Recent Comments

    செங்கோட்டை சிங்கம் வாஞ்சி நாதன்

    காலா

    செங்கோட்டை சிங்கம் , தென்னாட்டு பகத் சிங், சுதந்திர போராளி என பல அடையாளங்களுடன் கொண்டாப்படுபவர் வாஞ்சி நாதன். யாரிந்த வாஞ்சி என்று பார்ப்போம். 

    நாட்டின் தெற்கு மூலையில் தென்காசி அருகே செங்கோட்டை என்ற  ஊரில் ஒரு ஏழை  பிராமண குடும்பத்தில் 1886 ஆம் ஆண்டு பிறந்தார்.  அடக்கமான  மிகவும்  கூச்ச சுபாவமுள்ளவர்  வாஞ்சிநாதன் என்கின்றனர். 

    திருவனந்தபுரத்தில் ’மூலம் திருநாள்  மகாராஜா’ கல்லூரியில்  பட்டப் படிப்பை முடிக்கிறார்.  பின்பு  பரோடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறுகிறார்.   கல்லூரியில் படிக்கும்போதே பொன்னம்மாளை திருமணம் செய்து கொண்டார்.  கல்லூரி படிப்பு முடித்த பிறகு, திருவிதாங்கூர் வனத்துறையில் எழுத்தர் பதவி கிடைக்கிறது. வாஞ்சியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானவர்கள் என்பதால் அரசு உத்தியோகத்தில் இருந்த வாஞ்சியை நம்பியே அந்த குடும்பம் இருக்கிறது

    இப்படி இருக்கையில் 1911 வாக்கில் தனது வேலையில் இருந்து மூன்று மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு நீலகண்ட பிரம்மச்சாரியை சந்திக்கும் நோக்கத்துடன் புதுவை வந்து சேர்கிறார் வாஞ்சி. 

    யாரிந்த நீலகண்ட பிரம்மச்சாரி என்றால்  சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் ஏலை குடும்பத்தில் முதல் மகனாக  1889ம் வருடம் பிறந்தவர். இவருக்கு இரண்டு தம்பிகள்  ஐந்து  தங்கைகள் என  பெரிய குடும்பத்தில் வறுமையில் வாழ்ந்து வந்த நீலகண்டன்;  4ம் பாரம் எனும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வேளையில்  ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்த ஒரு  சத்திரத்தில் தங்க ஆரம்பிக்கிறார்.  பின்பு சென்னைப் பட்டணம் வந்து திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் டி.யு.சி.எஸ்.சில் பணிபுரிகிறா ர். 

    1905ல் லார்டு கர்சான் வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்த காலமது. நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசுகிறார்.  அவற்றைக் கேட்டு  புரட்சி இளைஞராக  மாறினவர்களில் ஒருவர்  நீலகண்டன் பிரம்ம்மசாரி. வங்காளத்து புரட்சி வீரரும் தேசபக்தருமான சந்திரகாந்த் சக்ரபர்த்தி என்பவர் சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்து வைக்கிறார். தனது புரட்சி இயக்கத்து ஏற்றவராகக் கருதியதால் அவர் நீலகண்டனைத் தன்னோடு இணைத்துக் கொண்டு செயலாற்றி வருகிறார் சந்திரகாந்த். தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியைஎடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார் நீலகண்டன் பிரம்ம்மசாரி.

    1908ல் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திரகாந்த் சக்கரபர்த்தியின் இயக்கமான ‘அபினவபாரத  இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். ரகசியக் கூட்டங்களை நடத்துகிறார். இதில் பல இளைஞர்கள் சேர்ந்தனர். இதில் ஒருவர்  பாரதியாரின் உறவினர் சங்கரகிருஷ்ணனும்  இருந்தார்.   இவர்  வாஞ்சியின் மச்சுனனும்  ஆவார். இவரே  வாஞ்சியை பிரம்மசாரிக்கு அறிமுகப்படுத்துகிறார். 

    பிற்பாடு நீலகண்ட பிரம்மச்சாரி இந்தியசுதந்திரத்துக்காக  பாரதமாதாபுரட்சிஇயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாராகிறார். இதில்  வாஞ்சியும் .உறுப்பினர் ஆகுகிறார் . நீலகண்ட பிரம்மச்சாரியின்  வாழ்க்கையின் பெரும்பகுதி  இந்தியாவின் பல்வேறு பகுதிகளிருந்த சிறைகளில் கழிகிறது.. 

    பாரதியார் சென்னையிலிருந்து பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த  புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த போது, நீலகண்டனும் உடன் செல்கிறார். 1907ல் சென்னைக்கு  வந்திருந்த தூத்துக்குடி தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளையை நீலகண்டனுக்கு பாரதியார் அறிமுகம் செய்து வைக்கிறார். அவரது சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுத் தருவதாக நீலகண்டன் உறுதியளிக்கிறார். 

     பிற்பாடு  வ.உ.சியின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறைவாகப் புதுச்சேரியில் வந்து சேர்கிறார். இவர் வ.உ.சிக்குத் தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுத்துக் கொடுக்கிறார். ஆஷ் கொலைசெய்யப்படும் போது தான் இங்கிருந்தால் தன்னையும் அதில் பிணைத்து விடுவார்கள் என்று எண்ணி வடக்கே காசிக்குச் சென்று அங்கு ஓர் தேசபக்தர் வீட்டில் தங்கி இருக்கிறார்  நீலகண்டன். 

    இருப்பினும் வன இலாகாவில் வேலை பார்த்து வந்த  வாஞ்சிக்கு,  தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதமும் போலீசிடம் சிக்கியதால், அது பிற்பாடு ஒரு சான்றாக மாறி  ஆஷ் துரை கொலையில் மூளையாக செயல்பட்டவர் என்று  குற்றம் சாட்டப்பட்டு 7 வருடம் சிறை தண்டனை பெறுகிறார் நீலகண்ட பிரம்மாசாரி  . 

    இந்த  காலயளவில் தான் நீலகண்ட பிரம்மசாரியை சந்திக்க புதுச்சேரிக்கு  வந்து சேர்கிறார் வாஞ்சி.  அந்த சமயத்தில் எதேச்சையாக வ.வே.சு ஐயரை வாஞ்சிநாதன் சந்திக்கிறார். 1881-ம் ஆண்டில் திருச்சி வரகனேரியில் பிறந்த வ.வே.சுப்பிரமணியம் ஐயர், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்று , சென்னை மாகாணத்தின் முதல் மாணவராக தேர்வானவர். வழக்கறிஞராக பணிபுரிந்த வ.வே.சு. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர். 1907-ம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற லண்டன் சென்று  இந்தியா ஹவுசில் தங்கியிருந்தபோது, வீர சவார்க்கர் நடத்திய அபிநவபாரத்சங்கத்தில்தம்மை உறுப்பினராக்கிக் கொண்வர். இலக்கியச் செழுமை கொண்டவரான  ஐயர், அங்கிருந்தபடியே பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு செய்திகளை அனுப்பி வைத்து வருகிறார். அப்போது கர்சான் லில்லி படுகொலை வழக்கில் வ.வே.சு. ஐயருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வீரசாவர்க்கர் அறிவுறுத்தலின்படி மாறுவேடத்தில் இந்தியாவுக்கு தப்பி வந்த வ.வே.சு. ஐயர்; புதுச்சேரியில் பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இணைந்து கொள்கிறார்.

    .ஐயரின் கொள்கைகள் வாஞ்சியை கவர்ந்தது. முதல் சந்திப்பிலேயே திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை  சுட்டுக் கொல்ல தகுதியான நபர் வாஞ்சிநாதன் என்பதை வ.வே.சு ஐயர் முடிவு செய்து விட்டார் . தன்னுடைய கொள்கைகளின் அடிப்படையில். வாஞ்சியைத் தயார் செய்கிறார். அதன் பிறகு புதுவையிலிருந்து  செங்கோட்டைக்குத் திரும்பிய வாஞ்சி, தன் நண்பர்கள் துணையுடன் திருநெல்வேலிக்குச் சென்று ஆஷ் துரையை உளவு பார்க்கச் ஆரம்பிக்கிறார். ஒருவார இடைவெளியில் தற்செயலாக சந்தித்த, ஒரு  திருமணமான இளைஞனுக்கு 20 நாள் தொடர் துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுத்து  உயிர்த் தியாகம் செய்ய வைத்த சாதனையாளர் தான், வ.வே.சு.ஐயர் என்றால் மிகையாகாது. 

    ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. சங்கரகிருஷ்ணனுக்கு 22. 1912 பிப்ரவரி 12ல் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை.  விசாரணையின்போது சென்னையிலும் தண்டனை காலத்தைக் கோவை சிறையிலும் கழித்தார்.

    தனது வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கையில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் மாநிலத்தில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமிகளாக வாழ்ந்து தனது 88ஆவது வயதில் 1978ம்  வருடம் காலமானார்  நீலகண்ட பிரம்மாசாரி.

    வ.வே.சு.ஐயரோ மகாத்மா காந்தியை 1919-ல் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து அகிம்சாவாதியாக மாறினார். காங்கிரஸ் கட்சியின் நிதி உதவியுடன் 1922-ம் ஆண்டு சேரன்மாதேவியில் குருகுலத்தை நடத்தி வந்தார்.  1925-ம் ஆண்டு பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு குருகுல மாணவர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் தன் மகள் சுபத்திராவை , காப்பாற்ற முயன்ற போது சுழலில் சிக்கினார். இருவரது உடல்களுமே கிடைக்கவில்லை. வ.வே.சு. ஐயர் மறைந்தபோது அவருக்கு வயது 44. 

    வாஞ்சி குடும்பம் என்னவானது என தேடும் போது வாரிசு அற்ற வாஞ்சி நாதன் மனைவி தனது தங்கை வீட்டில் காலத்தை கழித்ததுடன் 1967ல் ஒரு அடையாளமும் பெறாமலே மறைந்தார் என்ற தகவல் மட்டுமே உள்ளது. . 

    Postad



    You must be logged in to post a comment Login