வசந்த காலம் பிறந்ததும் மாற்றான் தோட்டத்து டியூலிப்புகளைக் கண்டு மையல் கொண்டு, 'நானும் புதுவீடு வாங்கினனான் தானே, உவேக்கு வைச்சுக் காட்டிறன்' என்று வீரசபதம் எடுத்திருப்பீர்கள்.
இந்த வசந்த காலப் பூக்களுக்கான குமிழ்களை நடுவதற்கான காலம் இப்போது தான்.
இவை குளிர் காலத்தில் நடப்படுவதால், fall bulbs என்று அழைக்கப்படுகின்றன. பனி கொட்டி மூடி நிலம் உறைந்திருக்கும்போது, உள்ளே வேர் விட்டு, வசந்த காலம் வரும் வரை காத்திருந்து துளிர் விட்டு பூத்துக் குலுங்கும். பின்னர் பல்கிப் பெருகி வருடா வருடம் பூத்து அழகு தரும். இவை குளிர் தொடங்கும் போது விற்பனைக்கு வரும்.
நமது மணிவாழை எனப்படும் Canna lily, Dahlia, Gladiolus போன்றன வசந்தகாலத்தில் நடப்பட்டு, கோடை காலத்தில் பூக்கும். இதனால் இவை Summer bulbs என்று அழைக்கப்படும். இவை வசந்த காலத்திலேயே சந்தைக்கு வரும். இவை குளிரைத் தாங்க முடியாதன என்பதால், இவற்றை குளிர் காலத்தில் கிண்டி, அடுத்த வருடம் வரைக்கும் நிலக் கீழ் அறையில் சேமித்து பாதுகாக்க வேண்டும்.
ஆர்வக் கோளாறில் வாங்கி நட்டு, கிண்டி நிலக்கீழ் அறையில் வைக்க, காய்ந்து சக்கையாகிப் போனதாலும், கிண்டி மினக்கெடுறதோ என்ற திமிரிலும் இந்த கோடை கோலக் குமிழ்களில் நான் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்தக் குளிர்காலக் குமிழ்களில் பல வகைப் பூக்கள் உண்டு. இந்தக் குமிழ்களில் சிறிய பூக்கள் முதல் பெரும் பூக்கள் வரை உண்டு.
Muscari எனப்படும் நீலப் பூ நில மட்டத்தில் பூக்கும் சிறியன. இவற்றை மரங்களுக்கு கீழே நில விரிப்பு மாதிரி நடலாம். இந்தக் குமிழ்கள் மிகவும் சிறியன.
Crocus எனப்படும் பூ அதை விட கொஞ்சம் பெரியது. அழகாக இருக்கும். உறைபனி கரைந்து முதல் பூப்பது இது தான்.
Narcissus எனப்படும் Daffodilகள் அடுத்துப் பூக்கும். இவை பெரிய குமிழ்கள். வெள்ளை, மஞ்சள் கலப்பு நிறங்களில் வரும்.
அடுத்து Hyacinth பூக்கும். சுகந்தமான மணம் வீசும் இது நில மட்டத்திலிருந்து ஒரு ஆறு அங்குல உயரத்தில் பூக்கும். நீலம், சிவப்பு, மஞ்சள் நிறங்களில் இது கிடைக்கும்.
அடுத்து Tulips, Allium, Iris, Lily என்பன பூக்கும்.
இதில் Allium, Iris, Lily என்பன பெருமளவில் வாங்கி நட்டேன். அவை எங்கே என்றே தெரியாது. குளிரில் இறந்து போய் விட்டன. அவற்றை வாங்கி நட்டால், வேர் ஊன்றி வளர்ச்சி பெறும் வரைக்கும், நிலத்தை குளிர்காலத்தில் விழும் இலைகளால் மூடி விடலாம்.
ஆகவே, இவை பூக்கும் காலங்களைத் தெரிந்து வைத்திருந்து அதற்கு தகுந்த மாதிரி, முற்றத்தில் நட்டால், ஒவ்வொரு பூவும் பூத்து முடிய மற்றது பூக்கத் தொடங்கும். இப்படியாக வசந்த காலத்தில் இருந்து கோடை தொடக்கம் வரை தோட்டம் ஒரே பூக்கள் மயமாக இருக்கும்.
சிலர் ஒரே இடத்திலேயே வேறுவேறு ஆழங்களில் நடுவதன் மூலம் சிறிய இடத்தில் பல வகையான பூக்களை வளர்க்கலாம் என்பார்கள். ஆழத்தில் Daffodil, பிறகு Tulip, அதன் மேல் Hyacinth, அதன் மேல் Crocus என்று நட்டால் தொடர்ச்சியாக பூக்கள் மயமாக இருக்கும்.
ஆனால் எனக்கு அவ்வாறான நடுகையில் நாட்டமில்லை. இந்த குமிழ்கள் சில வருடங்களில் பல்கிப் பெருகும் போது அவற்றை பிரித்து வேறுவேறு இடங்களில் நட வேண்டும். அப்போது கிண்டுவது சிக்கலான விடயம் என்பதால் நான் அக்கறை காட்டுவதில்லை.
குளிர் வந்து நிலம் இறுகுவதற்கு முன்னால் இந்தக் குமிழ்களை நடுங்கள்.
குமிழ்களின் அளவுக்கு தகுந்த மாதிரி ஆழத்தில் நட வேண்டும். Daffodil சுமார் எட்டு அங்குலமும், Tulip, Hyacinth ஆறு அங்குலமும், Crocus நான்கு அங்குலமும் ஆழத்தில் நட வேண்டும்.
குளிர் காலத்தில் இந்தக் குமிழ்கள் கனடாவில் பெரும்பெட்டிக்கடைகள், Costco, Garden Center களில் கிடைக்கும்.
Veseys.com, Brecksbulbs.ca இரண்டும் தபால் மூலம் பெறக் கூடியன. அவர்கள் அழகான Catalog களை அனுப்பி ஆசை காட்டி மோசம் செய்வார்கள். இப்படியாக நிறையப் பணம் செலவிட்ட அனுபவம் உண்டு.
இந்தக் குமிழ்களை நடும் போது இருக்கும் பிரச்சனை... அணில்கள் தோண்டி கொறித்து விடும். எனக்கு பெரிதாக பிரச்சனை இருந்ததில்லை. இம்முறை மட்டும் இரண்டு Daffodil களை கிண்டி கொறித்து விட்டிருந்தன.
ஆழ நட்ட பின்னர் நன்றாக நீர் ஊற்றி, இலைகளால் மூடி விடுங்கள். அணில்களிடமிருந்து பாதுகாக்க ஒரு வழி.
சிபிசி தொலைக்காட்சியில் ஒரு தோட்டக்காரியைப் பேட்டி கண்ட போது, எல்லா இடமும் நட்ட பின்னால், சும்மா வெறும் இடம் ஒன்றில் நடுவது போல, தான் பாசாங்கு காட்டுவதாகவும், அணில்கள் அதை நம்பி அந்த இடத்தை மட்டுமே கிளறுவதாகவும் சொன்னார். தனக்கு ஒரு போதுமே அணில்களால் பிரச்சனை இருந்ததில்லை என்று சொன்னார். எனக்கு இது நம்ப முடியாத விடயமாக இருக்கிறது. நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம்.
You must be logged in to post a comment Login