1980களில் தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது . ஒரு படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள் என்பதே அது. அன்றைய காலத்தில் அது ஒரு புதுமையாக பேசவும் பட்டது.கே.வி. மகாதேவன் , ஜி.கே.வெங்கடேஸ் , சங்கர் கணேஷ் , இளையராஜா , அகத்தியர் போன்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்தார்கள். ஒவ்வொரு இசையமைப்பாளரும் ஒரு பாடல் என்ற வகையில் பாடல்களை இசையமைத்தார் படத்தின் பின்னணி இசையை இளையராஜா அமைத்தார்.
நான் ஒரு பொன்னோவியம் கண்டே எதிரே - இசை : இளையராஜா நான் உன்னை நினைச்சேன் நீ என்னை நினைச்சேன் - இசை : சங்கர் கணேஷ் நான் பார்த்த ரதிதேவி எங்கே - இசை : ஜி.கே.வெங்கடேஷ் போன்ற பாடல்கள் நினைவில் நிற்கின்றன.
பல இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைத்தார்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களின் பங்களிப்பு ஒவ்வொரு பாடல்களாகவே இருந்தது.
இது ஏன் புதுமையாக பேசப்பட்டது என்றால் ஏற்கனவே 1940 மற்றும் 1950 கள் வரையான காலப்பகுதியில் ஒரு படத்திற்கு இரண்டு அல்லது சில சமயம் மூன்று இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருந்ததும் , பின் அது 1960 ,1970 , 1980கள் வரையான காலப்பகுதியில் மறைந்தும் போன ஒரு சங்கதியாகவும் இருந்ததனாலேயே ஆகும்.
1930,1940களில் ஏன் 1950 களில் கூட இரு இசையமைப்பாளர்கள் பல படங்களில் பங்களிப்பு செய்தார்கள் என்பதற்கு சில உதாரணங்கள்:
01 மனோன்மணி [1941 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 02 ஜகதலப்பிரதாபன் [1944 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 03 மிஸ் மாலினி [1947 ] இசை: எஸ்.ராஜேஸ்வரராவ் + எஸ்.அனந்தராமன் 04 அபிமன்யூ [1948 ] இசை: சி.ஆர்.சுப்பராமன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 05 கீதாகாந்தி [1949 ] இசை: சி.என்.பாண்டுரங்கன் + லக்ஸ்மான் பிரதர்ஸ் 06 திகம்பரசாமியார் [1950 ] இசை: ஜி.ராமநாதன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 07 பாரிஜாதம் [1950 ] இசை: சுப்பராமன் + எஸ்.வி.வெங்கடராமன் 08 மர்மயோகி [1951 ] இசை: சுப்பராமன் + எஸ்.எம்.சுப்பையாநாயுடு 09 நிரபராதி [1951 ] இசை: கண்டசாலா + பத்மநாபசாஸ்திரி 10 கல்யாணி [1952 ] இசை: சுப்பராமன் + வி.தட்க்ஷிணாமூர்த்தி 11 தேவதாஸ் [1953 ] இசை: சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி 12 சொர்க்கவாசல் [1954 ] இசை: இசை: சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி
இவ்விதம் பல உதாரணங்களையும் காட்ட முடியும்.
பின்னாளில் தங்கள் தனித்துவங்களைக் காண்பித்து சிறந்த பாடல்களை தந்த இசையமைப்பாளர்கள் இவ்விதம் இருவராக பணியாற்றிய காலங்களில் வெளிவந்த திரைப்படப் பாடல்களைக் கேட்டால் யார் யார் எந்தப்பாடல்களை இசையமைத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. எல்லா பாடல்களும் ஒரேவகையாக இருப்பதைக் காணமுடியும்.
மர்மயோகி படத்தில் இடம்பெற்ற சில அற்புதமான பாடல்களான " மனத்துக்கிசைந்த ராஜா " , " இன்பம் இதுவே இன்பம் " போன்ற பாடல்கள் யார் இசையமைத்தார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த இரண்டு பாடல்களையும் சுப்பராமன் இசையின் சாயல் இருப்பதைக் காணலாம். இது எனது ஊகம் மட்டுமே!
தேவதாஸ் படத்தின் சில பாடல்கள் இசையமைத்து முடிந்த நிலையில் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் அகால மரணமடைந்தார். அந்த நிலையில் அவர் ஒப்பந்தமாகிய வேறு சில படங்களை முடித்துக் கொடுக்கும் பொறுப்பு மெல்லிசைமன்னர்களின் பொறுப்பாய் அமைந்தது. தேவதாஸ் , சொர்க்கவாசல் ,சண்டிராணி போன்ற படங்களில் மெல்லிசைமன்னரின் கைவரிசையும் உண்டு. " வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே " என்ற பாடலை விஸ்வநாதன் இசையமைத்தார் என அவரே கூறியிருக்கின்றார்.
ஒரு படத்திற்கென இசையைக்கப்பட்ட பாடல்கள் வேறு படங்களில் பயன்பட்டிருப்பதை பழைய திரைப்படங்களில் நாம் காணலாம்
கூண்டுக்கிளி படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடலை தயாரிப்பாளரும் , இயக்குனருமான ராமண்ணா தனது இன்னொரு படமான குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டார். அந்தப்பாடல் தான் குலேபகாவலியில் இடம் பெற்ற இனிய ஜோடிப்பாடலான " மயக்கும் மாலை பொழுதே நீ போ போ " என்ற பாடல். அதே போலவே மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த " என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன் " என்ற பாடல் எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையமைத்த திருடாதே படத்தில் பயன்படுத்தப்பட்டது.
அமரதீபம் [ இசை: டி.சலபதிராவ் ] படத்தில் " நாடோடி கூட்டம் நாங்க " என்று தொடங்கும் ஒரு பாடல் ஜி.ராமநாதன் இசையில் இடம் பெற்றது.
இசையமைப்பாளர்களிடம் உதவியாளர்களாக இருக்கும் பலரும் இசையமைப்பில் வாத்தியங்களை ஒழுங்குபடுத்துவது , சில சமயங்களில் உதவியாளர்களின் மெட்டுக்களை இசையமைப்பாளர்கள் தங்கள் பெயரிலேயே போட்டுக் கொள்வதும் நடந்திருக்கின்றது.
வி.குமாரிடம் உதவியாளராக இருந்த சேகர் என்ற உதவியாளர் அமைத்த பாடல் தான் நீர்க்குமிழி படத்தில் இடம்பெற்ற " ஆடி அடங்கும் வாழ்க்கையடா " என்ற பாடலாகும். அன்றைய நிலையில் திறமையிருந்தாலும் உதவியாளர்கள் நிலைமை இவ்விதமாகவே இருந்தது.
"தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்த புண்ணியம்மா" என்ற பாடலை பொண்ணுக்கு தங்க மனசு [இசை : ஜி.கே.வெங்கடேஷ் ] படத்தில் உதவியாளராக இருந்த இளையராஜா முதன் முதலில் இசையமைத்தார். அவர் பெயர் கூட டைட்டில் எழுத்தில் கிடையாது.
மேலே குறிப்பிட்டபடி இரு இசையமைப்பாளர்கள் பங்குபெற்ற திரைப்படங்களில் அந்த இருவரும் சேர்ந்து இசையமைத்தார் என்பது பொருள் அல்ல. வெவ்வேறு நிலைகளில் தனித்தனியே இயக்குனரின் அல்லது தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க ஒருவருக்கு ஒருவர் தெரியாமலேயே இசையமைத்தார்கள் என்பதை பின்னாளில் சில சமயங்களில் இசையமைப்பாளர்களின் முத்திரை தெரியும் பாடல்கள் அமைந்தன.
திரைக்கு பின் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் ஹிந்தி திரையுலகிலும் இருந்திருக்கிறது. எஸ்.டி பர்மனின் உதவியாளராக ஜெய்தேவ் இருந்ததும், பிற்காலத்தில் 1970களில் எஸ்.டி.பர்மனின் இசையில் அவரது மகனான ஆர்.டி. பர்மன் பங்காற்றியது பற்றிய செய்திகள் வெளியாயின. குறிப்பாக எஸ்.டி.பர்மன் தனது கடைசிக் காலங்களில் இசையமைத்த திரைப்படங்களில் ஆர்.டி.பர்மனின் பங்களிப்பு இருந்தது என்பர்.
1950களில் புகழபெற்றிருந்த நௌசாத் , அணில் பிஸ்வாஸ் போன்ற பெரிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்த குலாம் முகம்ட் ,அக்காலத்திலேயே சில படங்களுக்கு இசையமைத்து பெரும் புகழ் பெற்றார். 1968ல் குலாம் முகமட் இசையமைத்த Pakeezah என்ற திரைப்படம் அவரது மரணத்தால் தடை பட்ட போது அந்த படத்தின் இசைப்பணிகளை நிறைவு செய்தவர் நௌசாத். அப்படம் பின்னர் 1972இல் வெளியாகி பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தன. அதிலும் குறிப்பாக ஆர்.டி. பர்மனின் இசை அதிக பிரபல்யமடைந்திருந்த நேரத்திலேயே செவ்வியலிசை பாணியில் அமைந்த குலாம் முகமட்டின் இசை பிரபல்யம் அடைந்தது.
பலர் தனித்தனியே இசையமைத்து கொண்டிருந்த காலத்தில் இருவர் இணைந்து இரட்டையர்களாக இசையமைத்ததையும் இந்திய திரையுலகில் காண்கிறோம். ஹிந்தியில் சங்கர் ஜெய்கிஷன் , கல்யாண்ஜி ஆனந்தஜி , லஷ்மிகாந்த் பியாரிலால் , தமிழில் லக்ஷ்மன் பிரதர்ஸ் , விசுவநாதன் ராமமூர்த்தி , சங்கர் கணேஷ் , மனோஜ் கியான் போன்றோர் நன்கு தெரிந்தவர்கள். இரட்டையர்களாக இருந்து இசையமைத்தார்களேயன்றி வேறு வகையில் யாரும் ஒன்றிணைந்து இசையமைக்கவில்லை என்று கூறலாம்.
ஆனால் தனித்தனியே பெரும் புகழ் பெற்ற இரு இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைத்தார்கள் என்ற ஒரு வரலாற்று பெருமை விஸ்வநாதனையும் இளையராஜாவையுமே சாரும்.
நட்சத்திர அந்தஸ்து பெற்ற இரு பெரும் இசையமைப்பாளர்களான விஸ்வநாதனும் இளையராஜாவும் சமகாலத்தவர்கள் என்ற போதும் விஸ்வநாதன் 15வயது மூத்தவர். விஸ்வநாதன் இசையால் பெரும் பாதிப்புக்குள்ளானவர் இளையராஜா.அவரது இலட்சிய இசையமைப்பாளர் விஸ்வநாதன். இயல்பாகவே புதுமை நாட்டமும் மரபு இசைசார்ந்த மெட்டுக்களை அமைப்பதிலும் வல்லவரான விஸ்வநாதனும் , வாத்திய இசையில் மாபெரும் பாய்ச்சலைக்காட்டி இந்திய இசையுலகை உலுக்கிய இளையராஜாவும் இணைந்தது தமிழ் திரையுலகின் வரலாற்று சம்பவமாகும்.
இருவரது இசைவரலாற்றிலும் இந்த சம்பவம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மரபு இசையிலும் ,அத்தோடிணைந்து நவீன இசைகளை உள்வாங்கி புதுமை செய்ததில் மெல்லிசைமன்னர் ஒரு படி முன்னே தமிழ் திரையிசையை நகர்த்தினார் என்றால் அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக மாபெரும் .பாய்ச்சலைக்காட்டிய இளையராஜா. மெல்லிசைமன்னரின் இசைத் தொடர்ச்சியாகவே இருந்தார். இருவரும் தமிழிசை மரபுகளிலும் மெல்லிசையிலும் ஊறித்திளைத்தவர்கள். மெல்லிசைமன்னரின் மெல்லிசை 1960, 1970களை உலுக்கியது என்றால் இளையராஜாவின் மெல்லிசை 1980, 1990களை உலுக்கியது
ஒலிகள் நம்மை ஆழமாகப் பாதிக்கின்றன. நாம் கருவில் இருக்கும் போதே கேட்கின்ற "ம்" என்ற அல்லது ஒருவித இரைச்சல் ஒலி [Drone ] அதிர்வுகள் நாம் பிறப்பதற்கு முன்பே இருக்கின்ற ஒலிகளாகும். இதனை குறிப்பிட்ட ஓர் ஒழுங்கில் . இயற்கையுடன் இசைந்த ஒத்திசைவாக இசையாக உருவாக்கும் போது ஆழ்மனத்தில் பரவச நிலையைத் தருகிறது. அவை ஆழ்நிலையில் நம்மைப் பாதிக்கின்றன.
இந்த ஒத்திசைவு [ Harmony ] இசையின் அழகுகளை மேலைத்தேய செவ்வியலிசை அற்புதமாக வெளிப்படுத்தியது. தமிழ் சூழலில் மெல்லிசைமன்னர்களே அதன் இனிய பக்கங்களைக் காண்பித்த முன்னோடிகள் ஆவர் . இதற்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த "படிக்க படிக்க நெஞ்சில் இனிக்கும் பருவம் என்ற காவியம் " [ இரத்தினபுரி இளவரசி 1960 ] என்ற பாடலின் இனிய வாத்திய இசை சிறந்த உதாரணமாகும்.
ஒலிகளை பின்னணி இசையாக கையாண்டு இளையராஜா சாதனையின் சிகரத்தில் இருந்தார். அந்த இனிய இசையை மெல்லிசைமன்னரின் மெட்டுகளில் நெய்த்தெடுத்து தனது ரசனையின் அழகுகளை நனவோடை இசையாக மாற்றிக் காட்டினார் இளையராஜா.
தழுவி ,தாவித்தாவி வரும் மெட்டின் இனிமையை தான் எப்படியெல்லாம் ரசித்தாரோ அந்த விதங்களிலெல்லாம் இசை ரசிகர்களையும் தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வது போல பிரமிப்பூட்டும் பின்னணியாக அமைத்து மெட்டா , பின்னணி இசையா என்று பிரமிக்க வைத்தார் இசைஞானி !
அந்த இனிமையை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனும் , இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்த மெல்லத்திறந்தது கதவு , செந்தமிழ்பாட்டு , செந்தமிழ் செல்வன் , விஸ்வத்துளசி போன்ற படங்களில் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். மெல்லத்திறந்தது கதவு பாடல்களின் பின்னணி இசையின் சிறப்பை மெல்லிசை மன்னரே மதுரையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாராட்டினார்
சமகாலத்து இரு இசைமேதைகளின் ஒன்றிணைவு மெல்லத் திறந்தது கதவு படத்தில் ஏற்பட்டது. இளையராஜா புகழின் அதி உச்சநிலையிலிருந்த போது இந்த இணைவு ஏற்பட்டது. மெல்லிசைமன்னரின் விருப்பத்திற்காக இசைந்த இளையராஜா இந்த மாதிரியான ஓர் இணைவை நீண்ட காலமாக விரும்பியுமிருந்தார் எனபதை அவரே குறிப்பிட்டும் இருந்தார்.
எண்ணற்ற இனிய மெல்லிசைப்பாடல்களை இசையமைத்து குவித்த மாபெரும் கலைஞன் விஸ்வநாதன் தனது ரசிகனும் திறமைமிக்கவருமான இளையராஜாவுடன் இணைய விரும்பியதும் அதற்கு இளையராஜா இசைந்ததும் இரு மேதைகளின் பெருமைக்கும் ,பணிவுக்கும் எடுத்துக்காட்டாகும். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் இளையராஜாவின் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாகும்.
இந்த இணைவு குறித்தும் அது பெற்ற வெற்றி பற்றியும் பின்னாளில் மெல்லிசைமன்னர் கூறும் போது " அது ஒரு ஆத்மார்த்தமான இணைவு " என்றும் பின்னாளில் வேறு சிலரும் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினார்கள் நான் அதை ஏற்கவில்லை என தெரிவித்தார்.
மெல்லத்திறந்தது கதவு படத்தில் இருவரும் இணைந்து நல்ல பாடல்களைத் தந்தார்கள்.கனியும் சுவையும் போல இரண்டறக்கலந்த அப்பாடல்களை விஸ்வநாதன் மெட்டமைக்க இளையராஜா வாத்திய இசையை அமைத்தார். கேட்பவர்களுக்கு உடனடியாக அவை இளையராஜா பாடல் போலத்தெரிந்தாலும் அதன் ஜீவன் மிக்க மெட்டுக்களை அமைத்தவர் விஸ்வநாதன் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். இருவரும் மெல்லிசையை அதிகம் கடைப்பிடிப்பதும், ஒன்றின் தொடர்ச்சியாய் மற்றொன்று இருப்பதால் இருவரின் இணைப்பும் மிக நேர்த்தியானதாக, ஆத்மார்த்தமானதாக அமைய காரணமாகியது.
கைதேர்ந்த இருமேதைகளின் இசையின் ஆழமிக்க ஒன்றிணைவுக்கும், இசையின் இனிமைக்கும் காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதும் மெட்டைக் குழப்பாத இனிய ஹார்மோனி இசையுமாகும். தனது முன்னோர்களின் இசையையும், அதன் அமைப்புகளில் இளையராஜாவுக்கிருந்த திளைப்பும் , ஞானமும் அதை பேராற்றலுடன் அந்த ஓட்டத்திலேயே எடுத்து செல்லும் கலா மேதமையுமாகும்.
அநாசாயமாகப் பாய்ந்து செல்லும் மெல்லிசைமன்னரின் மெட்டுக்களை தனது வாத்திய இசையால் மடக்கிப்பிடிக்கவும், அதையே விஸ்தரித்து மெட்டில் பொதிந்திருக்கும் உணர்ச்சி வேகங்களை வெளிப்படுத்தவும் சிந்தனை வெளிப்பாட்டில் மெல்லிசைமன்னருடன் ஒன்றித்து நிற்கும் இளையராஜாவால் மட்டுமே அது முடியும் என்பதை இந்த திரைப்படங்களின் பாடல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அது மட்டுமல்ல இருவருக்குமிடையே இருந்த அன்பும் புரிந்துணர்வும் இந்த இனிய இசையின் கூட்டணிக்கு மிகமுக்கியமானதாகும்.
மெல்லத்திறந்தது கதவு படத்தின் அனைத்துப் பாடல்களும் இருவரின் மேதமைக்கு எடுத்துக் காட்டாக இருந்ததது. அப்பாடல்கள் மட்டுமல்ல அடுத்தடுத்து இசையமைத்த சில படப்பாடல்களும் தனி சிறப்புமிக்கவையாக அமைந்தன.
செந்தமிழ் செல்வன் படத்தில் வரும் பாடல்கள்:
01 பாட்டு இசைப்பாட்டு - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 02 குயிலே இள மாங்குயிலே - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 03 கூடு எங்கே தேடி கிளி இரண்டும் - செந்தமிழ் செல்வன் 1994 - எஸ்.பி.பி + சித்ரா - இசை : விஸ்வநாதன் இளையராஜா 04 அடி கோமாதா - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா " அடங் கொப்பரானே சத்தியமா நான் காவல்காரன் " என்ற காவல்காரன் பாடலை நினைவூட்டும்.
செந்தமிழ் பாட்டு படத்தில் வரும் பாடல்கள் 01 வண்ண வண்ண சொல்லெடுத்து - செந்தமிழ் பாட்டு 1992 - ஜிக்கி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 02 சின்ன சின்ன தூறல் என்ன - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா 03 அடி கோமாதா - செந்தமிழ் பாட்டு 1992 - எஸ்.பி.பி - இசை : விஸ்வநாதன் இளையராஜா
இருவரும் இணைந்து இசையமைக்கும் முன்பே இளையராஜா தாய்க்கொரு தாலாட்டு[1985] படத்தில் "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்" புதிய பறவை [1964] படத்தின் தனிப் பாடலை " இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே " என்று டூயட் ஆக மாற்றிக்காட்டினார். அது வாத்திய இசையின் ஜாலமிக்க எளிமைக்கும் ,இனிமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மெல்லிசை மன்னர்களின் படகோட்டி பாடலான " தொட்டால் பூ மலரும் " என்ற பாடல் Remix என்ற பெயரில் குத்திக் குதறியதை இசைரசிகர்கள் மறைந்திருக்கும் முடியாது. அதுஒரு பாடலை எப்படி அசிங்கம் செய்யலாம் என்பதற்கு இந்த வகை Remix ஐ உதாரணமாகக் கொள்ளலாம்.
1980 களில் இளையராஜா உச்சத்திற்கு வந்த போதும் மெல்லிசைமன்னரின் புகழ் மெல்ல மெல்ல குறைந்த போதும் அவரது இசையில் அருமையான பாடல்கள் வெளிவரத்தான் செய்தன. " கவிதை அரங்கேறும் நேரம் " , "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு " போன்ற பல பாடல்கள் ஆர்ப்பாட்டங்களில் மங்கியிருந்தாலும் இன்றும் அவை மெல்லிசையின் தரத்தில் உயரத்திலேயே நிற்கின்றன.
இளையராஜா தான் இசைத்துறைக்கு வருதற்கான காரணமே மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த " மாலைப்பொழுதில் மயக்கத்திலே " என்ற பாடல் தந்த பாதிப்பு என்றும் அவர்களின் இசை தனது நாடி நரம்புகளில் ஊறியிருக்கின்றது என்றும் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்.
சுருக்கமாகச் சொன்னால் எம்.எஸ்.விஸ்வநாதன் இளையராஜாவின் ஆதர்சபுருஷர்!
அந்த வகையில் மெல்லிசைமன்னர்களின் பாடல்கள் இளையராஜாவை பாதித்திருப்பது மட்டுமல்ல பாடல் அவரது இசைவெளிப்பாட்டு உத்திகளிலும் வெளிப்பட்டிருக்கின்றன. தனியே மெட்டுக்கள் சாயல்கள் மட்டுமல்ல வாத்திய அமைப்புகளிலும் அவை மறைமுகமாக ஊடுருவி நிற்கின்றன.
01 காற்று வந்தால் தலை சாயும் நாணல் - காத்திருந்த கண்கள் 1962 - பி.பி.எஸ் + சுசீலா = இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A மாலை மயங்கினால் இரவாகும் - இனிக்கும் இளமை 1979 - பி.பி.எஸ்.-சைலஜா - இசை: இளையராஜா B முத்தம் போதாதே - எனக்குள் ஒருவன் 1985 - எஸ்.பி.பி - ஜானகி - இசை: இளையராஜா
பாடலுக்கிடையே தாலாட்டு அமைப்பை இணைப்பது ...
02 வீடுவரை உறவு - பாதகாணிக்கை 1962 - டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979 - எஸ்.பி.பி - இசை: இளையராஜா B காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள் 1985 - ஜெயசந்திரன் - இசை: இளையராஜா
03 தரை மேல் பிறக்கவைத்தான் - படகோட்டி 1964- டி.எம்.எஸ் - இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி A கடலிலே எழும்பிற அலைகளைக் கேளடி - செம்பருத்தி 1992 - இளையராஜா - இசை இளையராஜா
இருவரது இசையில் உள்ள ஒற்றுமைகளை அதன் உள்ளோசைகளில் வெவ்வேறு கலைஞர்களின் இசைகளிலிருந்து எடுத்தாளும் சந்தங்களும் பாடல் வடிவ அமைப்புகளில் உள்ள நெருக்கமும் ஒன்றுக்குள் ஒன்று அகத்தூண்டுதல் பெற்று ஊடுருவிச் செல்வதையும் நாம் காண முடியும். பொதுவாக இந்த ஒப்பீட்டு முறையை நாட்டுப்புற இசை ஆராய்ச்சிகளிலும் நாம் காண முடியும்.
20ம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களாக விளங்கிய இந்தியாவின் மகாகவிகள் என்று போற்றப்படுகின்ற தாகூரும் , பாரதியும் சமகாலத்தவர்களாக இருந்த போதும் தம் வாழ்நாளில் சந்திக்கும் வாய்ப்பு பெறாதவர்கள்.
தமிழ் சினிமாவில் தமிழ் மரபிசையிலும், நவீன இசையிலும் தம் காலத்தின் அசைக்க முடியாத நாயகர்களாக தம்மை வளர்த்துக் கொண்டவர்கள் மெல்லிசைமன்னரும் இசைஞானி இளையராஜாவும். சமகாலத்து இசைமேதைகளான இருவரின் இந்த இணைப்பு இசைரசிகர்களுக்கு பேருவுகையாக அமைந்தது
இசையில் மெல்லிசைமன்னரின் பாதிப்பால் வளர்ந்த இளையராஜா யாரும் எண்ணிப் பார்க்க முடியாதவண்ணம் வாத்திய இசைமூலம் தனக்கென புதிய பாணியை அமைத்து மெல்லிசையின் பாதையையே மாற்றி அமைத்தார். இருவரும் பின்னாளில் சேர்ந்து இசையமைத்தாலும் இந்த இருவர் பற்றிய ஒப்பீடுகளும், விமர்சனங்களும் வெளிவரவும் செய்தன.
மேலைத்தேய இசையிலும் இருவரை இணைத்து அல்லது ஒப்பிட்டு பேசுவது வழக்கத்திலுள்ளது. உதாரணமாக ஹண்டேல் - பாக் என்று இரு இசைமேதைகளையும் மொஸாட் - பீத்தோவான் போன்றோர்கள் ஒப்பிட்டு பேசப்படுகின்றன. மிகச் சிறந்த இசை வழங்கியவர்களில் ஹண்டேல் - பாக் என்ற ஒப்பீட்டை எடுத்துக் கொண்டால் இருவரும் அதிசிறந்த கலைஞர்கள் எனக்கருதப்படுகின்றனர். இருவரும் அதி உச்ச இசையமைப்பாளர்கள் என்று கருதப்பட்டாலும் இருவரும் இருநிலைப்பட்ட இசையமைப்பாளர்களாகவும் இருந்தனர். பாக் முற்றுமுழுதாக மதம் சார்பான இசைக்கலைஞராகவும் , ஹண்டேல் மதம் சாராத இசைக்கலைஞராகவும் விளங்கினர். பாக் தேவாலயங்கள் சார்ந்து இயங்கியதும் ஹண்டேல் மதம்சாராத அரச நிகழ்வுகளுக்காகவும் இசை எழுதினார். அந்த வகையில் ஹண்டேல் ஒரு மதம் சார்பான இசையமைப்பாளர் அல்ல. மேற்கில் இசைவாணர்கள் மதம் சார்ந்தும் ,மதம் சாராத , கடவுள் நம்பிக்கையற்ற வகையில் இயங்கியதையும் காண்கிறோம்.
ஆனால் இந்திய இசையமைப்பாளர்கள் மிகுந்த தெய்வபக்தியுடையவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.! அந்த வகையில் விஸ்வநாதனும் இளையராஜாவும் விதிவிலக்கானவர்களுமல்ல. இங்கே தெய்வீகக் கடாட்சமிக்கவர்களாலேயே அது சாத்தியம் எனவும் நம்பப்படுகிறது.
பொதுவாக இசை என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு மனித மனங்களில் ஆழமான தாக்கத்தையும் , எழுச்சியையும் ஏற்படுத்துவதால் அது ஓர் தெய்வீக சக்தி என்பதாக நினைக்க வைக்கிறது. ஆனாலும் எந்தவித இசைப்பின்னணியுமற்ற குடும்பங்களிலிருந்து வந்த இந்த இரண்டு இசைமேதைகளும் தங்களது கடின உழைப்பாலும் முயற்சியாலுமே முன்னுக்கு வந்தார்கள் என்பதை இவர்கள் இசையமைத்த பாடல்கள் மூலம் நாம் அறிகின்றோம். எந்த ஒரு துறையிலும் தீவிர நாட்டமும் , ஆர்வமும் , முயற்சியும் , அதனுடன் பயிற்சியும் இருந்தால் யாரும் எந்தத்துறையிலும் தமது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த இரு இசைமேதைகளும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நிறைவாக …. விருது பெறுவதால் ஒரு கலைஞனின் பெருமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் ,அவரது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த அங்கீகாரமும் முக்கியமான விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில் விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் மெல்லிசைமன்னர்!
தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர்,மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைக்க முடியாத காலத்து மனிதராகவும் வாழ்ந்து மறைந்தார். அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது."உழைக்கத் தெரிந்தது , பிழைக்கத் தெரியவில்லை" என்பார்! .
அவரது பாடல்கள் எல்லாம் எம் ஜி ஆர் பாட்டு என்றும் , சிவாஜி பாட்டு என்றும் நாம் அடையாளம் கண்டு கொண்டாடினோம்! இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழின் சகோதர மொழியான மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.அதற்கு கைமாறாக அவர் தந்த இசைப்படைப்புகள் தமிழர்களை ,தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன. தமிழ்ப்பாடல்களைத் தலைநிமிர வைத்தன! தமிழ் திரையிசையைப் பொறுத்தவரையில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி கோலோச்சிய 1960 , 1970 கள் மிக முக்கியமான காலப்பகுதியாகும். திரை இசை வளர்ச்சியில் பின்வந்த தலைமுறையினரை அதிக பாதித்த நவீன இசைக்கலைஞர் என்றவகையில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.
தனது ஒப்பற்ற இசைத்திறனால் வளர்ந்து இசையின் இலக்கணமாக திகழ்ந்த , தனிப்பெரும் ஆளுமையான விஸ்வநாதனை முக்கிய காலகட்டத்தின் பிரதிநிதியாக காலம் கனிந்து தனதாக்கிக் கொண்டது. இசையமைப்பில் அவர் காட்டும் ஆர்வமும் , துடிப்பும் , உற்சாகமும் அவரது இறுதிக்காலம் வரை தொய்வின்றி இருந்தது. ஊரெல்லாம் உற்சாகமாகப் பாடித்திருந்த பழங்காலத்துப் பாணர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்ற எண்ணம் என்னுள் எழுவதுண்டு. " நியூஸ் பேப்பரைக் கொடுத்தாலும் விஸ்வநாதன் இசைமைப்பான் " என்று கண்ணதாசன் கேலியாக கூறினாலும் நம் காலத்து இசைப்பாணராகவே அவர் வாழ்ந்து மறைந்தார்.
பழங்காலத்து இசைப்பாணர்கள் போல எந்தவித சுமைகளுமற்ற சுதந்திர இசைப்பறவையாக வாழ வேண்டும் என்ற அவா அவர் மனதில் இருந்தது என்பதை அவர் பற்றி இசை ஆய்வாளர் வாமனன் எழுதிய குறிப்பொன்றில் பின்வருமாறு எழுதுகின்றார். இன்னொரு விஸ்வநாதன் உண்டு. திரை உலகை விரும்பாத விஸ்வநாதன் . இன்னொருஜென்மம் வேணும் .. புள்ள குட்டி எதுவுமே இல்லாம .. என் ஆர்மோனியம், நான். அவ்வளவுதான் இருக்கணும் .. ரோட்டுலே நான் ஆட்டுக்கு எந்தக்கவலையும் இல்லாம பாடிக்கிட்டே போகணும் ...
அவரது உடல் மறைந்தாலும் அவர் ஊறித்திளைத்த இசையும் அதிலிருந்து அவர் படைத்தளித்த அற்புதமான பாடல்களும் நம் நெஞ்சங்களை நிறைத்துக் கொண்டிருக்கின்றன. தலைமுறை தாண்டியும் அவரது மெல்லிசைப்பாடல்கள் இசை நிகழ்ச்சிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ராகத்தையும் செதுக்கிச் செதுக்கி அதில் உயிரைக் குடிக்கும் இசைவார்ப்புகளை நமக்கு விட்டு சென்ற மாமேதையை பாராட்ட வார்த்தைகள் போதவில்லை.
"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்காத தெரியாதா " என்ற அதி உன்னதமான பாடலை நடபைரவி ராகத்தில் நமக்குத் தந்து நம்மை நெஞ்சுருக வைப்பது மட்டுமல்ல , இனிவரும் சந்ததிகளையும் உருக வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.
இசைவல்லாளன் எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற மாமேதையின் பெயரும் காலங்களைக்கடந்து நிற்கும். “என்னுடைய நாடி, நரம்புகளிலெல்லாம் அவரது பாடல்கள் ஊறியிருக்கின்றன” என்று இசைஞானி இளையராஜா கூறியது வெறும் வார்த்தையல்ல!!
பல்லாயிரம் நல்லிசை ரசிகர்கள் மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.
முற்றும்.
You must be logged in to post a comment Login