி நடக்கிறது - மார்க்ஸ் [ மூலதனம் ]
02.
முதலாளித்துவம் மிகப்பெரிய அளவில் வளரும் போது விவசாயம் அழிவுக்குள்ளாகும் - [ மார்க்ஸ் ]
03..
“இயற்கை விஞ்ஞானங்கள் எல்லா அறிவுக்கும் அடிப்படிவமாக உள்ளன " என்று மார்க்ஸ் 1863ல் தமது மூலதனத்தின் பூர்வாங்கப் படைப்பில் சுட்டிக்காட்டியதன் மூலம் இயற்கை விஞ்ஞானங்களின் பாத்திரத்தை வலியுறுத்தினார். [ இயற்கையின் இயக்க இயல் முன்னுரை ]
மார்க்சிய மூலவர்கள் தங்கள் காலத்திலேயே இயற்கையை முதலாளித்துவம் தவறாக கையாள்வது குறித்து எச்சரிக்கையாக பலவற்றைக் கூறிச் சென்றுள்ளனர்.
மனித குல வரலாற்றில் திருப்புமுனையாகவும் மார்க்சியத்தை அடைப்படையாகவும் கொண்ட உலகின் முதல் சோஷலிச ரஷ்யப்புரட்சி எழுந்தது. புரட்சி நடந்த காலத்து ரஸ்யா பின்தங்கியதும் பண்ணையடிமைத்தனத்தைக் கொண்ட உற்பத்தியையும் கொண்டிருந்தது. இருண்ட காலம் என்றழைக்கப்பட்ட ஓர் காலத்தைக் கடந்து மேற்கு ஐரோப்பா கைத்தொழிலில் வளர்ச்சி பெற்ற நாடுகளாக வளர்ச்சி பெற்றுவிட்டிருந்தன. ரஸ்யாவின் பொருளாதாரமும் வளர் வேண்டுமாயின் மேற்படி பண்ணையடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் கருதப்பட்டது.
உலகெங்கும் நிலமற்ற ஏழை விவசாயிகள் நூற்றாண்டுகளாக போராடிப் பெற முடியாத உரிமைகளை ரஷ்யப் புரட்சி உடனடியாகத் தீர்த்து வைத்து பேரெழுச்சியை உண்டாக்கியது. ஜார் மன்னனுக்குச் சொந்தமான நிலங்கள், மத நிறுவனங்கள், கோயில்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலங்கள்,பெரும்நிலப்பிரப்புகளின் நிலங்கள் என கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மக்களின் சொந்தமாயிற்று.
ரஷ்யப்புரட்சியை முளையிலேயே கிள்ளியெறிய முனைந்த மேற்குநாடுகள் அதற்கு எதிராக தொடர்ச்சியாகச் செயல்படத் தொடங்கின. உள்ளூரில் எதிர்ப்புரட்சி சக்திகளையும், வெளிநாடுகளின் தாக்குதல்களையும்,சதிகளையும் முறியடிக்க ரஷ்ய தொழிலாளி வர்க்கமும், மக்களும் வாழ்வா சாவா போராட்டங்களை நடத்தியதுடன் தங்கள் முன்னேற்றத்துக்கான தொழில் துறைகளையும் வளர்க்க பாடுபட்டனர்.
லெனின் மறைவையடுத்து சோவியத் யூனியனின் தலைவராகப் பணியாற்றிய ஸ்டாலின் தலைமையிலான சோவிய அரசு லெனினின் திட்டங்களை முன்னெடுத்துச் சென்றதுடன் நிலம் பற்றிய கருத்தாக்கத்தையும் விரிவாக எடுத்துச் சென்றது. 1930களின் சோவியத் கால கட்டத்தில் நிலம் பற்றிய கருத்தாக்கம் ரஷ்ய நாட்டார் இசையிலும், இலக் கியத்திலும், சினிமாவிலும் முக்கிய பாடுபொருளானது மட்டுமல்ல தொழில் துறையின் விரிவாக்கத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தியது.
பொதுவாக ஐரோப்பிய சூழ்நிலையில் சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்வு, குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளில் முனைப்பு பெற்றது. அதே காலத்தில் சோவியத் யூனியனில் "மாபெரும்ஸ்டாலின்திட்டம்" [ The Great Stalin Plan ] என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமே இதற்கெல்லாம் முந்தியதாக இருந்தது. பொதுவாக ஸ்டாலின் செய்ததெல்லாம் தவறு என்று பிரச்சாரம் செய்யும் மேலை ஆய்வாளர்கள் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் சில உண்மைகளையும் எழுதுவர். The Great Stalin Plan for the Transformation of Nature - என்ற தலைப்பில் Stephen Brain என்பவர் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் இங்கே :
//....ஆனால் இவற்றில் எதையும் விட பழமையானது மற்றும் துணிச்சலானது சோவியத் முயற்சியாகும், இது 1920 களின் முற்பகுதியில் தொடங்கி 1948 இல் "இயற்கையை மாற்றுவதற்கான “மாபெரும் ஸ்டாலின் திட்டம்" மூலம் அதன் உச்சத்தை எட்டியது. மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தை மாற்றியமைக்க உலகின் முதல் அரசு இயக்கிய முயற்சி இதுவேயாகும்.
// ஸ்டாலின் திட்டம் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் ஹெக்டேர் புதிய காடுகளை உருவாக்குவதை முன்னறிவித்தது - இது மேற்கு ஐரோப்பாவின் அனைத்து காடுகளையும் விட பெரிய பகுதி - ரஷ்ய தெற்கின் ஆறுகள் மற்றும் கூட்டு பண்ணைகளின் சுற்றளவுகளில் காற்றுத்தடைகளை உண்டுபண்ணும் வேலிகளை அமைத்து, சோவியத்தின் திட்டப்படி, இந்தப் புதிய காடுகள் மத்திய ஆசியாவிலிருந்து வரும் உலர் காற்றை நிறுத்தி, ரஷ்யாவின் காலநிலையை குளிர்வித்து, ஈரமாக்கி , மேலும் பல தசாப்தங்களாக பாதிக்கப்பட்டிருந்த புல்வெளியின் வறட்சியை நீக்கும்.//
//
but older and bolder than any of these was the soviet effort , which began in the early 1920s and reached its zenith in 1948 with the " great Stalin Plan for the Transformation of Nature ." the world's first state- directed effort to reverse human- induced climate change.
The Stalin Plan foresaw the creation of nearly six million hectares of new forest - an area greater than that of all the forests of Western Europe - in the form of windbreaks along the rivers of the Russian south and perimeters of the collective farms. According to Soviet claims, these new forests would halt desiccating Central Asian winds, cool and dampen the climate of Russia, and eliminate the periodic droughts that affected the steppe for decades.
Six million hectares of new forest - an area greater than that of all the forests of Western Europe - in the form of windbreaks along the rivers of the Russian south and perimeters of the collective farms. According to Soviet claims, these new forests would halt desiccating Central Asian winds, cool and dampen the climate of Russia, and eliminate the periodic droughts that affected the steppe for decades.[ The Great Stalin Plan for theTransformationof Nature - Stephen Brain [ 2010 ]
தொழில்மயமாக்கலில் மரபுவழிகளிலும், நவீன விஞ்ஞான முறைகளையும் பயன்படுத்த முனைந்த சோவியத் அரசு அதற்குத் தேவையான நிலப்பரப்புகளுக்கு காடுகள், நீர்நிலைகள் இன்றியமையாதவை என்ற ரீதியில் அவற்றின் அவசியத்தையும் உணர்ந்தது. அதுமட்டுமல்ல சூழல் மாசுபடுவதை தடுக்கவுனுமான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதுடன் மக்கள் மத்தியில் அதற்கான பிரச்சாரங்களையும் மேற்கொண்டது.
இக்கால சூழ்நிலையில் சோவியத் யூனியனின் மீது திணிக்கப்பட்ட ஹிட்லரின் ஆதிக்க வெறிமிக்க, பாசிஸப் போர் காரணமாக இம்முன்னெடுப்புகள் இடை நிறுத்தப்பட்டன அல்லது தடைப்பட்டன என்பதும் வரலாறு ஆகும்..
இயற்கை, நிலம் பற்றிய கருத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சோவியத் அரசு பிரச்சார உத்திகளாக திரைப்படம், இலக்கியம், இசை போன்ற முக்கிய கலைகள் மூலம் மக்களிடம் சிறப்பாக எடுத்துச் சென்றது. .
இசையில் குறிப்பாக ரஸ்யாவின் தலைசிறந்த இசையமைப்பாளரான Shostakovich இசையமைத்த “ The Song of the Forests “ , " The Song of the Motherland " [1935 ] போன்ற இயற்கை - நிலம் பற்றிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. சோவியத் யூனியனின் இன்னுமொரு முக்கிய இசையமைப்பாளரான Sergey Prokofiev என்பவரும் முக்கியமான ஒருவர். அவரின் 3 Pieces for Piano, Op.59 என்ற இயற்கை பற்றிய படைப்பு மூன்று பகுதிகளைக் கொண்டது.
01. Promenade - ஊர்வலம்
02. Landscape - நில அமைப்பு
03. Pastoral Sonatina - முல்லைப்பாடல்
புகழ் பெற்ற செர்கெய் ஐயன்ஸ்டீனுடன் இவர் இணைந்து பணியாற்றிய Alexander Nevsky (1938), Sense (1948). போன்ற படங்களில் இயற்கையின் வடிவங்களைக் குறிப்பாக பனிப்பாறைகளை இசையில் வடிக்க முயன்றார் என்பர். குறிப்பாகச் சோவியத் யூனியனின் திரைப்படங்களில் நிலக்காட்ச்சிகள் மிகவும் முக்கியப்படுத்தப்பட்டு, கதையின் உயிர்ப்பான பகுதியாக அமைத்துக் காட்டப்பட்டது.
Battleship Potemkin என்கிற படம் முதல் Earth போன்ற ஏராளமான படங்களில் நில அமைப்பின் தன்மைகளையும், மரம் செடி, கொடிகளையும் மிக அற்புதமான முறையில் படம் பிடித்துக்காட்டி படப்பிடிப்பு [ Photography ] , படத்தொகுப்பு [ Editing ] போன்ற கலைகளையும் உலகம் வியக்கும் வண்ணம் சோவியத் கலைஞர்கள் படைத்துக் காட்டினார்கள். சோவியத் திரைப்படங்களின் தாக்கம் இந்திய சினிமாக்களிலும் பிரதிபலிக்கத் தவறவில்லை. மெஹகபூப் இயக்கிய Mother India , Aan போன்ற ஹிந்திப் படங்கள் சில உதாரணங்களாகும்.
மேலே குறிப்பிட்ட வண்ணம் சூழலியல் குறித்து மார்க்சிய ஆசான்கள் இருவரும் எச்சரித்தது போலவே இன்று நம் கண்முன்னாலேயே இயற்கை அழிவதை அல்லது மனிதனே இயற்கையை அழிப்பதை பார்க்கின்றோம். வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் பாரிய அளவுகளில் அவை நடைபெறுவதால் அதன் தாக்கம் பருவநிலைகளிலும், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதும், நிலப்பயன்பாடுகளில் மாற்றங்களும், வளிமண்டலம் மாசுபடுதல் போன்றவற்றிலும் தாக்கங்களை விளைவிக்கின்றன. இதன் விளைவாக புவியின் வெப்பம் அதிகரிப்பு, திடீர் மழை, புயல், கடல் மட்டம் உயர்தல், சுனாமி போன்றவையும் நிகழப்போக்கின்ற பயங்கர அழிவுகளாக உள்ளன `
மேற்கு ஐரோப்பியா கைத்தொழில் கண்டுபிடிப்பும் அதன் அசுர வளர்ச்சிக்குத் தேவையான மூல வளங்களும் உலகின் பல பாகங்களிலிருந்து அடாவடித்தனமாக கொண்டு சென்று குவிக்கப்பட்டன. தொழில்துறைகளின் வேகமான வளர்ச்சியின் விளைவாக உருவான அதன் தேவைகளுக்கு அவற்றை இயக்கும் சத்தியை குறைந்த செலவில் பெற புதிய ,செலவு குறைந்த வழிவகைகளைக் காண வேண்டிய தேவையும் ஏற்பட்டது.
அந்த வகையில் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றியது அணுசக்தி. இன்று உலகின் மின்சார பயன்பாட்டில் 10 வீதத்தை அணுசக்தி தொழில்நுடபத்தின் மூலம் 430 மின்உலைகளிலிருந்து நிறைவேற்றப்படுகிறது. 50 க்கும் மேற்பட்ட நாடுகள் சுமார் 220 ஆராய்ச்சி உலைகளில் அணுசக்தியைப் பயன்படுத்துகின்றன. மருத்துவம், தொழில்துறை உற்பத்திக்காகவும், கூடுதலாக ஆராய்ச்சிகளுக்கும் பயிற்சிக்காகவும் இந்த உலைகள் பயன்படுத்தப்படுகின்றன .
கைத்தொழிலில் வளர்ச்சியடைந்த நாடுகளான அமேரிக்கா, ஐரோப்பா, ரஸ்யா, ஜப்பான் போன்ற நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. சில அனுகூலங்கள் இருப்பினும் அணுஉலைகளால் ஏற்படுகின்ற அழிவுகள் மனித இனத்தையே நாசம் செய்வதாக இருப்பதுடன் அதன் அபாயகரமான எதிர்வினையாகவும் உள்ளது.
அமெரிக்கா, ரஸ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட அணு உலைஅழிவுகள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியத்துடன், அதன் தீமை விளைவிக்கத்தக்க பண்புகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கங்கள் உருவாகவும் காரணமாயின. ஆனாலும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களுக்கு ஏவல் புரியும் உள்நாட்டு அடிமை அரசுகள் மக்கள் எதிர்ப்புகளையும் மீறி எசமான்களின் வீசுவாசிகளாகச் செயற்பட்டும் வருகின்றன.
அணு உலைகளின் ஆயுள் 30 வருடங்கள் எனவும், அதன் கழிவுகள் 25.000 வருடம் உயிர்ப்புடன் இருக்கும் எனவும், புற்று நோய்களும், மனிதர்களை ஊனமாக்கும் நோய்களை உண்டாக்கி மிக எளிதாக மனித சந்ததிகளையே அழிப்பதாகவும் உள்ளன எனவும் கண்டுபிடிக்கப்பட்டன . ஒரு நாட்டில் நிகழும் அணுஉலை விபத்துக்களால் உண்டாகும் கதிர் வீச்சுக்களால் அந்த குறிப்பிட்ட நாடு மட்டுமல்ல, அருகில் இருக்கும் நாடுகளும், பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் நாடுகளுக்கும் பரவுவதுடன் சொல்லொணாத துன்பங்களையும் விளைவிக்கின்றன.
இக்காரணங்களால் அணு உலைகள் உருவாக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உலகெங்கும் பெருகிவருதுடன் அதற்கெதிரான மக்கள் இயக்கங்களும் முனைப்புடன் இயங்கி வருகின்றன. இது இவ்விதம் இருந்த போதிலும் அணு உலையாக்கத்தில் ஈடுபடும் நாடுகளும், தனியார் கம்பனிகளும் இவ்வெதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமலும் உள்ளன.
மேலைநாடுகளின் அசுர உற்பத்திமுறைக்கும், லாபவெறிக்கும் இரையான ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏற்கனவே இதன் கொடிய விளைவுகளை அனுபவித்து வருகின்றன. இந்நாடுகளில் விவசாயத்தில் தலையிடும் பகாசுரக்கம்பனிகள் மிகப்பெரிய அளவிலான நிலங்களைக் கைப்பற்றி அந்நிலங்களின் வளங்களைச் சுடுகாடாக்கி அச்சுற்றாடலிலுள்ள மக்களையும் ஊனமுற்றவர்களாக்கி விடுகின்றனர். குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள வாழைப்பழ உற்பத்தி செய்யும் அமெரிக்கக் கம்பனிகள், அந்நிலங்களில் தொடர்ச்சியான உற்பத்திப் பெருக்கத்திற்கும் அளவுக்கதிகமான செயற்கை மருந்துகளை தூவி அந்நிலத்தடி நீர் நிலைகளையும் நஞ்சாக்கிய செய்திகள் 1990களிலேயே வெளியாகின.
பூமிப்பந்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் மழைக்காடுகளும் அதனுள் பொதிந்திருக்கும் கனிம வளங்களும் பலதேசிய கம்பனிகளின் லாப நோக்கமிக்க உற்பத்திகளுக்கு மிக அவசியமான மூலவளங்களைக் கொண்டுள்ளன என்பதால் உலகெங்கும் அவை தாக்குதல்களுக்குள்ளாக்கப்படுகின்றன. அங்கு வாழும் பழங்குடி இனமக்களை அடித்து விரட்டுவதும், அவர்களை ஊர்ரற்றவர்களாக்குவது மட்டுமல்ல, சிறைக்கைதிகளாக பிடித்து, அவர்களது சொந்த ஊர்களிலேயே கம்பி வேலிகளுக்குள் அடைத்து சித்திரவதைகள் மூலம் சொல்லொணாத துன்பத்திற்குள்ளாக்கியும் வருகின்றனர்.
குறிப்பாக பிரேசில் நாட்டு மழைக்காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதும், அவை மேற்குநாடுகளின் தொழில்துறைகளிலும், தளபாட உற்பத்தியிலும் பயன்படுவதை பலர் எடுத்துக்காட்டியுள்ளார். அமேசான் மழைக்காடுகளில் 1000 ஹெக்டேர் காடுகள் வருடம் ஒன்றுக்கு அழிக்கப்படுவதாகவும், இதுவரை 24 மில்லியன் ஹெக்டேர் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் உலகில் வேறு எங்கும் காண முடியாத அரியவகை உயிரினங்களும் அழிவுக்குள்ளாகின்றன.
எதையும் பொருட்படுத்தாமல் செல்வம் ஒன்றையே சேர்த்துக் குவித்துவிட வேண்டும் என்ற பேராசை இந்த உலகத்தின் வளங்களை அழிக்கும் துணிவைக் கொடுத்துள்ளது. வளங்களை உறிஞ்சும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் கோர லாப வெறி இந்திய,ஆபிரிக்க, சீனா போன்ற நாடுகளின் வளங்களையெல்லாம் 19ம் நூற்றாண்டிலேயே சூரையாடியது. அது மட்டுமல்ல மிகக்கொடுமையான செயற்கையான பஞ்சங்களையும் அங்கே உருவாக்கியது. இன்றைய நவீன உலகின் வர்த்தகம் என்ற பெயரில் நடைபெற்று வரும் செயற்பாடுகள் கூட இயற்கையை குதறுவதாகவே உள்ளன.
பல அடுக்குகளைக் கொண்ட மரம், கொடி,செடிகள் , எந்நேரமும் மழை பொழிந்து கொண்டிருக்கும் செழிப்புமிக்க மழைக்காடுகள், அங்கே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் பல் பல்லாயிரம் நுண்ணுயிரினங்கள் என மனித வாழ்வுக்கும் இயற்கை ஆதாரமாக விளங்குகிறது.
லாபத்தை மட்டும் நோக்காகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறை ஒரு எல்லையில்லாத வகையில் இயற்கையை அழிப்பதிலும், பலவிதமான நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி விரிவாக்கம் செய்வது வியாபார நோக்கிலான விவசாயம் , மரங்களை அழித்தல், சுரங்கங்கள் போன்றவற்றை அமைப்பதற்கு கருணையற்ற வகையில் உற்பத்தி விரிவாக்கம் செய்யும் லாபவெறி கொண்ட முதலாளித்துவ உறபத்திமுறை சமூக சீரழிவுகளுக்கும் புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாக உள்ளன.
இன்றைய உலகம் வெள்ளப்பெருக்கு, வறட்சி, காட்டுத் தீ, தொடர்மழை, கனத்த மின்னல்கள், கடல்மட்டம் உயர்வது போன்ற பேரிடர்களை சர்வசாதாரணமாகக் கண்டு வருகிறது.இதன் அடிப்படைக் காரணமாக இருப்பது புவி வெப்பம் அதிகரிப்பு என ஆய்வுகள் கூறுகின்றன. ஐரோப்பா, அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் எல்லாப் அப்பகுதிகளில் அங்கங்கே இப்பேரிடர்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
இப்பேரிடர்களின் பின்னணியாக இருப்பது லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையே ஆகும். அதுமட்டுமல்ல மனிதர்களிடையேயும் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வும் என்றுமில்லாத அளவில் அதிகரித்து வருகிறது.
காலநிலை மாற்றத்தால் உருவாகும் பேரிடர்களைத் தவிர்க்க கைத்தொழில் வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் நாடுகள் ஏதாவது ஒரு தீர்வுக்கு வரவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாக வேண்டிய நிலையிலும் தீர்க்கமான நல்லமுடிவுகளுக்கு வருவதுமில்லை. தங்கள் சுயநலம் சார்ந்து உலக மக்களுக்கு நன்மை ஏற்படும் நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் குழப்பிவிடுகின்றன.அவ்வப்போது நடைபெற்றுவரும் சுற்று சூழலியல் மாநாடுகளில் இவை தான் வழமையாக உள்ளன.
இன்றைய இப்பேரிடர்களுக்கான காரணங்களை முன்கூட்டியே மார்க்சிய ஆசான்கள் எச்சரித்தமையை முன்னர் கூறினேன். அது இன்று நம் கண் முன்னே நிகழ்வதை நாமும் காண்கிறோம்.
மார்க்சிய ஆசான்கள் அன்று கூறியதையே இன்றைய நவீன ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். உயிரியலாளரும், இயற்கை வரலாற்றாசிரியருமான டேவிட் அட்டேன்போரோ பின்வருமாறு கூறுகிறார்.
Which is why we’ve cut down three trillion trees across the world. Half of the world's rainforests have already been cleared. What we see happening today is just the latest chapter in a global process spanning millennia. The deforestation of Borneo has reduced the population of orangutans by two - thirds since I first saw one just over 60 years ago.
We can’t cut down rainforests forever, and anything that we can’t do forever is by definition unsustainable. If we do things that are unsustainable, the damage accumulates ultimately to a point where the whole system collapses. No ecosystem, no matter how big , is secure. Even one as vast as the ocean. - David Attenborough [ A Life on our Planet ]
இன்றைய முதலாளித்துவ லாபவெறி கொண்ட உற்பத்தி முறையே இப்பேரிடர்களுக்கான காரணங்களாக விளங்குகின்ற என்பதை இன்றைய சுற்றுசூழலியல் இயக்கம் சார்ந்த வேறு சில செயற்பாட்டாளர்களும் கூறுமின்றனர்.
முதலாளித்துவம் இருக்கும் வரை இந்த உலகைக்கு காப்பாற்ற முடியாது. முதலாளித்துவம் வாழ்விற்கும், மனிதர்களுக்கும் , பெண்களுக்கும் எதிரானது - பேர்டாகாஸெர்ஸ் [ சுற்று சூழல் போராளி [ 1973 - 2016 ]
அதன் விளைவுகளை நாம் இன்று கண்கூடாகக் காண்கின்றோம். கடந்த வருடங்களாக மார்க்சியவழியில் சுற்றுசூழல் சார்ந்த ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்களில் John Bellamy Foster என்ற ஆய்வாளர் முக்கியமானராவார்.
“ The chief cause of the environmental destruction that faces us today is not biological, or the product of individual human choice. They are social and historical, rooted in the productive relations, technological imperatives,and historically conditioned demographic trends that characterise the dominant social system. Hence, what is ignored or downplayed in most proposals to remedy the environmental crisis is the most critical challenge of all: the need to transform the major social bases of environmental degradation, and not simply to tinker with its minor technical bases. A long as prevailing social relations remain unquestioned, those who are concerned about what is happening are left with few visible avenues for environmental action other than purely personal commitments to relying to recycling and green shopping,socially untenable choice between jobs and environment, or broad appeals to corporations, politics policy - makers and the scientific establishment - the very interests most responsible for the current ecological mess. “ - John Bellamy Foster - The Vulnerable Planet: A Short Economic History of the Environment..
“ இன்று நாம் அனுபவிக்கும் சுற்றுச் சூழல் பிரச்சனை என்பது உயிரியல் சார்ந்ததோ தனிநபர் சார்ந்ததோ அல்ல. அது சமூக, வரலாறு சார்ந்த உற்பத்தி முறையுடனும், தொழில்நுட்பத்தின் தவிர்க்க முடியாத, வரலாற்று நிபந்தனைகளுக்குட்பட்ட மக்கள் தொகையின் ஆதிக்கத்திற்குட்பட்ட சமூக அமைப்பு சார்ந்ததாகும். சுற்றுச்சூழல் பிரச்சனையை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை தவிர்ப்பது அல்லது குறைத்து மதிப்பிடுவது என்பதே அதன் முக்கியமான சவாலாக உள்ளது.சுற்றுச்சூழல் சீரழிவின் முக்கிய சமூக அடிப்படைகளை மாற்ற வேண்டிய தேவை என்பது வெறுமனே சிறிய தொழில்நுட்பம் சார்ந்த ஒட்டு வேலை செய்வதல்ல.நிலவும் சமூக சூழல் கேள்விக்குள்ளாக்கப்படாமல் இருக்கும் வரை என்ன நடக்கிறது என்பதில் அக்கறை கொண்டவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து மீழ்சுழற்சி, பசுமை பொருள் வாங்குதல் போன்றவற்றில் தங்கியிருப்பதை தவிர்த்து வேறு சில வழிகள் காணக்கூடியதாக உள்ளன.சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத தொழில் மற்றும் சூழல்களுக்கிடையே மிக, மிக அவசியமான, தீவிரமான கேள்விகளை இன்றைய இந்த சுற்றுச் சூழல் குழப்பங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்கள், அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் , விஞ்ஞானிகள் போன்றோரிடம் வைக்க வேண்டும்.”
- John Bellamy Foster- [ The Vulnerable Planet: A Short Economic History of the Environment ]
இது போன்ற கருத்துக்களை விமர்சகர்கள் மட்டுமல்ல அறிவியல்துறை சார்ந்தவர்களும் வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.
“ If the environment is polluted and the economy is sick, the virus that causes both will be found in the system of production “. Barry Commoner [ American cellular biologist ]
இயற்கையுடனான போராட்டத்தில் மனித முன்னேற்றத்தின் அவசியம் குறித்த பார்வையில் இயற்கையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் மனிதன் கொண்டுவர முனைந்ததை, அவனது ஆற்றலை பாராட்டிய அறிஞர்கள், இயற்கை மீதான அவனின் எல்லையற்ற தாக்குதலைக் கண்டு கண்டிக்கவும் செய்தனர்
லாப நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட, வரன்முறையற்ற முதலாளித்துவ உற்பத்தி முறையை விமர்சித்த கார்ல் மார்க்ஸ் " இந்தஇயற்கைஎன்பதுதனியேமனிதனுக்கானதுமட்டுமில்லைபிறஉயிரினங்களுக்குமானது " என்றார்.
" மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன, ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்." - ஏங்கல்ஸ்.
" மனிதன் சுற்றுச் சூழலால் உருவாக்கப்படுகின்றன என்றால், அச்சுற்றுச்சூழலை மானிடத்தன்மை மிக்கதாக மாற்ற வேண்டும்.மனிதன்னியல்பாகவே சமூகத்தன்மை கொண்டவன். அவனது இயல்பின் வலிமையை சமூகத்தின் வலிமை கொண்டுதான் அளவிட வேண்டுமே ஒழிய .. மாறாக; அவனின் தனிப்பட்ட வலிமையைக் கொண்டு அல்ல.- "கார்ல்மார்க்ஸ் [ தத்துவத்தின்வறுமை ]
முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் சார்ந்த உற்பத்தி முறை தான் அவசியம் என இதுவரை காலமும் கருதப்பட்ட நிலையில், இன்றைய சமூக,அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கு அல்லது பிரச்சனைகளுக்கு அதற்கு மாற்றான தீர்வு ஒன்றே அவசியம் என்ற கருதுகோள் இப்போது வலுப்பெற்று வருகிறது.
நவீன பொருளாதாரக் கொள்கை என்று அறிமுகப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் ஆதிக்கத்தை தகர்க்காமல் இவை சாத்தியமில்லை என்பதை இன்று பலரும் உணர்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுப்பால், லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட விடாப்பிடியான வீண் ஆடம்பரபரப் பொருட்களின் உற்பத்தியால் அளவுக்கதிகமான மூலவளங்கள் பயன்படுத்தப்பட்டு, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் என்பது மனித இருப்புக்கே அச்சுறுத்தலாகியுள்ளது.
உதாரணமாக ஒரு சிலவற்றை இங்கே நினைவுபடுத்தலாம். ஒரு கார் உற்பத்தி செய்யவதற்கு 4000 லீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்பார்கள். ஆனால் அந்தக் கார்களை எத்தனை வீதமான மக்கள் வாங்கும் தகுதியில் இருக்கிறார்கள்? அதே நேரம் ஒவ்வொரு கார் கம்பனிகளில் எண்ணற்ற கார்கள் விற்பனையில்லாமல் இருக்கின்றன என்பதை காணமுடியும். விற்பனையில்லாமல் இருந்தாலும் கார்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன.இதை போன்றே ஒவ்வொரு பொருட்களுக்கும் உதாரணங்களை கூறிச் செல்லலாம்.
உலகத்தின் 100 வீதமான இயற்கை வளங்களில் 80 வீதமானவற்றை உலக மக்கள் தொகையில் 16 வீதமான ஐரோப்பிய , அமெரிக்க மக்களே அனுபவித்து வருகின்றனர் என்கிறது 1999 ஆண்டு அறிக்கை ஒன்று!
இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையால் மக்களுக்கு அதிகம் தேவையற்ற பொருட்கள் மட்டுமல்ல அவர்களை அடக்கி வைக்க தொடர்ச்சியான போர்களை நடாத்தும் ஆயுத உற்பத்திகளும் தொடர்கதையாக உள்ளன. முதலாளித்துவ உற்பத்தி முறையால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது என்பதை சிலர் ஏற்கத் தயங்குவர். ஆனால் இதை நிறுத்தாமல் இயற்கையைக் காப்பாற்ற முடியாது என்பதே நிதர்சனம்!
சமீபத்தில் பரவிய Corona நோய், உலகம் முழுதும் பல இன்னல்களையும், பேரழிவையும் உண்டாக்கியது.
2020 ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு [ WHO ] உலகம் முழுதும் பரவிய கொடிய COVID - 19 பரவுவதைத் தடுக்க மக்கள் வெளியே வரவேண்டாம் என்கிற சமூக முடக்கத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
மனித நடமாற்ற சூழநிலைகளால் , தொழிற்சாலைகள் இயங்காமல் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சொல்லமுடியாத இன்னல்களுக்கும், துயரங்களுக்கும் ஆளானார்கள். குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கவும் நேர்ந்தது.
இத்துன்பங்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் உலகெங்கும் புவியியல் ரீதியாக அதிசயக்கத் தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன.
போக்குவரத்தால் ஏற்படும் ஒலியின் இரைச்சல் அளவு 70% குறைந்ததால் பறவைகளின் செயலூக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. புதிய, புதிய பறவைகளின் ஒலிகள் நியூயோர்க் போன்ற நகரங்களிலேயே கேட்கும் நிலை ஏற்பட்டது.
ஆப்பிரிக்காவில் சுற்றுலாப் பயணிகளின் படையெடுப்பு குறைந்ததால் சிறுத்தை இனம் நிம்மதியான இனப்பெருக்கத்தைக் கண்டன. அழிந்து போகும் நிலையிலிருந்த பெங்குயின் பறவைகளின் இனப்பெருக்கம் அதிகரித்தது. சீனாவின் சில மாகாணங்களில் வளிமண்டலத்தில் நிலையாக நின்ற தூசிகள் மறைந்து தெளிந்த காட்சி கிடைத்தன.
தண்ணீர் நகரம் என்று அழைக்கப்படுகின்ற இத்தாலி, வெனிஸில் கடல்நீர் தெளிந்ததுடன், அதில் டொல்பின் மீன்களைக் காணும் அதிசயம் நிகழ்ந்தது. இந்தியாவில் 200 மைல்களுக்கப்பால் இருந்த இமயமலை காட்சி தந்தது. தூசிப்புகை மண்டலத்தால் மறைக்கப்பட்டிருந்த அப்பகுதி 40 வருடத்திற்குப் பின் தெளிவாகியது. கங்கை நீர்ப் பகுதிகளிலும் 12 நாளில் மாற்றங்கள் தெரிந்தன.
கடற்கரைகளில் பலகோடி ஆண்டுகளாக நிம்மதியாக முட்டையிட்டு வந்த ஆமைகள், சுற்றுலா பயணிகளால் அனுபவித்த இன்னல்களைத் தாண்டி நிம்மதியாக இனப்பெருக்கத்தில் ஈடுபட்டன.
ஆதாரம்:
இயற்கை குறித்து வியக்கத்தக்க பல செய்திப்படங்களை இயக்கியடேவிட்அட்டன்போரோவின் The year earth changed - என்ற Documentary .
மார்க்சிய ஆசான்கள் அன்று கூறியதையே இன்றைய நவீன ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர் என்பதற்கு மேலே இயற்கை வரலாற்றாசிரியரும் ,உயிரியலாளரும், தலைசிறந்த ஒலிபரப்பாளருமான டேவிட் அட்டேன்போரோ கூறியவைகளே சான்றாகும்.
கொரோனா முடக்கத்தின் போது புகழ்பெற்ற வலதுசாரியும் பிரித்தானிய பிரதமருமான போரிஸ் ஜோன்சன் கொரோனா முடக்கத்தால் ஏற்பட்ட இழப்புகளை நிவர்த்தி செய்ய தனது அரசு கொண்டுவரப்போகும் "அற்புதத்திட்டங்கள்" பற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்த போது முத்தாய்ப்பாக தான் "ஒருகம்யூனிஸ்ட்இல்லை " என்றும் மந்தநிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப பள்ளிகள், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 5 பில்லியன்பவுண்டுகளை ஒதுக்குவதாகக் கூறினார்.
போரிஸ் ஜான்சன் விருப்பமில்லாமல் பீடிகை போட்டு கூறியதென்பது " இடர்காலங்களில் கம்யூனிச முறையே உகந்தது " என்பதே ஆகும். இடர்காலங்களில் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் நலன் சார்ந்தது கம்யூனிச முறை என்பதே உண்மை ஆகும்.
நிறைவாக ...இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சீன தத்துவஞானி லாஸே [ Laozi ] கூறிய " இயற்கையைவிட்டுத்தூரவந்துவிட்டோம்அதுநம்மைதுன்பத்திற்குள்ளாகிறது.. இயற்கைக்குத்திரும்புவோம் " என்ற கருத்து கி.மு. 6ம் நூற்றாண்டுக்கு முந்தியது. அப்போது உற்பத்தி சக்தி குறைவாக இருந்தது.
"இயற்கைக்குத்திரும்புவோம் " என்பது இன்று சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது. ஆனாலும் அதற்குப்பதிலாக இயற்கையைக் காக்க, அதனை அழிக்கின்ற இந்த அமைப்பு முறையை கட்டுப்படுத்துவதே இன்றைய அவசியத்தேவை ஆகும்.
"முதலாளித்துவம் அகற்றப்படவில்லையெனில் அதனால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரும் உற்பத்தி சக்திகள் அழிவுசக்திகளாக உருமாறும் " என கார்ல் மார்க்ஸ் 150ஆண்டுகளுக்குமுன்னரேயே கூறியது இன்று நிதர்சனமான உண்மையாக உள்ளது.
" இயற்கையை வென்று விட்டோம் என்ற மமதையில் இருக்க வேண்டியதில்லை ! ஒவ்வொரு முறையும் இயற்கையை வென்று விட்டோம் என்று சொல்லும் போது இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது." - பேரறிஞயே ஏங்கல்ஸ் [ இயற்கையின் இயக்கவியல் ]
அளவற்ற பேராசையால் முதலாளித்துவம் இயற்கையை வகைதொகையின்றி சூறையாடும் போக்கை ஏங்கல்ஸ் சரியாக கணித்திருக்கின்றார். இந்த அழிவுகளை நிறுத்தாவிட்டால் அவர் சொன்னது எந்தக்கணமும் நடக்கும் என்பதை இன்றைய விஞ்ஞானிகளும் எச்சிரிக்கின்றார்கள்.
சமூகம், சிந்தனை, கலை, விஞ்ஞானம் என அறிவின் அனைத்து அம்சங்களிலும் பின்னணியாக இருப்பது அல்லது ஒட்டு மொத்தத்தையும் ஆள்வது இயற்கை ஒன்றே! அதில்லாமல் அழகியல, ரசனை எதுவுமில்லை. விஞ்ஞானம் புறநிலை உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறது. கலை புறநிலைகளைப் பிரதிபலித்தாலும் கலைஞர்களின் உணர்வுகளையும் பிரதி பலிக்கிறது.
இன்று நம் கண்முன்னாலேயே அழிந்து கொண்டிருக்கும் இயற்கையை பாதுக்கப்பதென்பது நடைமுறையிலுள்ள இந்த சுரண்டும் அமைப்பை மாற்றுவதும், அதன் மூலம் நாம் நமது எதிர்காலச் சந்ததியினருக்கு நல்ல காற்றையும், நீரையும் கொடுப்பதற்கான போராட்டம் மூலமே சாத்தியமாகும்!!
இதன் மூலமே இயற்கை - நிலம் - இசை மட்டுமல்ல இன்ன பிறவற்றையும் காக்க முடியும்!!
முற்றும்.
You must be logged in to post a comment Login