Recent Comments

    என் சுவாசக் காற்றே!

    பூங்கோதை

    #asthmaattack

    அந்த நடு நிசியில், நெஞ்சுக்கூட்டின் ஒவ்வொரு அணுவும் வலித்தது, மீந்திருக்கும் சுவாசக்காற்றின் வேகமும், அளவும் குறுகிப்போவது பின் முதுகுப் பக்கத்திலும் வார்த்தைகளற்ற வேதனையை கிளறியிருந்தது. மூச்சு சீரற்ற நிலையில் வந்து கொண்டிருக்க, சுவாசம் இறுகித் தவித்தது.

    நான் மட்டும் இன்று இரவில் என் குழந்தைகளின் முன் இறந்து போய் விடக்கூடாது என்பதில் அடம்  பிடித்துக் கொண்டிருந்தேன். இறப்பதைப் பற்றிய கவலையல்ல அது, அவர்களுடைய கண்களின் முன்னே இறந்து போனால், அது அந்தக் குழந்தைகளின் பிற்கால வாழ்வை பலமாகப் பாதிக்கும் என்பதும், அதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது என்பதுமான கவலையாகவே அது இருந்தது.

    சின்னவனுக்கு மூன்று வயதிருக்கலாம், என் கையை இறுகப் பற்றியபடி என் சுவாசக்காற்றில் கலந்திருந்த மரண வேதனையை மெளனமாக அவதானித்துக் கொண்டிருக்க, பெரியவன், அநியாயத்துக்குத் தீர்ந்து போயிருந்த என் அஸ்த்மா இன்ஹேலர்ஸ்சை ( asthma inhalers) தட்டிக் கொட்டி ஏதாவது கொஞ்ச நஞ்ச மருந்து ஒட்டியிருக்குமோ என ஆய்வு செய்து கொண்டிருந்தான். அவ்வளவு மருந்தையும் தேவைக்கதிகமாகவே பாவித்திருந்தேன்.

    இடையிடையே, “ நீ இண்டைக்கு இரவு செத்துப் போவியோ, எனக்கு நித்திரையும் வருது…” என்று தனக்கான பயத்தையும் தீராக் கவலையையும் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தான்.

    நான் மட்டும் எந்த விதமான கலவரமும் இன்றி புன்னகைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

    ஒரு மனிதனுக்கான உயிர்ப்பை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு தேவையான ஒரே அருமருந்து மூச்சுக்காற்று. அது அந்த நடுநிசியில் இரண்டு குழந்தைகளுக்கு முன் என்னோடு கண்ணாமூச்சி விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கா விட்டால் சுவாசம் அடங்கிப் போய்விடும் நிலைமை உண்டு. அவசர மருத்துவ உதவி நாடி தொலைபேசிய போது, மறுபக்கத்தில் என்னிடமிருந்து தமக்குத் தேவையான தகவல்களை எடுக்க நேரிட்ட அனுபவம் வாய்ந்த வைத்திய நிபுணர், என் வார்த்தைகளை விட என் சுவாசக்காற்றின் அழுத்தத்தால் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒலி குறித்து பீதியடைந்திருந்தார்.

    அஸ்த்மா என்பது, சுவாசப்பை சார்ந்த ஒரு தற்காலிக நிலையே தவிர அது ஒரு நோயல்ல என்பது வைத்தியர்களின் ஆய்வுக்கூற்று ( It is only a condition, not an illness). 

    இது எனது தாய்க்கும் அவரது தாய்க்கும் இருந்ததால், என்னையும் பாதித்து எனது பரம்பரைச் சொத்து ஆகியது. ஆய்வுகளின் படி, அனேகமாக இது ஒருவரது தாய் அஸ்த்மாவால் பாதிக்கப்பட்டிருந்தால் , அந்தத்தாயின் வழிக் குழந்தைகளையும் இது பாதிக்கும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. 

    எனினும் ஒவ்வொருவருக்கும் அதன் வீரியம் கூடிக் குறைவதற்கு வெவ்வேறு காரணிகளும் உண்டு. மனதைப் பாதிக்கக்கூடிய நிகழ்வுகள், உணவு, கால நிலை ஒவ்வாமை, தூசி, வசந்த காலத்தில் காற்றில் கலந்திருக்கும் மலர்கள், புற்களின் மகரந்தத் துணிக்கைகள் போன்ற பல காரணிகள் அஸ்த்மாவை தூண்டி விடும் (trigger) தன்மை கொண்டவை.

    எது எப்படியோ ஏதோ ஒரு காரணி அந்த இரவில் தன் கை வண்ணத்தைக் காட்டியிருக்க வேண்டும் என்பதோடு, கைவசம் இருந்த மருந்துகள் ( asthma inhalers) இப்படியான தாக்குதல்களுக்கு நின்று பிடிக்க மாட்டாதவை என்பது துயரம்.

    உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கா விட்டால் சுவாசம் அடங்கிப் போய்விடும் நிலைமை உண்டு. அவசர மருத்துவ உதவி நாடி தொலைபேசிய போது, மறுபக்கத்தில் என்னிடமிருந்து தமக்குத் தேவையான தகவல்களை எடுக்க நேரிட்ட அனுபவம் வாய்ந்த வைத்திய நிபுணர், என் வார்த்தைகளை விட என் சுவாசக்காற்றின் அழுத்தத்தால் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒலி குறித்து பீதியடைந்திருந்தார்.

    “ அம்புலன்ஸ் அனுப்புறன், உன்னுடைய ஒக்ஸிஜனின் அளவு குறைஞ்சு போறது நடந்து கொண்டிருக்கு. உடனடியாக வந்து சேர், பத்து நிமிசத்துக்குள்ளாக மருத்துவ உதவி கிடைக்காட்டால் நீ பரலோகம் போட்டாய் எண்டு நினைச்சுக் கொள்ளுறன்” என்ற ரீதியில் ஒரு கொள்கை விளக்கம் ஒன்றை தந்தவரிடம், மிகப்பிரயத்தனப்பட்டு, என்னோடு 3 வயதிலும் 9 வயதிலுமாக என் குட்டிகளும் இருப்பதை,பேச முடிந்த ஓரிரு வார்த்தைகளால் உறுதி செய்தேன்.

    அந்தப்பக்கம் ஒரு சில வினாடிகள் அமைதியானது.
    “ நாங்கள் குழந்தைகளை அம்புலன்சில் பராமரிக்க ஏலாது, யாரையாவது கூப்பிட்டு அவையோட விட்டிட்டு, உசிர் மேல ஆசையிருந்தால் வந்து சேர்!”
    டொய்ங்ங்ங்கெண்டு தொடர்பு அறுபட்டது.
    எல்லா நேரங்களிலும் வாழ்க்கையின் சட்டதிட்டங்கள் நேர்கோட்டில் போகாமல், என்னைப் போலவே தன்னிச்சையாக, குருட்டாம் போக்கில் போவதை உணர்ந்த தருணம் அது.

    அவசரத்துக்கு யாரையும் கூப்பிட முடியாத சூழல், சாமம் கடந்து வைரவர் உலாப் போகும் நேரம் என்பதும் இன்னொரு தடை.

    இன்று இரவுக்குள் நான் போய்ச்சேர்ந்து விட்டால், நாளைக்கு வாங்கித் தருவதாகச் சொன்ன விளையாட்டுக் கார் தனக்கு வந்து சேராது என்ற கவலையில் சின்னவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான்.

    நான் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். தொலைபேசியில் அறிவித்த வைத்தியர் கூறியது போல, பிராண வாயு உடனடியாய்க் கிடைக்கா விட்டால், பிராணன் போய் விடும் நிலைக்கு வந்தாயிற்று. மனதை மாத்திரம் தளர விடாத அசாதாரண உறுதி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டேன்.

    எந்த மருந்தும் இனி வீட்டில் வேலை செய்யாது, வைத்தியசாலையில் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் உத்தியை, அதற்கான கருவி மூலம் -நெபெளைசர் மூலம் - பிராண வாயுவையும் நெபுள்ஸ் எனப்படுகின்ற மருந்தையும் வேகமாக உள்ளெடுக்கப் பண்ணுவார்கள்.
    (A nebuliser is a machine which turns liquid medicine into a mist, patients sit next to the machine and breathe in through a connected mouth piece.)

    குழந்தைகளை தனியே வீட்டில் விட முடியாது, நானும் இதற்கு மேல் வீட்டில் நிற்பது ஆபத்து என்பதால், குழந்தைகள் இருவருக்கும் நான் அப்பிடியெல்லாம் இறந்து போய் விட மாட்டேன் என்பதை சிரித்தபடியே சொல்லியபடி, அவர்களை எனது காரில் தூக்கிப் போட்டபடி, ஒரு துளி சுவாசக் காற்றோடு, வைத்தியசாலை நோக்கி என் கார் வேகமெடுத்தது.

    அவசர சிகிச்சைப் பிரிவில், நான் குழந்தைகளோடு பாதி உயிரோடு போய் இறங்கிய போது, நெகிழ்வுடன் வரவேற்ற அதே வைத்தியர், இனிக் குழந்தைகளைத் திருப்பியனுப்ப முடியாது என்பதால், தலையைப் பலமாகச் சொறிந்து கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து இன்னும் பல தடவைகள் உயிர் ஊசலாடும் நிலையிலிருந்து தப்பி வந்த அனுபவம் என்னைச் செம்மைப்படுத்தியதென்றே சொல்ல வேண்டும்.

    அதன் பின்னர், எனது குடும்ப வைத்தியரின் ஆதரவோடு எனக்கென அந்த உயிர் காக்கும் கருவியை வீட்டில் வாங்கி வைத்துக் கொண்டேன். அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் நீச்சல், நடைப்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, மூச்சுப் பயிற்சி போன்றவை  மூலம் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியதில், அஸ்த்மா இன்றுவரை என்னோடு இருந்தாலும் கூட, அதன் வீரியம்  சார்ந்த தாக்கம் ( Asthma attack) நாளடைவில் இல்லாமற் போய் விட்டது.

    அஸ்த்மாவோடு போராடுபவர்கள், தமக்கு என்ன காரணத்தால் அது வீரியமடைகின்றது என்பதை அறிந்து வைத்திருப்பதும், மருந்துகளை சரியான முறையில் உள்ளெடுப்பதும், தகுந்த முறையில் வைத்திய ஆலோசனைகளைப் பெறுவதும்,   ஆஸ்த்மாவின் வீரியத்தை கண்காணிப்பதும், இதற்கான சிகிச்சை நிலையங்களுக்கு (Asthma clinic) போய் அதற்காக பயிற்றப்பட்ட தாதிமார்களுடன் தொடர்புகளைப் பேணுவதும், தமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் மிக அவசியம்.


    Postad



    You must be logged in to post a comment Login