தாயகம் சஞ்சிகையாக வெளிவருவது நின்று போய் நீண்ட காலம் நான் தலைமறைவாகி விட்டேன்.
வேலை, குடும்பம், பொழுதுபோக்குகள், கற்றுக் கொள்ளல் என்று நான் எப்போதுமே பிசி தான்.
புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தை என்றெல்லாம் இழுத்தடிக்க, 'உந்த மோட்டுச் சிங்களவனை பேச்சுவார்த்தை எண்டு பேய்க்காட்டிப் போட்டு, தலைவர் சாமான் கொண்டு வந்து அடிச்சுப் பறிக்கப் போறார்' என்று புலன் பெயர்ந்தவர்கள் கொடுப்புக்குள்ள சிரிப்போட திரிந்த காலம் அது.
உதெல்லாம் நல்லதுக்கு இல்லை என்ற எண்ணம் வந்ததால், 'நாசமாப் போகப் போறீங்களடா!' என்பதைச் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணத்தில் தாயகத்தை இணையத்தில் கொண்டு வரும் யோசனை உதித்தது.
நானோ எந்த எழுத்து, பிரசுர முன் அனுபவம் எதுவும் இல்லாமல், கணனி வாங்கி, தமிழ் தட்டச்சும் பழகி, பத்திரிகை வடிவமைப்பும் கற்றுக் கொண்டு பத்திரிகை நடத்திய பேர்வழி.
எதற்கும் மற்றவர்களில் தங்கியிருக்க நேரிட்டால், அவர்களின் பணயக் கைதிகளாக வேண்டி நேரிடும், அவர்களோடு இழுபடுவதால் அனாவசிய மன உளைச்சல்கள் ஏற்படும் என்ற எண்ணம்.
அதுவும் நான் டீல் பண்ண வேண்டியது யாழ்ப்பாணிகள்.
எந்த வித அறநெறியும் இல்லாத ஒரு சமூகம்.
நான் எதிர்பார்த்தது போலவே சில சம்பவங்களும் நடந்தேறின.
'நாங்கள் இல்லாட்டி உவர் என்னண்டு நடத்திறார் பாப்பம்!'
இப்படித்தான், முழு நேர வேலையோடு ஒரு வாரப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தேன்.
ஆனாலும், இணையத்தில் இதைக் கொண்டு வருவதற்கும் பல சிக்கல்கள்.
Thayagam.com என்ற இணைய முகவரியை யாரோ நோர்வே வாழ் புலிக் கூட்டம் அதை நான் பெற்று விடக் கூடாது என்ற நன்நோக்குடன் தாங்களே வாங்கி சும்மா வைத்திருந்தார்கள்.
எனவே Thayagam.info என்ற இணையதள முகவரியைப் பெற்றுக் கொண்டு, இணையத் தள வடிவமைப்பையும் நானே செய்வதாக முடிவு செய்து கொண்டேன்.
ஆரம்ப காலங்களில் இணையத் தளங்கள் HTML என்ற programming முறைப்படியே வடிவமைக்கப்பட்டன.
வழமை போல ரொறன்ரோ நூலகத்தில் கிடைக்கக் கூடிய எல்லா புத்தகங்களையும், ஏற்கனவே பயன்படக் கூடும் என்று வாங்கி வைத்திருந்த புத்தகங்களையும் குவித்துப் பரப்பி வாசித்துக் கொண்டிருந்தேன்.
அது ஒரு கிறிஸ்மஸ் லீவு காலம்.
அப்போது தான் சுனாமி வந்து பேரழிவை ஏற்படுத்தியிருந்தது.
தற்போதைய யுனிகோட் முறை அப்போது இல்லாததால் இணையத் தளங்களை வாசிப்பதற்கான தமிழ் எழுத்துக்களையும் வழங்க வேண்டிய கட்டாயம்.
நான் பாவித்துக் கொண்டிருந்ததோ முறையான தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் எழுத்து வடிவமைப்பு.
பின்னர் தமிழர்கள் பாவித்த பாமினி எழுத்தோடு அது வேலை செய்யாது. பாமினி வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே ஒரு ஸ்டான்டர்டாக இருந்த தட்டச்சு வடிவமைப்பை பயன்படுத்தாமல், நினைத்தபாட்டில் கீபோர்டில் எழுத்துக்களை வடிவமைத்திருந்தார்கள்.
எனவே, தாயகத்திற்கான எழுத்துக்களையும் தரவிறக்கம் செய்து பார்ப்பதற்கு வசதி செய்திருந்தேன்.
இப்படியாக இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடியும் வரைக்கும் ஏடு இட்டோர் இயல், கியூறியஸ் ஜி உட்பட பல விடயங்களை நானே எழுதிக் கொண்டிருந்தேன்.
மாவீரர் தின உரைகள் முதல் உள்ளுக்க வர விட்டு அடிக்கிற கதை, ரொறன்ரோவில் கொடி பிடித்த கூத்து வரைக்கும் தாயகத்தில் 'உதெல்லாம் நல்லதுக்கில்லை, தம்பி! கெடுகுடி சொற்கேளாது!' என்று தாயகம் தீர்க்கதரிசனமாக பல விசயங்களைச் சொல்லிக் கொண்டே வந்தது.
யுத்தம் முடிந்த கையோடு, தாயகம்.கொம் வைத்திருந்த புலிவால்கள் அதற்கான தேவையில்லாமல் அதை கைவிட்டிருந்த போது, (இணையத் தளம் நடத்த சரக்கும் கிடையாது, சொந்தப் பணத்தை எதற்கு வீணாக்குவான் என்ற எண்ணமாக இருக்கலாம்!) அந்த தள விலாசத்தை நான் வாங்கிக் கொண்டேன்.
அப்போது யுனிக்கோட் முழுமையாக இணையத்தில் அமுலுக்கு வந்து விட்டது.
எனவே, புதிய இணைய முகவரியுடன் புதிய வடிவமைப்பு செய்யும் எண்ணம் வந்தது. அதற்கு பழைய HTML முறையை கையாளாமல் புதிய முறையில் வடிவமைக்க வேண்டும் என்று நினைத்ததால், அதற்கான ஒரு ஆளை நண்பர் ஒருவர் அறிமுகம் செய்திருந்தார்.
'அவன் உதுகள் எல்லாம் செய்யிறவன்!' என்று.
அவனோ இளம் பையன். எனக்கு நன்கு தெரிந்த ஒருவரின் மகன். என் நண்பர் குடி போதை காரணமாக மனைவி பிள்ளைகளால் விரட்டப்பட்டிருந்தார். அந்தக் குடும்பம் எனக்கு மிகவும் தெரிந்த ஒன்று. அது தனி வரலாறு.
அவனிடம் போய் எனக்கான தேவையைச் சொல்லி இருநூறு டொலர் அச்சவாரமும் கொடுத்து வேலையை ஆரம்பிக்கும்படி சொன்னேன்.
பிறகென்ன? அவனும் யாழ்ப்பாணித் தமிழன்.
நானும் ஏமாளி.
என்னைக் கொண்டு வேலை செய்வித்து விட்டு, பணம் தராமலே சுத்திய யாழ்ப்பாணிகள் உண்டு.
காசை முதல் வாங்கினால் யாழ்ப்பாணி எப்படிச் சுத்துவான், வேலையை முடிப்பிச்சால் எப்படி காசு தராமல் இழுத்தடிப்பான் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.
சோம்பேறி. நான் போகும்போது தூக்கத்தில் இருப்பான். முகம் கழுவாமல் வந்து, தான் வேறு யாருக்கோ செய்த இணையத் தளங்களைக் காட்டுவான். எனக்கான வேலையைச் செய்வதில்லை.
வேலை முடிந்து இதற்காக என்று அவனிடம் அலைந்து கொண்டிருந்தேன்.
நான் கொடுத்த பணத்திற்காக அவன் எதையும் செய்ததில்லை.
இப்படி நானும் அலைக்கழிக்கப்பட்டு பொறுமை இழந்தேன்.
அவன் காட்டிய இணையத் தளங்கள் WordPress என்படும் Content Management System (CMS) முறைப்படியானவை என்பதை அங்கே கண்டு கொண்டேன். இதைப் பற்றி ஆங்காங்கே வாசித்திருந்த போதும், எனக்கு அது தேவைப்படும் என்ற எண்ணம் வராததால் அதைப் பற்றி அதிகம் வாசித்திருக்கவும் இல்லை.
அந்த இருநூறு டொலரும் புத்திக் கொள்முதல் என்று நினைத்துக் கொண்டு, வழமை போல ரொறன்ரோ நூலகத்தில் கிடைக்கக் கூடிய சகல புத்தகங்களையும் வாங்கி ஓரிரு வாரங்களுக்குள் WordPress கற்றுக் கொண்டு விட்டேன்.
என்னவோ, என்னுடைய பழக்கம். எதைக் கற்றுக் கொண்டாலும் அதைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு அறிவைத் தேடிக் கொள்வேன். அரைகுறையாக எதையும் கற்றுக் கொள்ள விரும்புவதில்லை.
ஒரு கரை கண்ட பின்னர் தான் மிச்சம் வேலை!
இப்படி கற்றுக் கொண்டு தளத்தை வடிவமைத்துக் கொண்டேன்.
WordPress செயலியில் உள்ள சிறப்பு ஏற்கனவே வடிவமைத்து விற்பனை செய்யும் theme எனப்படும் வடிவமைப்புகளில் எங்களுக்கு பிடித்தமானவற்றை வாங்கி இலகுவாகவே வடிவமைத்துக் கொள்ளலாம்.
எங்களுடைய ஆக்கங்களை ஒரு Database மாதிரி ஒன்றில் சேமித்துக் கொள்ள வேண்டியது தான்.
வடிவமைப்புகளை மாற்றி விட, ஆக்கங்கள் அந்த பக்க வடிவமைப்புகளில் இலகுவாக தானாகவே மாறும்.
ஆனாலும் அந்த theme களை நாங்கள் எங்களுக்கு விரும்பியவாறு, குறிப்பாக தமிழ் எழுத்துக்களில் Menu உருவாக்கும்போது, மாற்றுவதற்கு இன்னும் கொஞ்சம் கற்க வேண்டும்.
இதற்குள் முன்பு தாயகம் எழுத்துக்களில் இருந்த ஆக்கங்களை யுனிகோட்டுக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்தது. என்னுடைய கீபோர்ட் வடிவமைப்பு வேறெங்குமில்லாத தனித்துவமானது என்பதால், அதற்கான மாற்றி ஒன்றை வடிவமைக்க Java என்ற கணனி மொழியைக் கற்க வேண்டியிருந்தது. அதுவும் ஒரு சில நாட்களில் முடிந்தது.
இப்போதும் நான் பழைய தட்டச்சு கீபோர்ட் வடிவத்திலேயே எழுதுவதால் அவற்றை யுனிகோட்டுக்கு மாற்ற வேண்டிய தேவையும் இருந்தது.
அதையும் கற்று மாற்றிக் கொண்ட பின்னால், தாயகம் புதிய இணையத்தளம் அரங்கேறியது.
இது நீண்ட காலம்.
எல்லாமே சிக்கல் இல்லாமல் போய் கொண்டிருந்தது.
WordPress புதிய செயற்பாடுகளை உள்ளடக்கி புது வடிவங்கள் (Versions) வெளியாகும். நீண்ட காலம் நான் அதை update பண்ணுவதில் அக்கறை காட்டவில்லை.
ஒருநாள் திடீரென்று நரி வெருட்டியதால்,
சரி, update பண்ணித் தான் பார்ப்போம் என்றால்...
புதிய தலையிடி முளைத்து விட்டது.
நான் எதையும் எழுதி edit பண்ணி பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
அதை சீர் செய்ய நாலைந்து இரவுகள் வீணாக்கி, கண்டுபிடித்தது என்னவெனில்...
அது என்னுடைய சங்க காலத்து மடிக்கணனிகளில் வேலை செய்யாது என்பது தான்.
புதிதாக வாங்கியிருந்த மேசைக்கணனியில் செய்ய புறப்பட்டால், அதை எடிட் செய்வதற்காக Microsoft செயலியைப் போலிருந்த நிலை மாறி புதிதாக Gutenberg என்ற புது செயலியை உருவாக்கியிருந்தார்கள்.
அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை.
பிறகு இதற்காக சில இரவுகளை தியாகம் செய்து அதையும் கற்றுக் கொண்டு புதிய பதிவுகளை பதிவேற்ற முடிகிறது.
ஆனாலும், புதிய WordPress, சங்க கால theme.
சில இணைப்புகள் வேலை செய்வதாக தெரியவில்லை.
இப்போது புதிய theme மை தரவிறக்கம் செய்து திரும்பவும் அதைக் கற்றுக் கொண்டு வடிவமைக்க வேண்டியிருக்கிறது.
எங்கே பிழைக்கும் என்று தெரியாது. எங்கே சொதப்புவேன் என்பதையும் செய்து பார்க்கும்போது தான் தெரிந்து கொள்ளவும் முடியும்.
அதற்கும் ஒரு வார இறுதி வேண்டும்.
அப்போது தாயக தளத்தின் முகப்பையும் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும்.
இப்படி, வாழ்க்கையே கற்றுக் கொள்வதாகத்தான் இருக்கிறது.
புதிய விடயங்களைத் தெரிந்து கொள்வதும், பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு (troubleshooting) வெற்றி கொள்வதும் தரும் மகிழ்ச்சி தனித்துவமானது.
தர்க்கரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்வதால் இவை சுலபமானதாக எனக்கு இருக்கக் கூடும்.
கார் இடையில் நின்றால், டயருக்கு காலால் உதைக்கும் விளையாட்டெல்லாம் நம்மிடம் கிடையாது.
சரி, நிண்டிட்டுது, இப்ப என்ன செய்ய வேணும்? என்ற நிதானமான கேள்வியுடன்!
சில நேரம், மேலே பார்த்து...
உனக்கு இப்ப சந்தோசம் தானே!? என்ற கேள்வியுடன்.
என்னுடைய பல நண்பர்கள் தங்கள் கணனி சம்பந்தமான பிரச்சனைகள், சந்தேகங்களுக்கு நேரம் காலம் தெரியாமல் போன் அடிப்பார்கள். அவற்றை எல்லாம் தீர்த்து வைப்பதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி.
இந்த மகிழ்ச்சி ஆளுக்காள் வேறுபடக் கூடும்.
அதை நான் காலை நீட்டி பியர் போத்தலை வயிற்றில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ப்பதிலோ, இலக்கிய புத்தகங்களை வாசிப்பதிலோ பெற்று விட முடியும் என்று நினைப்பதில்லை.
புதியவற்றை எப்போதும் கற்றுக் கொள்வதாலோ என்னவோ, சிந்தனை எப்போதுமே இளமையாகவே இருக்கிறது!
You must be logged in to post a comment Login