Recent Comments

    அணி இலக்கணம்… சே! இலக்கியம்!

    68 இலக்கிய நாய(ன்)மாரே!

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாக வேணும்.

    புலன் பெயர்ந்தும் பெயராமலும், இலக்கியம் படைச்சும் செய்தும் கொண்டிருக்கிற நீங்கள், யாழ்ப்பாணிப் பின்புலத் தமிழர்களாக இருக்கிறதால, அந்த முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு இலக்கியக் கூட்டம் மாதிரி, சங்கங்கள், கட்சிகள் தொடங்காட்டியும், ஆளுக்கொரு இயக்கம் தொடங்கினது மாதிரி அணி திரண்டிருக்கிறதோ, அவ்வப்போது துரோகி ஒழிப்பு பாணியில கோஷ்டி மோதல்களில் ஈடுபடுறதோ எனக்கு பெரிய ஆச்சரியம் இல்லை.

    அதுவும் நாலு பேர் சேர்ந்தாலே, பகையெல்லாம் திசையெட்டும் பறந்தோட வைத்த பேரணி என்று பேஸ்புக்கில பீலா விடுற பரம்பரை!

    ஒரே வித்தியாசம், நீங்கள் வெற்றி அல்லது வீரமரணம் அளவுக்கு போறேலை, அவ்வளவு தான்!

    சண்டை முடிய உங்கட சோலியளைப் பாக்கப் போடுவியள்!

    கருத்துச் சுதந்திரம் பற்றி கனக்க கதைக்கிற முற்போக்கு புத்திசீவிகள் தான் மோசமான கருத்து மறுப்பாளர்கள் எண்டது எனக்கு நல்லாத் தெரியும்.

    நீங்களும் ஊரில எவடம்? யாழ்ப்பாணம் தானே!

    வோல்டேயர் சொன்னதாக இணையத்தில உலாவிற மேற்கோளை மேற்கோள் காட்ட முண்டியடிக்கிறது நீங்கள் தான்.

    கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேணும் எண்டு சொல்லிற உங்களில, மற்ற இலக்கியவாதிகளுக்கு எதிராக நோட்டீஸ் அடித்து வெளியிடுறது முதல், கூட்டங்களில் கலாட்டா பண்ணுவது வரையும் கண்டிருக்கிறேன்.

    மற்றவே நடத்திற இணையச் சந்திப்புகளை பகிஷ்கரிக்கிறது, நக்கல் அடிக்கிறது, அதுக்குள்ள போய் உங்கட கருத்தை நிலை நாட்ட குத்தி முறியிறது எல்லாம் கண்டு தான் இருக்கிறன்.

    தடி இருந்தா அடிச்சிக்கிட்டிருப்போம். கத்தி இருந்தா குத்திக் கிட்டிருப்போம். துப்பாக்கி இருந்துச்சு, சுட்டுக் கிட்டோம் எண்டது மாதிரி...

    நோட்டீஸ் இருந்திச்சுது, அடிச்சுக்கிட்டோம் தான்!

    என்ரை முன்னோர்கள் செய்த புண்ணியமோ என்னவோ, பூமி சூடாகிறதால வாற இயற்கை அனர்த்தங்களில... சே... உங்கட தலைக்குள்ள இருக்கிற gas சூடாகிறதால வாற அனர்த்தங்களில நான் ஆப்பிடுறேலை.

    நல்ல காலம். நானும் உங்களைப் போல Chartered, Certified, Card carrying இலக்கியவாதியாக இல்லாமல் இருக்கிறது.

    உங்கட உதைகள் பத்தாதெண்டு, உங்கட சொம்புகள், அல்லக்கையள், குண்டரடிதடிப்பொடிகள் வேற தர்ம அடி போட அலையுதுகள்.

    இரண்டு தமிழர், மூன்று கட்சி!

    அதில இரண்டாவது முதலாவதில இருந்து பிரிஞ்சது, மூண்டாவது, இரண்டும் சேர்ந்த கூட்டமைப்பு!

    நீங்களும் இப்பிடி அணி திரண்டு, சேர்ந்து, பிரிந்து எல்லாம் இலக்கிய யாகம், வேள்வியள் செய்யிறதை நானும் காணிறனான்.

    ஒற்றுமையே பலம், அதிலயும் நாங்கள் ஒற்றுமையா இருக்கிறதைக் காட்ட வேணும் எண்டு குத்துப்பட்டுக் கொண்டே குடும்பமா இருக்கிற மாதிரி, நீங்களும் அணி திரளுறதும் எனக்கு பிரச்சனையில்லை.

    உங்களோட அணி சேராமல் இருக்கிறதும் எனக்கும் பிரச்சனையில்லை.

    பிரச்சினை என்னண்டா...

    எனக்கு தெரிஞ்சு நாளிதுவரை இலக்கியத்தில, சோ அணி, சே அணி தான்.

    இதோட அணிசேராமல் ஒரு செ அணி!

    சே..சே.. நீங்கள் கனக்க யோசிக்கப்படாது.

    சே அணியை எழுத்துப் பிழையோட யோசிக்கக் கூடாது. நான் சொல்லிறது லண்டன்.

    மற்றது எங்க நிக்குது எண்டு ஆருக்கும் தெரியாது! அது இணையத்துக்குள்ளால யாழ்ப்பாணத்திலயும் நிக்கும்! இரண்டாம் ஆளுக்கு தெரியாமல் கொழும்பிலயும் நிக்கும்!

    செ அணி எண்டவுடன 'எல்லாம் காலம் தான்!' எண்டு நீங்கள் நினைக்கப்படாது.

    அது கடவுள் மாதிரி. தூணிலயும் துரும்பிலயும் இருக்கிற கடவுள் மாதிரி, எல்லா அணிக்குள்ளயும் இருக்கும்.

    ஆசானுக்குள்ளயும் இருக்கும்! ....க்குள்ளயும் இருக்கும்!

    இலக்கியம் எண்டது, பேருக்கும் பிழைப்புக்கும் எண்ட பின்னால்...

    எல்லாமே Free for all தானே!?

    நான் சொல்றது, ஆஸி அணி.

    சேர்த்தாலும் பிணி, சேர்ந்தாலும் பிணி என்று யாரும் அணி சேர்க்காமலும் சேராமலும் இருக்கிற One man army.

    நீங்கள் ஏற்றுக் கொள்ளிறியளோ இல்லையோ, ஆள் ஒரு நல்ல கதை சொல்லி எண்டது எனக்கு தெரியும்.

    அதை நீங்கள் வெளியில சொல்ல மாட்டியள்.

    நான் சொல்லுவன்.

    என்னைப் பற்றிய கதைகளையும் சொல்லி எண்டதால!

    பிறகென்ன? தடுத்தாட் கொண்டு விட்டு நம்ம வேலையைப் பார்த்தது தான்.

    என்னைப் பற்றிய கட்டுக்கதைகள் சொல்ல, நான் மேதகுவும் இல்லை.

    ஆமைக்கறிக் கதை சொல்ல செ சீ யும் இல்லை!

    ஆக, இந்த புலன் பெயர் ஈழத்தமிழ் இலக்கியத்தில எனக்கு தெரிஞ்சு மூன்று அணி தான் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருந்தன்.

    எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு ஒரு ஜெமினி!

    கமல் ரஜனிக்கு ஒரு பிரபு!

    புதுப் பெடியளை எனக்கு கனக்க தெரியாது.

    விஜய் அஜித்துக்கும் ஆரும் இருப்பினம் தானே!

    அது மாதிரி, முந்தின ஹீரோக்களுக்கு தோரணம் கட்டி, இரத்தம் வித்து படம் பாத்த ரசிகர்கள் மாதிரி, இந்த இலக்கிய ஹீரோக்களுக்கு பாலாபிஷேகம் செய்ய சொம்புகளும், இரத்தம் சிந்த அல்லக்கையளும் இருக்குத்தானே!?

    இப்பிடி இந்த இலக்கிய சர்ச்சைகள், மோதல்கள், அடிபிடி எல்லாம் ஓரமாய் நிண்டு ரசிக்கிறது ஜாலியாத் தான் இருக்கும். இந்த அடிபாட்டுக்குள்ள ஆர் வெல்லுகினம் எண்டு பார்த்து சீக்காய் அடிக்கத் தொடங்கிற ஆக்கள், உள்ளுக்குள்ள சிரிச்சுக் கொண்டிருக்கிற ஆக்கள், உள்பெட்டிக்குள்ள தகடு குடுக்கிற ஆக்கள், ஒருத்தரையும் நோகாமல் gap க்குள்ள எல்லாருக்கும் வேலையைக் குடுக்கிற ஆக்கள் எண்டு எல்லா இலக்கிய பெருந்தகைகளையும் கண்டுதானே வந்திருக்கிறன்.

    இந்த இலக்கிய அடிபாடுகளுக்குள்ள இன்னொரு சைட் ஷோ ஓடியிட்டிருக்கும். அது இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும். அது படுக்கையறை முதல், மர்ம அங்க லாவண்ய விபரிப்புகள் வரைக்கும் இருக்கும். அது உங்கட அடிபிடிகளை விட இன்னும் சுவாரஷ்யமா இருக்கும்.

    நானும் என்ரை அலுவலோட, என்ன தோட்டம் கொத்திற வேலை தான், பிசியாய் போனவுடன கொஞ்சம் கவனக் குறைவாக இருந்திட்டு திரும்பிப் பாக்கிறன்.

    எல்லாம் தலைகீழாப் போச்சு!

    உப்பிடித் தான் நானும் பேப்பர் விடுறதை விட்டுட்டு, தொழிற்சங்கப் போராட்டத்தில தலையை விட்டு திரும்பிப் பாக்க...

    உங்களில பல பேரால் பாசிஸ்ட் என்று சொல்லப்பட்டவர் உங்களில் பலருக்கே தேசிக்காய் தலையர் ஆனவர். அவரை தேசிக்காய் தலையர் ஆக்கின ஆக்களைப் பற்றி ஒரு நாளைக்கு எழுதத் தான் இருக்கு!

    குளிர் யுத்தம் முடிய அமெரிக்கா ரஷ்யா போய், அமெரிக்கா சீனா எண்டு வந்த மாதிரி, பனிகளின்ரை யுத்தம் முடிஞ்சு புதிசா இரண்டு அணி வந்திருக்காம்.

    சோ அணி, சா அணி!

    இதென்ன பலாய்டா! இரண்டுமே குழந்தைப் போராளிகள்.

    தான் மட்டும் தான் குழந்தைப்போராளி எண்டு ஒருத்தர் மற்றவரை அவ்வாறு அங்கீகரிக்காத child soldiers!

    Stand at ease!

    ஓலைக்கால்! சீலைக்கால்!

    குழந்தையளின்ரை சண்டை எண்டு விடேலாது எண்டு பாத்தா, அது அணிகளாகிப் போச்சுதாம்!

    சோவோ, சாவோ, ஆளுக்கு ஆயிரம் சொம்புகளும் அல்லக்கையளும் இல்லாமலா போகும்?

    அண்ணை, உதை விடக்கூடாது!

    உப்பிடி ஒரு அண்ணை மாண்டு போனது வேற கதை!

    Conventional army ஒருபுறம் சண்டை பிடிக்க, ஆழ ஊடுருவும் படையணி தங்கட பாட்டில பின்னூட்டத்தில விளாசித் தள்ள...

    இந்த summer முடியும் மட்டும் உந்த சமருகளை follow பண்ண முடியாதபடி தோட்டத்தில களையெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிற எனக்கு புதிசா ஒரு பயம் வந்திருக்கு.

    அதுக்கு காரணமான உண்மையைக் கண்டுபிடிக்காட்டி, உது நம்முடைய 'இருத்தலுக்கு' அச்சுறுத்தலாகி விடுமோ எண்ட எண்ணம் நித்திரையை வேற குழப்புது!

    சே.. சே... இத்தனை அணிகளுக்குள்ள ஆரிட்ட அந்த இலக்கிய அளவுகோல் இருக்கு எண்டு எல்லாம் நான் கேட்க மாட்டன்.

    அந்த அளவுகோலைத் தந்தியள் எண்டா, என்ரையும் உங்கட அளவுக்கு பெரிசோ எண்டு, அது தான் நான் எழுதுறதுகளும், அளந்து பாக்கலாம் எண்ட எண்ணமும் எனக்கு இல்லை.

    ஏழாவது ஈழப் போரைத் தொடங்கின பாவம் என் மீதும் என் பிள்ளைகள், பரம்பரை மீதும் இல்லாமல் போகக் கடவதாக!

    என்ரை பிரச்சனை வேற!

    இதில நான் சொன்ன அத்தனை பேரும் என்ரை நட்பு பட்டியலில இருக்கிறியள்.

    சொந்தப் பேரிலயும், பேக் ஐடியிலயும்!

    அவையை விட, உந்த இலக்கியச் செம்ம(றி)ல்களில் பெரும்பாலோரும் அதுக்குள்ள!

    நான் என்ன சொல்லிறன் எண்டதை விட, தங்களைப் பற்றி ஏதும் சொல்லிப் போடுவனோ எண்ட எண்ணமாயிருக்கலாம்!

    எல்லாரும் இருந்தாலும், ஒருத்தரும் நான் எழுதின எதையும் லைக் பண்ணிறேலை.

    அது எனக்கு பிரச்சனையும் இல்லை.

    உங்களைப் போல இலக்கிய மேதகுக்களுக்கு அது எல்லாம் கௌரவக் குறைச்சல் எண்டது தெரியும். நீங்கள் மற்றவேயின்ரை பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு லைக் போட்டதாகக் கூட கண்ட ஞாபகம் இல்லை.

    அதுவும் சொம்புகள் கண்டா என்ன நினைப்பினம் எண்ட எண்ணமாயும் இருக்கலாம்.

    நான் கள்ளிகளையும் உள்ளிகளையும் பற்றி எழுதினால் கூட நீங்க கண்டதாக காட்டிக் கொள்ள மாட்டியள் எண்டு தெரியும்.

    உங்களிட்ட லைக் வாங்க வேணும் எண்டு நானும் அலைஞ்சதில்லை...

    பாவனைக்கு உகந்தது என்று சீல் குத்தின மாதிரி, உங்கட லைக் கிடைச்சுத் தான் அதற்கு அங்கீகாரம் கிடைக்க வேணும் எண்டிறதுக்கு நான் எழுதுறது என்ன மாட்டு இறைச்சியே?

    ஆனா, எல்லாத்தையும் வாசிப்பீங்கள் எண்டது தெரியும்.

    நான் மறந்தாலும், தம்பி மார்க்கு விட மாட்டான். உங்கட கண்ணுக்கு முன்னால கொண்டு வந்து விட்டுட்டுத் தான் வேற வேலை பாப்பான்.

    உங்களுக்கு நான் தீண்டத்தகாதவன் எண்டது எனக்கு தெரியும். உவனைப் பெரிய ஆள் ஆக்கக் கூடாது எண்டு பெருமனது உங்களில ஆருக்கு இருக்கு எண்டதும் தெரியும்.

    உப்பிடி எத்தினை ஆண்டைகளைக் கண்டிருப்பன்?

    நான் வழமையா சொல்றது தான்!

    நீ பெரிய ஆளா இருக்கலாம்!

    எனக்கு இல்லை!

    அதை விடுவம்!

    நான் என்ன உங்களோட சமபந்தி, சம்பந்தமா செய்யப் போறன்!?

    என்ரை பிரச்சனை என்னண்டா...

    உங்கள் அத்தனை பேரிலயும் ஒரே ஒரு ஆள் தான் எனக்கு இடைக்கிடை லைக் போடுறது!

    சா!

    அதுவும் என்னுடைய கடுமையான புலி எதிர்ப்பையும் மீறி போடுறது எண்டா...

    அது நான் போடுறதுக்கு பிரதியுபகாரமாகவும் இருக்கலாம்.

    தான் இலக்கியவாதி இல்லை எண்டு சா சொன்னாலும், அதை வைச்சுக் கொண்டு, என்னையும் அந்த அணி எண்டு முடிவு கட்டி...

    இந்த குழந்தைப் போராளியையும்...

    உங்கட பனிகளின் போருக்கு, கட்டாய ஆட்சேர்ப்பில இழுத்துக் கொண்டு போடுவியளோ?

    நானும் ஓலைக்கால், சீலைக்கால் போட வேண்டி வருமோ எண்டது தான் இப்ப என்ரை பயமும் கவலையும்!

    Postad



    You must be logged in to post a comment Login