Recent Comments

    எனது கடை…

    க.கலாமோகன்

    (எழுத்தாளர் சுதேச மித்திரனினால் பல இலக்கிய, ஓவியத் திறைமையாளர்களின் உழைப்பால் மாதம் ஒருமுறை வெளிவரும் இதழ் “ஆவநாழி”. இந்த இதழ் ஓர் பிரசுர, இணைய இதழ் அல்ல. இது ஓர் செய்தித்துவ Whatsup இதழே. இந்த இதழின் அனைத்துப் பக்கங்களும் புதிய எழுத்துகளைத் தருவனவே. சில குறு இதழ்கள், பலமானதாக இருந்தாலும் சில வேளைகளில் மறைந்து போவன. இதனால்தான் இங்கு நான் “ஆவநாழி” மீது சில வரிகளை எழுதுகின்றேன். இது பிரசுர வடிவில் வருவது அவசியமானது. “எனது கடை…” எனும் சிறுகதை “ஆவநாழி”க்கு நன்றியுடன் இங்கே மீள் பிரசுர வடிவில். இதழைப் பெற விரும்புபவர்கள் +91 98941 21201 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். “ஆவநாழி” யின் pdf பதிவுகள் கதையின் பின் இணைக்கப்பட்டுள்ளன.)

    நான் பாரிசில். எனக்கு ஓர் கடை உள்ளது. இந்தக் கடையில் நிறையத் தண்ணீர்கள். இது என்ன தண்ணீர்கள் என உங்களுக்குச் சொல்ல வேண்டுமா? சாப்பாடுகள் டின்களில் இருக்கும். கடை ஓடுவது தூள் அடிக்கும் சிறுவர்களால்தான். 10 வயதில் இருந்தே இந்தப் பழக்கம் இவர்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். எனக்கு வயது கூடி இருந்தாலும், நான் இவர்களைப் போல…இப்போது இல்லை. நான் இளசாக இருந்தபோது ஓர் மரோக்க பெண், காதல் செய்யுமுன் தூள் தந்தாள். அது அவள் செய்த புதிய சிகரெட்டுக்குள் இருந்தது. புகைத்ததும் தூங்கிப் போனேன். காலையில் அவள், எமது காதல் கருகிவிட்டது என அறிவித்து வெளியே என்னைத் துரத்தினாள். சரி, தூளை விடுவோம்.

    இந்தப் பையன்கள் என்னை “அப்பா” எனவும் “அப்பு” எனவும் அழைப்பதில்லை. “Salut” என அழைப்பர். வணக்கத்தை வேறு ஓர் பாணியில் தெரிவிக்கும் குறிப்பு அது. இப்போது அது எனது பெயராகியும். சிலர் “சலு” என்றும் “சலு மாமா!” என்றும் அழைப்பதுண்டு. மாமி என அவர்கள் என்னை அழைத்தாலும் எனக்குக் கவலைகள் இல்லை…

    எனக்கு ஓய்வூதியம் கிடைத்த பின்னர்தான் வங்கியில் கடன் கேட்டு இலகுவாக வாங்கியபின் என் கடையைத் திறந்தேன்.

    66 வயதிலும் சின்ன ஓய்வு ஊதியம் எடுக்கும் எனக்கு எப்படி இந்தக் கடை கிடைக்குமாம்? பின்பு பதிலைச் சொல்வேன்.

    இரத்தினத்துக்கு 63 வயது. அவரது மனைவியைச் சிலவேளைகளில் ரசித்தது அவருக்குத் தெரியும் என்பதால் என்னைப் பல வேளைகளில் சந்திப்பவர் அல்லர். நிச்சயமாக அவரது மனைவி, எனது மனைவியைக் காட்டிலும் கவர்ச்சியானவள். பழைய அனுராதவைப் போல. இன்றும் அவளது முகம் எனது உடலில் தீப் பொழிகளைத் தூவியபடி. எனது கட்டிலில் அவளது நிறைய நிழல்களை ரகசியமாக இப்போதும் காத்து வருபவன். வயதுள் போவதால் எமது உடல் நெருப்புகள் அழியுமா?

    இப்போது நான் அவரை எனது கடைக்குள் கண்டேன். எனது தாடி கறுப்பாக இருந்தபோதும், அவரதோ நத்தார் தந்தையின் தாடியைப் போல மிகவும் வெள்ளையாக, நீண்டும் இருந்தது. அசைவில் ஓர் களைப்பு.

    “வணக்கம்” என்றேன்.

    “உங்களுக்குக் கடை கிடைத்துவிட்டது…. நல்லதுதான் …. இந்த வயதிலும் எப்படி உங்களுக்கு இந்தக் கடை கிடைத்தது?” என என்னிடம் திகைப்பாகக் கேட்டார்.

    “வயதில் என்ன உள்ளதாம்? நிறையப் பணக்காரர்கள் இளைஞர்கள் அல்லர், முதியவர்கள்… அவர்களுக்கு மூன்று கால்களும் உள்ளன. ஆனால் எனக்குக் கிடைப்பது சின்ன ஊதியம்… ஆனாலும் எனக்கு ஓர் கடை… இது எனது கவிதை போல…”

    “இந்தக் கடையை வாங்குதலில் உங்களது சின்ன ஊதியம் நிச்சயமாக உங்களுக்குச் சிரமம் தந்திருக்கலாம்…இந்த அழகிய கடையை வாங்குவதற்காக எப்படி நீங்கள் கடனைப் பெற்றீர்கள் ? உங்களது நண்பர்களில் ஒருவர் செல்வந்தரா? அல்லது வங்கியில் வேலை செய்கின்றாரா?”

    “எனக்கு நிறைய நண்பர்கள் இல்லை… இருப்போர் சிலரும் ஏழைகளே…. நான் அவ்வப்போது அவர்களுக்கும் கொடுப்பதுண்டு….”

    “உங்களது ஓய்வு ஊதியம் குறைவானது என்று சிலமாதங்களின் முன்னர் பிரெஞ்சு அரசை எதிர்த்தீர்கள்…. இப்போது கடையுடன் …. எப்படி இது கிடைத்தது…. வங்கியில் உங்களது ஓய்வு ஊதியத்தைக் கேட்டதும் துரத்தியிருப்பார்களே?”

    “என்னிடம் விழிகளும் ஓர் அழகிய வாயும் உள்ளன.”

    “நீங்கள் இப்போதும் அழகு என்பது எனது மனைவிக்கும் தெரியும்…”

    “அப்படியா? நான் உங்களது மனைவியுடன் நிச்சயமாகக் கிடந்ததில்லை.”

    “கிடத்தல் மீது நான் பேச வரவில்லை…(சிறிய மௌனம்) கடை மீது… எப்படி உங்களுக்கு இந்தக் கடை கிடைத்தது?”

    “வங்கியால்…. “

    “எப்படி?”

    “என்னிடம் விழிகளும் ஓர் அழகிய வாயும் உள்ளன எனச் சொல்லியுள்ளேன்”

    “விரிவாகச் சொல்லுங்கள்.”

    “நான் வங்கிக்குள் சென்றபோது சின்ன அழகிய வெள்ளை மயிரைக் கொண்ட வெள்ளைப் பெண் ஓர் வாடிக்கையாளனிடம் அவரது விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தாள்… அவளது விழிகள் தேவதைகளின் விழிகளைப் போல இருந்தன…”

    “நீங்கள் எப்போது தேவதைகளைப் பார்த்தீர்கள்…”

    “அனைத்துப் பெண்களும் தேவதைகளே!”

    “அனைத்து ஆண்களும்?”

    “அவர்களில் சிலரே தேவர்கள்…”

    “வங்கியில் கண்ட சின்ன வெள்ளை அழகியை நீங்கள் வசீகரித்தீர்களா?”

    “ஆம்! இதனால்தான் எனக்கு இந்தக் கடை கிடைத்தது…”

    “நீங்கள் அவளுடன் கிடந்தீர்களா?”

    “இல்லை! கிடந்தால் எமது உலகம் அழியுமா?”

    “எனது கேள்வியை மீளப் பெறுகின்றேன்…. “

    “வணக்கம்” எனச் சொல்லி அவள்முன் சென்றேன். எனது இலக்கம் கொடுபட்டது. சோதிக்கின்றாள்.

    “உங்களது விழிகள் பச்சை! இந்த நிற விழிகளை இப்போது பார்ப்பது அரிது!” என்கின்றேன்.

    “இது இந்த நாட்டின் முதல் விழிகளாக இருந்தன, மன்னிக்கவும் உங்களது கணக்கில் 08 ஈரோதான் இருக்கின்றது…..உங்களுக்கு கடன் தர முடியாது…”

    “செல்வியே! இது எனக்குத் தெரியும். நான் கடன் வாங்க வந்து உள்ளேன். இது கடையை வாங்குவதற்காக…..”

    “உங்களது பிரெஞ்சு மொழி அழகியது…. உங்களது நாட்டைக் கேட்கலாமா?”

    “எனது நாடு உனது நாடே!”

    “இது உங்களது குறும்புத்துவமான பதில்…..”

    “குறும்புத்துவத்தின் விரோதியா நீங்கள்?”

    “நான் அப்படியல்ல…..” எனச் சொன்ன வேளையில் அவளது வெள்ளை முலைகளில் கொஞ்சத்தைக் கண்டேன். கடுப்பு எனக்குள்… ஏன் இந்த வயதிலும் என்று நான் என்னிடம் கேட்கவில்லை.

    “வனங்களில் பறவைகள் இல்லை… வங்கியில் ஓர் பறவை உள்ளது.” எனச் சொன்னபோது அவளது இமைகள் சிறிதாகத் துடித்தன.

    “எனது கணக்கில் 8 ஈரோ உள்ளது என்பதால் என்னை வறியவன் என்று சொல்லலாமா?”

    பச்சை விழிகளால் எனது நீல விழிகளைப் பார்த்தாள். நான் தமிழன் என்றாலும் எனக்குக் கறுப்பு விழிகள் இல்லை.

    “நீங்கள் கறுப்பு! உங்களிடம் நீல விழிகள்?”

    “நான் கண்ணனின் மகன்.”

    “யார் கண்ணன்?”

    நான் அவனது மகனாக இல்லாதபோதும் எமது காவிய உலகின் காதல் பெருமாள் மீது சிறிது சொன்னேன். அவனது விழிகளது நிறம் எனக்குத் தெரியாது. நீலம் எனச் சொன்னேன்.

    “நான் இந்திய கலாசாரத்தில் விருப்பமாக உள்ளேன்.” என அவளது பச்சை விழிகள் சொல்லின.

    “இப்போது எனக்கு ஓய்வு. நான் இந்தக் கலாசாரத்தை பல பல்கலைக்கழகங்களில் படிப்பித்து உள்ளேன்.”

    அவளது இதழ்கள் விரிந்தன.

    “கர்மம் என்றால் எது அர்த்தம்?”

    “ ‘க’ எனும் சொல்லில் நிறைய அர்த்தங்கள் எமது மொழியில் உள்ளன. கர்மம், காதல், களவு, காமசூத்திரம்….. க விலிருந்து தோன்றியதே கா.

    “காமசூத்திரம் மீது கேள்விப்பட்டுளேன். இது நிறைய எரோட்டிக்…….”

    “அதில் என்ன தவறு? இதனை எழுதியவர் சாதிப் பிரிவுகளோடு காமத்தைப் பார்த்தாலும், அவரது வழிகளை இன்று உலகம் காம இலக்கோடு சந்திக்கின்றது…. 68 வழிகள் உள்ளன….”

    அவளின் விழிகள் சரிந்தன.

    “எனக்கு இரண்டு பிள்ளைகள். மகள் லண்டனிலே வங்கியில் பொறுப்பான பதவியில் உள்ளாள். மகனும் வங்கியில், அவர் அமெரிக்காவில்… செல்வந்தர்கள்…”

    “சரி, உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் பணம் கேட்கலாமே….?”

    “உண்மை, நான் அவர்களிடம் கேட்க விருப்பம் இல்லை.”

    “ ஏன் உங்களது கணக்கில் 8 ஈரோ?”

    “எனக்குப் பணப் போக்குகள் எவ்வாறு நடக்கின்றன என்பது தெரியும். எனது சொத்து இப்போது பனாமாவில் உள்ள ஓர் வங்கியில் இருக்கின்றது.”

    “அதில் இருந்து எடுக்கலாமே?”

    “சில வேளைகளில் எடுக்காமல் இருப்பதால் நிறைய லாபம், கடன் வாங்குவதாலும் கூடிய லாபம்… இது உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன் ....”

    “ஆம்!” தனது நேரங்கள் குறைவு எனச் சொல்லி “எனது சம்பளம் குறைவு!” எனத் தன் சின்ன உதடுகளைக் கடித்தபடி சொல்கின்றாள்.

    “உங்களது கடன் விஷயத்தைக் கவனிக்கின்றேன்…. “ எனச் சொன்னபோது நான் ஓர் மௌனத்தில்.

    எனது விழிகள் தீயின் இதழ்களை நக்கியபடி.

    நான் வயதானவன். அவள் இளைச்சி. என்னைக் கடித்தன அவளது இதழ்கள்…. இந்த உண்மையை எனது மனைவி அறிந்தால் என்னை அடித்துக் கொல்வாள்… வாழ்வு சிறிது… என்பது அவளுக்குத் தெரியுமா?

    “இப்படித்தான் எனக்குக் கடை கிடைத்தது…” என இரத்தினத்திடம் சொன்னேன்.

    “நாளை ஓர் இன்னொரு தினம்” எனும் பிரெஞ்சுப் பழமொழியை ரசிக்கும் என்னிடம், எனது நாளை ஓர் அழகிய தினமாக மாறும் என நான் நினைத்ததில்லை. கடனில் கடை. ஆம்! அது ஓடியது. லாபம் லாபமாகக் கிடைத்ததால் வங்கிக் கடன் கட்டப்பட்டது என்பதை ஒன்றரை வருடங்களின் பின் வந்த ஓர் வங்கிக் கடிதத்தால் அறிந்தவேளையில், இந்த வருடங்களில் அங்கு போகாதிருப்பது எனக்குத் தெரியவந்தது.

    இரத்தினம் ஓர் மவுனமான சிரிப்புடன் வெளியே சென்றார்.

    இந்தக் கணத்தில்தான் பச்சைக் கண்களை நான் நினைத்தேன். கடன் கிடைத்ததும் நான் நினைத்தது விழிகளை அல்ல, கடையை. பின் நான் வங்கியை மறந்தேன்… ஆம்! அவளது பச்சை விழிகளையும்… இன்று எனக்கு வங்கிக்குப் போகவேண்டும் எனும் ஓர் வெறி வந்தது… கொடூரமான வெறி….

    அது இரவானதாக இருந்ததால், நாளை போவோம், அவளது பச்சை விழிகளை ரசிப்போம் என நினைத்துக் கொண்டேன்.

    கடையை மூடத் தொடங்கியபோது நிறைய வாடிக்கையாளர்கள். இவர்களைத் துரத்தும் வழக்கம் என்னிடம் இல்லை. போத்தல்களை அவதி அவதியாக எடுப்பது அவர்களது வழக்கம். அனைத்து வாடிக்கையாளர்களும் போன பின்பு Jasmin வந்தாள்…

    அவள் எனது கடையில் ஒருபோதும் வாங்கியதில்லை. வருவாள். பின்பு எனக்கும் அவளுக்கும் சிறிய சம்பாஷனை ஏற்படும்.

    எனது மனைவியைக் காட்டிலும் அவள் மிகவும் மெல்லியவள். பத்து வயது குறைவாக இருக்கலாம். மிகவும் வெள்ளை நிற அல்ஜீரியப் பெண். எமது கதைகளுக்குள் அவள் விவாகரத்து எடுத்து 5 வருடங்கள் என அறிந்தேன்.

    “நீங்கள் இப்போதும் தனியாகவா ?” எனத் தொடக்கத்தில் கேட்டேன்.

    “ஆம்! 5 வருடங்கள் தனியாக…”

    “சொல்வதற்கு மன்னிக்கவும்…. நீங்கள் அழகுத் தேவதை போல இருக்கின்றீர்கள்… தனிமை வாழ்வு துன்பமானதல்லவா?”

    “துன்பம், நான் தனிமையை விரும்புகின்றேன்.”

    “உங்களது கணவன் உங்களுக்குக் கொடூரமான துன்பங்களைச் செய்தவர் என நான் நினைக்கின்றேன்.”

    “உங்களது நினைப்புத் தவறு… அவர் மிகவும் அன்பானவர்…”

    “ஏன் அன்பானவரைப் பிரிந்துள்ளீர்கள் என நான் உங்களிடம் கேட்பது தவறா?”

    “உங்களிடம் எதனையும் சொல்லலாமா?”

    “எனது வாழ்வில் நான் நிறையத் தத்துவங்களைப் படித்துள்ளேன். நீங்கள் எதனையும் சொல்லலாம்….”

    “நன்றி… செக்ஸ் திருப்தி கிடைக்காததால்தான் நான் பிரிந்தேன்….”

    யஸ்மீனிடம் நான் தொடக்கத்தில் அவளது செக்ஸ் விருப்புகள் மீது கேட்கவில்லை.

    “நீங்கள் தனியாகவா?” என என்னிடம் அவள் கேட்டாள்.

    “நான் இப்போது தனியாகவில்லை!” எனச் சொன்னபோது அவளது விழிகளில் மௌனமாக வெளிப்பட்ட சோர்வை நான் கண்டுகொண்டேன்.

    நான் ஒருபோதுமே யஸ்மீனுடன் இன்ப உறவு கொண்டதில்லை. ஆனால் கரோலினுடன் இப்போதும் கள்ள உறவுகள் உள்ளன. அவள் எனக்குத் தருவன, எனது மனைவி எனக்குத் தருவன அல்ல. “இன்பம் களவுத் தொட்டிலிலும் உள்ளது” என்பதை அவள் என்னிடம் சில வேளைகளில் சொல்வதுண்டு.

    கரோலின் எனது கடைக்கு ஒரு தடவைதான் வந்தாள். அதிக தினங்களில் காலையிலேயே அவள் வீட்டுக்குச் செல்வதால், கடை பிந்தியே திறக்கப்படும். அதில் ஒருபோதும் நட்டமே இல்லை. அவளது தழுவுதலை வாங்குதல் லாபம் என்பது எனது நினைப்பு.

    இந்த இரவில் கடையைப் பூட்டிவிட்டு வெளியில் நடந்தபோது யஸ்மீனைத் தூரத்தில் கண்டேன். சில நிமிடங்கள் பேசவேண்டும் எனும் எண்ணம் வந்தது. வேகமாக நடந்தேன்.

    “மாலை வணக்கம்.” என்றபோது அவளது முகம் என்முன் திரும்பியது.

    “இது இரவு, நீங்கள் வீட்டுக்குப் போகவில்லையா?”

    “இது இரவு, நீங்களும் வீட்டுக்குப் போகவில்லையா?”

    “எனது தங்கை அருகில் உள்ளாள்… எனது வீடு அவளது வீட்டுக்குத் தொலைவில் அல்ல…”

    இரவின் அமைதியான ஒளியில் அவளது முகத்தில் கிடந்த சேதிகள் எனக்குத்தெரியாது

    “உங்களுக்கு நேரமிருந்தால் எனது வீட்டுக்குச் சில நிமிடங்கள் வரலாமே?”.

    எனது வீட்டுக்குப் பிந்திப் போவதில் ஒரு வித சிக்கல்களும் இல்லை. “நிறைய வாடிக்கையாளர்கள்!” என எனது மனைவிக்குச் சொல்வேன். நான் வீடு போகும்போது அவள் தூக்கத்தில் இருப்பதுதான் அதிகம்.

    “மிகவும் நன்றி! உங்களது வீட்டுக்குச் சில நிமிடங்கள் வருகின்றேன்.”

    அவளுடன் நடந்தபோது, அவளது முட்டாக்கு மிகவும் அழகியது எனச் சொல்ல விரும்பியது எனது மனம். யஸ்மீனின் உடல் எனக்குச் சூட்டைத் தந்தது என்பது ஓர் பேருண்மை. ஆனால் நான் அவளிடம் அதை ஒருபோதும் சொன்னதில்லை.

    சமூக உதவிக் கட்டிடத்தில்தான் அவள் வசிக்கும் இடம் இருந்தது. நாங்கள் லிப்டுக்குள் ஏறினோம்.

    “9 ஆவது மாடி!” என்றாள்.

    ஓர் 14 மாடிக் கட்டிடத்தில் நான் 2 ஆவது மாடியில் வாழ்கின்றேன் என்பதை அவளுக்குச் சொல்ல வேண்டுமா?

    கதவை அவள் மிகவும் அமைதியாகத் திறந்தாள்.

    உள்ளே நுழைந்ததும் நான் நடுங்கினேன். நிறையச் சிலைகள். சிறிதும் பெரியவைகளும். வியக்கும் கலைத்துவம் கூடியன. நான் மெதுவாக நடந்தேன்.

    “இருங்கள்!”

    அவள் காட்டிய இருக்கை தங்கம் போல பட்டது. ஆம்! இருக்கை தங்க நிறத் திசுவால் அணியப்பட்டு இருந்ததைக் கண்டேன்.

    “உங்களது வீட்டின் சிலைகள் மிகவும் சிறப்பான கலைத்துவம் கொண்டன. இவைகளை வாங்க நிறையப் பணம் செலவளித்திருப்பீர்கள் என நான் நினைக்கின்றேன்.”

    அவள் சிரித்தாள்.

    “ஏன் இந்தச் சிரிப்பு?”

    “நான் இவைகளை வாங்கவில்லை.”

    “நீங்கள் அதிஸ்டம் கொண்டவர். பலர் உங்களுக்குப் பரிசாகத் தந்தன இவைகள் என நான் நினைக்கின்றேன்.”

    மீண்டும் அவள் சிரித்தாள்.

    “ஏன் மீண்டும் இந்தச் சிரிப்பு?”

    “நான் தான் இவைகளைப் படைத்தேன்.”

    எனக்கு மயக்கம் வரும்போல இருந்தது. Alberto Giacometti, Pablo Picasso, Léonard de Vinci இன்னும் பல பேரது படைப்புகளின் மேல் நிலையில் அவளது படைப்புகள் இருந்தன என்பதுதான் காரணம்.

    “நான் உங்கள் விரல்களை முத்தமிடலாமா?”

    “ஏன்?”

    “உங்களது கலை விரல்கள்…. “

    “எனது விரல்கள், விரல்கள் மட்டுமே.”

    “உங்களது விரல்களுக்கு அஞ்சலிகள்….”

    “நேரம் உங்களுக்குப் போகலாம்… சிறிது குடிக்க விருப்பமா?”

    “ஆம்! ஓர் கிளாஸ் தண்ணீர்…”

    “விஸ்கி?”

    “ சரி, கொஞ்சமாக…. உங்களுடன்…. “

    அவள் இரண்டு அழகிய கிளாசுகளை எடுத்து மேசையில் வைத்தாள்.

    பல ஆண்டுகளாக நான் மதுவைக் குடிக்கவில்லை. முன்பு மிகவும் குடித்தேன். இப்போது குடிப்பதில் நிறைய விருப்பம் இல்லை. எனது கடைக்கு வரும் அழகிய பெண்களை இரவுகளில் நினைப்பதே என் குடி.

    ஓர் மிடறு இழுத்ததும் எனக்கு வங்கியின் நினைவு வந்தது. எனக்குக் கடன்தந்த பச்சை விழிச் செல்வியின் நினைவுகள் வந்தன. என்னை நான் அவமதித்தேன் இந்த நினைப்பினால்.

    “உங்கள் முகம் சிறிது சோகமாக உள்ளது…”

    “உண்மை!”

    “உங்களுக்கு விருப்பமானால் காரணத்தை அறியலாமா,?”

    “அறியலாம்! இது ஓர் வங்கிக் கதை….”

    “சிறிய கடைகளால் நிறைய லாபம் சம்பாதிக்க முடியாது… உங்களுக்கு வங்கியில் கடன் பிரச்சனை இருக்கும் என நான் நினைக்கின்றேன்… கவலை வேண்டாம்… உங்களுக்கு நான் உதவி செய்வேன்….”

    “யஸ்மீன்… எனக்கு கடன் பிரச்சனை ஏதும் இல்லை… எனது கடை லாபங்களை முத்தமிடுவது… “

    “நிச்சயமாக உங்களது வங்கிக் கதை எனக்கு விளங்கவில்லை….”

    நான் கதையச் சொன்னேன்.

    “நாளை வங்கிக்குச் செல்லுங்கள்… அவளுக்கு முத்தம் கொடுத்து நன்றியைச் சொல்லுங்கள்…”

    “செல்லுதலில் எனக்கு வெட்கமாக இருக்கின்றது…

    “செல்லுங்கள்! அவள் உங்களது செய்தியால் சந்தோசப்படுவாள்…. என நான் நினைக்கின்றேன்.”

    “செல்வேன்”.

    நான் எனது வீட்டுக்குத் திரும்பும் வேளையில் அவளது சமையல் அறையில் இருந்த ஓர் சிறிய நிர்வாணச் சிலையில் எனது விழிகள் ஒட்டின.

    “அழகிய சிலை…?”

    “ஆம்!”

    “இந்த முகத்தை நான் கண்டுள்ளேன்…. “

    “எங்கு?”

    “பலவேளைகளில், எனது கடையில் ….”

    “அவளை உங்களுக்குத் தெரியுமா?”

    “ஆம்!”

    “யார் அவள்?”

    “நீங்கள்தான்……”

    நான் அவளைப் பார்த்தேன்…. எனது பார்வைக்குள் அவள்….

    கதவு திறக்கப்பட்டது.

    முத்தங்களை அவளுக்குக் கொடுக்காமல் அவளை விட்டுப் பிரிந்தேன்.

    எனது இரவு அவளது சின்னச் சிலையுடன் கழிந்தது.

    oooooooo

    திடுதிப்பென நான் காலையில் வெளியே வந்தேன் . வீதிகளில் எவருமே இல்லை. மெத்ரோ ஸ்டேசனின் முதல் கதவு மூடப்பட்டு இருந்தது. நேரத்தைப் பார்த்தேன். காலை 5 மணி. இந்த நேரத்தில் நான் ஒரு போதுமே எழுந்ததில்லை. இதுதான் முதல் தடவை. ஆச்சரியமாக இருந்தது. மூடப்பட்டு இருந்த கடைகளைப் பார்த்தேன்.

    எனது கடையை நோக்கி நடந்தேன். ஆம்! எனது கடையும் மூடப்பட்டு இருந்தது.

    வங்கி திறப்பது ஒன்பது மணிக்கு.

    இப்போதோ 5.

    திரும்பவும் வீடு செல்வதா?

    ஏன்?

    மீண்டும் தூங்கியபடி இருக்கும் மனைவியோடு தூங்குவதா?

    முடியாது.

    எனது கடையின் முன் இருந்தேன்.

    திறத்தல் இலகு.

    ஆனால் இருந்தேன்.

    ஓர் சின்னப் பெண் என் அருகில் குந்தினாள்.

    “நெருப்பு உள்ளதா?”

    “இல்லை.”

    “பலரிடம் நெருப்புகளைக் கேட்டுள்ளேன்…. இல்லை… இல்லை …. இல்லை … எனும் பதில்கள்…. எனது மரிஜுவானா நெருப்பின் தூரத்தில் உள்ளது … கொடுமை…”

    “நெருப்பின் அருகில்தான் உள்ளது…”

    “அருகிலா?”

    “அருகில், எனது கடைக்குள்…”

    “ஏன் உள்ளே இல்லாமல் வெளியே?”

    “கேள்விகளை நிறுத்து… உனக்கு நெருப்புத் தேவை… “

    திறப்பைக் காட்டினேன்.

    அவள்தான் கடையை அந்தக் காலையில் திறந்தாள்.

    “நெருப்பு?”

    லைட்டர்கள் பகுதியைக் காட்டினேன்.

    “நிறைய லைட்டர்கள். மிகவும் அழகிய வடிவுகளில் … “

    “அனைத்தும் உனக்கு….”

    பல லைட்டர்கள் அவளது பாய்க்கினுள்.

    “நெருப்பைத் தா !”

    அவளது மரிஜுவானாவை மூட்டினேன்.

    இழுத்தாள் ….

    பின் எனக்குக் கொடுத்தாள்….

    இழுத்தேன்… மீண்டும் இழுத்தேன் ….

    நாங்கள் எழுந்தபோது இரவு 1 மணியாக இருந்தது.

    “நீ யார்?”

    அவளின் கேள்வி.

    “நீ யார்?”

    எனது கேள்வி.

    உள்ளிருந்து கடையைத் திறந்தபோது அவள் வெளியில் வந்து எனக்கு முத்தங்கள் தரவில்லை.

    “நீ கிழவன் அல்ல!”

    எனச் சொல்லி மிகவும் அமைதியாக நடந்து … என் விழிகளில் இருந்து மறைந்தாள்.

    உண்மையிலேயே இவளது மொழியில் நான் வங்கியையும், வங்கிகளையும் மறந்தேன். எனது கடையையும்.

    Postad



    You must be logged in to post a comment Login