Recent Comments

    கலாமோகன் கவிதைகள்

    க.கலாமோகன்

    நாம் நாமாக இல்லாத யுகத்தில்...

    பெரிதான சிந்தனைகள்
    குப்பைக் கூடங்களுள் இன்று சிக்கியபடி
    நான் நானாகவும் நீ நீயாகவும்
    இல்லாத இருத்தல் பந்தில் நாம்
    நான் நடக்கும் வீதிகளில்
    கெஞ்சும் விழிகளோடு நிறையக் கவிதைகள்
    ஆழமான தத்துவங்களுக்குப் பயந்து…
    இன்று நான் எங்கே? நாம் எங்கே?

    எனது நாவில் இப்போது சுவைப்பு இல்லை
    சுவையான கறிகளும் கசந்தபடி
    இறைச்சியில் இரத்தம் இல்லை
    மூக்கைத் துவாம்சம் செய்கின்ற நாற்ற நீர்
    அழகிய தக்காளிகளை வாங்குகின்றேன்
    வீடு வந்தபின் அவைகள் அழுகுகின்றன
    நான் சாப்பிடவே இல்லை
    எனது வயிறோ ஊதியுள்ளது
    ஏன்? எங்கே நான்? எங்கே நாம்?

    நான் இப்போது வீதிகளில் நடப்பதில்லை
    நினைவுக் குடத்திலேயே எனது கால்கள்
    முகமூடிகள் எப்போதும் என்னைக் கடித்தபடி
    வெளியே போகும் நினைப்பின்றி நான் உள்ளுள்
    எனது மனதுள் புகத் துடிக்கும் சிந்தனைகளை
    அறுக்கும் போரில் துடிப்பனவே எனதுகணங்கள்
    நாமின் அழிவுகளது சத்தங்கள் கிணறினுள் நான் நானை மறக்கும் போரினது களத்தில்.

    இன்று நாம் ஓர் முகமூடி யுகத்தில்
    என் அருகில் நடப்பவர் என் நண்பர்,
    என் மனைவி, என்னைத் திட்டியவர்,
    என் பழைய காதலி என்பதும் எனக்குத் தெரியவில்லை ….
    ஓர் முகமூடி யுகத்தில் நாம் இப்போது
    நம்மையும் உலகையும் அழித்தபடி….

    கிருமி

    மனிதர்களது இரத்தங்கள்
    இன்றும் உலகின் நிலத்தைச் சிவப்பாக்குகின்றன
    போரின் கொடூரமான பாடல்களது
    கைதிகளாகச் சாதாரண மக்களும்
    வீடுகளும் கட்டிடங்களும் மரங்களும்
    பூக்களும் பிராணிகளும்

    கசப்பைத் தருவனவே
    அனைத்துக் கவிதைகளும்
    இறக்கும் சிறுவர்களையும் சிறுமிகளையும்
    கண்டு கதறுகின்றன விழிகள்
    எனக்குக் கவிதைகள் தேவையா?
    தத்துவங்கள் தேவையா?
    பள்ளிகளும் நூலகங்களும் எரிகின்றன
    எமது இருப்புகளைப்
    போர்க் கிருமிகள் அழிக்கும்போது
    எமக்குப் படிப்புத் தேவையா?

    எனது நூல்கள் அனைத்தையும்
    மூட்டை மூட்டையாகக் கட்டுகின்றேன்

    எனது கால்களின் தேடல்
    ஓர் பெரிய சுடலை…

    அழி

    நேற்றும் பேச்சுகள்
    இன்றும் அவைகள் புதிய வாய்களால்
    புதிய முகங்களால் புதிய உத்திகளால்
    யாவும் பழைய பேச்சுகளே

    உவப்பு பேசுவோருக்கே
    நட்டம் கேட்போருக்கே
    ஊதிய வயிறு பேசுவோருக்கு
    முறியும் வயிறு கேட்போருக்கு
    பேசுவோர் போருக்கு முத்தம்
    கேட்போர் இதற்கு அச்சம், பயம்…

    எங்கு போகின்றன நாடுகள்?
    எப்படிப் போகின்றனர்
    அரசியல் அதிகாரத்தின் அடிமைகள்?

    பாட்டாழி எனத்தான் எமது
    அரசியல் தொடங்கும்
    பின்பு சோஷலிசம்
    அதன் பின்பு வலதுசாரித்துவம்
    கடைசியில் சர்வாதிகாரம்

    முன்பு சிவப்பைக் காட்டியோர்
    இப்போது ஜனாதிபதியின்
    அமைச்சர்களாகவும்
    இராஜ தந்திரிகளாகவும் மக்கள் மத்தியில் அப்போது இருந்த இவர்கள்
    இப்போது மிகவும் தூரத்தில்....
    இவர்கள் நிறங்கள் தெரியாதவர்களாக....

    அப்போது கொலையை நக்கியவர்கள்
    இப்போது அரசியல் செய்பவர்களாக
    இவர்களைத் தூக்கவும்
    மாணவர்கள் யூனிவெர்சிட்டிகள்
    முதலாளிகள்…

    இவர்களது
    அனைத்துப் பேச்சுகளும்
    அழிவை முத்தம் செய்கின்றதென்கின்றது
    எனது இலைகளற்ற பூவரசுவில்
    இருகின்ற ஓர் பசித்த காகம்

    போர்

    இது இனிப்பான சொல்லா
    போர்?
    சிலருக்கு இனிப்பானது
    பலருக்கு நடுக்கம் தருவது.

    நான் ஓடுகின்றேன்
    போரை இப்போதும்
    விசுவாசிப்போரைக் கண்டு.
    போர்!
    இது அழிப்பது,
    உருவாக்குவது அல்ல
    என்கின்றது ஓர் கருகிய மரம்.

    அனைத்து அரசியல் சிரிப்புகளிலும்
    போரின் விஷப் பல்கள்
    அனைத்துப் புல் வயல்களிலும்
    விதைக்கப்படுகின்றன
    வறுமைகளைத் தூண்டும்
    நஞ்சுச் சொல்கள்

    இருப்பை மறுதலிப்பது போர்
    ஏன்? ஏன்? இப்போதும்
    போர்ப் பாடல்கள்?
    இந்தப் பாடல்களை எழுதுவோருக்குப்
    பேனாக்கள் தேவையில்லை
    தேவை, நிறையக் குண்டுகளைத்
    தாங்கும் துப்பாக்கிகளே.
    போரின் மோசமான புதல்வர்களின் கைகளில்
    அரசும், அதிகாரமும், தடிப்பும்.

    போரைப் போ என்று சொன்னv கடல்களின் கரைகள்
    இப்போதும் கறுப்பாக…
    போரைப் போ எனச் சொன்ன வீடுகள்
    உடைந்தும் உக்கியும்…
    போரைப் போ எனச் சொன்ன படைப்பாளிகள்
    காணாமல் போனவர்களாகவும்
    போரைப் போ எனச் சொன்ன
    ஓர் கிழவி
    எலும்புகளின் மீது நடந்தபடி…

    போ! போ! போர்
    மீண்டும் கத்துகின்றன
    எங்களது சேவல்கள்.

    கலக்கம்

    மெத்ரோவில் நுழையும் போதும்
    பஸ்ஸில் ஏறும் போதும்
    அவளைத் தொடுவது கலக்கம்

    தொழில் தொழில் இல்லாமல்
    தண்டனையாகிப்போன வேளையில்
    அவள் புத்தகங்களையும் படிப்பதில்லை

    நானும் அவளைப் போலத்தான்
    தொழில் நிறுவனங்களில்
    எமது உடல்கள் வெறுப்புகளை உண்ணும்
    நாம் நிச்சயமாக இயந்திரங்களாக
    எமது அனைத்துப் பயணங்களிலும்
    களைப்பே எம்மை முத்தமிட்டபடி…

    தொழில் முடிந்ததும்
    நான் வீடு செல்லவில்லை
    எனது கால்கள்
    ஓர் மதுச்சாலையை நாடி…
    அங்கு நான் குடிப்பது கலக்கம்.
    அங்கு நான் அல்ல, நாம்கள்
    நாம் குடிப்பதோ கலக்கம்…

    நான் அப்போது வெளியில்
    உடல் ஆடுகின்றது கலக்கத்தால்
    தூரத்தில் அவள்…
    நொண்டி போல நடக்கின்றாள்
    நான் அவள் முன்
    “வேலைத் தளத்தில்
    வீழ்ந்து விட்டீர்களா?”
    அவள் கத்துகின்றாள்…
    நான் அவளைத் தூக்குகின்றேன்.

    “உங்கள் வீடு எங்கே?”

    “அது எனக்குத் தெரியாது.”

    “நீங்கள் வீட்டில் இருந்தா வேலைக்குப் போனீர்கள்?”

    “ஆம்.”

    “எனது வீடும் எனக்குத் தெரியாது.”

    மயங்கி விழுகின்றேன்.

    விழித்தபோது நான் அவளது மடியில்v கலக்கம் இல்லாமல்
    பலகணிகளில் அமர்ந்து இருக்கின்றன
    பாரிஸ் புறாக்கள்.

    பொய்கையார் விளக்கம்

    Postad



    You must be logged in to post a comment Login