Recent Comments

    நடை மெலிந்து நண்ணும் பத்திரிகைகள்

    பெண்ணின் தன் வயிற்றில் உள்ள கருவைக் கலைப்பதற்கான உரிமை குறித்து பல வாதப் பிரதிவாதங்கள் உண்டு. 

    பெண் தனது உடல் குறித்து தானே முடிவு எடுப்பதில் யாரும் தலையிட முடியாது என்பது முதல், கலைக்கப்படும் கரு ஒரு உயிர் என்பதால் அதை கலைப்பது என்பது கொலை என்பதால் அதைத் தடுக்க வேண்டிய உரிமை சமூகத்துக்கோ, அரசுக்கோ உண்டு என்பது வரையிலான வாதங்கள் உண்டு.

    அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் வௌ;வேறான கருத்துக்களை இது குறித்து கொண்டிருந்தன. முற்போக்கு கருத்துள்ள மாநிலங்கள் இதை அனுமதித்தும், பழமைவாத கருத்து மாநிலங்கள் இதை தடுத்தும் என பல்வேறு விதங்களில் இது குறித்தான சட்டங்கள் இருந்தன.

    ரெக்சாஸ் மாநிலத்தில் ஒரு பெண் தன் கருவைக் கலைக்க மாநிலத்தில் அனுமதி இல்லாமையை எதிர்த்து தனது பிரதேச அரச சட்டத்தரணி Wade என்பவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கு அதிஉயர் நீதிமன்றமான சுப்ரீம் கோடு வரை சென்று அளித்த தீர்ப்பு மிகவும் பிரபலமானது.

    1973ல் அளிக்கப்பட்ட அந்த தீர்ப்பின்படி,  பெண்ணுக்கு அதற்கான உரிமை உரிமை உள்ளது. ஆயினும் பெண்ணின் உடல்நலம், கருவின் உயிர் என்பனவும் கருத்துக்கு எடுக்கப்பட வேண்டும்.

    Roe vs Wade எனப்படும் இந்த தீர்ப்பு வழமை போல முழுச் சனத்தொகையையும் அதற்கு ஆதரவானதாகவும் எதிர்ப்பானதாகவும் இரு துருவங்களாக திருப்பி விட்டிருந்தது.

    இதெல்லாம் எண்பதுகளில் ரைம், நியூஸ்வீக் சஞ்சிகைகளைக் கரைத்துக் குடித்ததால் எனக்கு அத்துபடி. 

    ***

    அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதிகளால் நியமிக்கப்படுகின்றனர். நியமிக்கப்பட்ட நீதிபதிகளை எங்கள் நாடுகள் போல நினைத்த மாத்திரத்தில் நீக்கவோ, வேண்டியவர்களை நியமித்து விரும்பியபடி தீர்ப்புகளை திருத்தி எழுதவோ முடியாது.

    அவர்கள் தாங்களாகவே ஓய்வு பெறும் போது, அப்போதுள்ள ஜனாதிபதி அவர்களின் இடத்திற்கு வேறு யாரையும் நியமிக்கலாம்.

    வழமை போல, ஒவ்வொரு ஜனாதிபதியும், தங்கள் கட்சிகளின் கொள்கைகளுக்கு ஆதரவான நீதிபதிகளையே நியமிப்பர். 

    இந்த ஒன்பது நீதிபதிகளும் கலந்தாலோசித்து பெரும்பான்மையினர் வழங்கும் தீர்ப்புகள் அறுதியும் இறுதியும் ஆனவையாக இருக்கும்.

    இப்படி ஒவ்வொரு ஜனாதிபதியும் தங்கள் சார்புக் கொள்கைகள் உள்ளவர்களை நியமித்து தற்போது இந்த கருக்கலைப்பு குறித்த தீர்ப்பு முழுமையாகத் திருத்தி எழுதப்படலாம் என்ற, அந்த நீதிபதிகளில் ஒருவர் எழுதிய இரகசியக் குறிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

    அந்த குறிப்புகள் உண்மை எனவும், அதன் அர்த்தம் தீர்ப்பு மாற்றப்படும் என்பதற்கு உறுதியானது அல்ல என்று நீதிபதிகள் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதும் அது தீர்மானிக்கப்பட்ட ஒன்று தான் என்பதே பரவலான கருத்து.

    இது பற்றி கனடிய தினசரியான குளோப் அன்ட் மெயிலில் நல்லதொரு நீண்ட கட்டுரை வெளிவந்திருந்தது. அதில் தற்போது இந்த குறிப்புகள் வெளியாகியிருந்ததும் அது எதிர்வரும் தேர்தலில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் குறித்தும் எழுதப்பட்டிருந்தது.

    என்னுடைய இரண்டாயிரம் நண்பர்களில் ஒற்றைக் கைவிரலில் எண்ணி விடக் கூடிய நண்பர்களே அதை வாசிக்கக் கூடும் என்றாலும் அதை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள விரும்பியிருந்தேன். 

    ஆனால், எனது கைபேசி பேஸ்புக்கில் தமிழில் சரியாக தட்டச்ச விடாமல் குளறுபடி பண்ணி முரண்டு பிடித்ததால் அதை பகிர முடியவில்லை.

    இவ்வாறான நீண்ட கட்டுரைகளை வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்...

    இலக்கிய ஆர்வலர்களுக்கு பின்நவீனத்துவ கவிதை வாசிக்கப் பிடிப்பது போல!

    (அல்லது பிடிப்பது போல பாவனை செய்வது போல!)

    ஒரு காலத்தில் குளோப் அன்ட் மெயில் முழுநேர வாசகனாக நான் இருந்தேன்.

    சிங்கன் சிங்கிளாக இருந்த காலங்களில் பலவேறு சிங்கிள்களுடன் கூட்டமாக மிங்கிள் பண்ணி வாழ வேண்டியிருந்தது.

    அப்போது நான் மாலை நேர வேலைகாரன்.

    என்னோடு அங்கே வசித்த, ஐயா என்று நான் இன்றும் அன்புடன் அழைத்து காணும் போதெல்லாம் கட்டித் தழுவும், என் நண்பர் தயாபரன் பகல் வேலைக்கு போக முன்னால், அதிகாலையில் குளோப் அன்ட் மெயில் பத்திரிகை டிலிவரி செய்து கொண்டிருந்தார். 

    அப்போது ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பிரதியைக் கொண்டு வந்து வைத்து, வேலைக்கு போவதற்கு முன்னால் என்னைத் தட்டியெழுப்பி முக்கிய செய்தியைச் சொல்லி விட்டுச் செல்வார். 

    பெரிய பெரிய நிறுவனங்கள் ஒன்றையொன்று வாங்கி ஊதிப் பெருத்த காலங்களில்,  கனிப்பொருள் தோண்டி, காட்டு மரப் பொருள் விற்ற நிறுவனம் (Mining and forestry) ஒன்று இன்னொன்றை வாங்கிய செய்தியை என்னைத் தட்டி எழுப்பி சொன்னது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது.

    அப்படி யாருக்குமே சம்பந்தமில்லாத, ஆர்வமில்லாத விடயங்களில் நாங்கள் ஆர்வலர்களாக இருந்தோம். 

    அதன் பின்னால் நான் தூக்கம் கலைந்து, தேநீர் வைத்து பத்திரிகையோடு உட்கார்ந்தால், அது கழியறையிலிருந்து மாலை வேலை வரைக்கும் என்னோடு தொடரும்.

    பத்திரிகை வாசிப்பதற்காகவே வேலைக்கு காரில் போகாமல் பஸ், புகையிரதம் மூலமாக போய் கொண்டிருந்தேன்.

    பின்னர் வேலையிடத்தில் வாசிப்பு தொடரும்.

    குளோப் பத்திரிகை வார நாட்களிலேயே மிகவும் மொத்தமாக இருக்கும்.

    செய்திகள், அரசியல், வாழ்க்கை, பொழுதுபோக்குகள், விளையாட்டு என்று ஒவ்வொன்றும் தனித்தனியாக பிரிக்கக் கூடியதாக அச்சிட்டு எல்லாவற்றையும் ஒன்றாக மடித்திருப்பார்கள்.

    நான் எப்போதுமே முதலில் வாசிப்பது Report on Business. இங்குள்ள பங்குசந்தை, வர்த்தகம், அவை குறித்த சட்டங்கள் என்று பல்வேறு விடயங்கள் இது குறித்த துறைகளில் முக்கியஸ்தர்களுக்கு முக்கியமான விடயங்கள் எல்லாம் விலாவரியாக இருக்கும்.

    இது குறித்து சம்பந்தம் இல்லாத நான் இதையெல்லாம் வாசித்து, எனக்கு இவையெல்லாம் அத்துபடியானதாக இருந்தன.

    செய்திகள், அரசியல் குறித்த முதல் பகுதி கனடிய, அமெரிக்க, சர்வதேச அரசியல் பற்றி இருக்கும்.

    அதன் பின் சினிமா போன்ற பொழுது போக்கு பகுதி, பின்னர் வாழ்வு பற்றிய பகுதி என்றெல்லாம் வாசிப்பேன்.

    ஒருபோதும் விளையாட்டு பகுதியில் என் நேரத்தை வீணாக்கியதில்லை. அதெல்லாம் எனக்கு உண்மையில் சம்பந்தமில்லாத விடயம்.

    குளோப் வார இறுதி இரண்டு நாட்களுக்கும் பொதுவாக ஒரே இதழ் வெளியிடும்.

    அது காலையில் வாசிக்கத் தொடங்கினால் மத்தியானம் சாப்பாட்டு நேரம் ஆகி விடும். 

    இப்படியாக குளோப் அன்ட் மெயில் ஒரு காலத்தில் எனக்கு தீனி போட்டது. 

    பின்னர் நான் ரொறன்ரோ ஸ்டாருக்கு தாவி விட்டேன். அதன் சந்தாதாரனாக வருடக்கணக்கில் இருந்து, வீட்டு வாசல் வினியோகம் செய்த தமிழ் மகனுக்கு கிறிஸ்மஸ் அன்பளிப்பு செய்யும் அளவுக்கு இருந்தேன். 

    அதை வாசிப்பதும் அப்படியே அதே முழு நாள் வேலை தான்.

    அவ்வப்போது இந்த குளோப் அன்ட் மெயிலை பெட்ரோல் நிரப்பு நிலையங்களிலும், வேறு விற்பனை நிலையங்களிலும் இலவசமாக வைப்பார்கள். 

    வேலையிடத்தில் வாசித்தவர்கள் விட்டுச் சென்றிருந்தால், அதைத் தூக்கி வந்து இரவு முழுக்க வாசிப்பதும் உண்டு.

    அதெல்லாம் இணையம் இல்லாத காலம். பத்திரிகையை விட்டால், சஞ்சிகைகள், தொலைக்காட்சி மட்டும் தான்.

    இப்போது இந்த தினசரி பத்திரிகை வாசிப்பு நின்று விட்டது. 

    சந்தாதாரனாக இருந்த ரைம் சஞ்சிகையை ஆங்காங்கே காண்பதுண்டு. நியூஸ்வீக் நிறுத்தப்பட்டு பின்னர் வெளிவந்ததாக கேள்விப்பட்டதுண்டு. றீடர்ஸ் டைஜஸ்ட்டை வைத்தியர்களின் காத்திருப்பு அறையில் கூட காண முடிவதில்லை. 

    பத்திரிகையியலும் இந்த இணைய யுகத்தில் மாறி விட்டது.

    பத்திரிகைகள் வாசிப்போர் குறைந்து எல்லாரும் இணையத்திலேயே செய்திகளை சுடச் சுடப் பெற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். 

    அதுவும் இலவசமாக, கைபேசியில்.

    பத்திரிகைகள் மெலிந்து நலிந்து விட்டன...

    கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன மாதிரி!

    குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்த பத்திரிகைகள் நடை மெலிந்து பல ஊர்களில் நண்ணிக் கொண்டிருக்கின்றன.

    ஒரு காலத்தில் கறுப்பு வெள்ளையாக இருந்த ரொரன்ரோ ஸ்டார் வண்ண அச்சுக்கு மாறிய போது, பெரியதொரு கட்டடத்தைக் கட்டி அச்சகத்தை ஆரம்பித்தது. ஒரு புது யுகமாக வர்ணிக்கப்பட்ட அந்த கதையெல்லாம் மாறி, இப்போது அந்த கட்டடம் கைவிடப்பட்டு, ஸ்டார் பத்திரிகை குளோப் அச்சகத்தில் அச்சிடப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன் வேலையிடத்து சாப்பாட்டு அறையில் யாரோ கவனிப்பாரற்று விட்டுச் சென்றிருந்த குளோப் அன்ட் மெயில் பிரதி ஒன்று கண்ணில் பட்டு தூக்கி வந்தேன். 

    முன்னைய பத்திரிகையின் முதல் பகுதி அளவுக்கே முழுப் பத்திரிகையும் இருந்தது.

    முதல் பகுதியில் செய்தி, அரசியல், வாழ்வு, பொழுதுபோக்கு. எல்லாம் ஒன்றாக!

    பெயரைக் காப்பாற்ற இரண்டாம் பகுதியில் றிப்போட் ஒன் பிசினஸ். அதன் பின் பகுதியில் விளையாட்டு.

    இந்த வாசிப்புகள் எல்லாம் நான் பத்திரிகை தொடங்குவதற்கான காலத்தின் முன்பானது.

    இப்போது கனடாவில் தமிழ் மகன் நிர்வாக பத்திரிகைகள் எல்லாம் வீட்டு நாய் வெளியே போய் வரும் சேறு துடைப்பதற்காக பெரிதும் பயன்படுகின்றன. அவை கூட மெலிந்தே நண்ணுகின்றன.

    ஒரு பத்திரிகையை நடத்துவதற்கு நான் பட்ட அல்லல்கள் மறக்க முடியாதவை. என்னுடைய வாழ்நாளை விழுங்கிக் கொண்ட காலம் அது. 

    இருந்தாலும், ஒரு பத்திரிகையை வெளியிட்டு விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்றும், ஒரு சஞ்சிகையை வெளியிட்டு சமூகத்தை மாற்றியமைக்கலாம் என்றும் நம்புகின்ற தமிழர்களுக்கு என்றைக்கும் குறைவிருந்ததில்லை.

    ஆனால், இன்றைக்கும்  பார்ட்டிகளிலும் இலக்கிய, அரசியல் சந்திப்புகளிலும் காணும் போதெல்லாம் 'தாயகம் மீண்டும் வெளி வர வேண்டும்!' என்று சொல்லும் நண்பர்களுக்கு நான் எதைத் தான் சொல்ல முடியும்?

    பின்னுக்கு பிலாப்பழத்தோடு நிற்பவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர!

    Postad



    You must be logged in to post a comment Login