Recent Comments

    புள்ளடி

    க.கலாமோகன்

    (பிரான்சில் வாழும், இலங்கைத் தமிழ் அகதிகள் பலர் விளம்பரப் பத்திரிகைகளை இலவசமாக விநியோகம் செய்யும் கம்பனிகளில் வேலை செய்பவர்கள். வீடு வீடாகச் சென்று தபால் பெட்டிகளுள் இந்தப் பத்திரிகைகளைப் போட வேண்டும். மாடி வீடுகளில் கீழ் தளத்தில் தபால் பெட்டிகள் இருக்குமாயின் வேலை ஓரளவு இலகு. இல்லையேல் மாடி மாடியாக ஏறி, கதவுகளின் கீழால் பத்திரிகைகளைத் தள்ள வேண்டும். எட்டு, பத்து மாடிகள் வரை ஏற வேண்டிய தொல்லை. லிப்ட் இருந்தால் ஆக்கினை ஓரளவு குறையும். எது எப்படியிருந்தாலும், பத்திரிகைக் கட்டுகள் கொண்ட பாய்க்கினைத் தோழில் போட்டுக் கொண்டு எட்டு மணித்தியாலங்கள் வீதிகளில் நடந்தேயாக வேண்டும். பத்து மணித்தியாலங்கள் நடப்பவர்களும் உள்ளனர். அண்மையில் (80 களில் ) இங்கு வந்த தமிழ் இளைஞர்களில் (18ற்கும் 30ற்குமிடையிலான வயது) பலர் உடலை வருத்தும் இந்த வேலையைச் செய்வைதைப் பாரிஸ் வீதிகளில் சாதாரணமாகக் காணமுடியும். நானும் இந்த வேலையைச் செய்துள்ளேன்.

    புள்ளடி (எக்ஸ்) எனும் இந்தச் சிறுகதை, இந்தத் தொழில் செய்பவர்களுடன் சம்பந்தப்பட்டதுமல்ல, இங்கு வாழும் தமிழ் அகதிகளின் பல முகங்களில் ஒருமுகத்தை மட்டுமே காட்டுவது.

    இந்தக் கதையில் அனைத்துப் பாத்திரங்களுக்கும் கொடுக்கப்பட்டது யாழ்ப்பாணத் தமிழ். கதை இப்போது எழுதப்பட்டிருப்பின் பிரெஞ்சுப் பாத்திரத்தின் மொழியைச் சுத்தமான தமிழில் எழுதியிருப்பேன். இது 1990 இல் பிரசுரமானது. ஓவியத்தை வரைந்தவர் வீரகேசரி ஓவியர் மொறாயஸ்)

    விளம்பரப் பத்திரிகைகளை இலவசமாக விநியோகம் செய்யும் கம்பெனியின் வாசலைத் தனது இடது காலால் கடந்து சென்று, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிற்குப் பொறுப்பான ஹெககனிடம் செந்தூரன் வேலை கேட்ட போது, அவன் இவனைத் தன் ஏளன விழிகளினால் சோதித்தான். செந்தூரன் பேசிய பிரெஞ்சு அவனிற்குச் சிரிப்பை ஊட்டியது. நேரமோ முசுப்பாத்திக்கு உகந்ததாயிருக்கவில்லை. கம்பனியின் விநியோகத் திறமையில் தங்கள் நம்பிக்கையை அடைவு வைத்த நிறுவன உரிமையாளர்கள் ஓயாமல் போன் பண்ணிக் கொண்டிருக்க, அதை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான். கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான் செந்தூரன். போனில் பேசும்போது கூட சிரிக்கும் பழக்கம் கொண்ட ஹெகன் ஒரு தடவை அதற்கு முத்தமிட்டபோது அது அவனது காதலியாக இருக்கலாம் என்று செந்தூரன் நினைத்துக்கொண்டான்.

    “கம்பனியில் ஆக்களை எடுக்கினம்” என்று கேள்விப்பட்டதால்தான் செந்தூரன் ஒரு நம்பிக்கையுடன் அங்கு வந்திருந்தான். றெஸ்ரோறண்ட் வேலை பறி போனதிலிருந்து இரண்டு மாதமாக அவன் தனது சமறியைத் தீர்க்கவில்லை. சனங்கள் அடிக்கடி அவனை நச்சரித்தபடி. அவர்கள் மத்தியிலிருந்து சாப்பிடுவதுகூட அவனிற்கு அருவருப்பைத் தந்தது. வேலை செய்து இரண்டு மாதச் சமறியையும் தூக்கி அவர்கள் முகத்தில் எறிந்து விடுவது என்ற ஆக்ரோஷத்தில்தான் அங்கு வந்திருந்தான்.

    சில மாதங்களாகக் கம்பனியில் தொழிலாளர் தட்டுப்பாடு. முதலாளி ஹெகனைக் கூப்பிட்டு “ஆட்களைத் தேடு” என்று கட்டளையிட்டிருந்தான். ஆட்களை எடுப்பதிலும் விரட்டுவதிலும், அவன் விண்ணன். சிரித்தல், சீறுதல் இவையிரண்டும் அவனுடன் கூடப் பிறந்தவையோ என்று அங்குள்ள தொழிலாளர்கள் அடிக்கடி எண்ணுவதுண்டு.

    ஹெகன், செந்தூரனை உட்காருமாறு கேட்டுக்கொண்ட பின் ஜித்தான் (பிரான்சில் மிகவும் மலிவான சிகெரட்) ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான். “உனக்குப் புள்ளடி போடத் தெரியுமோ?”

    செந்தூரன், ஹெகனின் கேள்வியைக் கேட்டு விழிகளை விரித்தான். ஊரிலே, தேர்தல் காலங்களில் - புள்ளடி போட்டு உறுப்பினர்களைத் தெரிவு செய்தவை நினைவின் முன் பிளாக் அண்ட் வைற் படமாக ஓடின. வெளிநாட்டுக்காரர்களிற்கு பிரான்சில் புள்ளடி போடும் உரிமையில்லையென்பதும் - நாஷனலிற்றி கிடைத்தால் மட்டுமே புள்ளடி போடலாம் என்பதும் அவனுக்குத் தெரியுமாதலால், ஒரு வேளை தனக்கு நாஷனலிற்றி தந்து நிரந்தரமாக வேலையில் வைத்துக் கொள்ளத்தான் இப்படிக் கேட்கின்றானா என்று சந்தேகத்துடன் நினைத்துக் கொண்டான்.

    “எனக்குப் புள்ளடி போடத் தெரியும். ஆனால் நான் வெளிநாட்டுக்காரன். எனக்கு இங்கே வாக்களிக்கும் உரிமையில்லையே?”

    சிரமப்பட்டுத் தனது கொச்சைப் பிரெஞ்சில் சொல்லி முடித்த போது, ஹெகன் சிரி சிரியென்று சிரித்தான். ஏளனம் பூசப்பட்டிருந்த சிரிப்பு.

    “நான் உன்னிடம் புள்ளடி போடத் தெரியுமாவென்று கேட்டது. உனக்கு நாஷனலிற்றி எடுத்துத் தருவதற்காகவல்ல. நீ வெளிநாட்டுக்காரன். உன்னால் இங்கே நாஷனலிற்றி எடுக்க முடியாது. எங்கே உனது பப்பியை (விசா)க் காட்டு.”

    செந்தூரனின் நப்பாசை தவிடுபொடியாகியது. ஒன்பதாக மடிக்கப்பட்டிருந்த தனது மூன்று மாதப் பப்பியை எடுத்து அவன் முன் வைத்தான். ஹெகன் அதனை அலட்சியமாகத் தூக்கி - அவதானமாக உற்று நோக்கினான்.

    “உன்னை வேலைக்கு எடுக்கிறத்துக்கு இது காணும். ஒண்டை மட்டும் ஞாபகத்திலை வைச்சிரு. இதை நீ குறிப்பிட்ட திகதியிலை புதுப்பிக்காட்டி, உன்னை வேலையிலிருந்து நிப்பாட்டிப் போடுவன்.” “ஓம் டிறெக்டர் (பணிப்பாளன்)” “இப்ப நான் விஷயத்துக்கு வாறன். உங்கடை நாட்டிலை தலைவர்களைத் தெரிவு செய்ய நீங்கள் புள்ளடியள்தான் போடுறனியள் எண்ட விஷயம் எனக்குத் தெரியும். ஆனா அங்கே புள்ளடி போடத் தெரியாதவையளும் இருக்கினம். புள்ளடியைப் புள்ளடி மாதிரிப் போடாட்டி அது கணக்கிலெடுக்கப்படுகிறதில்லை . இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமெண்டு நீ தலையைப் போட்டு உடைக்காதை.

    “பிரான்சில் நாங்கள் புள்ளடி போடுறதில்லை. எங்களுக்கு வேறை மெதேட் இருக்கு. ஆனா, எங்கடை கொம்பனியிலை வேலை செய்யிற தொழிலாளியளுக்கு புள்ளடி போடத் தெரிஞ்சிருக்கவேணும் எண்டதை வலியுறுத்திறம். ஏனென்டா, விளம்பர விநியோகத் தொழிலுக்கு இது மிகவும் அவசியம்.

    “உன்னை நான் வேலைக்கு எடுக்கிறன். நாளைக்கு விடிய ஏழு மணிக்கு இங்கை வா, உனக்குப் பொறுப்பாயிருக்கிற செவ் (பொறுப்பாளர்) எங்கை எப்பிடிப் புள்ளடி போடுறெதன்பதை வடிவா விளங்கப்படுத்துவார். வேலையை வடிவாச் செய்ய வேணும். எட்டு மாடியெண்டா எட்டு மாடியும் ஏறத்தான் வேண்டும். ஓ றெவுவார் (போய்விட்டு வருக)”

    “ஓ றெவுவார் மிஸ்ஸு. (போய் வருகிறேன் திருவாளரே)”

    சம்பளம் எவ்வளவு என்பதைக் கூடக் கேட்காமல் கம்பனியை விட்டு வெளியே வந்தான். சீக்காயடித்தபடி மெத்ரோவிற்குள் (சுரங்க ரயில்) இறங்கியபோது இரண்டு பிரெஞ்சுக் குமரிகள் அவனைப் பார்த்துக் கிளு கிளுவென்று சிரித்தனர்.

    மறுநாள். 7 மணிக்கு 20 நிமிடங்கள் இருந்தபோது செந்தூரன் கம்பனி வாசலிற்கு வந்த சேர்ந்தான். அது வெறுமையாய் இருந்தது. சிறிது தூரத்தில் தெரிந்த கபேயினுள் (கோப்பிக் கடை) நுழைந்து - கபேகிறேம் (பால்க் கோப்பி) ஒன்றை வாங்கி, அதற்குள் நான்கு சீனிக் கட்டிகளைப் போட்டுக் கரைத்து - அவதி அவதியாகக் குடித்துவிட்டுக் கம்பனியை நோக்கி நடந்தபோது, எந்த மெதேட்டில் பேப்பர்களைப் பெட்டிகளுள் போடுவது என்று பிளான் பண்ணினான். பிரான்சிற்கு வந்த புதிதில் இரண்டு மாதங்கள் விசாவில்லாமல் இருந்தபோது களவாகச் சில தினங்கள் பேப்பர் விநியோகம் செய்த ஞாபகம் அவன் முன் வந்தது. அப்போதெல்லாம் ஏன் புள்ளடி போடும்படி கேட்கப்படவில்லெயன்று வியந்து கொண்டான்.

    வாசலிற்கு வந்துவிட்டான். அங்கே நிறையத் தமிழ்ச் சனங்கள். சிகெரட் புகைத்தபடி, சத்தம் போட்டுக் கதைத்துக் கொண்டிருந்த அவர்கள் அவனைப் புதினத்துடன் பார்த்தனர். “டிறெக்டர் (பணிப்பாளன்) உம்மைப் பற்றி எனக்குச் சொன்னவர். நான்தான் உம்மடை செவ் (பொறுப்பாளி).”

    மீசை வழிக்கப்பட்டிருந்த ஒரு உருவம் வந்து அவன் முன் தமிழில் பேசியபோது - தனது செவ் தமிழன் என்பதை உணர்ந்து கொண்டான். “எனக்குப் பின்னாலை வாரும். உம்மடை பேர் என்ன?” “செந்தூரன்” “எவடம்?” “கொக்குவில்.” “கொக்குவிலெண்டா மேற்கோ, கிழக்கோ?” “மேற்கு” “மேற்கெண்டா?” “வராகியம்மன் கோவிலடி” “.....” செந்தூரன் ஒரு எக்கீப்பில் (குழு) எட்டாவது ஆளாகச் சேர்க்கப்பட்டான், அவர்கள் இப்போது அவனுடன் கைகுலுக்கிக் கொண்டனர். சரியாக 7 மணிக்கு அவர்கள் செவ்வைப் பின்தொடர்ந்த போது, அவனும் அவர்களின் பின் நடந்தான். நடையின் முடிவிடம் ஒரு அறையாக இருந்தது. நிலம் முழுவதும் காகிதக் குப்பை. செவ் ஒரு பலெத்துக்கு (பேப்பர் கட்டுகள் அடுக்கப்படும் பலகை) முன்னே சென்று- அதன்மீது நூறு நூறாகக் கட்டப்பட்டுக் கிடந்த பேப்பர்களை ஒவ்வொருவரிடமும் கொடுக்க, அவர்கள் தங்களிடமிருந்த பாய்க்குகளிற்குள் போட்டுக் கொண்டார்கள். முருகேசின் முறை வந்தபோது செவ் அவனை முறைத்துப் பார்த்தான்.

    “நீ பேப்பர் போட்ட ஏரியாவிலையிருந்து றெக்ளமேஸன் (முறைப்பாடு) வந்தது. இது மூன்றாவது தடவை. நேற்றைக்கு நான் வந்து பாக்கேக்கை ரெண்டு மூண்டு இடத்திலை புள்ளடியைக் காணேல்லை. பார் (bar) ஒண்டுக்கை நிண்டு நீ டெமி (பியர்) அடிச்சுக் கொண்டிருந்ததைக் கண்டனான் . இண்டைக்குப் புள்ளடியைக் காணாமல் விட்டா பத்திரோனிட்டைச் (முதலாளி) சொல்லி உன்னை வேலையிலிருந்து நிப்பாட்டிப் போடுவேன்.”

    “நானொண்டும் டெமி அடிச்சுக் கொண்டு நிக்கவும் இல்லை, புள்ளடி போடாம விடவுமில்லை. உனக்குத் திமிர். செவ்வெண்டா கொம்பு முளைச்சிருக்கெண்ட நினைப்போ…?”

    குமரேசு கோபத்துடன் கத்தியபோது சிலர் முன்வந்து “அண்ணை உது ஒரு சின்னப் பிரச்சினை” என்று சாந்தப்படுத்தினார்கள். செவ் தனது பற்களை ஒரு தடவை நறுமிக் கொண்டான். இப்போது செந்தூரனின் முறை. பேப்பர் கட்டுகளைக் கொடுத்தபோது தனது கையில் வாங்கிக் கொண்டான்.

    “எங்கை ஐஸே பாய்க் ?” “நான் கொண்டு வரேல்லை... எனக்குத் தெரியாது, நாளைக்கு....” “பிறெகன்னத்துக்கு ஐஸே வேலைக்கு வந்தனீர்? சரி, சோக்கட்டியிருக்கோ?” “இல்லை.” “அப்ப என்னண்டு ஐஸே புள்ளடி போடப் போறீர்?”

    குமரேசு முன்னுக்கு வந்து தன்னிடமிருந்த சோக்கட்டியை இரண்டாக முறித்துப் பாதியைக் கொடுத்த பின், செவ் புள்ளடி போடுவதைப் பற்றிச் சொன்னான்.

    “ஒவ்வொரு ஒழுங்கைக்குள்ளையும் உள்ள மாடிகளுக்கை ஏறிப் பேப்பர் போட்டு முடிச்சோண்ணை, ஒழுங்கை மூலையிலை உள்ள ரோட்டிலை வடிவாப் புள்ளடி போடவேணும். அப்பதான் நீர் இந்த ஒழுங்கைக்குள்ளை வந்து போனனீரா எண்ட விஷயம் எனக்குத் தெரியவரும். வேலையை வடிவாச் செய்யவேணும். கபேயளுக்கை போய் நிக்கக் கூடாது.”

    வோஜிரா வீதி ஒழுங்கை ஒன்றிற்குள் போய்ப் பேப்பர்களைப் போட்டுவிட்டு, மறக்காமல் புள்ளடி போட்டான். புள்ளடி போடும் ஒவ்வொரு தடவையும், சோக்கட்டி தந்த குமரேசனை நன்றியுணர்வுடன் நினைத்தவனிற்கு, புள்ளடி போடுவது விசித்திரத்தை ஊட்டியதுடன், ஊரிலே கேட்ட “போடு புள்ளடி குடைக்கு நேரே, போடு புள்ளடி சைக்கிளுக்கு நேரே” என்ற பழைய கோஷங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

    “பொடியா, எப்பையடா உவங்கள் புள்ளடி போடச் சொல்லிறவங்கள் வருவாங்கள்?”

    அடிக்கடி அவனைத் தொந்தரவுபடுத்தும் செல்லாச்சிக் கிழவியும் வந்து போனாள். புள்ளடி போட்டால், அவளிற்கு இரண்டு ரூபாய் கிடைக்கும்.

    “லெக்ஸன் வந்தாத்தானணை புள்ளடி போடலாம்.” “எப்படா லெக்ஸன் வரும்?” “அஞ்சு வரிசத்துக்குப் பிறகெண....” “ஏனடா அது ஒவ்வொரு நாளும் வாறேல்லை.” “அது அரசியலெணை .” “அரசியலெண்டா என்னடா?” “அரசியலெண்டா அஞ்சு வருசத்துக்கொருக்காப் புள்ளடி போடுறெதணை”

    கிழவி தூக்ஷண படலம் தொடங்க அவன் மாறிவிடுவான். அவள் செத்துப்போய் விட்டாள். புள்ளடி போடும் காலங்களும்தாம். செந்தூரனோ அதை மறக்கமாட்டான்.

    கிழவியின் கனவை, ஒவ்வொரு நாளும் பலதடவை வீதிகளில் செய்யவேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்ட நிர்ப்பந்தம்.

    எப்படியோ அவனது முதலாவது நாள் வெற்றிகரமாக முடிந்தது. செவ் அவனது வேலையில் எந்த நொட்டையையுமே. பிடிக்கவில்லை. வேலை முடிந்து, அவனது எக்கீப் மெத்ரோவை நோக்கி நடந்தபோது முருகேசு கூப்பிட்டான்.

    “வாடா தம்பி டெமி அடிப்பம்.” “அண்ணை எனக்கு உந்தப் பழக்கம் இல்லை.” “அப்ப கபே அடியன்.” இருவரும் பார் ஒன்றுக்குள் சென்று பிரிந்தார்கள்.

    நான்காவது நாள் 79 ஆம் வட்டாரத்தில் பேப்பர் போட்டுக் கொண்டிருந்த போது செவ் வந்து நொட்டை சொன்னான். “நேற்றைக்கு உம்மடை ஏரியா (பகுதி) ஒழுங்காகச் செய்யப்படேல்லை. நாலைஞ்சு றெக்ளமேஷன் வந்தது. கொண்ட்ரோலர் (கண்காணிப்பாளர்) நீர் ஒழுங்காப் புள்ளடி போடேல்லை எண்டதுக்காக என்னைப் பேசினார். நானும் செக் பண்ணினான். ரெண்டு, மூண்டு ஒழுங்கேக்கை புள்ளடியைக் காணேல்லை.”

    செந்தூரனிற்குத் திக்கென்றது. காலும், முதுகும் நோக ஒவ்வொரு மாடி மாடியாக ஏறியதும், பூட்டப்பட்டுக் கிடந்த பிரதான கதவுகளை வந்து யாரும் திறக்கும் வரை காத்திருந்ததும், மாடிகளில் ஏறி ஒவ்வொரு கதவுகளுக்கும் கீழால் பேப்பரை உள்ளே தள்ளியதும், அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

    தனது வேலையை இழந்து விடக் கூடாததென்பதற்காக - அவன் பகீரதப்பிரயத்தனம் அனைத்தையும் எடுத்திருந்தான். ஒருதடவை நாயொன்றிடம் கடி வாங்கியபோதும், அதை எவருக்குமே சொல்லவேயில்லை. “செவ்... நான் எல்லா இடத்திலையும் வடிவாப் புள்ளடி போட்டனான்.” “எனக்குப் புடரீக்கை கண்ணில்லை ஐஸே. இனிமேல் ஒழுங்கா வேலையைச் செய்யும்.” அவன் முகத்தைக் கோபமாக்கிக் கொண்டு போய்விட்டான்.

    ++++++ செந்தூரன் இன்று புள்ளடி போட்டுக் கொண்டிருந்தபோது மழைவந்து அனைத்தையும் அழித்தது. எல்லோரது புள்ளடிகளும் அழிந்திருக்குமென்று நம்பினான். அன்று செவ் அவனைக் கடிக்க வரவில்லை. திங்கட்கிழமை. செந்தூரன் கம்பெனிக்கு வந்து, எக்கீப்புக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த போது - செவ் ஒரு புதுமுகத்துடன் வந்தான். செந்தூரனை நெருங்கி... “உம்மை டிரெக்டர் வரட்டாம்.” என்றவுடன் இருவரும் ஹெகனிடம் சென்றனர். இப்போதும் ஜித்தானைப் புகைத்துக் கொண்டிருந்த அவன் - செந்தூரனை ஆழமாகப் பார்த்தான்.

    “உம்மடை வேலையிலை எனக்குத் திருப்தியில்லை. நீர் ஒழுங்காகப் புள்ளடியும் போடுறீரில்லை. உம்மை வேலையிலிருந்து நிப்பாட்டிறன்” செந்தூரன் தலையில் இடி விழுந்தது.

    “இனிமேல் நான் வடிவா...” செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொண்டு பேச வெளிக்கிட்ட போது... “தபாலிலை உம்மடை சம்பளத்தை அனுப்பி வைப்பேன். ஓ றெவுவார்...” என்றான் ஹெகன்.

    இனி எப்படிக் கூத்தாடினாலும் முடிவு மாற்றப்படாததென்பது அவனுக்குத் தெரியும். சோர்வுடன் கம்பெனியை விட்டு வெளியேறிய போது - அவன் முன் முருகேசு தெரிந்தான்.

    “என்னடா... ஒரு மாதிரியா இருக்கிறாய்?” “அண்ணை... என்னை வேலையிலிருந்து நிப்பாட்டிப் போட்டினம்...”

    “ஏன்...?” “நான் ஒழுங்காப் புள்ளடி போடேல்லையாம்...”

    “புள்ளடியும், மண்ணாங்கட்டியும். உவன் செவ் உனக்கு நல்லாக் காதுக்கை பூ வைச்சிட்டான். ஏன் உவன் உன்னை நிப்பாட்ட வைச்சவன் எண்டது தெரியுமோ?” செந்தூரன் பேசமாலிருக்க முருகேசு விளக்கம் கொடுத்தான்.

    “இண்டைக்கு, உவன் செவ் கூட்டிக் கொண்டு வந்த புது முகத்தை உனக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். அது அவன்ரை மச்சான். பிரான்சுக்கு வந்து ஒரு மாதம். இப்பதான் அவனுக்குப் பப்பி கிடைச்சிருக்கு. அவனை வேலையிலை போடத்தான், உன்ரை வேலையைப் பறிச்சவன். இன்னும் ஒரு மாதத்திலை அவனையும் செவ்வாக்கிப் போடுவான். உவங்கெளல்லாம் அள்ளி வைக்கிறதுக்கு எண்டே பிறந்தவங்கள்.”

    அழவேண்டும் போலிருந்தது. செந்தூரன் அதை அடக்கிக் கொண்டான். “உதுக்கெல்லாம் தலையைப் போட்டு உடைக்கக் கூடாதெடா. வேலையள் வரும், வேலையள் போகும். உனக்குப் பிஸா (இத்தாலிய ரொட்டி) போடத் தெரியுமே?” “இல்லையண்ணை....” “சரி, கோப்பையள் கழுவத் தெரியும்தானே?”

    செந்தூரன் சிரித்தான். “தொல்பியாக்கிலை (வியட்நாமிய, சீன உணவங்கள் அதிகமுள்ள ஒரு இடம்) என்ரை மருமோன் வேலை செய்யிற வியட்நாம் றெஸ்ற்ரோறன்ற் ஒண்டிலை கோப்பை கழுவுறதுக்கு ஒராள் தேவையாம். உன்னைக் கொண்டு போய் அங்கை சேத்துவிடுறன். மாதம் 3,300 பிராங்க் முதலிலை தருவாங்கள். பிறகு கூட்டித் தருவாங்கள் எண்டு மருமோன் சொன்னவன்...”

    முருகேசு சிகெரட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான். “அண்ணை... உங்களை நான் மறக்க மாட்டன்...” “இண்டைக்குப் பின்னேரம் எட்டு மணிக்கு தொல்பியாக் மெத்ரோவிலை நில், சரிதானே.... எனக்கு நேரமாயிட்டுது...” “அண்ணை... மெத்ரோவுக்கு வெளியிலையோ.... உள்ளுக்கையோ?...” “வெளியாலை நிண்டாக் குளிரும்... உள்ளுக்கை நில்...” முருகேசுவின் தலைமறைந்தது.

    செந்தூரன் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு மெத்ரோ எடுக்கச் சென்றான். (யாவும் கற்பனை) 30-12-1990 வீரகேசரி இலங்கை

    Postad



    You must be logged in to post a comment Login