இலங்கையைப் போலவே போர்த்துக்கேயரின் குடியேற்ற நாடாக இருந்தது திமோர். 1505ல் இலங்கையை போர்த்துக்கேயர் கைப்பற்றிய பின்னர் 1520ல் திமோர் தீவு போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மீண்டும் இலங்கையைப் போலவே, சூழவுள்ள தீவுகள் டச்சுக்காரர் களின் கைக்கு வந்ததும் திமோரின் மேற்குப் பகுதியையும் 1613ல் அவர்கள் தமதாக்கிக் கொண்டார் கள். முழுமையான தீவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர போர்த்துக்கேயரும் டச்சுக்காரரும் நடத்திய தொடர்ந்த யுத்தம் 1860ல் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஒப்பந்தப்படி கிழக்குப் பகுதியும் மேற்கில் ஒக்குஸ்ஸி (Oecussi)என்ற போர்த்துக்கேயர் முதலில் குடியேறிய பகுதியும் போர்த்துக் கேயருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது அவுஸ்திரேலியரும் ஜப்பானியரும் திமோரில் சண்டையிட்டு, ஜப்பானின் வெற்றியின் பின்னான ஆக்கிரமிப்பில் சுமார் 50 ஆயிரம் திமோரியர்கள் கொல்லப்பட்டனர். 1942 முதல் 1945 வரையில் இருந்த ஜப்பானின் ஆதிக்கம் இரண்டாம் உலக யுத்த முடிவின் பின்னர் அகன்ற பின்னர் மீண்டும் போர்த்துக்கேயர்கள் தங்கள் ஆட்சியைத் தொடர்ந்தனர்.
1945ல் டச்சுக்காரர்கள் தங்கள் குடியேற்ற நாடுகளை விட்டு வெளியேறியதில் மேற்குப் பகுதி புதிதாகத் தோன்றிய நாடான இந்தோனேசியாவுடன் இணைக்கப் பட்டது. கிழக்குத் திமோர் தொடர்ந்தும் 1975 வரையும் போர்த்துக்கேயரின் கட்டுப் பாட்டிலேயே இருந்து வந்தது. 455 ஆண்டு கால ஆக்கிரமிப்பின் பின்னர் போர்த்துக்கல் திமோரில் இருந்து விலகிக் கொண்டது.
1974 ஏப்ரலில் போர்த்துக்கலின் சர்வாதிகார அரசு இடதுசாரி இராணுவத்தினரின் புரட்சியினால் கவிழ்க்கப்பட்ட போது, அதனால் உற்சாகமடைந்த கிழக்குத் திமோரின் விடுதலை இயக்கங்கள் படிப்படியாக விடுதலை வழங்கப்பட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை ஆரம்பத்தில் புதிய போர்த்துக்கல் அரசு ஏற்றுக் கொண்டது. விடுதலைக்காகப் போராடிய திமோரிய ஜனநாயக யூனியன் அமைப்பு வசதியானவர்கள் மத்தியில் செல்வாக்குற்று இருந்த போதும், இடதுசாரிப் போக்குக் கொண்ட Fretilin எனப்பட்ட Revolutionary Front for an Independent East Timor என்ற அமைப்பே இளம் தலைமுறை யினரின் ஆதரவைப் பெற்றிருந்தது. இந்த இரு அமைப்புகளும் கூட்டமைப்பு ஒன்றின் கீழ் சேர்ந்து கொண்ட போது, மக்களின் அதிகளவு ஆதரவைப் பெற்றிருந்த பிரெட்டிலின் இயக்கம் சுதந்திரம் பெறுவதைத் துரிதப்படுத்த முயன்றது.
இந்தோனேசிய அரசு ஆரம்பத்தில் கிழக்குத் திமோர் சுதந்திரம் பெறுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்த போதும் பின்னர் பிரெட்டிலின் அமைப்பின் இடதுசாரிப் போக்குக் குறித்து பெரும் பயம் கொண்டிருந்தது. இந்தப் பிரிவினையை ஆதரித்தால் மற்ற மாகாணங்களும் பிரிவினைப் போராட்டங்களை ஆரம்பிக்கக் கூடும் என்பதாலும் திமோரின் கரையோரங்களில் உள்ள எண்ணெய் வளங்களையும் கருத்தில் கொண்டு இந்தோனேசியா திமோரை தனது 27வது மாகாணமாக்கத் திட்டமிட்டது. இதற்கு வசதியாக திமோரை இந்தோனேசியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கருத்துடன் இயங்கிய இயக்கமான Apodeti i எனப்படும் Timorese Popular Demorcatic Association இயக்கத்திற்கு நிதியுதவி செய்து மற்ற விடுதலை இயக்கங்களுக்கு எதிரான பிரசாரத்தை அவிழ்த்து விட்டது. ஆயினும் அந்த அமைப்புக்கு மக்கள் மத்தியில் எந்த செல்வாக்கும் இருக்கவில்லை.
போர்த்துக்கல் அரசு சொந்த நாட்டில் உள்ள அரசியல் பிரச்சனைகளில் மூழ்கியிருந்ததால் படிப்படியாக சுதந்திரத்தை வழங்குவதில் கவனம் செலுத்த வில்லை. பின்னர் இந்தோனேசி யாவுக்கு கிழக்குத் திமோரில் கண் இருப்பதை அறிந்து கொண்ட போர்த்துக்கல் தேர்தல் ஒன்றை நடத்தி பாராளுமன்றம் ஒன்றைத் தெரிவு செய்து அந்தப் பாராளுமன்றம் மூலம் கிழக்குத் திமோர் மக்கள் தங்கள் எதிர்காலம் பற்றிய சுயநிர்ணயம் செய்ய வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒக்டோர் 1978ற்கு முன் போர்த்துக்கல் அங்கிருந்து வெளியேறும்.
ஆயினும் போர்த்துக்கல் திட்டமிட்டது என்னவோ, நடந்தது வேறு எதுவோ! பிரெட்டிலினின் இடதுசாரிப் போக்கைக் காரணம் காட்டி இந்தோனேசியா திமோரிய ஜனநாயக யூனியன் அமைப்பைத் தூண்டி அவர்களுக்கிடையில் ஒற்றுமையுடன் அமைக்கப்பட்ட கூட்டமைப்பைச் சீர்குலைத்தது. அத்துடன் அங்கு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் பிரெட்லின் 55 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதும் இந்தோனேசியாவின் தூண்டுதலில் கூட்டமைப்பு உடைந்து திமோரிய ஜனநாயக யூனியன் அமைப்பு பிரெட்டிலினை தோற்கடிக்கும் நோக்குடன் இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பிரெட்டிலின் தோல்வியைச் சந்தித்தாலும், ஒரு மாதத்திற்குள்ளேயே பிரெட்டிலின் முழுத் திமோரையும் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆயினும் முன்னைப் போலன்றி, இம்முறை படிப்படியான சுதந்திரத்திற்கு பிரெட்டிலின் சம்மதித்தது.
கிழக்குத் திமோரை ஆக்கிரமித்தால் மேற்கு நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்ற பயத்தில், இந்தோனேசியா விரட்டியடிக்கப்பட்ட திமோரிய ஜனநாயக யூனியனையும் பிரெட்டிலினுக்கு எதிரான மற்ற அமைப்புகளையும் இந்தோனேசியாவுடன் இணைக்கப்படுவதை ஆதரிக்குமாறு வற்புறுத்தியது. இந்தோனேசி யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் அகதிகளாக இருந்த இந்த அமைப்புகள் உணவுக்கும் மற்றும் பொருட்களுக்கும் தங்கியிருக்க நேர்ந்ததால் வேறு வழியின்றி இணைப்பை ஆதரித்தன.
இந்தோனேசிய அதிரடிப் படைகள் திமோரினுள் ஊடுருவி நிலைமையைச் சீர்கெடச் செய்வதற்காக பல தாக்குதல்களை நடத்தின. அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும் சர்வதேச சமூகம் எந்த ஆட்சேபமும் தெரிவிக்காததை அடுத்து இந்தோனேசியா திமோரை ஆக்கிரமிக்கத் தயாரானது. பிரெட்டிலின் ஐ.நா சபைக்கு ஆக்கிரமிப்புப் படைகளை வாபஸ் பெறும்படி வற்புறுத்துமாறு கேட்டுக் கொண்ட போதும் பதில் கிடைக்காததால் நவம்பர் 28ம் திகதி கிழக்குத் திமோர் சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்டது. சுதந்திர நாடாக இருக்கும் பட்சத்தில் ஐ.நா சபை மூலம் பல விடயங்களைச் சாதிக்கலாம் என்று பிரெட்டிலின் நம்பியிருந்தது. ஆயினும் இந்தோனேசியாவின் வற்புறுத்தலின் கீழ் Apodeti, UDT ஆகிய இரு அமைப்புகளும் தாங்கள் திமோரை இந்தோனேசியாவுடன் இணைத்துக் கொள்வதாக பிரகடனம் செய்தன.
அமெரிக்க ஜனாதிபதி போர்ட்டும் வெளிநாட்டமைச்சர் கிசிங்கரும் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்த போது, அவர்கள் ஜனாதிபதி சுகார்ட்டோவிற்கு இது விசயத்தில் தங்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை என்று நம்பிக்கை அளித்ததை அடுத்து மறுநாள் டிசம்பர் 7ம் திகதி இந்தோனேசியப் படைகள் உள்ளே நுழைந்து கொண்டன. ஐ.நா சபை இந்தோனேசியா வெளியேற வேண்டும் என்று பல தீர்மானங்களைக் கொண்டு வந்த போதும் இந்தோனேசியா அதைப் புறக்கணித்திருந்தது. இருபதாயிரம் துருப்புக்கள் அங்கு நிலை கொண்ட போது, முதல் வருடத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர். 1979ல் நாட்டின் பாதித் தொகையினர், சுமார் மூன்று லட்சம் பேர், அகதிகளாகினர்.
இந்த ஆக்கிரமிப்பை அவுஸ்திரேலியா மட்டுமே அங்கீகரித்திருந்தது. மற்ற நாடுகள் எதிர்த்த போதும், அவை இந்தோனேசியாவுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணியிருந்தன.
இந்தோனேசியாவின் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடியவர்களில் முக்கியமான தலைவர்கள் ஜோசே ரமோஸ் ஹோர்ட்டா, சனானா குஸ்மா (José Ramos Horta, Kay Rala Xanana Gusma) ஒருவர் திமோருக்கு உள்ளேயும் மற்றவர் திமோரின் சுதந்திர வேட்கையை உலக அரங்கில் முன்னெடுத்தும் நடத்திய போராட்டம் தான் இன்று கிழக்குத் திமோரை ஒரு சுதந்திர நாடாக தலை நிமிர வைத்துள்ளது.
1946ல் ஆசிரியர்களான பெற்றோர்களுக்குப் பிறந்த சனானா குஸ்மா 16 வயதில் பொருளாதாரக் காரணங்களுக்காக பாடசாலையை விட்டு விலகி பல்வேறு கூலித்தொழில்களில் ஈடுபட்ட போதும், மாலை நேரங்களில் கல்லூரியில் கல்வி பயின்றார். கவிதை எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் இவர் வல்லவராக இருந்தார். இருபது வயதில் அரசாங்கத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் போர்த்துக்கேய அரசினால் கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டு மூன்று வருடங்கள் பணியாற்றினார். 1971ல் தனது பிள்ளைகள் பிறந்த பின்பு ரமோஸ் ஹோர்ட்டாவின் தலைமையிலான தேசிய அமைப்பில் சேர்ந்து இயங்கினார். போர்த்துக்கலுக்கு எதிரான சாத்வீகப் போராட்டங்களில் அவரின் பங்களிப்பு முக்கியமானது. பின்னர் போத்துக்கல் வெளியேறும் தருணத்தில் பிரெட்டிலின் அமைப்பில் பணியாற்றிய குஸ்மா, மற்ற இயக்கமான திமோரிய ஜனநாயக யூனியன் அமைப்பினால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆயினும் பிரெட்டிலின் நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது இவர் விடுவிக்கப்பட்டார். நவம்பர் 28, 1975ல் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட போது அதைப் படம் பிடிக்கும் பொறுப்பு இவரிடமே ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் ஒன்பது நாட்களில் இந்தோனேசியா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது இவர் மலைகளில் இருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தோனேசியா தனது இடைக்கால அரசை நியமித்த பின்னர் குஸ்மா தலைமறைவாகி கெரில்லாப் போராட்டத்தை தொடர்ந்தார். ஆரம்ப காலங்களில் கால் நடையாக கிராமம் கிராமமாகச் சென்று மக்களை ஒன்று திரட்டி அவர் கட்டியெழுப்பிய அமைப்புத் தான் பின்னர் ஆட்சியமைத்தது. வெறும் ஆயுதப் போராட்டங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டி ருக்காமல், ராஜதந்திரத்திலும் ஊடகங்கள் மூலமாக இந்தோ னேசிய அரசின் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்வ திலும் இவர் காட்டிய அக்கறை முக்கியமானது. 78,79ம் ஆண்டில் இந்தோனேசிய இராணுவத்தினரால் பிரெட்டிலின் அமைப்பின் தலைவர்கள் பலர் கொல்லப் பட்டனர். பிரெட்டிலின் தலைவர் நிக்கொலாய் லொபாட்டோ கொல்லப்பட்ட போது, குஸ்மா இராணுவத் தளபதியாக பதவியேற்றார். பின்னர் அந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க முழு அமைப்புக்கும் தலைவரானார்.
மார்ச் 83ல் கிழக்குத் தீமோருக்கான இந்தோனேசிய இராணுவத் தளபதி கேணல் புர்வாந்தோ சனானாவுடன் கிழக்குத் தீமோருக்கான சமாதானத் தீர்வுத் திட்டம் ஒன்றைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவாக்கியிருந்தார். ஆனால் ஐ.நா மத்தியஸ்தம் வேண்டும் என்று குஸ்மா கேட்ட போது இந்தோ னேசிய பாதுகாப்பு அமைச்சர் அந்த பேச்சுவார்த்தைகளை ரத்துச் செய்தார்.
1986ல் குஸ்மா சனானாவும் அவரது சகாக்களும் பிரெட்டிலின், கத்தோலிக்க திருச்சபை, யு.டி.ரி அமைப்பு ஆகியவற்றுடன் சேர்ந்து மாவுபெரெ எதிர்ப்புக்கான தேசியக் கவுன்சிலை ஸ்தாபித்தனர். அதன் தலைவராகவும் தளபதியாகவும் குஸ்மா நியமிக்கப்பட்டார்.
சாந்தா குரூஸ் என்ற இடத்தில் 1991, நவம்பர் 12ம் திகதி நடைபெற்ற படுகொலையை சர்வதேச அரங்கிற்கு தெரிய வைத்ததில் முக்கிய பங்கு இவருடையது. உலகின் முக்கிய செய்தி தாபனங்கள் இவரைப் பேட்டி கண்டன. சாந்தா குரூஸ் என்ற இடத்தில் உள்ள மயானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்தோனேசியாவோ குஸ்மாவே இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார் என்றும் அதனால் குஸ்மாவே இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டியது. இவ்வாறு பிரபலம் பெற்றதும் இந்தோனேசியா இவரின் கண் வைத்தது. 1992 நவம்பர் தலைநகரான டிலியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். இந்தோனேசிய அரசு இவருக்கு எந்த சட்ட உதவிகளும் வழங்காது அவருக்கு ஆயுட்தண்டனை விதித்தது. சிறையில் இருந்த போதும் இவரது வழிகாட்டல் தொடர்ந்து கொண்டே இருந்தது. சிறையில் வைத்து ஐ.நா பிரதிநிதிகளும் நெல்சன் மண்டேலாவும் இவரைச் சந்தித்திருக்கிறார்கள். சர்வதேச அழுத்தம் காரணமாக இவருக்கு பின்னர் சிறைத்தண்டனை இருபது வருடமாகக் குறைக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் சுகார்ட்டோ 1998ல் பதவி விலகிய பின்னர் புதிய ஜனாதிபதியான ஹபிபி சர்வசன வாக்கெடுப்பு நடத்தச் சம்மதித்தார். வாக்கெடுப்பு அண்மிக்க வன்முறைகள் அதிகரித்ததால் இரண்டு தடவைகள் வாக்கெடுப்பு பின்போடப்பட்டது. ஐ.நா மேற்பார்வையில் ஆகஸ்ட் 30, 1999ல நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 78.5 வீதமானோர் நாடு பிரிந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும் என வாக்களித்தனர்.
இதனால் ஆத்திரம் கொண்ட இந்தோனேசிய இராணுவம் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. சுதந்திரத்திற்கு எதிரான சக்திகளுக்கு இந்தோனேசியா உதவிகளை வழங்கி அந்த சக்திகள் வெறியாட்டம் ஆட உதவி செய்தது. இந்த உதவி இராணுவக் குழுக்களின் வெறியாட்டத்தில் 1300 பேர் கொல்லப்பட்டதுடன் மூன்று லட்சம் பேர் அகதிகளாக மேற்கு திமோருக்குள் சென்றனர். அத்துடன் மின் வினியோகம், நீர்ப் பாசனத் திட்டங்கள், நீர் வினியோ கத் திட்டங்கள், பாடசாலைகள் என்பவற்றை இந்த கும்பல் தகர்த்தெறிந்தது. ஐ.நாவின் அழுத்தத்தி னாலும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலையீட்டினாலும் அவுஸ்திரேலிய சமாதானப் படையினர் கிழக்குத் தீமொருக்குள் நுழைந்தனர். பில் கிளின்டன் இந்தோனேசியாவுக்கான இராணுவ உதவிகளை 99 செப்டம்பரில் நிறுத்தியிருந்தார்.
குஸ்மா இறுதியில் விடுதலை செய்யப்பட்ட போது அவர் மீண்டு வந்து மக்களை ஒருங்கிணைப்பதில் பெரும் பாடுபட்டாரே ஒழிய பதவிக்காக அலையவில்லை. தான் ஒரு பூசணிக்காய் விவசாயியாகவோ, ஒரு புகைப்படப் பிடிப்பாளராகவோ வாழ விரும்புவதாகவே அவர் தெரிவித்தார்.
எங்களுடைய துன்பங்களை பின்னே விட்டுச் செல்வோம். இந்த நாடு எங்களுடையது. நாங்கள் எப்போ தும் சுதந்திரமாகவே இருப்போம் என்று சிறையிலிருந்து மீண்டு வந்த போது எரிந்த சாம்பராகிக் கிடந்த தலைநகரம் டிலியில் நடந்த கூட்டம் ஒன்றில் அறைகூவல் விடுத்தார்.
அத்துடன் இந்தோனேசிய இராணுவத்தினரின் கையாட்களாக இருந்து வெறியாட்டம் ஆடிய இராணுவத் துணைக் குழுக்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் அவர் அக்கறை காட்டியிருந்தார். இது அவருடைய இயக்கத்தினர் பலருக்குப் பிடிக்காமல் இருந்தது.
பழைய தலைவர்கள் விலகி புதிய தலைமுறைக்கு வழி விட வேண்டும் என்பதில் அவர் அக்கறையாய் இருந்தார். 'நான் ஜனாதிபதியாக விரும்பவில்லை. ஏனென்றால் எந்தச் சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலும் எதிர்த்தரப்பில் இருந்த தலைவர்கள் புதிய நாட்டின் தலைவர்களான போது அவர்களால் புதிதாக எதையும் கொடுக்க முடியவில்லை' என்று ஒரு தடவை கூறியிருந்தார்.
'சனானா குஸ்மா என்பவர் யார்?' என்று போத்துக்கேய பத்திரிகையாளர் ஒருவர் குஸ்மா கைது செய்யப்படுவதற்கு முன்னால் ஒரு தடவை கேட்டார். 'மக்கள் சிலர் உருவாக்கிய மாயை அல்ல அவர், அவர் பெரிய சிக்கல்களைச் சந்திக்கின்ற மனிதன். தன்னுள்ளேயே ஒரு போராட்ட த்தை நடத்திக் கொண்டிருக்கின்ற மனிதன்' என்று குஸ்மா பதிலளித்தார். அவருடைய வீரமும் நேர்மையும் வசீகரமும் தான் அவரை இயற்கையாகவே ஒரு ஹீரோ ஆக்கியிருந்தது. ஆனால் அவரை யாராவது ஹீரோ என்று வர்ணித்தால், அடக்கத்துடன் அவர் ஹோர்ட்டா வையும் ஆயர் பெலோவையும் மற்றவர் களையும் உதாரணம் காட்டுவார். தங்களுக்கு விடுதலை பெற்றுத் தந்ததற்காக மக்கள் அவரை வணங்குகிறார்கள். ஆனால் தன்னை ஒருபோதும் அவர் ஹீரோவாக நினைத்ததில்லை. வெல்ல முடியாத எதிரிக்கு எதிராக போராட்டத்தை நடத்திய போது கூட, தன் நடவடிக்கைகளால் தன் மக்களுக்கு தொடர்ந்தும் அழிவு என்று மனம் வருந்தியவர் அவர். 'பல கணங்களில் நான் நம்பிக்கையிழந்திருக்கிறேன். என்னுடைய பல நண்பர்களை நான் இழந்திருக்கிறேன். அவர்களில் பலர் என்னைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள்' என்கிறார்.
தான் போராளியாக இருந்த போது 'சுதந்திரம் கிடைத்தால் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்' என்று தன் சகாக்களுக்கு உறுதியளித்ததாகவும் அந்த உறுதிமொழியை மீற மாட்டேன் என்றும் பிடிவாதமாகத் தான் இருந்தார்.
மற்றத் தலைவரான ஹோர்ட்டா, குஸ்மா ஜனாதிபதியாகாது விட்டால் தான் அரசாங்கத்தில் பங்கேற்க மாட்டேன் என்று வலியுறுத்தினார்.
எழுபதுகளின் இறுதிப் பகுதியில் கடும் தோல்வியடைந்த நிலையில் மக்கள் அவரைக் காட்டுக்குள் போய் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு மீண்டு வந்து தங்களுக்கு விடிவைத் தேடித் தரக் கேட்டதாகவும் அதைப் போலவே இப்போதும் மக்கள் தன்னை ஜனாதிபதியாக வரும்படி கேட்டதால் அந்தப் பதவியை ஏற்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்தப் பதவியை நான் விரும்பாவிட்டாலும் என் மக்களை நான் ஏமாற்ற மாட்டேன் என்றார். ஆனாலும் நாட்டை ஒற்றுமைப்படுத்தக் கூடிய வலிமை அவருக்கு உண்டு என்பதே அனைவரினதும் கருத்தாக இருந்தது.
அவரது மக்கள் மத்தியில் அவர் பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கியதால் பலரும் அவரை வற்புறுத்தி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்தனர். அப்போதும் கூட அவர் தனது இயக்கத்தின் சார்பில் போட்டியிடாமல் சுயேச்சையாகவே போட்டியிட்டார்.
மே 20, 2002ல் கிழக்குத் திமோர் சுதந்திரம் பெற்ற போது குஸ்மா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். ஜோஸே ரமோஸ் ஹோர்ட்டா வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்டார்.
உலகின் இளைய சுதந்திர நாடான கிழக்குத் தீமோர் வறிய நாடுகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் வட கடலில் உள்ள எண்ணெய் வளங்களை அவுஸ்திரேலியா அபகரிக்க முயன்ற போதும் எதிர்த்து நின்று தன் பங்கைப் பெற்றுக் கொள்வதில் கிழக்குத் தீமோர் பிடிவாதமாக இருக்கிறது.
பலம் வாய்ந்த எதிரியை வெல்ல வீரம் மட்டுமல்ல, விவேகமும் வேண்டும் என்பதையும் அரசியல் தலைமை குறுகிய நோக்கங்கள் இல்லாமல், பதவி வெறி இல்லாமல், எல்லாரையும் பழிவாங்கும் நோக்கமின்றி அரவணைத்துச் சென்றால் இலட்சியத்தை இலகுவாக அடைய முடியும் என்பதையும் பயங்கரவாதத்தை வழியாகக் கொள்ளாமல் ராஜதந்திர ரீதியில் சர்வதேசச் சமூகத்தை அணுகினால் முழு உலகும் பின்னால் நிற்கும் என்பதையும் இந்தச் சிறிய நாடான கிழக்குத் திமோர் உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.
குஸ்மா கிழக்குத் திமோரிலிருந்து போராட்டத்தை நடத்திய வேளை அந்தப் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு தெரியப்படுத்தி ஆதரவைத் திரட்டியவர் ஜோசே ராமோஸ் ஹோர்ட்டா.
டிலியில் திமோரியத் தாய்க்கும் போர்த்துக்கேயத் தந்தைக்கும் பிறந்த இவருக்கு பதினொரு சகோதரர்கள் உள்ளனர். இதில் நால்வர் இந்தோனேசிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவரது தந்தையார் போர்த்துக்கேய நாட்டின் சர்வாதிகாரியான சலாசாரால் விரட்டப்பட்டு கிழக்குத் திமொர் வந்திருந்தார். ஹோர்ட்டா தனது அரசியல் நடவடிக்கைகளால் நாட்டை விட்டு வெளியேறி கிழக்காபிரிக்காவில் இரண்டு வருடம் தங்கியிருந்தார். திமொரிய விடுதலைப் போராட்ட நாட்களில் இவர் வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்டபோது இவருக்கு வயது 25 தான்.
இந்தோனேசியா கிழக்குத் தீமோரை ஆக்கிரமிப் பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் இவர் தங்கள் நாட்டு நிலைமையை விளக்க ஐ.நா சபைக்கு சென்றிருந்தார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய அவர் ஐ.நா சபை இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்னால் பத்து வருடங்களுக்கு ஐ.நாவில் கிழக்குத் தீமோரின் நிரந்தரப் பிரதிநிதியாகச் செயலா ற்றி உலக அரங்கில் தன் நாட்டு மக்களின் நிலைமையை வெளிக் கொணர்ந்தார்.
இவரது பணியைக் கௌரவித்து இவருக்கும் கத்தோலிக்க ஆயரான கார்லோஸ் பிலிப் சிமெனஸ் பெலோவுக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப் பட்டது. சர்வதேச சட்டங்கள், மனித உரிமைச்சட்டங்கள் பற்றி இவர் ஹேக், ஸ்ராஸ்பூர்க், கொலம்பியா, ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகங்களில் பயின்றவர்.
You must be logged in to post a comment Login