Recent Comments

    உள்ளி

    க.கலாமோகன்

    எழுதுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஓர் இதழுக்கு “ஆம்” சொல்லியும் துண்டாக விருப்பமே இல்லை. இதழிலும், இதழ்காரர்களிடமும் கோபம், வெறுப்பு ,உள்ளன எனச் சொல்லமாட்டேன். சில வேளைகளில் எழுதுவதில் என்ன உள்ளது எனும் கேள்வி எனக்குள் வருகின்றது.

    மேசையில் இருந்து விழுந்தது ஓர் வெள்ளைத்தாள். அதனை எடுக்காமல் தூங்கச் சென்றேன். எனது உடலை மெத்தையில் கிடத்தி மூடினாலும் தூக்கம் வரவில்லை. பல நிமிடங்கள் நடத்திய முயற்சிகளும் தூக்கத்தை உடைத்தன.

    குடித்தால் தூக்கம் வரும் என்பது எனக்குத் தெரியும். இன்று தனியாகக் குடிக்க விருப்பம் இல்லை. மாலை இரவில் வீதிகளில் நடந்து ஓர் மதுச்சாலையைத் தேடும் ஆசை எனக்குள் வந்தது.

    17 ஆம் மாடியில் இருந்த மின் தூக்கியில் கீழே போக நுழைந்தேன். 9 ஆம் மாடியில் நின்றது. ரெனே ஏறினாள் . அவளுக்கு முத்தம் கொடுக்க விரும்பாமல் முத்தம் கொடுத்தேன். அவள் எனக்குத் தொல்லைகளைத் தருபவள் அல்ல. சில ஆண்டுகளின் முன்பு தனக்கு 84 வயது என்று எனக்குச் சொன்னாள். பல ஆண்டுகளாக அவளுக்கு அன்புடன் முத்தங்கள் கொடுத்துவரும் எனக்கு அவளிடம் இப்போதும் அன்பு உள்ளது, ஆனால் முத்தங்கள் கொடுக்க விருப்பம் இல்லை. சரி! அவளுக்கு மட்டுமா? யாவருக்கும் முத்தங்கள் கொடுக்கும் விருப்பம் என்னிடம் இல்லை. சில வேளைகளில் இவைகள் தொல்லையால் கிடைக்கும்போது துரத்துவது சுலபமா?

    3 ஆம் மாடியில் ஓர் இளம் பெண் ஏறி என்னைப் பார்த்ததும் தனது முகத்தைத் திருப்பினாள். காரணம் எது என்பது தெரியும். அதனைச் சொல்லவேண்டுமா? சொல்லாது விடுதலில் ஓர் சிறப்பு உள்ளது. இந்த எழுத்தை வாசிப்பவர்கள் பல காரணங்களை யூகிக்க முடியும்.

    முதலாவது வாசகன் : கதையை எழுதுபவர் ஓர் இலங்கைத் தமிழர். முத்தம் கொடுக்காத பெண் வெள்ளை. அவளது இனம் தெரியப்படுத்தப்படவில்லை. கதையை எழுதுபவர் பயத்தைத் தந்திருப்பின் அவள் தனது முகத்தைத் திருப்பியிருக்கலாம்.

    இரண்டாவது வாசகன் : எழுதுபவருக்கு அவளுடன் செக்ஸ் தொடர்பு முதலில் இருந்து பின்பு முறிந்தது என நான் எண்ணுகின்றேன்.

    எட்டாவது வாசகன் : இந்தப் பெண்ணை இவள் விரும்பாமல் இவர் காதலித்தும் இருக்கலாம்.

    பத்தொன்பதாவது வாசகன் : அவள் இனவெறி பிடித்தவள்.

    இருபத்தொராது வாசகன் : இவரோடு விவாகரத்து எடுத்த மனைவியா?

    ரெனே தனது முகத்தை ஆட்டி என்னிடம் பிரிந்தபோது நான் வீதியில் கால் வைத்தேன். சில சிறுவர்கள் போதை வஸ்துகள் குடித்தபடி அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், பெயர் தெரியாது, அவனை எனக்குத் தெரியும், என் முன் வந்து “நலமாக இருக்கின்றீர்களா?” எனக் கேட்டான்.

    எனது வாழும் இடத்துக்கு அருகில் உள்ள வீதிகளில் உலவும் சிறுவர்களையும், இளைஞர்களையும் எனக்குத் தெரியும். இவர்களில் பலர் மாயமாக மறைந்தும் உள்ளார்கள். சிலர் கொலை செய்யப்பட்டும், பலர் சிறைகளது சுவர்களைக் காப்பவர்களாகவும் உள்ளனர்.

    இந்த வீதிகளின் இருப்புகளைக் கண்டுதான் நான் தத்துவம் படிப்பதை நிறுத்தினேன். எனது விழிகளின் முன் இருத்தலும் இறத்தலும் நடந்துகொண்டிருக்கும்போது தத்துவம் எனும் மக்கர் எழுத்துகளை வாசிப்பதில் மனது ஆறுதல் அடையுமா? உடலின் நிர்ணயம் இருத்தலும் இறத்தலும் என இருப்பின் தத்துவம் படித்தலில் எனது அழியும் நேரம் விரைவில் அழிந்துவிடும் எனத்தான் நினைக்கின்றேன்.

    தத்துவஞானிகளாகச் சொல்வோர் பிறருக்காக எழுதுகின்றார்களா அல்லது தமது அரிப்புகளைத் தாமே வாசிக்க எழுதுகின்றார்களா எனச் சிலவேளைகளில் நான் என்னிடம் கேட்பதுண்டு.

    நான்கு வீதிகளைச் சந்திக்கும் சிறிய சந்தியின் ஓர் முனைப்பில் ஒரு மதுபானக் கடை. இதனை நான் ஒவ்வொரு தினமும் காண்பேன். தொடக்கத்தில் பல வேளைகளில் சென்றபோதும், இப்போது அதிகமாகச் செல்வதில்லை. இந்த மதுபானச் சாலையில் நிறையப் பெண்கள் வந்து குடிப்பதுண்டு. கலவரங்கள் அங்கு நடந்ததை ஒரு போதுமே நான் கண்டதில்லை.

    அங்குதான் நான் ஓர் மிகவும் மொத்தமானவரைக் கண்டேன். தொடக்க தினங்களில் எனது விழிகள் அவரைப் பார்த்தன. அமைதியாகக் குடித்தபடியே இருப்பார். சேவகி அவர் முன் சிரித்தபடி கச்சான்களைக் கொடுத்ததைப் பல தடவைகள் கண்டுள்ளேன். முதுமையும் களைப்பும் அவரது முகத்தின் மீது. சில வேளைகளில் அவர் தத்துவஞானியா என எனக்குள் கேட்டுள்ளேன். சரி! இந்தக் கேள்வி சரியானதா? சில வேளைகளில் அவர் ஓர் எழுத்தாளராகவும் அல்லது கடத்தல் செய்பவராகவும் இருக்கலாம். மதுபானச் சாலைக்கு வெளியால் நான் அவரை ஒவ்வொரு தடவையும் தனியாகவே கண்டதுண்டு. உண்மையில் அவர் தனிமையில் வாழ்பவரா? சில வேளைகளில் ஓர் கவர்ச்சிக் கன்னி ஊதிய அவரது வயிறில் இருந்து அவருக்குக் காம வித்தைகளைக் காட்டும் சாத்தியமும் இருக்கலாம்.

    வாழ்வு கேள்விகளின் கைதி என நான் அவ்வப்போது நினைப்பதுண்டு.

    எனது வீதிகளை மறந்து வேறு ஓர் வீதியைத் தேடியபடி. ஆம்! நான் குடிக்கவேண்டும். எங்கு குடிப்பது என்பது என் முன் பெரிய கேள்வியாக எழுந்தது. எங்குமே குடிக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

    பல தடவைகள் நான் ரயிலுக்குள் இருந்து, குடித்து இறங்க வேண்டிய இடத்தை மறந்து தூர இடங்களில் இறங்கியுள்ளேன். அப்போது நான் பாரிஸில் இருக்கவில்லை. ஆனால் அங்குதான் வேலை செய்தேன். ஓர் உணவகத்தில். அது ஓர் நல்ல உணவகம். பல நாடுகளின் பியர்களும் அங்கு இருந்தன. அவைகள் நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு.

    நாம் காலையில் மதியம் (உணவகத்தில் மதியம் என்பது 10, 10.30, 11 மணிகளாக இருக்கும்) சாப்பிடும் வேளையில் ஓர் மலிவான பியர், கன்டெர்போறோ அல்லது வல்ஸ்தார் என்பது அதன் பெயராக இருக்கும் என்பது எனது நினைப்பு. சாப்பாட்டு மேசையில் அது இருக்கும். அதுதான் அங்கு வேலை செய்பவர்களுக்கானது.

    அப்போது அது எனக்குத் தண்ணீர். ஒவ்வொரு மிடறு வாயுள் போகும்போது எனக்கு முதலாளியில் எரிச்சல் வரும். அங்கு வேலை செய்யும் இரு சேவகிகளும் என்னைப் பார்த்து மவுனமாகச் சிரிப்பார்கள். நிச்சயமாக நான் அவர்களுடன் செக்ஸ் செய்ததில்லை. அந்தப் பெண்கள் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டதும் அவர்களை எனது நனவுக் கனவுகளில் கண்டேன். ஆம், படுப்பதற்காக, அவர்களோடு கிடப்பதற்காக.

    நிலக்கீழ் அறைக்குள் வாடிக்கையாளர்களுக்காக குளிரில் பாதுகாக்கப்படும் பியர் போத்தல்களைப் பார்த்ததால் எனக்கு எமக்குத் தரப்படும் தண்ணி பியரில் மிகவும் வெறுப்பு வந்தது. மேலே பியர் போத்தல்கள் குறையும்போது கீழே இறங்கி அவைகளை எடுத்துவருவது நான் தான். தொடக்கத்தில் இறங்கும் வேளைகளில் ஓர் பியர்தான் களவாக எனது வயிறுக்குள் போயிற்று. பின் பல வேளைகளில் இறங்கத் தொடங்கினேன். பல அழகிய போத்தல்கள் எனது தாகத்தால் வெறுமையாகின. இதனால்தான் நான் உணவகத்தை விட்டு வெளியே தள்ளப்பட்டேன்.

    இப்போது நான் ஓர் சிறு வீதிக்குள். வெளிச்சம் தெரிந்தது தொலைவில். அது ஓர் மதுபானச் சாலையாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். அருகில் வரும்போது எனது நினைப்புத் தவறவில்லை. அது ஓர் சிறிய மதுச் சாலை. அதனுள் நீளமான வயோதிபர் தனது தலையைச் சொறிந்தபடி ஆடிக்கொண்டிருந்தார். ஓர் கிளாஸ் அவரது கையில் இருந்தது.

    அங்கே ஓர் இளம் பெண் மேசையிலே தனது தலையைத் தாழ்த்தி இருந்தாள்.

    இருவர் இருந்து குடித்துக்கொண்டு இருந்தனர்.

    ஓர் வயோதிபன் வாசித்தபடி இருந்தான்.

    ஒன்பது மணி இருபது நிமிடங்கள் எனக் காட்டியது மணிக்கூடு.

    “மாலை வணக்கம்.” என வயோதிபர் என்னிடம் சொன்னார். எனது பதில் வணக்கத்தைப் பெற்ற பின்னர், அவரது விழிகள் என்னைப் பார்த்த விதம் ஓர் கேள்வியாக இருந்தது.

    “ஓர் கிளாஸ் வைன் தயவு செய்து …..”

    “போர்டோவா (bordeaux) அல்லது கோத் து ரோனா (Côtes-du-rhône)?”

    “போர்டோ.”

    தொடக்கத்தில் நான் பியர்களையே குடிப்பதுண்டு. இப்போது இவைகளைக் குடிப்பது குறைந்ததால் எனது நாவுக்கும் மூளைக்கும் இதம் தருவது வைனே. டெலிவிசனைத் திறந்தால் அவ்வப்போது மதுவைக் குறையக் குடியுங்கள் என விளம்பரங்கள் வரும். மது கெட்டது எனும் டாக்குமெண்ட்களைக் காண்பேன். இவைகளில் அர்த்தங்கள் உள்ளனவா? மதுவைக் குறையக் குடித்தால் மது தயாரிக்கும் கிராமத் தொழிலாளர்கள் தற்கொலை செய்யமாட்டார்களா? மதுவைக் குறையக் குடித்தால் விஸ்கிக் கம்பெனிகள் மூடப்படுமா?

    இந்தச் சிந்தனைகள் ஓர் வைன் மிடறு எனக்குள் போனபோது எழுந்தன. அது சுவையான போர்டோ வைன். இரத்தம் அதனது நிறமாக இருந்தது. இதனைத் தயாரித்த தொழிலாளர்களின் இரத்தமாக இருப்பதைத் தெரிந்தும் அதனைக் குடித்தேன். இந்தத் தொழிலாளிகளும் தமது இரத்தத்தைப் போத்தல்களில் குடித்து இருக்கலாம்.

    இரத்தம் எனது மனதுக்குச் சிக்கலானது. வைனால் ஒரு சிறு சுகம் வந்தபோதும் அதனது நிறம் எனக்கு ஓர் சுகத்தையும் ஊட்டவில்லை.

    இரத்தம் கொலைத்துவத்தின் நிறம். அது கம்யூனிசத்தின் நிறமும் கூட. வைன் இரத்தம் கலைத்துவவத்தின் நிறமா அல்லது தொழிலாளர் போராட்டத்தின் நிறமா? இந்தக் கேள்வி பலமான கேள்வியாகப் பலருக்கு இல்லாதுவிட்டாலும், வைன் இரத்தம் எனக்குள் எழுதும் வெறியைப் பலவேளைகளில் எழுப்பியது எனலாம்.

    மீண்டும் நான் ஓர் போர்டோவை அமைதியாகக் கேட்டேன். அமைதியாக எனக்குள் இறங்கியது இரத்தம்.

    ரூமில் இருந்தபோது தூக்கம் வந்த எனக்கு இப்போது விழிப்பு வந்தது. எழுதும் ஆசையும். ஆனால் என்னிடம் தாள்கள் இல்லை. பல வேளைகளில் அவைகள் இருக்கும்போது எழுத்து ஆசை வரவே வராது. இல்லை என்றால் வரும். எழுதத் துடிப்பவைகளை மனதில் எழுதுவேன். ரூம் போனால் எழுதியவைகள் அழிந்துவிடும்.

    அட! அழிந்துபோன கதைகள் எத்தனையாம்!

    வாழ்வுகள் அழியும். கதைகள் அழியக் கூடாதா? எது எப்படியோ நாம் கதைகள் உலகில்தான் வாழ்கின்றோம். வாசிப்பதற்காக எண்ணமுடியாக் கதைகள். ஆம்! ஒவ்வொரு தினத்திலும் நாம் கதைகளையே பார்க்கின்றோம், கேட்கின்றோம். கேட்கும் கதைகள், பார்க்கும் கதைகள் எழுதும் கதைகளிலும் கூடியவை.

    இப்போது நான் உள்ளி வாங்க ஓர் கடைக்குச் சென்ற நினைவு வருகின்றது.

    அது பலசரக்குக் கடைதான். அங்கு உள்ளி எனக்குத் தென்படவேயில்லை.

    “உங்களிடம் உள்ளி உள்ளதா?”

    “ஆம்!” எனத் தேடிவிட்டு, விற்பனையாளர் “இல்லை” என்று சொல்கின்றார்.

    எனக்குத் தலை வெடித்தது. உள்ளிகளை அரைத்து, துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட கோழித் துண்டுகளில் அவைகளைப் பூசி, ஓவனுக்குள் சமைக்க நினைத்தேன் . வெட்டப்பட்ட கோழித் துண்டுகளோ குசினிக்குள்.

    “உள்ளி” உள்ளது எனப் பதில் என் பின்னால் இருந்து வருகின்றது.

    கடையில் வேலை செய்பவரின் பதில் இல்லை.

    ஓர் நடுத்தர வயதுக் கறுப்புப் பெண்தான் இதனைச் சொல்கின்றாள். என்னை அவளது அழகு சொக்க வைக்கின்றது. இந்தச் சொக்கித்தலும் ஓர் கதைதான், கவிதையாகவும் இருக்கலாம். அவளும் என்னைப் பார்க்கின்றாள்.

    “எங்கே?”

    நான் அவளுக்குப்பின் செல்கின்றேன். அது பெரிய கடை. அவளது அமைதி நடையுடன் ஒத்துவதாக எனது அமைதி நடை. பலரும் இல்லாத இடத்தில் நிற்கின்றாள்.

    “இங்கே உள்ளி இல்லை.”

    “ஏன் உள்ளது என என் பின்னிருந்து சொன்னீர்கள்?”

    “ஆம்! எனது வீட்டில் நிறைய உள்ளிகள் உள்ளன என்பதால்தான். உங்களை எனது வீட்டுக்கு அழைக்கலாமா?”

    நானும் அவளும் வீதியில் நடந்தபடி. அந்த வீதியில் சூரிய வீச்சுகள் இல்லை. பழைய கதைகளில் சூரிய வீச்சுகள் காலையும், மாலையும், இரவிலும் இருக்கும் என்பதால்தான் வம்புக்கு இதனைச் சொன்னேன்.

    “உங்களுக்கு உள்ளிகளில் விருப்பமா?”

    “நிறைய விருப்பம். இப்போது அவர் இல்லாததால் கொஞ்சமாகவே சாப்பிடுகின்றேன்.”

    “அவர் இருந்தபோது நீங்கள் உள்ளிகளை நிறையச் சாப்பிட்டீர்களா?”

    “ஆம்! அவர் உள்ளிகளை நெருப்பில் எரித்துத்தான் சாப்பிடுவார். உங்களுக்கு உள்ளிகளில் விருப்பமா? “

    “நான் சிறுவனாக இருந்தபோது உள்ளிகளில் விருப்பம் இல்லை. இதனது மணம் எனக்கு வெறுப்பை ஊட்டியது. பின்பு ஓர் துனீசியப் பெண்ணோடு இருந்தேன். அவளது சமையல் அறையில் நிறைய உள்ளிகள் இருந்தன. பல தினங்கள் அவைகள் உரிக்காது விட்டதால் மாசு பிடித்து அவைகளை அவள் குப்பைக் கூடத்தில் எறிந்தாள்.

    “எறிந்த பின்பும் அவள் மீண்டும் உள்ளிகளோடு வந்ததால் அவைகளை அவள் உரிப்பாள் என நான் நினைத்தேன். அவைகளும் குப்பைக் கூடத்தின் சாப்பாடுகள் ஆகின….

    “எனக்குக் கவலைதான் வந்தது. பின்பும் அவள் உள்ளிகளோடு வந்ததால் நான் அவைகளை உரிக்க வெளிக்கிட்டேன். இதனால் அவள் என்மீது நிறையக் காதல் காட்டினாள்…. எனது உரிக்கும் விதம் வேகமாகவும், கலைத்துவமாகவும் உள்ளது எனச் சொல்லி எனது இதயத்தை உரித்தாள். எனது இதயம் அவளது உள்ளி ஆகியது.”

    “பின் நீங்கள் ஏன் இப்போது அவளுடன் இல்லை?”

    “காரணத்தை எப்படி உங்களிடம் சொல்வது?”

    “சொல்லுங்கள், நான் பதட்டம் அடையமாட்டேன்.”

    “தொடக்கத்தில் உள்ளி உரிப்பது சிக்கலான வேலையாக இருந்தது. சில தினங்களில் உரிக்கும் கலையில் முன் வந்தேன். இதனால்தான் நான் அவளைப் பிரியவேண்டிய நிலை வந்தது.”

    “நீங்கள் சில கணங்களின் முன் அவள் உங்களை உள்ளியாகக் கருதினாள் என்றீர்களே…..”

    “இது உண்மைதான், ஆனால் உள்ளிகளிகளை உரித்து உரித்து, இந்த உரிப்பில்தான் எனக்கு நிறைய விருப்பம் இருந்தது, அவைகளது உரிப்பில்தான் அதிக நேரத்தைக் களித்தேன். அவள் நிர்வாணமாக என்னை அழைத்தாலும், நான் உள்ளிகள் உரிப்பில்தான் இருந்தேன் என்பதுதான் உண்மை…. இதனால்தான் அவள் என்னை வெளியால் துரத்தினாள்.”

    நான் என்னை அழைத்தவளின் வீட்டுக்குள் நுழைந்தேன். மேசையில் நிறைய உள்ளிகள் கிடந்தன. அவைகள் உரிக்கப்பட்டு அல்ல. நான் அவைகளைப் பார்ப்பதை மறுத்து நான் அவளைப் பார்த்தேன்.

    “ஏன் நீங்கள் உள்ளிகளைப் பார்க்காமல் என்னைப் பார்க்கின்றீர்கள்?”

    “நீ ஓர் உள்ளியாகப் படுகின்றாய் என்பது தவறா?”

    அவளது முகம் மெதுமையாக நிலத்தைப் பார்க்கின்றது.

    “உன்னை உரிக்கலாமா?”

    “உரி!” என்று கத்தினாள்.

    அவள் கறுப்பு உள்ளியாக இருந்தாள். சுவையின் பெருக்கத்துள் நானும் அவளும் எம்மைத் தொலைத்தோம்.

    அதிகாலையில் “ஒவ்வொரு இரவையும் எனக்குத் தா! உன்னை மிகவும் கலைத்துவமாக உரிப்பேன்” எனக் கேட்டேன்.

    “முடியாது!”

    “ஏன்?”

    “முடியாது!”

    பதில் தெரியாமலேயே நான் அவளது வீட்டை விட்டுக் கவலையுடன் பிரிந்தேன்.

    மதுச்சாலையில் இப்போது நானும், அதனது முதலாளியும்.

    “மீண்டும் ஓர் போர்டோ.”

    “சரி! இது உங்களுக்குத் தரும் கடைசியான போர்டோ .”

    “ஏன்?”

    “எனது கடையை மூடும் நேரம் வந்துவிட்டது.”

    “உங்களது கடையில் உள்ள ஓவியங்கள் மிகவும் அழகானவை ….”

    “நன்றி, இவைகளைக் கீறியது பிக்காஸோ அல்ல.”

    “நான் பிக்காஸோவின் ஓவியங்களை ரசிப்பவன் அல்லன். இவைகள் என்னை ரசிக்க வைக்கின்றன. இவைகளைக் கீறியது யார் எனத் தெரியலாமா?”

    “நானே இவைகளைக் கீறினேன்”

    எனது விழிகள் அவரை வியப்புடன் பார்த்தன.

    “நீங்கள் பெரிய ஓவியர். உங்களது ஓவியங்கள் எனது விழிகளுக்கு விருந்தாக இருக்கின்றன.”

    “மன்னிக்கவும், நான் ஓர் ஓவியன் அல்லன் “

    “சரி நீங்கள் ஓவியன் இல்லை என நான் நினைத்து, எப்படி இவைகளைக் கீறினீர்கள் என நான் கேட்கலாமா?”

    “இந்த மதுச்சாலையைத் தொடங்கியபோது, எவருமே இங்கு வரவில்லை. காரணம் தேடுவது என்னுள் இல்லாது இருந்தது. அப்போது நான் வெறுமையை வாழ்ந்ததுபோல, மதுச்சாலையின் சுவர்களும் அதனை வாழ்ந்தது. இதனால்தான் சுவர்களது வெறுமைகளை எரிக்கும் திட்டம் ஒன்று எனக்குள் ஏற்பட்டது எனலாம். கீறல் தெரியாதபோதும் கீறினேன். இவைகள் வெறுமைகளை அழிப்பதற்காகவே. இவைகள் தாம் சுவர்களில்.”

    “இப்போதும் கீறுகின்றீர்களா?”

    “இல்லை, மன்னிக்கவும்…………”

    போர்டோ கிளாஸை வெறுமையாக்குகின்றேன்.

    “கடை மூடும் நேரம் வந்திவிட்டது.”

    “ஓர் போர்டோ போத்தலை வாங்க முடியுமா?”

    என் முன் ஓர் அழகிய போத்தல்.

    “22 ஈரோ.”

    “இதனைத் திறந்து தர முடியுமா?”

    சில கணங்களில் போத்தல் திறந்து போர்டோ மணம் என் மூக்கை முத்தமிட்டது.

    “நன்றி, மீண்டும் வருவேன்.” எனச் சிறிதாக ஆடி வெளியே வந்தேன்.

    றூம் திரும்புவதா?

    அருகில் பூட்டப்பட்ட தோட்டம் இருந்தது. சிறிய இரும்பு வேலி. ஏறினால் உள்ளே போகலாம்.

    நான் உள்ளே. கனவுகள் எனக்குக் கம்பளமாகின.

    தோட்டத்தைத் திறப்பவன் “எழு!” எனக் கத்தியதால் காலையில் நான் விழித்தேன். போர்டோ போத்தல் எனது தலையணியாக இருந்ததை எழுந்தபோதுதான் காண முடிந்தது.

    பாரிஸ் 21.47 23/11/2018

    Postad



    You must be logged in to post a comment Login