Recent Comments

    ஜெயந்தீஸனின் 

    ஓர் ரொட்டிக் க(வி)தை

    (ஆம், நீண்ட ஆண்டுகளுக்கு முன் எழுதி எனது ஆவணக் கிடங்கில் தூங்கிக் கொண்டிருந்த க(வி)தை இது. இப்போதுதான் எழுந்திருக்கின்றது)

    ஓர் குடும்பம் 
    மெத்ரோவுக்குள் ஏறியது 
    அது தமிழ்க் குடும்பம் 
    பெண் மெல்லீஸ் 
    ஆண் லைட்டாக மொத்தம் 
    பெண் பாய்க்கைத் திறந்தாள் 
    ஒரு ரொட்டியை எடுத்தாள் 
    சாப்பிட்டாள் 
    ஆணுக்கும் கொடுத்தாள் 
    அவனும் சாப்பிட்டான் 

    நான் இருவரையும் 
    கடைக்கண்ணால் பார்த்தேன் 
    பெண்ணின் சொக்கையில்
    ஓர் மச்சம் 
    கூந்தலில் ஓர் வாடிய பூ 
    உதட்டிலோ சிரிப்பு இல்லை 

    அவள் ரொட்டி சாப்பிட்டாள் 
    ஆண் பெண்ணைப் பார்க்காமல் 
    ரொட்டி சாப்பிட்டான் 
    அடிக்கடி ரொட்டியை எடுத்து 
    மாறி மாறி இருவரும் புசித்தனர் 

    எனக்கும் பசித்தது 
    எனக்கு நாவு ஊறியது 
    நான் பெண்ணையும் ஆணையும் பார்த்தேன் 
    அவர்களோ என்னைப் பார்க்கவில்லை 
    நான் ரகசியமாக 
    பெண்ணின் கையில் உள்ள 
    பிளாஸ்ட்டிக் பாய்க்கை எட்டிப் பார்த்த்தேன் 
    அதற்குள் ரொட்டிகள் கிடந்தன 

    அப்பப்பா! எவ்வளவு ரொட்டிகள்…
    ஒரு ரொட்டியைக் களவெடுக்கலாமா 
    என ஜோசித்தேன் 

    பெண்ணோ ரொட்டியை எடுத்து 
    ஆணுக்கும் பிய்த்துக்கொடுத்து 
    தானும் சாப்பிட்டாள் 

    “அக்கா! எனக்கு ஒரு ரொட்டி!”
    எனக் கேட்க ஓர் ஆசை 
    அண்ணனின் நிழலோ பயப்படுத்தியது 

    ஒரு நிலையத்தில் இருவரும் இறங்கினர் 
    அது எனது நிலையம் அல்ல 
    நானும் இறங்கினேன் 
    நடந்தபடியே ஆணும் பெண்ணும் 
    ரொட்டி சாப்பிட்டபடி செல்ல 
    நானும் அவர்களை ஓர் உளவாளிபோல 
    பின் தொடர்ந்தேன்

    பசியில் பத்தும் மறந்து போயிற்று 
    “அக்கா, எனக்கும் ஒரு ரொட்டி!”
    கேட்டே விட்டேன்
    அவள் எனக்கு ஓர் ரொட்டி தந்தாள் 
    சாப்பிட்டேன், சுவையோ சுவை 

    இன்னொரு ரொட்டி கேட்டேன் 
    அவள் மறுத்தாள் 
    “ஏன்?”  என்று கேட்டேன்
    “இந்த ரொட்டிகள் விற்பனைக்கானவை 
    எனக்கும் அவருக்கும் வேலை இல்லை 
    வீட்டில் ரொட்டி சுட்டு 
    மெத்ரோவில் விற்கின்றோம் 
    இன்று மெத்ரோவில் நின்றோம் 
    எவரும் வாங்கவில்லை 
    வீடு திரும்புகின்றோம் 
    நாளை வருவோம்.”
    “நீங்கள் எனக்குத்தந்த ரொட்டி 
    சுவையானது…
    ஒன்றின் விலை என்ன?”
    விலையைக் கேட்டதும் அதிர்ந்தேன் 
    அவ்வளவு மலிவு!
    அனைத்து ரொட்டிகளையும் 
    நானே வாங்கியவுடன் 
    அவர்கள் அதிர்ந்து விட்டனர்
    போயும் விட்டனர் 

    என்னிடம் இப்போது 
    ரொட்டிகள் இருந்தன 
    மூன்றாவது ரொட்டியைச் 
    சாப்பிட்டு முடிக்கையில் 
    மிகுதி ரொட்டிகளை 
    என்ன செய்வதாம் 
    எனும் கேள்வி எழுந்தது 
    மிகுதிகளை விற்கலாமென 
    முடிவு எடுத்தேன் 
    எனக்கும் வேலை இல்லை 

    உடனடியாகவே நான் 
    பொம்பிது நிலையத்துக்கு முன்னே போய் 
    Liberation பேப்பர் ஒன்றை 
    நான்காக விரித்துப் பரப்பி 
    அதன்மீது அழகாக வைத்து 
    “ரொட்டி வேண்டுமா? ரொட்டி.”
    எனும் இனிய குரலில் 
    அவைகளை வாங்க ஆட்களை அழைத்தேன்

    ஒரு பிரெஞ்சுக் கிழவி என்முன் வந்து 
    ரொட்டி வாங்கியது 
    கடித்தது 
    அவ்வளவுதான் 
    அவளிடம் எஞ்சியிருந்த கடைசிப்பல் 
    கழண்டு விழுந்தது 
    அதனை விரைவில் எடுத்து 
    ஒழித்துவிட்டேன் 
    கிழவியோ தனது முரசுகளால் 
    சிரித்தபடி போய்விட்டது 

    பின்னர் இரண்டு பிரெஞ்சுக் குமரிகள் 
    ரொட்டியைப் பார்த்தபடி விழிகள் 
    ஒருத்தியிடம் 
    ஒரு ரொட்டியைக் கொடுத்தேன் 
    கடித்தாள் 
    மற்றவளிடமும் ஒன்றைக் கொடுத்தேன் 
    “சுவை, மிகவும் சுவை.” என்றபடி 
    ஒரு பிராங்கும் தராமல் 
    ஓடி விட்டனர்

    பின்னர் ஓர் கறுப்பி வந்தாள் 
    நான்கு ரொட்டிகள் வாங்கினாள் 
    சிரித்தாள் 
    காசு தந்தாள் 
    போனாள் 
    திரும்பி வந்தாள் 
    மீண்டும் எட்டு ரொட்டிகள் வாங்கினாள் 
    எனக்கு அவள்மீது காதல் வந்தது 
    இலவசமாக மூன்று ரொட்டிகளை 
    அவளுக்குக் கொடுத்தேன் 
    “நன்றி, நன்றி” என்றபடிஅவளும் ஓடிவிட்டாள் 

    நான் ஓர் ரொட்டியை எடுத்துக் கடித்தேன் 

    வைன் கேஸ் ஒன்று வந்தது 
    கையை நீட்டியது 
    அதற்கும் ஒன்று கொடுத்தேன் 
    “நீதான் என் நண்பன்” 
    என்று அதுவும் போய்விட்டது

    என்னிடம் இன்னமும் ரொட்டிகள் இருந்தன 

    ஓர் பெண் என்முன் வந்து 
    என்னைப் வீடியோவில் எடுத்தாள் 

    சிலர் ரொட்டிகள் வாங்காமல் 
    என்முன் ஒரு பிராங்க் இரண்டு பிராங்க் எனப் போட்டுச் சென்றனர் 

    ஓர் இங்கிலாந்துக்காரியும் வந்தாள் 
    ஒரு ரொட்டியை வாங்கி 
    முதலில் சாப்பிட்டு முடித்தாள் 
    பின் பத்து ரொட்டிகள் வாங்கினாள் 
    தன் கணவன் தமிழாம்…
    அவருக்கு எல்லாம் சுடத்தெரியும் 
    ரொட்டி சுடத் தெரியாதாம்…
    இங்கிலாந்து வந்தால் 
    தனது வீட்டிற்கு வந்து 
    ரொட்டி சுட்டுத் தருவீர்களா 
    எனக் கேட்டு 
    தனது முகவரியும் தந்துவிட்டு 
    அவளும் போய்விட்டாள் 

    வானத்தை இருள் முத்தமிட்டபோதுதான் 
    இயக்கம் வந்தது…
    1000 பிராங்க் கேட்டது 
    “ஏன்?” எனக் கேட்டேன்
    “போராட்டத்துக்கு” என்றது 
    “போராட்டத்துக்கும் எனக்கும் 
    சம்பந்தமில்லையே.” என்றேன் 
    “போராட்டத்துக்கும் உனக்கும் 
    சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்.
    ஆனால் அதற்கும் ரொட்டிக்கும் 
    சம்பந்தம் உள்ளது.”
    “எப்படி?” என்று கேட்டேன் 
    “நீ  தமிழன்…
    நீ ரொட்டி விற்கின்றாய் 
    உனது லாபத்தின் ஒரு பகுதி 
    போராட்டத்துக்கு என 
    இயக்கம் எழுதிய விதி 
    உனக்கு இன்னமும் தெரியாதா?”
    எனக் கேட்டது 
    “தெரியாது” என்று சொன்னபடி 
    “இன்றுதான் முதல் தடவையாக 
    ரொட்டி விற்க வெளிக்கிட்டேன்”
    என்று சொன்னேன்
    உடனடியாக அது 
    என் றூம் விலாசம் கேட்டது…

    உடலே நடுங்கியது…

    தூரத்தில் பிரெஞ்ச் போலீசார் தெரிந்ததால் 
    அவர்களைக் கையைக் காட்டி 
    அழைத்தேன் 
    இயக்கம் ஓடித் தப்பியது 

    வந்த போலீசார் 
    என்னிடம் ரொட்டி விற்பதற்கு 
    லைசென்ஸ் உள்ளதா 
    எனக் கேட்டனர் 
    “இல்லை” என்றேன் 
    தங்களுடன் வருமாறு 
    ஆணை இட்டனர் 
    அது போலீஸ் நிலையம் 
    எனது விசா பரிசோதிக்கப்பட்டது 
    எனது ரொட்டிகள் 
    பறிமுதல் செய்யப்பட்டன 
    என்மீது வழக்குத் தொடுவோம் 
    எனச் சொல்லப்பட்டபோது 
    போலீஸ் நிலையத் தலைவர் வந்தார் 

    பறிமுதல் செய்யப்பட்ட 
    எனது ரொட்டிகளில் 
    ஒன்றை எடுத்துக் கடித்தார் 
    முழுவதையும் சாப்பிட்டார் 
    என்னைப் பார்த்துச் சிரித்தார் 
    என்மீதான குற்றப் பட்டியலை 
    எடுத்துக் கிழித்தார் 
    வாரா வாரம் தனக்கு 30 ரொட்டிகள்வேண்டும் 
    எனக் கேட்டுக் கொண்டார் 

    நான் சுதந்திரமாக 
    போலீஸ் நிலையத்தை விட்டு 
    வெளியே வந்தேன் 

    எனக்கோ ரொட்டி 
    சுடவே தெரியாது 
    எனக்கு ரொட்டி வித்த பெண்ணை 
    இப்போது தேடிக்கொண்டுள்ளேன்.   

    Postad



    You must be logged in to post a comment Login