Recent Comments

    யாழ்ப்பாணிய ராயதந்திர நகைப்பு!

    யாழ்ப்பாணித் தமிழ்த் தேசியம் முதலாளித்துவம் சார்ந்தது. அதற்கு ரஷ்யாவை விட அமெரிக்காவைப் பிடிக்கும். அதனால் அது எப்போதுமே அமெரிக்கச் சார்பு ஐ.தேகட்சியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகவே இருந்தது. ஐ.தே.க அரசுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டு வைத்து அமைச்சர்களாகவும் இருந்தனர். தமிழரசு, காங்கிரசாக யாழ்ப்பாணிகள் பிரிந்திருந்தாலும், இதில் ஒற்றுமையாகவே இருந்தார்கள்.

    'துரோகி' பொன்னம்பலம் கூட கைத்தொழில் அமைச்சராக இருந்து, தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பெரும் அரச தொழிற்சாலைகளை வடக்கிலும் கிழக்கிலும் நிறுவியிருந்தார். பொன்னம்பலமும் துரையப்பாவும் தமிழர்களுக்குச் செய்ததில் ஆயிரத்தில் ஒரு பங்கைத் தன்னும் தமிழ் அரசுக் கட்சி தமிழ் மக்களுக்குச் செய்ததில்லை.

    மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் யாழ்ப்பாணிக்கு சோற்றை விடச் சுதந்திரம் முக்கியம் கண்டியளோ! சோற்றை புலன் பெயர்ந்தும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சுதந்திரம் ஈழத்தில் மட்டும் தான்!

    சிங்களம் மட்டும் மசோதா என்ற சட்டத்தின் பின்னணியில் தங்கள் மொழியுரிமை மறுக்கப்படுவது பற்றி தமிழர்கள் கொதித்தெழுந்தாலும், யாழ்ப்பாணிகளுக்கு சுதந்திரக் கட்சி மீதான கோபத்திற்கு அது மட்டுமல்ல காரணம்!

    கம்யூனிஸ்டுகள் உட்பட்ட இடதுசாரிகளுடன் கூட்டு வைத்து அரசாங்கம் நடத்தியது சுதந்திரக் கட்சி. வடக்கில் நடந்த சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு ஆதரவான சட்டங்களை இயற்றியது சுதந்திரக் கட்சி.

    வடக்கில் பெரும்பான்மைத் தமிழர்களால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களுக்கு ஆதரவாக, நியமன பாராளுமன்ற உறுப்பினர் பதவி, விவசாயிகளுக்கான இறக்குமதித் தடை உதவி, கள்ளிறக்கும் தொழிலாளர்களுக்கான தவறணை முறை என்று பல்வேறு நலன்களையும் வேலைவாய்ப்புகளையும் கொண்டு வந்தது சுதந்திரக் கட்சி.

    ஜே.ஆரின் ஜனாதிபதித் தேர்தலில் விவசாயிகள் அதிகம் நிறைந்த கோப்பாய் தொகுதியில் கொப்பேகடுவவுக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்திருந்தன.

    சுதந்திரக் கட்சியின் தரப்படுத்தல் திட்டம் படித்த யாழ்ப்பாணிகளின் அடிமடியில் கை வைத்ததால் அடுத்த கட்டப் போராட்டம் ஆரம்பமானது.

    பிரபாகரனுக்குக் கூட தரப்படுத்தல் பெரிய பிரச்சனையாக இருந்தது.

    ஆனால், மன்னார், வவுனியா போன்ற பின்தங்கிய இடங்களில் வாழும் தமிழர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான வாய்ய்புகள் கிடைக்கும் என்பதை யாழ்ப்பாணிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தரப்படுத்தலுக்காக போராடிக் கொண்டே, மன்னார், வவுனியாவில் பதிந்து பரீட்சை எடுத்தவர்களும் உண்டு.

    தரப்படுத்தல் போராட்டத்திற்கான காரணமாக கூறப்பட்டாலும், அதன் அடிநாதம் 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?'

    தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதை விட, ஆண்ட பரம்பரை ஆண்டனுபவித்த அதே சாதிரீதியான ஆதிக்கத்தையும் சலுகைகளையும் தொடர்ச்சியாகப் பேணுவதற்காகவே அன்றி, தமிழ் மக்களுக்கான சுதந்திரத்திற்கானதான போராட்டமாக அது இருக்கவில்லை.

    இடதுசாரிகள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியபோது, தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தனவே அன்றி, அந்த சமூக அநீதியை அகற்ற வேண்டும் என்று நினைத்ததில்லை.

    யாழ்ப்பாணிகள் இதையெல்லாம் சமூக அநீதிகளாக நினைப்பதில்லை. தங்கள் கலாசாரப் பாரம்பரியமாகவே நினைப்பவர்கள்.

    சிங்கள இராணுவம் வந்து தேரிழுத்தாலும், எளிய சாதியள் இழுக்கக் கூடாது என்பதில் கடவுள்கள் கவனமாகவே இருக்கின்றனர். இல்லாவிட்டால், கோயிலையே முள்ளுக்கம்பி அடித்து இழுத்து மூடி விடத் தயாராக!

    யாழ்ப்பாணத் தமிழ்த் தேசியம் நடத்திய போராட்டம் பழமையின் தொடர்ச்சியைப் பேணுவதற்கான முயற்சியே அன்றி, சகலரும் சம அந்தஸ்துடன் வாழ்வதற்காக நடத்தப்பட்டது அல்ல.

    தரப்படுத்தலினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பை விட, ஜே.ஆரின் ஆட்சி தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள் அதிகம்.

    பெரும்பான்மைப் பலம், சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதி அதிகாரம் இரண்டும் இருந்து கொண்டே, தமிழர்களின் பிரச்சனையைப் பெருப்பிப்பதற்கு காரணம், இந்தியா மீது கண் வைத்த அமெரிக்கா.

    போராட்டம் தொடங்கிய காலத்தில் அமெரிக்காவிலிருந்து பணத்தோடு வந்திறங்கி, தாங்கள் சொல்வது போல போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டு, மற்ற இயக்கங்கள் நிராகரித்த நிலையில், புலிகளுக்கு அந்த பணத்தைக் கொடுத்ததாக ஒரு தகவல்.

    வொய்ஸ் ஒப் அமெரிக்க வானொலி நிலையம் திருகோணமலையில் அமைக்கப்படுவது உளவு பார்ப்பதற்கான முயற்சி என்ற இந்தியப் பயம் அமெரிக்கா காலூன்றாமல் ஜே.ஆருக்கு தலையிடி கொடுக்க ஆயுதக் குழுக்களுக்கு கொடுத்த பயிற்சியும் ஆதரவும்.

    தமிழர்களை இந்தியாவோடு மோத விடுவதற்கான காரணம் ஜே.ஆர் இல்லாமல் வேறு யார்? புலேந்திரன், குமரப்பா குழுவினரை கொழும்பு கொண்டு செல்ல முயன்றது ஜே.ஆர் அரசு என்பதும் அதற்கு இந்திய தளபதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததும் பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

    இந்தியாவைப் பகைத்துக் கொண்ட அந்த ஒரு பாதிப்பு மட்டுமே போதும், தமிழர்களின் பிரச்சனை இன்று வரைக்கும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு.

    வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபைத் தீர்வை, தங்கள் ஏகபிரதிநித்துவ வெறிக்காக சிதைத்தது யார்?

    பிரேமதாசா, அத்துலத் முதலி, காமினி போன்றோரை எல்லாம் கொன்ற புலிகள், இதெல்லாம் செய்த ஜே.ஆரையும், தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட சிறில் மத்தியூவையும் ஏன் கொல்ல முடியவில்லை அல்லது கொல்ல விரும்பவில்லை என்பது பெரும் கேள்வி!

    செல்வநாயத்தின் மருமகன் வில்சன் ஜே.ஆருக்கு நண்பராக அரசியலமைப்பு எழுதுகிறவராகவும், புலிகளுக்கு நெருக்கமானவராயும் இருந்ததன் பின்னணி கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

    பேராசிரியர் வில்சன் காலமாகிய போது, கனடாவில் பத்திரிகைகளில் வந்த மரண அறிவித்தலில், 'அமெரிக்க ராஜாங்க அமைச்சின் ஆலோசகராக' இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அர்த்தம் எதுவென எனக்குத் தெரியாது. சிலநேரம் உங்களுக்குத் தெரியலாம்.

    அங்கோலாவில் கம்யூனிச அரசுக்கு எதிரான சாவிம்பி, நிக்கரகுவாவில் கம்யூனிச அரசுக்கு எதிரான பாஸ்டோரா போன்றவர்களை விடுதலை வீரர்களாகச் சித்தரித்த ரைம் சஞ்சிகை பிரபாகரனைப் பேட்டி கண்டு விடுதலை வீரனாக சித்தரித்ததில் புதுமை எதுவுமில்லை.

    புலிகளும் இந்தியாவுடன் முரண்டு பிடித்த போது, ஐ.தே.கட்சி பிரேமதாசா தான் கை கொடுத்திருந்தார்.

    கப்பல் வரும் என்கிற அளவுக்கு புலிகள் அமெரிக்காவை நம்பவில்லையா?

    இப்படியாகத் தானே, அமெரிக்கா, அதன் சார்பான ஐ.தே.கட்சியுடன் யாழ்ப்பாணியம் அதன் சகல அரசியல் வடிவங்களிலும் நெருக்கத்தைப் பேணிக் கொண்டே இருக்கிறது. தனது நலன்களை எந்தத் தடையும் இன்றி தொடர்ந்தும் பேண ஐ.தே.கட்சியை நம்புகிறது.

    இன்றைக்கும் தமிழர் கூட்டமைப்பு ஐ.தே.கட்சியுடன் கொஞ்சிக் குலாவும் அளவுக்கு மற்றக் கட்சிகளுடன் குலவுவதில்லை.

    ஆனால்... 56 கலவரத்திற்குப் பின்னர் 77 முதல் 84 வரை நடந்த அனைத்து இனக் கலவரங்களும் ஐ.தே.கட்சியின் அரசாங்க காலங்களில் நடைபெற்றவையே!

    இதே ஐ.தே.கட்சி அரசாங்க காலத்தில் தான், அதன் முக்கிய அமைச்சர்கள் மேற்பார்வையில், யாழ்.நூலகம் எரிக்கப்பட்டது என்பது சம்பந்தமில்லாத ஒரு கொசுறுச் செய்தி!

    !

    Postad



    You must be logged in to post a comment Login