நாடோடிமக்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். ஊர்,ஊராகச் சென்று இசைவழங்கிய நாடோடி இனமக்களில் ஐரோப்பாவில் வாழும் ஜிப்ஸி இனமக்கள் முக்கியமானவர்கள். இசையில் அதிக ஈடுபாட்டோடு வாழும் இவர்களின் இசை ஐரோப்பியமக்கள் மத்தியில் அதிகளவு பரவியுள்ளதுடன், அதன் நீட்சி தெற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் வரை செல்கிறது.
நாட்டுப்புற இசையின் தாக்கம் அதிகமுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக வாழும் இவர்களின் இசை மிகவும் பிரபலம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக ஹங்கேரி நாட்டு ஜிப்ஸி இசை "ஹங்கேரிய-ஜிப்சி பாணி" எனப்புகழ் பெற்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவியது.
குறிப்பாக , கஃபேக்கள், உணவகங்கள் மற்றும் கச்சேரி அரங்கம் போன்ற முறைசாரா அமைப்புகளில் எல்லாம்புகழ்பெற்றது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இசை என்பது ஹம்கேரிய நாட்டுப்புற இசையைச் சார்ந்தது; இசையை இசைப்பவர்களோ இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜிப்சி இசைக்கலைஞர்களாகவும் அதன் முதன்மையான கலைஞர்களாகவும் இருந்தனர். இதனால் அவர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்பவும், அதைக்கேட்கும் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ற விதத்திலும் இரண்டையும் இணைத்து இசைத்து வந்தனர். "கீழைத்தேய சாயல் " கொண்ட ஜிப்சியின் வலிமையான உருவம் - உணர்ச்சிமிக்கதாகவும், கலைநயமிக்கதாகவும், மண் சார்ந்ததாகவும் மற்றும் மிகவும் உயர்ந்த, நவீன ஜெர்மன்- ஆஸ்திரிய செவ்வியல் இசைக்கு மாறுபட்டதாகவும் இருந்தது.
18நூற்றாண்டில் தங்களுக்கென தேசிய இசை உருவாக்க முனைந்த ஹங்கேரிய இசை வல்லுநர்கள், படிப்பறிவற்ற நாடோடிமக்களான ஜிப்ஸி இனமக்களால் பயன்படுத்தப்பட்டு அதிக புகழ்பெற்ற, இனிய ஹங்கேரிய இசையை பற்றிச் சிந்தித்தார்கள். ஜிப்ஸி இனமக்கள் இந்திய இசை போல வாசிப்பது அவர்களை சங்கடப்படுத்தியது. இருந்தாலும் மக்களிடம் அதிகமாகப் புகழ் பெற்றதால் அதை அதிகார உயர்மட்டத்தின் அங்கீகாரம் பெற வைக்கவும், செவ்வியலிசையின் உச்சமாகக் கருதப்பட்ட ஆஸ்திரிய - ஜேர்மன் அரங்குகளில் அரங்கேற்றுவதற்கேற்பவும் சிந்தித்தனர்.
பலவிதமான நிலங்களில் பயணம் செய்த நாடோடிமக்கள் கலாச்சாரப் பரிவர்த்தனைகளுக்கு வழி வகுத்திருக்கின்றனர் என்பதை உலகெங்கும்காண முடியும். நாடோடி மக்களின் பங்களிப்பை உதாசீனம் செய்து எந்த ஓர் கலாச்சாரப்பெருமையையும் யாரும் பேசிவிட முடியாது. நிலத்துடனும் நேரடியான உறவைக்க கொண்டிருந்தவர்கள் என்ற வகையில் இயல்பாகவே இசைக்கு உரிய மக்களாக அவர்களே வருவது தவிர்க்க முடியாததுமாக உள்ளது.
இதைப்போன்றதொரு நிலையை நாம் இந்தியாவுக்கு பொருத்தினால் சங்க இலக்கியத்திற்கும் இது பொருந்துவதைக்காணலாம். சங்க இலக்கியம் என்பது “வாய்மொழிப்பாடல் மரபு புலவர் மரபானதே சங்க இலக்கியம் “ என்பார் பேராசிரியர் கைலாசபதி.
தமிழ் நிலத்தில், தமது நாடோடி வாழக்கையை அமைத்து வாழ்ந்தவர்கள் பாணர்கள். இவர்கள் பிறநாடுகளிலிலுள்ள நாடோடிமக்களைப் போலவே ஆடல், பாடல்களால் மக்களை மகிழ்விப்பவர்களாக இருந்தனர். அவர்கள் பலவிதமான நிலப்பகுதிக்குள்ளும் பயணம் செய்தார்கள். தாம் காணும் நிலப்பகுதிகளை மட்டுமல்ல, அங்கு வாழும் மக்கள் பற்றியும், அவர்களின் வாழிடங்கள், தொழில்கள்,அவர்களது உணர்வுகள் என பன்னிலைகளையும் தமது கவிதைகளிலும் பாடினர். இதற்கு சான்று பகர்பவை சங்க இலக்கியங்கள்! அவர்கள் குறவர் ,பரதவர், அரசர் முதலான அனைத்துவகை மாந்தர்தம் வாழ்விலும் கவிதையைக் கண்டார்கள்.தாம் சென்ற இடத்து நிலவர்ணனைகளையும் எழுதி வைத்தார்கள்.
பாணர்களும்வீரநிலைகாலமும்
ஐவகை நிலங்களிலும் சுதந்திரமாக பயணம் செய்தவர்கள் பாணர்கள். அரசர்கள் , நிலஉடமையாளர்கள் , சாதாரண குடிமக்கள் என சகல மட்டத்திலும் பாணர்கள் உறவை பேணி, மன்னர்களிடம் நட்பு பாராட்டியும், பரிசில்களும் பெற்றும் வந்தனர்.
சங்க இலக்கியம், திணைகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியம். ஐந்து திணைகளில் வாழ்ந்த மக்களில் நிலையாக வாழ்ந்த மக்களும், நாடோடி வாழ்வை மேற்கொண்ட மக்களும் அடங்குகின்றனர். நாடோடிவாழ்வை மேற்கொண்ட மக்கள் பிரிவில் பாணர்கள் அடங்குகின்றனர். பாணர்கள் பற்றி பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை போன்ற இலக்கியங்கள் அதிகம் பேசுகின்றன. ஆற்றுப்படை இலக்கியங்கள் இனவரைவியல் பனுவல்கள் என்பார் பக்தவத்சலபாரதி.
படிநிலைகளினூடே வளர்ந்த மனித சமூகத்தில் மிகப்பழங்காலத்திலேயே கி.மு. 9000 வருடங்களுக்கு முன்னரே நாடோடி பண்பாடு தொடங்கிவிட்டது. அது ஆயர்நாடோடி [ Pastoral Nomadism ] சமூகமாகவும் ஆயரற்ற [ Non Pastoral Nomadism ] சமூகமாகவும் இருந்தது
பலவிதமான நாடோடிகள் சுதந்திரமாக உலாவிய மத்திய ஆசியப்பகுதியான துருக்கிஸ்தான் பகுதியில் பல நாடோடியினங்களின் கலப்பின் விளைவுகள் இசையிலும் பிரதிபலித்தன. சைபீரிய மங்கோலிய நாடோடிகளும் , துருக்கிய நாடோடிகளும் வாழும் பகுதிகளும் துர்க்மெனிஸ்தான் பரந்த புல்வெளிகளும், கஜகஸ்தான் பாலைவனங்கள், சைபீரியன் டைகா காடுகள் என பரந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த பாரம்பரிய பழங்குடி நாடோடிகள் வாழ்வு இனக்கலப்பிற்கும், மொழி மற்றும் இசைக்கலப்பிற்கும் வழி வகுத்தன..
உஸ்பெகிஸ்தான் [ Uzbekistan ] தஜிகிஸ்தான் [ Tajikistan ] கிர்கிஸ்தான் [ Kyrgyzstan ], கஜகஸ்தான்[ Kazakhstan ] துர்க்மெனிஸ்தான் [ Turkmenistan ] போன்ற நாடுகளின் மக்கள் எல்லா பகுதிகளிலும் கலந்து வாழ்கின்றனர். குறிப்பாக உஸ்பெகிஸ்தான் மக்களான உஸ்பெகிஸ் இனமக்கள் சீனாவின் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர். மேற்குறிப்பிட்ட நாடுகளில் வழக்கத்திலுள்ள இசை ஒரே மூல இசையில் வந்ததும் அதன் தொடர்ச்சி இன்று வரையும் காணப்படுகிறது.
ரஷ்ய மாநிலங்களில் ஒன்றாக இருந்த துர்கிஸ்தான்மக்களின் பாரம்பரிய இசை ரஷ்யப்புரட்சிக்குப் பின் [ 1920 - 1991 வரை ] நல்ல மாற்றங்களை உள்வாங்கி, அதன் பாரம்பரிய இசை தொடர்ந்து பராமரித்தும் வந்துள்ளது.
அது மட்டுமல்லதுருக்கியமகம் [ Makam ] இசையின் பாரம்பரிய கூறுகளையும் தன்னகத்தே கொண்ட துர்க் இசையாக உள்ளது. துருக்கிய செவ்வியல் இசையாகக் கருதப்படும் இந்த இசை அரேபிய இசையான மகம் [ MAQAM ] இசையிலிருந்து தாக்கம் பெற்றது என்பதும், அரேபிய இசையே கிரேக்க இசையிலிருந்து எடுக்கப்பட்டது என்பதும் வரலாறு.
இன்றுவரை நாடோடிகளின் பயணங்கள் தொடர்வதும் இசையில் அவர்களது பங்களிப்பு முக்கியமானதாகவும், அவர்களது பங்களிப்பது என்பது மறுக்க முடியாததாகவும் உள்ளதை நாம் ஐரோப்பிய சூழலிலும் காணமுடிகிறது.
சங்கஇலக்கியத்தில்பாணர்கள் :
உலகின் பிறபாகங்களில் நாடோடிகள் பயணம் செய்தது போல இந்தியாமுழுமையும் நாடோடிகள் பயணம் செய்தார்கள்.
அது போலவே தமிழகத்திலும் நாடோடிகள் தங்குதடையின்றி பயணம் செய்தனர். அவர்களை தமிழில் பாணர்கள் என்று அழைத்தனர்.
பாணர்கள் பாடுவதிலும், வாத்தியங்கள் வாசிப்பதிலும், கவிபுனைவதிலும் வல்லவர்களாகவும் இருந்தனர். அப்பாணர்களில் கூத்தர், பொருநர், விறலியர், அவுணர், புலவர் என பல பிரிவுகள் இருந்தன." வாழ்வின் பாங்கிலும் தொழில் இயல்பிலும் அவர்களுக்குள் வேறுபாடுகள் நிலவின " [ கைலாசபதி 136] என்பார் கைலாசபதி.
இவர்களது பாடல்கள் பெரும்பாலும் வாய் மொழிப்பாடல்களாகவே இருந்தன என்றும் பிற்காலத்திலே அவை எழுத்துருப் பெற்றன என்பது அறிஞர்களின் கருத்தாக உள்ளன. சங்க இலக்கியங்கள் குறித்து பேசும் ஆய்வாளர்கள் அவை பழைய நினைவுகளின் தொகுப்பு என்று கருதுகின்றனர். ஒரு புலவரே அல்லது ஒரு குழுவோ அமர்ந்து ஒரு நாளில் அவை எழுதப்பட்டதல்ல என்பார் சங்க இலக்கியத்தை நவீன துறைகளுடன் ஒப்பிட்டு ஆய்ந்து வரும் ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்னன்.
சங்க காலத்துப் பாணர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். யாழ் மீட்டிப் பாடுவதில்வல்லவர்களாகவும் இருந்தனர். நான்கு முக்கிய குடிகள் இல்லாது தமிழ்குடிகள் இல்லை என்கிறது புறநானூறு பாடல் ஒன்று.
துடியன், பாணன், பறையன், கடம்பன்என்று
இந்நான்கல்லதுகுடியும்இல்லை; - [புறம்335]
பிறப்பினடிப்படையில் சாதியற்ற சமூகமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் நிலையைக் கூறுகிறது அப்பாடல். சமூக நிலையில் முக்கியத்துவம் பெற்ற பாணர்கள் சாதிமுறை அறிமுகம் பெற்ற பின்னர் தாழ்ந்தவர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். பழங்காலத்தில் மன்னர்களிடமும் , நிலக்கிழார்களிடமும் செல்வாக்கும், பரிசுகளும் பெற்ற இவர்கள் பசி, பட்டினியுடனும் அலைந்ததாக பாடல்கள் கூறுகின்றன
.
பாணனின் மனைவி பாடினி, பாணிச்சி என அழைக்கப்பட்டாள். இவர்களுடன் கூத்தர், விறலியர், கொடியர், வயிரியர், கண்ணுளார், அகவுநர், புலவர் போன்றவர்களும் ஒரே வகையான தொழிலில் வெவ்வேறு பங்கை வகித்தனர்.
பொருநர்என்பவர்கள் பாட்டுக்காரர்கள் என்றும் இவர்கள் போர்வீரர்களுடன் போர்க்களம் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியதாகவும், அரசர்களின் போர்க்கொடைகள் குறித்து போற்றுவதும், போர்க்காலங்களில் போர்வீரர்கள் போல தோற்றமளிப்பதும், உழவுக்காலங்களில் உழவர்கள் போல உடுத்தவும் பாடவும் செய்தனர். அரசர்களிடம் இவர்கள் காட்டிய இணக்கம் போரிலும் பரிவாரப்பகுதியாக இருக்கச் செய்ததுடன் இவர்கள் " போர்பாணி " எனவும் அழைக்கப்பட்டனர். ஆனாலும் இவர்கள் பாதுகாப்பும், வசதியும் பெற்றிருக்காமல் அலைந்து திரியும் வாழ்க்கை நடாத்தினர். அதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் திருவிழாக்களில் கலந்து தம் வாழ்வை நடாத்தினர். கூட்டமாக வாழ்ந்த இவர்கள் பறை வாசித்து பாடல்கள் பாடி வந்தனர்.
கூத்தர் பாடலுடன் ஆடவும் செய்தனர். அது போலவே விறலியரும் ஆடல், பாடலில் பங்கு கொண்டனர்.அதுமட்டுமல்ல பின்னர் நடக்கப்போகும் சம்பவங்களை முன்னரே
[ வருவதுரைக்கும் திறமை ] அனுமானித்துக் கூறும் திறமைமிக்கவர்களாகவும் பாணர்கள் விளங்கினர். இத்தகைய தன்மைகளால் சாதாரண மக்கள் தொடங்கி மன்னர்கள் வரையிலாக செல்வாக்கு பெற்றிருந்தனர். மன்னர்களுடன் நெருக்கமாக இருந்த பாணர்கள் மன்னர்களின் தூதுவர்களாகவும் விளங்கினர் என்பதை சங்க இலக்கியம் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
ஊருக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் [ உப்பு, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, தங்கம், பிற உலோகங்கள், ஜவுளி ] , வெளியிலிருந்து வரும் பிற பொருட்களுடன் கலைத்தேவைகளும் வெளியிலிருந்து கிடைத்தன. திணைக்குடியினரின் வாழ்வு வெளியிலிருந்து வந்து சென்ற கலைஞர்களாலும் முழுமை பெற்றது. பாணர்கள் ஊரூராகச் சென்றதையும் பலதேசங்கள் கடந்து சென்றதையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
இவர்களது படைப்புக்கள் ஆடல், பாடல், கூத்து என " பல்லிசை பாணர்களின் நிகழ்த்துக்கோவை " [ Polycreatean symposia ] யாக அமைந்தன. இசைக்கருவிகள் பல இயைந்து நிகழ்த்தும் முறையானது அக்காலத்தில் " ஆமந்திரிகை " எனப்பட்டது. [ சிலப்பதிகாரம் -அரங்கேற்றுக்காதை 138 -142 ]
இச்சங்கப்பாடல்கள் என்பது வழிவழியாக அறிந்து கொண்ட செய்திகள் மூலம் அறிந்தவர்கள் தொகுத்தவையே என்பது அறிஞர்களின் கருத்து. அதற்கு வாய்மொழிப்பாடல்கள் பெரிதும் உதவிருக்கிறது. வாய்மொழிப்பாடல்களின் முக்கியத்துவத்தை கலாயோகி ஆனந்தகுமாரசாமி பின்வருமாறு கூறுவார்.
“ அவ்வளவாக எழுத்துப் பழக்கமில்லாத வாய்மொழியையே பயன்படுத்துகின்ற மக்களிடையே பாட்டினைக் [கவிதை ] குறித்த உயர்மதிப்பும், அதை புனையும் ஆற்றலும் இயற்கையாக இருந்தன என்று கூறப்படுகின்றது.”
சங்க இலக்கியம் பல்வகையான பாணர் சமூகத்தாரைக் காட்டுகிறது. சங்ககாலம் என்றழைக்கப்படும் வீரயுகக்க காலத்தில் நாடோடிப் பாடல்களாகவும் பல்வேறு கலைஞர்களாகவும் காணப்பட்டவர்கள் வாய்மொழி மரபில் தோய்ந்தவர்களாகவே இருந்துள்ளனர்.
சேண் விலங்கு நல்லிசை நிறீ இ
நாநவில் புலவர் வாயுளனானே - [ புறம் 262 ]
நல்லோர் குழீ இய நாநவில் அவையத்து [ மலைபடுகடாம் - 75 ]
எனும் சங்கப்பாடலடிகள் இந்த நாடோடிப் பாடகர் மரபினை வாய்மொழி மரபாகக் காட்டும் சான்றுகளாகும். [ பக்கவத்சலபாரதி - பாணர் இனவரைவியல் - பக்கம் 8]
சங்க இலக்கியம் ஐந்து திணைக்களத்தில் வாழ்ந்த மக்களை நிலையாக வாழ்ந்த குடிகள் , நிலைகுடி எனவும் [ Settle People ], நாடோடி வாழ்க்கை வாழ்ந்த குடிகள் அலைகுடிஎனவும்
[ Nomadic People ] என இரண்டாக காட்டுகிறது. நாடோடி மக்கள் சார்ந்த இலக்கியமாக அதற்கென தனியே இலக்கியங்களையும் காட்டுகிறது.
நாடோடி மக்கள் சார்ந்த இலக்கியமாக பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை[ மலைபடுகடாம் ] ஆகிய நான்கும் பாணர் சமூகம் சார்ந்தவை. ஆற்றுப்படை இலக்கியங்கள் இனவரைவியல் பனுவல்கள் என்பார் பக்தவத்சலபாரதி.
வீரயுகக்காலத்தில் போர்க்களத்தில் பலியான வீரர்கள் பற்றிய பாடல்கள் " பரணி இலக்கியம் " ஆகியது. " மண் திரிந்த நிலனும் " என்ற புறநானூற்றுப்பாடல் அந்தாதி என்ற தனித்துவமான உத்தியைப் புலவர்கள் தந்தனர். கலிங்கத்துப்பரணி தோற்றம் பெற்றது.
பலவகையான சிற்றிலக்கிய வகைகளுக்கு காரணமான புறநானூற்றின் உலகளாவிய நோக்கு குறிப்பிடத்தக்கது. இனம், மொழி, மதம், சாதி கடந்த நோக்கு அதில் உண்டு. மனிதநேயம், மனிதகுலம் ஒன்றே என்று வற்புறுத்துகின்ற எண்ணம் புறநானூற்று பாடல்களிலே உண்டு.
தமிழ் பரப்பின் திசையெங்கும் பயணம் செய்த பாணர்கள் பல்வகை மக்களுடனும் தொடர்பு வைத்திருந்தததும், தொடர்ச்சியான பயணங்களாலும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற மானிடக்குரல் ஏழயிற்று என்பதும் மானிடம் சார்ந்த மிகச் சிறப்பான, உயர்வான கருத்து உருவாக வழி சமைத்தது என்பது ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.
மனிதர்கள் ஓர் குழுவாக வாழும் போது அது ஓர் இனக்குழு சமூகம் எனப்படுகிறது. தமது பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும் இனக்குழு தாம் வாழும் நிலம், பேசுகின்ற மொழி, வழிபாடு , பழக்க வழக்கங்களையும் தமது கலைகளிலும் பேணி வந்துள்ளனர். அறிவு பெருகப் பெருக அதில் அழகுணர்ச்சிகளையும் வளர்த்தனர். அவரவர் நிலம் சார்ந்து கலைகளும் தனித்துவம் பெற்று வளர்ந்தன.
ஐந்து நிலத்திலும் வாழ்ந்த மக்கள் திணைநிலை மக்கள் வாழ்வு நிலையில் இசைக்கருவிகளோடும் வாழ்ந்தனர். - [ ஆய்வாளர் கலைவாணி ]
சங்க காலத்தை வீரயுக இலக்கியங்கள் என்று கூறுகின்றனர். அவை 2381 பாடல்களைக் கொண்ட தொகுப்பாக உள்ளது. பாடல்கள் பாடுவதில் அகலவன், அகவர், இயவர், கலப்பையர், கண்ணுளார், கானவர், குறவர், கோவலர், பரதவர், புலையர், மள்ளர், எயினர் என பலரும் இருந்ததை சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
அகலவன்என்போர் போர்க்களத்தை வாழ்த்திப்பாடுவதும், போர் நிகழ்வுகளை மக்கள் முன் எடுத்து இயம்புவதுடன் மக்களை வீர் உணர்வு கொள்ளவும் வைத்தனர். இவர்களை போலவே அகவர் என்போரும் வீரமரபைப் பாடும் வேலையை செய்தனர். அதுமட்டுமல்ல தமக்குரிய
பண்களை மட்டுமல்ல பிற நிலத்துப் பண்களையும் பாடினர். இவர்கள் முல்லைத்திணை உழவர்களாகவும் கருதப்பட்டனர்.
இயவர் என்பவர் பாடுவதுடன் குழல் போன்ற இசைக்கருவிகளை மீட்டுவோராகவும் இருந்தனர். இவர்கள் நீர்த்தாரை சார்ந்த சோலையில் வசிப்பதுடன் கள்ளுண்டு வயல்களில் நெற்கதிர்களை கொத்த வரும் பறவையினங்களை விரட்டும் உழவர்களாகவும் கருதப்பட்டனர்.
கலப்பையர்என்போர் புலம்பெயர் பாணர்களில் ஒருபிரிவினராகவும், பைகளில் இசைக்கருவிகளை கட்டிச் செல்லும் வழமையுடையவர்களாகவும் இருந்தனர்.
எயினர் என்பவர் பாலை நிலமக்கள். காளியை வழிபடுபவர்கள். துடி இசை முழங்க வேல் கொண்டு கொலைகளிலும் ஈடுபட்டதாகவும் சில பாடல்கள் கூறுகின்றன.
கானவர்என்போர் குறிஞ்சி நிலத் தலைமக்கள் குறிஞ்சிப்பண்ணையும், மருதப்பண்ணையும் பாடுபவர். இசையறிவு மிக்கவர்கள். குறவர் மலைநிலத் தலைமக்கள்.தேன், கிழங்கு எடுப்பது தொழில். குறிஞ்சி நிலத்துக்குரிய தெண்டகப்பறை வாசிப்பவர்.
கோவலர்என்போர் முல்லை நில தலைமக்கள். ஆநிரை வளர்ப்பு, மேய்ப்பு செய்யும் போது இசைக்கருவிகள் வாசிப்பார். இசையறிவு மிக்கவர்கள். குழல் இசைக்கருவி இவர்களுடன் இணைத்து பேசப்படுகிறது. பசுக்களை மேய்க்க குழல் ஊதும் போது மான்களும் கேட்கும். யாழ், குழல், முழவு போன்ற கருவிகளை இசைப்பவர். யாழில் பண்ணை நிறுத்தி பாடும் புலமை மிக்கவர்கள். இவர்களுடன் புலையர், மறவர், வினைஞர், அகவன்மார் போன்ற மக்களும் இசையில் வல்லமை பெற்றிருந்தனர்.
அதுமட்டுமல்ல அப்பாணர்கள் வாசித்த யாழ் பற்றிய விபரங்களையும் அந்த இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பெரும்பணாற்றுப்படையில் பேரியாழ் வாசிப்பவர் பற்றியும் , சிறுபாணாற்றுப்படையில் சீறியாழ் வாசிப்பவர் பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன.
நிலங்களை ஐந்தாக வகுத்த பழந்தமிழர்கள் அதற்குரிய தனித்தனி பண்களையும் வகுத்தளித்தனர்.
நிலப்பாகுபாடு - நிலத்திற்குரியபண்கள் - இன்றையராகம்
1. முல்லை - முல்லைப்பாணி - மோகனம்
2. குறிஞ்சி - குறிஞ்சிப்பாணி - மத்யமாவதி
3. மருதம் - மருதப்பாணி - சுத்ததன்யாசி
4. நெய்தல் - நெய்தலபாணி - ஹிந்தோளம்
5. பாலை - பாலைப்பாணி - சுத்தசாவேரி
சங்க இலக்கியங்களில் அந்தந்த நிலங்களுக்குரிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகளும் காணக்கைடைக்கின்றன.
குறிஞ்சி - சேயோன்
முல்லை - மாயோன்
மருதம் - வேந்தன்
நெய்தல் - வருணன்
பாலை - தெய்வம்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே - [ தொல்; பொருள் ]
பாணர்களின் தெய்வம் மாதங்கி ஆகும். அது போலவே பீமியல் என்பது கிரேக்கர்களின் பாணர்களுக்குரிய தெய்வம்.
இதே போலவே கிரேக்க வீரயுகக்காலத்தில் கிரேக்க பாடகர்கள் நாடோடிவாழ்க்கை வந்தாகவும் , அரசர்களுடன் இணக்கம் காட்டியதாகவும், வருவதுரைக்கும் திறமையும் கொண்டிருந்தனர். டிரோஜன் காலத்துப் போர்க்களங்களில் பாணர்கள் நேரடியாக பார்த்தது போல பாடல் இசைத்ததாகவும் அதை பெருங்கவி ஹோமர் பாராட்டியதாகவும் கிரேக்க நூல்கள் கூறுவதாக பேராசிரியர் க.கைலாசபதிகூறுவார். [ வீரயுகப்பாடல்கள் ]
தமிழர் வீரயுகப்பாடல்களுக்கும் கிரேக்க, ஜேர்மனிய மக்களின் வீரயுகத்திற்குமான ஒற்றுமையுண்டு என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கூறுகின்றார்கள். ஜெர்மன் வீரநிலை துறக்கமாகக் கருதப்படும் வல்ஹல்லா [ Val - Halla] விற்கும் நெருங்கிய தொடர்புண்டு. போரில் இறந்த வீரர்கள் சதையும், குருதியும் கொண்டு உலாவும் உலகமாகவும், இன்பமும், வீரமும் நிறைந்த உலகமாகவும் துறக்கமும் [ சுவர்க்கம்] கொண்டதாக வல்ஹல்லா கருதப்படுகிறது. இதே தன்மையை சுமேரிய, எகிப்திய, கிரேக்கமக்களிடமும் காணப்ப்பட்டன.
தமிழர்கள் வீரமரணம் எய்திய பின்னர் அவர்கள் அடையும் இடம் “ துறக்கம்” எனப்படும். இதே போல வல்ஹல்லா மேலைநாடான கிரேக்க வீரயுக இலக்கியங்களிலும் கூறப்படுகிறது. வல்ஹல்லா என்றால் போரில் இறந்தவர்களின் மண்டபம் ஆகும். கோதிக் [ Gothic ] பழம் மரபுக்கதைகளில் இம்மண்டபம் பற்றிய விபரம் உள்ளன. ஸ்கண்டிநேவியன் நாடுகளில் புகழ் பெற்ற இக்கதைகள் இன்றும் சிறுவர் இலக்கியங்களில் கூட காண முடியும். வல்ஹல்லாவின் தலைவன் ஒடின் [ Odin ]. கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னர் இவர் தான் ஸ்கண்டிநேவிய மக்களின் கடவுள் ஆகும்.
பல்வகை நிலங்களிலும் சுற்றிய அலைக்குடிகளாக விளங்கிய பாணர்கள் பாடியும், ஆடியும் மக்களை கவர்ந்ததுடன், தமது வாழ்வையொட்டிய நிகழ்வு நினைவுகளை வாய்மொழிமரபாக தந்தது மட்டுமல்ல, பண்டைச்சமூகத்தின் நிகழத்துக்கலைகளை வளரத்து பரவலாக்கியத்துடன், கலாச்சாரப்பரிவர்த்தனைகளுக்கும் காரணமானார்கள்.
இதைப்போலவே பண்டைத் தமிழர்கள் பிறநாடுகளுடான வியக்கத்தக்க வர்த்தகத் தொடர்புகளாலும் மிகப்பழங்காலத்திலேயே பல்லினமக்கள் இனிதுறைந்து நட்பு பாராட்டினர் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம். இதன் மூலம் கலாச்சார பரிவர்த்தனைகள் நிகழ்ந்ததை இசையிலும் காண்கிறோம்.
[ தொடரும் ]
You must be logged in to post a comment Login