Recent Comments

    (மெ)மகா அல்பம்:The Ultimate Remix

    சித்தப்பாவுக்கும் எனக்கும் எப்படி சம்பந்தம் வந்தது என்ற மர்மம் என்னால் இன்னமும் துலக்கப்பட முடியாமல் இருக்கிறது. இத்தனைக்கும் இவர் ஒன்றும் என் அப்பாவின் தம்பியுமல்ல, என் சின்னம்மாவின் புருஷனும் அல்ல. யாரோ ஒருவனுக்கு சித்தப்பா ஆனதால், எனக்கும் எனது றூம் மேட்கள் உட்பட அனைவருக்குமே அவர் சித்தப்பா ஆகி விட்டார்.

    நாங்கள் பிரமச்சாரிய விரதம் பூண்டிருந்த காலங்களில் பிரதி சனிதோறும் எங்கள் றூமில் நடைபெறும் தீர்த்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்ற மெய்யடியார்களில் இவரும் ஒருவர். என் றூம்மேட்கள் எல்லாருமே கர்ண பரம்பரை.. சாப்பாடு, குடி விசயத்தில் கர்ணன் போல் கொடை வள்ளல்கள். இதனால் அவர்களின் எல்லா நண்பர்களும் அவர்களின் நண்பர்களும் அந்த நண்பர்களின் நண்பர்களும் என திருவிழா கோலாகலமாக நடைபெற்ற நாட்கள் ஒன்றில் வந்து சேர்ந்தவர் இவர். இவர் எங்களோடு ஒட்டிக் கொண்டது பற்றி பல்வேறு கர்ணபரம்பரைக் கதைகள் அவ்வப்போது காதில் விழுந்தாலும் யாரும் அதை உறுதி செய்ய முயன்றதில்லை. ஒருநாள் பியர் கேசை தோளில் சுமந்து எலிவேட்டரில் வந்த நண்பர்களோடு.. இரவில் மீன் வாங்கி வரும் போது தனிப்பனையடியில் இருந்து தொத்தி வந்து சேர்கின்ற கொத்திப் பிசாசு மாதிரி.. பின்னால் இவர் வந்ததாகவும், இவர் யாரையோ தேடி வந்திருப்பதாக எல்லாருமே நினைத்திருக்க.. யாரோ நீட்டிய ஒரு பியருடன் போதை ஏறி பிதற்றத் தொடங்க.. 'பாவம் மனிசன், பமிலி பற்றி வொறீஸ்' என்று எல்லாருமே அனுதாபப்பட்டு இன்னொரு போத்தலைத் தூக்கிக் கொடுக்க.. வந்திருந்த யாரோ ஒருவன் தனக்கு தெரிந்த ஒருவனின் சித்தப்பா இவர் என்று சொன்னது முதல்.. இவர் எங்கள் எல்லோருக்குமே சித்தப்பா ஆனது மட்டுமன்றி.. அடுத்த சனிக்கிழமைகளில் உரிமையுடன் போன் அடித்து 'என்ன மாதிரி.. இண்டைக்கும் பார்ட்டியோ' என்று கேட்டு ஆஜராகி வந்தவர்.

    பாவம் மனிசன்.. எல்லோரும் குடிக்கும்போது வந்து குடிச்சு சாப்பிட்டுப் போகட்டுமன் என்ற பரிதாபம் எல்லோருக்குமே.. ஆனாலும் ஒரு பியர் குடிச்சவுடன் அழத் தொடங்குகின்ற ஜாலம் மட்டும் எனக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகமாகத் தான் இருந்தது. எல்லோருக்கும் வெறி ஏறியவுடன்.. போத்தல் போதாமல், களவாக விற்கின்ற கடைகளில் போய் வாங்குவதற்காக கலக்சன் நடக்கும் நேரமாகத் தான் சித்தப்பாவுக்கு 'பமிலி பற்றிய வொறீஸ்' வருவது பற்றிய என் சந்தேகத்தை நாகரிகம் கருதி நான் வெளியில் விடவில்லை.

    எங்களை ஏதோ முட்டாள்களாக்குவதாக அவர் பெருமைப்பட விடக்கூடாது என்பதில் எனக்கு இருந்த உறுதியில் ஒருநாள்.. பெடியள் போத்தல் வாங்க கலக்சன் தொடங்க.. 'மச்சான் என்னத்துக்கடா இந்த கலக்சனைத் தொடங்கிறியள், சித்தப்பாவல்லோ பமிலியைச் சாட்டி அழத் தொடங்கப் போறார்' என்று நான் கடிக்க..

    அன்று மட்டும் அழாமல்.. அடுத்த முறை எல்லோரும் சுற்றி இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னால், பெரும் சத்தமாக கலக்சனுக்கு ஐந்து டொலரைக் கொடுக்க.. அதை பிடுங்கி சித்தப்பாவின் கையில் வைத்து 'சித்தப்பா உந்தக் காசுக்கு வாங்கிறதை விட நீங்கள் கூடக் குடிக்கிறியள், நீங்களே வைச்சுக் கொள்ளுங்கோ, நீங்கள் எங்கட சமறியில் குடிச்சதாகவே இருக்கட்டும்' என்று சொன்னது றூம்மேட்களுக்கு ஒருமாதிரி இருந்தாலும் அடுத்த நாள் வெறி முறிந்த பின்னர் நான் கொடுத்த கொள்கை விளக்கத்தில் எல்லாருமே அமைதியானார்கள்.

    'நாங்கள் வாங்கியிருந்தால் நானும் காசு போட்டுத்தான் பியர் வாங்கினனான் என்று இவர் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருப்பார்' என்ற வாதத்தை எல்லோருமே ஆமோதித்தார்கள்.

    இருந்தாலும் அடுத்த முறை மனிசன் வராதே என்று கவலைப்பட்டவர்கள் எல்லாம் மானரோசம் இல்லாமல் மனிசன் பல்லிழித்துக் கொண்டு வந்ததால்.. 'இனியென்ன.. சூடு சுரணை இல்லாதவரைப் பேசி என்ன' என்று.. அவ்வப்போது வெறி ஏறுகின்ற தருணங்களில் கடிக்க எதுவுமில்லாத போது ஓசிக்குடிகாரர்கள் பற்றி தாங்களும் கடித்துக் கொண்டார்கள்.

    சித்தப்பா பற்றிய விபரங்களும் யாருக்கும் பெரிதாக தெரிந்ததில்லை. யாரோ பெடியன்களுடன் எங்கோ இருக்கிறார், எங்கோ றெஸ்ரோறன்றில் வேலை செய்கிறார் என்ற செவிவழிச் செய்திகள் தவிர வேறு எதுவும் எவருக்கும் தெரியாது. காலப் போக்கில் பார்ட்டிக்கு வருகின்ற பெடியன்களின் பணமுடைக்கு 'தெரிஞ்ச இடத்தில வட்டிக்கு குடுக்கினம், விருப்பம் எண்டால் எடுத்துத் தரலாம்' என்று சிலரைக் கடனாளிகளாக்கியதில் அவர்களைக் காண வருவதாகக் கூறி சனிக்கிழமைகளில் அவர் முன்னறிவிப்பில்லாமலே ஆஜராகத் தொடங்கியதும் சிங்கன் பற்றிய விசயங்கள் எனக்கு வெளிக்கத் தொடங்கியது.

    கூட இருந்த பெடியன்களிடம் வாடகைக்கும் சாப்பாட்டுக்கும் கடன் சொல்லி.. பின்னால் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் பெட்டி படுக்கைகளுடன் மாயமாய் மறைந்ததாகவும்.. அரசாங்க குடியிருப்பு ஒன்றில் இடம் எடுத்து.. அரச உதவிப் பணத்துடன் களவாக றெஸ்ரோறன்றில் வேலை செய்வதாகவும் ஊருக்குள் பலருக்கு வட்டிக் கொடுத்து எக்கச்சக்கமான காசு வெளியில் இருப்பதாகவும் சில தகவல்கள் கசிந்திருந்தன.

    பசியால் வாடும் ஏழை எளியவர்களுக்கு இலவசமாய் உணவுப் பொருட்கள் கொடுக்கும் 'உணவு வங்கி' பக்கமாக கண்டதாக சொன்னவர்களும் உண்டு.

    மயிந்தி என்ற அழைக்கப்படும் மகேந்திரன் என்ற மெய்யடியான் தன் அக்காவுக்கு கலியாணம் என்று 'எல்லோரும் வரவேணும்' என்று பார்ட்டியில் கூறியதைக் கேட்டு தன்னையும் உள்ளடக்கி, பமிலி பற்றிய வொறீஸ் இல்லாமல் விஸ்கி குடித்து.. வீடியோ முன்னால் அன்பளிப்பாக என்வலப்பைக் கொடுத்து... மறுமுறை.. சுவரில் பட்டு திரும்பிய பந்தான செக்கை மயிந்தி எல்லோர் முன்னாலும் கொடுக்க.. வாங்கி கூச்ச நாச்சமின்றி வாங்கி பொக்கட்டில் போடுகின்ற வித்தை சித்தப்பாவினால் தான் முடியும்.

    எவ்வளவோ பணமிருந்தும்; பரிதாபத்தை உண்டு பண்ணும் பரதேசிக் கோலத்துடன் அல்ப புத்தி வேலைகள் செய்வதைப் பார்க்கும் கோபம் வந்தாலும் It's all in their heads என்ற என்னுடைய மகாதத்துவத்துக்கூடாகத் தான் பார்க்கத் தோன்றியது.

    மனிதனுடைய வாழ்வு அவனுடைய தலைக்குள் இருக்கும் சிந்தனையின் வெளிப்பாடு தான்.

    அதாகப்பட்டது.. வேண்டாம்... இதை விளங்கிக் கொள்ள நீங்கள் இரண்டு பியர் அடிச்சிருக்க வேண்டும்..

    பின்னர் குடும்பம் வந்ததாகவும் அவர்களை 'இமிக்கிரேஷனுக்கு கூட்டிப் போக ஆள் வேண்டும்' என்று றூமில் இருந்த சந்திரனைக் கேட்க.. அவன் 'உவன் தான் ஃபிறீயாய் இருக்கிறான்' என்று என்னை மாட்டி விட.. சித்தப்பாவின் குடும்பத்துக்கே நான் வேண்டப்பட்டவன் ஆக வேண்டிய நிர்ப்பந்தம். அந்தக் காலத்தில் இப்போது மாதிரி டிறெக்டரிகளில் லிஸ்டிங் போடும் குடிவரவு ஆலோசகர்கள், பத்திரிகைகளில் விளம்பரம் போட்டு வெல்பெயர் எடுத்துக் கொடுக்க காசு அறவிடும் சமூகசேவை ஸ்தாபனங்கள் எல்லாம் இருந்ததில்லை.

    இங்கிலிஸ் தெரிந்த எல்லோருமே சக அகதிகளுக்கு செய்யும் உதவியாகத் தான் செய்து வந்த காலம்..

    கேஸ் எழுதுவது முதல் வெல்பெயர் அலுவலகம் கூட்டிப் போவது வரை.. இப்போது அது பெரிய இண்டஸ்றி. காசைக் காட்டாவிட்டால் உங்களுக்காக ஒரு நாயும் குலைக்காது..

    மூத்த மகனும் மகளும் மனிசியும் ஊரிலிருந்து வந்து அசல் பட்டிக்காட்டான் பட்டணம் பார்க்க வந்த தோற்றத்தில், பேந்தப் பேந்த அல்லது மலங்க மலங்க முழித்துக் கொண்டு.. அசல் சோமாலிய அகதிகள் கணக்கில் இருந்தார்கள்... மூக்குச்சளி வழிய, எலும்பும் தோலுமாய், இலையான் மொய்க்காத குறையாக.. வெள்ளை காலுறைகளும் பாவாடை சட்டையுடனும்..

    முதல் நாள் போய் வந்ததும்.. சித்தப்பாவுக்கு ஒரு மகள் இருந்த விசயத்தை எங்கோ கேள்விப்பட்ட கூட்டம் 'மச்சான், சரக்கு எப்படி' என்று ஆவலோடு ஜொள்ளு வடிக்க.. இருந்த கடுப்பில்..

    'மிளகாய், மிளகு மாதிரி' என்று வர்ணிக்க... 'அவ்வளவு காரமான சிவப்போ' என்று புல்லரிக்க..

    'சீ.. செத்தல் மிளகாய் மாதிரி உடம்பு, மிளகு மாதிரி நிறம்' என்றதும் தான் கூட்டம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இல்லாவிட்டால் நான் கிளப்பிக் கொண்டு போயிருப்பேன் என்ற மாதிரி..

    பமிலி வருவதாகக் கூறி சனிக்கிழமைகளில் நகர்வலம் வந்து கராஜ் சேல்களில் வாங்கிக் குவித்த சமையலறை உபகரணங்கள், லைட்டுக்கள், தளபாடங்கள், குளிரூட்டிகள் எல்லாம் வீட்டை நிறைக்க... இரட்சணிய சேனைக் கடைகளை நவீன சந்தைகள் என்று புலுடா காட்டி, ஒரு டொலர் உடுப்புகளையும் 'ஐயோ, சிலோன் காசுக்கு எழுபது ரூபா' என்ற அன்ரியின் ஆட்சேபனையையும் மறுத்து.. உடுப்புகளையும் வாங்கிக் குவித்து.. சித்தப்பாவின் பமிலி லைஃப் கனடாவில் ஆரம்பித்தது.

    குடும்பம் ஆனதால் மூன்று படுக்கையறை வீடு வேண்டும் என்பதற்காகவும் 'வெல்பெயர் கூட காசு தரும்' என்பதற்காகவும் நீண்ட நாள் பிரிவுத் துயரை அடக்கி வைத்திருந்த 'காய்ஞ்ச மாடு கம்பில் விழுந்து' குடும்பம் பெருத்தது. புதிதாய் தோன்றிய மூன்று குஞ்சு குருமான்களுக்கு நானும் மாமாவாகி.. வேண்டியோ வேண்டாமலோ இழுபட வேண்டியதாகியும் விட்டது.

    சித்தப்பாவின் அன்ரி ஒரு அடுத்த மர்மம். உந்த மனிசன் இப்படி ஒரு மனிசியை எங்கே தேடிப் பிடித்தது என்று. அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம். பழந்தமிழ்ப் பண்டிதர்கள் எல்லாம் சொன்னது மாதிரி பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை மாதிரி இல்லை.. வைரவருக்கு வாய்ச்ச நாய் மாதிரி.. சிங்கனுக்கு சிங்கி 'ஊறுகாயும் சோறும் போல சேர்ந்து வந்த மாஜாலத்தை' என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. வந்து கொஞ்ச நாளிலேயே சீட்டுக்கு ஆள்பிடித்து அதற்குள் இவரும் சேர்வார் தானே என்று என் காதுபடுகிற மாதிரி கதையும் விட்டு சீட்டுச் சேர்ப்பதற்குள் நான் கழுவின மீனில் நழுவின மீன் ஆனேன்.. 'அன்ரி என்ன நான் வேலையில்லாமல் திரியிறன்..'

    இங்கிலிஷ் சுட்டுப் போட்டாலும் வராத அன்ரி அந்த பில்டிங்கில் வசிக்கும் கத்திச் சா எனப்படும் சோமாலிய கதீஜா, 'கத்திறன்' எனப்படும் ஸ்பானிய கத்தரின், அராபிய சேக்குகளின் அந்தப்புரத்தில் இடுப்பை ஆட்டி மயக்கும் அழகிகள் பாணியில்.. வேக வைக்கும் வெயிலிலும் கறுப்புத் துணியால் உடலை மூடி கண்களை மட்டும் வெளியே காண்பிக்கும் ஏதோ ஒரு 'ஸ்தான்' நாட்டுப் பெண், வெல்பெயர் காரியின் தொல்லை தாங்காமல் இங்கிலிஸ் படிக்க போன இடத்தில் சந்தித்த 'ரின் மீன் சம்பல்' எனப்பட்ட தியன் மின் சியான்பாவோ என்ற 'சப்பட்டை' உட்பட்ட இங்கிலிஷ் சுட்டுப் போட்டாலும் வராத மல்ட்டிக்கல்ச்சரல் மாதர் குல மாணிக்கங்களை சீட்டுக்கட்டு ராணிகள் ஆக்கிய சூட்சுமமோ, வட்டிக்குக் காசு வாங்கி பரிதாபமாய் செத்துப் போன சிதம்பரியின் சாம்பல் சூடு ஆறி, மனைவியின் கண்ணீர் வற்றுமுன்பாகவே, துக்கம் விசாரிக்கும் சாட்டில் போய் 'எப்படியாவது வட்டியையாவது மாதம் மாதம் தரப்பாருங்கோ, நாங்கள் காசு வாங்கித் தந்தவே எங்கட கழுத்தை நெரிக்கினம்' என்ற மனிதாபிமானமோ, யாரிக்குரிய முதல் மாதச் சீட்டை வட்டிக்கு விட்டு வட்டிக்காசில் சீட்டைக்கட்டி 'ஆறை நூறு' ஆக்குகின்ற சாமர்த்தியமோ.. அன்ரியைத் தவிர வேறு யாரால் தான் முடியும்?

    இவ்வாறாக சித்தப்பாவின் வட்டி வியாபாரம் ஒரே கூரையின் கீழ் சீட்டுக்கட்டுடன் விஸ்தரிக்கப்பட்டது. வட்டிக்கு வாங்கி சுத்தித் திரிபவர்களை உடுப்பு உரியிற மாதிரி ஏக வசனத்தில் 'என்ன காசை வாங்கிப் போட்டு ஒளிச்சுத் திரியிறீர்' என்று பேசி.. சீட்டுக்காசுக்கு முதல் திகதி அடித்து நித்திரையால் எழுப்பி என்று அன்ரி ரெலிபோனில் பிசியாய் இருந்ததால் 'இனி எங்க சமைக்கிறது' என்று சித்தப்பா இரவுகளில் றெஸ்ரோறன்றில் மிஞ்சிய சாப்பாடுகளைக் கொண்டு வரும் வரைக்கும் எல்லோருமே பார்த்துக் கொண்டிருக்கும் நிலையும் வந்தது.

    வேலையால் வரும் சித்தப்பாவும் நம்பிக்கைக்கு பங்கம் வராமல் கொண்டு வந்த சாப்பாட்டை மேசையில் வைத்து விட்டு, ஜக்கட்டைக் கழற்றும் போது, மந்திரவாதி முயல் எடுத்த மாதிரி உள்ளேயிருந்து வெங்காயமோ, நுண்ணிய சீனிப்பக்கட்டுக்களோ எடுப்பார்.

    அன்ரியின் வெற்றிகரமான தாக்குதல்களில் தற்காலிக பின்னடைவை ஏற்படுத்திய விசயம் அந்த பேர்த்டேப் பார்ட்டி தான். அதுகூட சித்தப்பா தன்னுடைய கிறவுண்ட் வேர்க்கை சரியாக செய்ததால் தான் வெற்றிகரமாக பின்வாங்க வேண்டி ஏற்பட்டது. யாரோ கூப்பிட்ட பேர்த்டேப் பார்ட்டியில் நிறைந்த சனத்தையும் கைமாறிய என்வலப்புகளையும் கண்டு வாயூறி... தெரிந்தவர், தெரியாதவர் எல்லாருக்கும் குஞ்சுவின் பேர்த்டேக்கு டெலிபோன் அடித்து சொல்லி, 'உவர் தம்பிக்கும் சொல்லுங்கோ, ஒரு நூறு டொலர் எண்டாலும் கொண்டு வந்து போட மாட்டாரே' என்று என் காதுபட சித்தாவுக்கு சொல்லி, ஹோலும் வாடகைக்கு எடுத்து கொண்டாடிய கொண்டாட்டத்துக்கு.. சித்தப்பா யாருக்கும் எதுவும் கொடுத்து வைத்திருக்காததாலும், அவருக்கு கொடுத்தாலும் திரும்பி கிடைக்காது என்பதாலும், அன்ரியின் கஸ்டமர் றிலேஷன்ஸ் பற்றி ஊரில் இருந்த நன்மதிப்பு காரணமாகவும் பலர் காய் வெட்டி விட்டார்கள். நானும் 'சித்தப்பா, சொன்னா நம்ப மாட்டியள், வாற வழியில' என்று பச்சைப் பொய் ஒன்றை அவிழ்த்து விட்டேன். மயிந்தியின் அனுபவம் காரணமாக றூம்மேட்டுக்களும் போகவில்லை.

    முடிவில் வந்திருந்த கொஞ்சப் பேரும் 'டொலர் கடையில பொம்மையை வாங்கிப் போட்டு, வந்து திண்டுட்டுப் போகுதுகள்' என்ற அன்ரியின் திட்டுதலுக்கு ஆளாகி.. குழந்தையை வாழ்த்த வைத்த கொண்டாட்டம் எல்லோரையும் வைது தீர்ப்பதில் முடிந்தது. மிஞ்சிய சாப்பாட்டை முழு பிரிட்ஜையுமே ஃபிரீஸர் ஆக்கி அடுத்த ஒன்றரை மாதத்தை அன்ரி சமாளித்ததில் தற்காலிக பின்னடைவு வெற்றிகரமான பின்வாங்கலானது.

    அந்தப் பின்னடைவிலிருந்து மீண்ட மாதிரி கொஞ்ச நாளில் தங்கம் ஜொலிக்க நெஞ்சைத் திறந்து சிங்கன் சித்தப்பா சங்கிலிகளுடன் வலம் வந்தார். விசாரிக்கப் போக.. 'என்னடா, உழைச்ச காசை அனுபவிக்க வேணும் தானே' என்று சித்தப்பா தத்துவம் பேச.. இதென்னப்பா, பட்ட மரத்தில பால் வடியுது என்று நான் பிரமித்துப் போக.. அன்ரி நகை அடைவு பிடிக்கும் பிஸினஸ் தொடங்கிய விசயம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியில் வந்தது. அடிக்கடி போய் வந்தாலும் அந்த அப்பாட்மெண்ட் வாசம் தான் என்னால் ஜீரணிக்க முடியாதிருந்தது.

    கதவைத் திறந்ததுமே சகாராவுக்கு மேலும் கீழுமான ஆபிரிக்க சமையல்களுடன் எங்கள் தென்னாசிய, தென்கிழக்காசிய நறுமணங்களும் தேனோடு சேர்ந்த தௌ;ளமுதமாய் மூக்கைத் துழைக்கும் ஒரு வித அழுகிய மீன் மணத்தில்.. ஏதோ திருநீற்றுப் பொட்டலங்களை வியாபாரம் செய்து கொண்டு, உள்ளே போய் வருவோர் பற்றி எந்த கரிசனையும் இல்லாமல் வழிமறிந்து நிற்கும் கரிபியன் நந்திகள். மஞ்சள் ரேப் சுற்றிய எச்சரிக்கை அறிவிப்புகள், விளக்கு மின்னும் பொலிஸ் வாகனங்கள், சிகரட் கேட்டு வியாபாரத்திற்கு வழி பண்ண முனைந்து, முடியாத போது படுதூஷணத்தினால் அர்ச்சித்து வழி அனுப்பும், பற்கள் விழுந்து எலும்பும் தோலுமான பகல் இரவு பாராத பருவராணிகள் எல்லாம் கடந்து.. சிறுநீர் கழித்த எலிவேட்டர்களில் மாங்கொட்டை விளையாடிய கணக்கில் காலை வைத்து தாண்டவமாடி வீட்டுக்குள் போய் சேர்ந்து சோபாவில் அமர..

    மனுநீதி கண்ட குலோத்துங்கன் ஆட்சியில் புலியும் மானும் சேர்ந்து விளையாடிய கணக்கில் கரப்பானும் எலிகளும் சுதந்திரமாக ஒளித்து விளையாடி மகிழும். வீட்டிலே உட்கார்ந்திருக்க.. அடுத்தடுத்த வீடுகளில் இருந்து நான்கெழுத்து தூஷண வார்த்தைகளும் அவித்த பன்றி மணமும் சரளமாக தென்றலோடு தவழ்ந்து வரும்.

    குளிர்காலமோ, வெயிற் காலமோ அளவுக்கு அதிகமாய் சூடும் குளிரும் கராஜ் சேலில் வாங்கிய ஹீட்டர், ஏ.சி புண்ணியத்தில் உடம்பை வாட்டும். திருவிழாக் கோலமாய் லைட்டுக்கள் ஒருபுறம்.. சித்தப்பா பெருமிதமாய் 'கரண்ட் என்ன நம்மடயா?' என்ற கேள்வியில் பூரிப்பார். பேஸ்மெண்டில் உள்ள வாஷிங் மிஷினில் ஒன்றரை டொலரை மிச்சம் பிடிப்பதற்காக.. பாத்ரூம் சிங்கில் போட்ட உடுப்புகள் கிழமைக்கணக்கில் புளித்து மணக்க.. தண்ணீர் ஆறாய் பெருகும்.. பார்த்தால் றெஸ்ரோறன்ரில் இருந்து கிளப்பி வந்த பெரிய டொய்லட் பேப்பர் றோல் கட்டாய் பாத்ரூமில் கிடக்கும்.

    ஏதோ கதியில்லாதவர்கள் வேறு வழியின்றி இவ்வாறான சூழலில் வாழ்வது இயலாமை என்று இரக்கப்படலாம். ஆயிரம் ஆயிரமாய் காசையும் வைத்துக் கொண்டு இவ்வாறான வாழ்வை தெரிந்து கொள்பவர்களை என்ன என்பது?

    அங்கே தான் என்னுடைய மகாதத்துவமே வருகிறது..

    It's all in their heads!

    இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்த கூட்டம்.. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு சில நூறு டொலர்கள் மிச்சம் கிடைத்திருக்கக் கூடும். எதற்கு இவர்கள் செலுத்துகின்ற விலை? பிள்ளைகளுக்காக என்று பிள்ளைகளைக் கவனிக்க நேரமில்லாமல், பணத்தைச் சேர்த்து அந்தப் பிள்ளைகளே அந்தப் பணத்தினால் சிதைந்து போவது தானா?

    எவ்வளவு தான் ஒட்டியுறவாடினாலும் நான் என்றைக்குமே வாய் நனைக்க விரும்பியதில்லை. அருவருப்பு மட்டும் அல்ல.. எப்படி சமாளித்தேனாம்? அதற்குத் தான் அவர்கள் வழி வைப்பதில்லையே.. தம்பி சாப்பிட்டுத்தான் வந்திருப்பார்.. என்றதன் பின்னால் எங்கே தேனீர் கிடைக்கும்? இருந்தாலும் முன்ஜாக்கிரதையாக ஒரு கோக் டின்னை வாங்கி பாதி குடித்து ஏப்பம் விட்டு 'நான் சாப்பிட்டுத்தான் வந்திருக்கிறேன்' என்று உறுதி செய்து கொள்வதற்குள் ஒரு குருமான் அதைப் பறித்துப் போய் விடும். எங்கள் றூமில் வந்து மூக்கு முட்டத் திண்டு குடித்த சித்தப்பா ஒருநாள் பியர் குடித்த குறையில் என்னைக் கண்டதும் போத்தலை சோபாவிற்கு பின்னால் மறைத்தது எனக்கு வெட்கமாகக் கூட இருந்தது. கையும் களவுமாய் பிடிபடும் நேரங்களிலும் 'ஐயோ, நீ பிந்திப் போனாய், இப்ப தான் இந்த கடைசி போத்தலை எடுத்தனான்' என்பார் சித்தப்பா.

    இப்போதெல்லாம் அடிக்கடி சித்தப்பா வீட்டுக்கு போக காரணங்கள் இருந்தது. வெள்ளைக்காரன் தேத்தண்ணியைக் குடுத்து தேயிலை வாங்கப்பண்ணிய கணக்காக, வட்டியும் சீட்டுமாக றூம்மேட்டுக்கள் சிலரை கடங்காரர் ஆக்கியதில், அன்ரிக்குப் பயத்தில் 'உவன் தான் அடிக்கடி அங்க போறவன்' என்று என்னிடம் காசைத் தந்து விட, காசைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நானும் அடிக்கடி போக... என்று வேண்டியோ வேண்டாமலோ உறவு வளர்ந்தது.

    இருந்தாலும் இரண்டு பேருமே எனக்கு அடிக்கடி தூண்டில் போட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். காசு ஏதும் தேவையோ என்று அடிக்கடி அக்கறையாய் விசாரித்து, 'தெரிஞ்ச இடத்தின்' காருண்யம் பற்றி சொன்னார்கள். கனடாவில் நிதி வளர நெறி சீட்டு மட்டும் தான் என பைனான்சியல் அட்வைஸ் செய்தார்கள்.

    'அன்ரி, எனக்கு காசு தேவையெண்டா, பிரெண்ட்ஸ் இருக்கிறாங்கள், அடிச்சால்.. பாங்கில போடவோ, கொண்டு வந்து தரவோ எண்டு கேப்பாங்கள். வட்டியும் இல்லை, குட்டியும் இல்லை' என்று விலாசம் காட்டப் போக.. 'அப்படியெண்டால் ஒரு பத்து வாங்கித் தாருமன் உமக்கு எண்டு சொல்லி' என்று ஆர்வமாய் விழுந்தடிக்க..

    'அன்ரி, சனம் உப்படிச் சொல்லி வாங்கி தாங்கள் வட்டிக்கு குடுக்குது' என்றதுடன் தெரிந்த பழமொழிகளையும் இழுத்து விட.. உறவுக்குப் பகை கடன்... அந்தக் கதையும் முடிந்தது.

    'மூத்தவன்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட மகனும் 'பிள்ளை' எனப்பட்ட மகளும் நாகரிகம் அடைந்து சரளமாக ஆங்கிலமும் தமிழும் மாறி மாறி பேசியபோது ஆச்சரியப்பட்டவன் நான். 'நல்ல பிள்ளையாயிருங்கோ, கெட்டிக்காரராயிருங்கோ' என்று புத்திமதியும் சொல்லி 'பிள்ளையள் இங்கை வந்து படிச்சு நல்லா வந்திடும்' என்ற என் நினைப்பை முதலில் மாற்றியவன் மூத்தவன். ஐயங்கார் வேட்டி கட்டிய மாதிரி.. உரிந்து விழும் பாணியில் முழங்கால் வரை தொங்கிய காற்சட்டையும், எம்.ஜி.ஆரின் கீறிய மீசை மாதிரி கோடு போட்ட தாடியும், கன்னப்பக்கமாய் அரிந்து மேலே மாடு சூப்பிய பனங்கொட்டைக் கணக்கில் நிமிர்ந்து நிற்கும் மயிருடன், நம்பியார் கழுத்தில் கட்டியிருந்த லேஞ்சியை தலையிலும் கட்டி... ஒதுக்குப்புறக் கிராமங்களில் புதிதாய் சைக்கிள் வாங்கி, மின்னும் லைட் பூட்டி, றிம் துடைக்க தும்புப் பந்தும் வைத்து பனை வடலிகளுக்குள்ளால் எம்.ஜி.ஆர் படம் பார்க்கப் போகும் கும்பல் போல... குரோம் றிம்முடன், அட்டை மாதிரி நிலத்தோடு உரசும் கார்களில் ஆங்காங்கே லைட் பூட்டி விலாசம் காட்டி.. மழை பெய்த பின்னால் யாரோ மண்டையைப் போட்டதற்காக எங்கோ மூலைகளில் இருந்து ஒலிக்கும் பறை மேளம் போன்ற இசை தெருவெல்லாம் அதிர.. ஆபிரிக்க வழித் தோன்றல்களை பெருமையுடன் கொப்பியடித்து.. கவச குண்டலங்கள் அணிந்த கர்ண பரம்பரையினருடன் சந்தியில் கண்ட போது.... அவன் கண்களைப் பார்க்கும் போதே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. அப்படியொரு போதையினால் வந்த மோனநிலை... 'தம்பி கெதியில் முன்னுக்கு வந்திடுவான்' என்ற எண்ணம்... அதாவது ஏதாவது ஒரு பேப்பரில் முன்பக்கத்தில் விரைவில் வருவான் என்ற நம்பிக்கை நீண்ட காலம் வீண் போகவுமில்லை.

    செத்தல் மிளகாய் தோற்றத்தில் இருந்த மகளுக்கும் மலிவான பாலும் அப்பிள்பழங்களும் தந்த உபயத்தில் ஆங்காங்கே சதை வைக்க.. தங்கச்சிக்காரியிடம் இரவல் வாங்கிப் போட்ட மாதிரியாக வயிற்றுக்கு மேலே ஏடாகூடமான இடத்திலிருந்து திரிசங்கு மாதிரி மேலோ கீழோ போக மறுத்து.. 'கறந்த இடம் நாட கண்ணை' அலையவிட்டு தொங்கி நின்ற ரீசேட்டும், இடுப்பு வரையும் ஏற மறுத்து அடம்பிடித்து ஏடாகூடமான இடங்களில் தரித்து நின்ற, அந்தக் காலத்தில் ஸ்டைல் என்று நினைத்து போட்டு விலாசம் காட்டியதற்காக இன்றும் நாங்கள் வெட்கப்படும் பெல்பொட்டமும் காலோடு ஒட்டி பிதுங்கி... 'பேதை மட நெஞ்சங்களை பிறந்த இடம் நாட' வைக்க.. தொப்புளில் வளையாபதியுடன் வலம் வந்த போது.. குமர் கரை சேரப் போகுது என்ற நம்பிக்கையும் வீண் போகவில்லை.

    பிறகு ஒருநாள் குண்டலகேசி ஒன்றுடன் காரில் தொங்கிக் கொண்டு போனதைக் கண்டதுடன் 'சித்தப்பாவுக்கு இனி சீதனம் மிச்சம்' அல்லது 'அன்ரிக்கு வெல்பெயர் கூடக் கிடைக்க ஒரு சிங்கிள் மதர் கிடைக்கப் போகிறது' என்ற நிம்மதியும் சந்தோசமும் சேர்ந்து வந்தது.

    இந்த விசயங்களையெல்லாம் வீட்டில் சொல்லி முன்னெச்சரிக்கை செய்திருக்கலாமே என்று நலன்விரும்பிகள் கேட்பது நியாயம் தான். 'எங்கடை பிள்ளையளை நாங்கள் அப்படி வளக்கேலை' என்று சண்டைக்கு வந்தால் நான் என்ன சொல்ல முடியும்? அடுத்தவர் விசயத்தில் அனாவசியத் தலையிடா என் கொள்கை சறுக்க காரணமானது ஒரு நாள்.. குஞ்சும் குருமானும் ஒரு நாள் நுள்ளுப்பிராண்டி, கிள்ளுப்பிராண்டிய போது பச்சைத் தூசணங்களை அனாயாசமாக பயன்படுத்திய போது தான் அந்தக் குழந்தைகளுக்கான தார்மீகக் கடமை எனக்கு உறைத்தது.

    அன்றிலிருந்து காதை முறுக்கி பிடரியில் போட்டு இருத்தி எழுப்பி.. கதைகள் சொல்லி.. ஹம்பேர்கர் லஞ்சம் கொடுத்து லைபிரரிக்கு கூட்டிச் சென்று.. என்று இதெல்லாம் செய்யக் கிடைக்காத என் மருமக்கள், பெறாமக்களை நினைத்து செய்யும் எண்ணம் வந்தது. என்னைக் காணும் போதெல்லாம் ரிவியை நிறுத்தி.. ஹோம் வேர்க் கொப்பிகளைக் கொண்டு வந்து.. தங்கள் பெரூமைகளை அளந்து.. கிட்டத்தட்ட என் கண்காணிப்பில் குஞ்சும் இரண்டு குருமான்களும் உலவின.

    இதுவரை நாள் மூத்தவன் என்று ஒருமையில் அழைத்த சித்தப்பா திடீரென்று மரியாதை கலந்து 'மூத்தவரைக் காணேலை' என்று பவ்வியமாக விசாரித்ததன் மர்மத்தை குருமான் அவிழ்த்தது. நேரம் கெட்டு வந்தவனை ஊர்க்கணக்கில் மிரட்டப் போக, பொக்கட்டில் இரூந்த துப்பாக்கியை எடுத்து ஜேம்ஸ் பொன்ட் கணக்கில் துடைத்ததில் சித்தப்பாவின் மகன் 'மகர்' ஆனான்.

    ஒருநாள் எலிவேட்டரில் ஒரு காலைத் தூக்கி தில்லைத் தாண்டவம் ஆடும் போதே கேட்ட அன்ரியின் கூக்குரல் கேட்டு 'சித்தப்பா போய்ச் சேர்ந்திட்டாரோ' என்ற பதட்டத்தில் ஓடிப் போக... 'ஐயோ, அவனை பொத்திப் பொத்தி வளர்த்தனே, கூடாத கூட்டம் சேராதை என்று சொன்னேனே' என்று அன்ரி தலையில் அடித்து ஒப்பாரி வைக்க.. துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் சகிதம் கும்பலோடு கோவிந்தாவான மகனை.. குடிவரவு, வெல்பெயர், பைனான்சியல் பிளானிங், திருமண புரோக்கர், காப்புறுதி, காப்புறுதி நட்டஈடு, வீடு மூவிங், மோட்கேஜ் வசதிகள் எல்லாவற்றையும் ஒரே பிரீஃப் கேசினுள் வைத்து சேவை செய்யும் சட்ட ஆலோசகர் மூலமாக இருபது செலவழித்து.. சித்தப்பா மீட்டு வந்தார். செங்களம் ஆடி சிறை மீண்ட செம்மல் என்னைக் கண்டதும், நான் அடிக்கடி சொல்கிற 'நல்ல பிள்ளையாயிரு, கெட்டிக்காரனாயிரு' என்ற ஆலோசனைகளை கேட்கவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமாகவோ என் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டது. அதன் பின்னால் இரண்டு கிழமைக்கு அன்ரி அழுதது மகனுக்காக இல்லை, மண்ணாய் போன உண்ணாச் சொத்தான இருபதிற்காகவும் என்றும் புரிந்தது.

    பிள்ளைகளை வளர்க்க சரியான சூழல் இதுவாக இல்லாததால், வீடு வாங்கலாமே என்று வாயை வைச்சுக் கொள்ளாமல் சித்தப்பாவுக்கு ஆலோசனை சொல்லப் போக.. ஒருநாளும் இல்லாமல் 'இளம் பிள்ளையள், சமைச்சுத் தர ஆக்களில்லை' என்று எனக்காக வடையும் சுட்டு, குஞ்சு குருமான்களுக்கும் கொடாமல்.. 'ஏன் பிள்ளை வெக்கப்படுகிறாய்? கொண்டு போய் குடன், அவர் எங்கட பிள்ளை தானே' என்று தள்ளி விட்டு.. சித்தப்பாவும் அன்ரியும் நெருக்கமாய் உட்கார்ந்து 'நீர் சொன்னது உண்மை தான், பிள்ளையளின்ரை படிப்பு இங்க இருக்க கெடுகுது' என்றதற்கு.. ஒட்டுண்ணி வெல்பெயர்க் கூட்டத்தை அடக்க வந்த அரசாங்கத்தின் கெடுபிடிதான் காரணம் என்று புரிந்தாலும் 'நீர் நம்பிக்கையான பிள்ளை, ஒண்டுக்கை ஒண்டு, உம்மட பேரில வாங்குவம் எண்டு யோசிக்கிறம்' என்றதும் அடி வயிற்றில் இடி விழுந்தது.

    'சித்தப்பா நல்ல ஐடியா தான், ஆனால் என்ர கிறடிட் நாறிப் போய் கிடக்கு, ஒழுங்காக காசுகள் கட்டாமல்.. வங்குரோத்து அடிச்சுப் போட்டு பாத்துக் கொண்டிருக்கிறன்' என்று கூசாமல் பொய்யும் சொல்லி.. 'துணை போனாலும் பிணை போகக் கூடாது' என்ற தெரிந்த பழமொழியைச் சொல்லாமலும்.. இந்தியானா ஜோன்ஸ் கணக்கில் மயிர்க்கூச்செறிந்து திகிலூட்ட தப்பி வந்த அனுபவம் மறக்க முடியாதது.

    நான் உள்ளேயிருக்கும் போது கூச்சல் போட்டு ஊரைக் கூட்டி 'என்ரை பிள்ளையை ஏமாத்திப் போட்டான்' என்று தலையில் கட்ட முயற்சி நடக்கக் கூடும் என்றும், அதற்கு சுற்றம் சூழ உள்ள அக்கம் பக்கம் 'உவர் தான் அடிக்கடி உங்க வந்து போறவர்' என்ற நற்சான்றுப்பத்திரம் தரக்கூடும் என்ற எண்ணத்திலும், தன் மூதேவியை கடத்திச் சென்ற ராவணன் என்று குண்டலகேசி தன் வானர சேனையுடன் வந்து என்னைத் துவம்சம் செய்யக் கூடும் என்ற பயத்திலும், சிறை மீண்ட செம்மறி தன் பட்டி பரிவாரங்களுடன் வந்து முட்டிக்கு முட்டி தட்டி, குண்டுக் கட்டாய் கட்டிக் கடத்திச் சென்று ஷொட்கன் வெடிங் எனப்படும் 'துப்பாக்கி முனைத் திருமணத்தில்' மாப்பிள்ளையாக்கக் கூடும் என்ற பீதியிலும் பஜார் பக்கம் தலை காட்டாமலும், 'வயித்தில குடுத்திட்டு மாறியிட்டான்' என்ற கதை வரக் கூடாது என்பதற்காக மொன்றியல் போகாமல், தெரிந்தவர்களுக்கு தலைக் கறுப்பைக் காட்டி, தொலைபேசித் தொடர்புகளைத் தொடர்ந்து 'நான் இங்கே தான் இருக்கிறேனாம்' என்று கொண்டும் மூன்று மாதம் இரண்டு வேலை என்ற சாட்டில் அஞ்ஞாதவாசம் செய்ய வேண்டி ஏற்பட்டது.

    பின்பொரு நாளில்.. காரின் பின்புறக் கண்ணாடியில் சீறும் புலியின் தலையை ஒட்டிய புலிகேசி ஒன்றில் கழுத்தில் பஸ் தரிப்பு நிலையத்தில் மகள் தொங்கி நின்று ஆலிங்ஙனம் செய்ததைக் கண்ட பின்பு தான் 'இனியென்ன, குண்டலகேசியாச்சு, புலிகேசியாச்சு' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு.. பெண் மீட்புப் போராட்டத்தில் குண்டலகேசி குண்டடிபட்டு விழுப்புண் தாங்க.. தன் previous brushes with the law காரணமாக 'பொலிசாருக்கு ஏற்கனவே தெரிந்தவரும், நிலையான விலாசம் இல்லாதவருமான' புலிகேசி still at large என்று நாடளாவிய பிடிவிறாந்துடன் தலைமறைவாக.. வழமையாக ரொறன்ரோவில் நடப்பதால் எந்த ஆச்சரியமும் இல்லாத இந்தச் செய்தி ஆங்கிலப் பத்திரிகையொன்றின் பின்புறப் பக்கம் ஒன்றில் புலிகேசியின் 'முற்புறத் தோற்றம், பக்கப்புறத் தோற்றங்களுடன்' சிறு செய்தியாக வெளிவந்திருந்தது.

    இனத்திற்கு பெருமை சேர்க்கும் இச்செய்தியை போட்டால், தங்கள் தலைக்கு ஆபத்து என்ற கணக்கில் தமிழ் பத்திரிகைகளும் இது பற்றி வாய் திறக்கவில்லை. இருந்தாலும் 'ஆயுதம் தாங்கியிருக்கக் கூடிய' 'dangerous offender' புலிகேசி சட்டத்தரணியுடன் சென்று சரணடையும் வரை என் அஞ்ஞாதவாசம் கலையவில்லை.

    வனவாசம் முடிந்து குஞ்சுகுருமான்களைப் பார்க்கப் போன போது.. தவக்களை கணக்கில் முகப் பொலிவோடு, ஊரிலிருந்து கொஞ்சக் காலத்திற்கு முன்பு வந்திருக்கக் கூடிய ரிஷிகேசி ஒன்று உட்கார்ந்திருக்க.. 'பிள்ளை வெட்கப் படாமல் கொண்டு போய் கோப்பியைக் குடு.. அவர் ஒண்டுக்க ஒண்டு தானே' என்று அன்ரி தள்ளி விட்ட பிள்ளை கொண்டு வந்த கோப்பியை விட்டு, நாறின மீனைப் பூனை பார்த்த கணக்கில் பிள்ளையைப் பார்த்துக் கொண்ட ரிஷிகேசி பரிதாபமான சிரிப்பு ஒன்றை உதிர்த்துக் கொண்டு.. 'அண்ணை வந்து கனகாலம் போல, வேலை எங்க றெஸ்ரோறன்ரோ, பக்ரறியோ' என்றது.

    'மவனே, கலியாண ஆசை இருக்கிறது நல்லது, எதுக்கும் பிள்ளைக்கு தகப்பன் ஆர் எண்டதை தெரிஞ்சு வைச்சுக் கொள்' என்று மனதால் திட்டி.. 'கிடைச்சால் சொல்லிறன்' என்று 'வேலை ஏதும் எடுக்கலாமோ' என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

    யார் இந்த ரிஷிகேசி என்ற மர்மம் தீர்வதற்கு முன்னால்.. 'இவர் என்னோட றெஸ்ரோறன்ரில வேலை செய்யிறார்' என்று சித்தப்பாவும், 'ஊரில எல்லாரும் ஒரு மாதிரியே, நல்ல மனிசரும் இருக்கினம் தானே' என்று அன்ரி குத்தல் கதை சொன்ன போதும்.. யாராவது இளிச்சவாயன் கிடைத்தால் தலையில் மிளகாய் அரைக்கும் யாழ்ப்பாணப் பாரம்பரியத்திற்கு இன்னொரு வரலாற்று வெற்றி கிடைத்து விட்டது என்ற எண்ணம் வந்தது.

    பாவம், பையன், வீடு அவன் பேரில்.. வெல்பெயர் இனி காலாகாலத்திற்கும் இல்லை.

    'வீடு வாங்கியிட்டம், பேஸ்மெண்டுக்கு இவர் வருவார்தானே' என்று வழமை போல் என் அனுமதியில்லாமல் என்னைச் சேர்த்த அன்ரிக்கு.. 'ஊரில பங்கருக்க கிடந்தது காணும்' என்று சொல்ல.. 'பரவாயில்லை, இவரோடு மேல றூமில இருக்கலாம்' என்று ரிஷிகேசியுடனான அதிகாரப் பரவலாக்கத்துக்கு அன்ரி முன் வைத்த இடைக்காலத் தீர்வை நிராகரிக்க.. இன்னும் பொய் சொல்ல வேண்டி ஏற்பட்டது...

    'அன்ரி, நான் சரியான குப்பையன், வீடு துப்புரவாய் வைச்சிருக்கிறேலை என்று அம்மா நெடுக திட்டுறவா'.

    'அவ்வளவு கனக்கா டவுண் போடேலை' என்ற 'பெரிய ஒண்டரை' எனக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், மீதி மூன்றரைக்கும் மோட்கேஜ் கட்டுவது இவர்களுக்கு கஷ்டமாக இருக்காதோ என்று மனம் அங்கலாய்த்தது. வீடு மூவ் பண்ண வான் வாடகைக்கு எடுக்க உதவிக்கு வரச் சொல்லி.. அங்கே வைத்து வான் வாடகைக் காசை என் தலையில் மாட்டி விட சித்தப்பா எடுத்த முயற்சிக்கும், பின்னர் பெற்றோல் அடித்த காசு கொடுக்க 'பொக்கட்டுக்க ஒரு பத்து டொலர் இல்லையோ' என்ற கேள்விக்கும் 'ஐயோ, சித்தப்பா, ஜக்கட்டை மாறிப் போட்டுக் கொண்டு வந்திட்டன், வொலட் என்னட்டை இல்லை' என்று பச்சைப் பொய் சொல்லி..

    இனிமேல் வாழ்நாளில் பயன்படுத்த மாட்டாத கழிவுப் பொருட்களையெல்லாம் எறிய மனமின்றி.. 'காசு குடுத்து வாங்கினது, எறியக் கூடாது, பிறகு உதவும் தானே' என்ற காரணம் காட்டி அன்ரி வீட்டுக்குக் கொண்டு போக.. எனக்கும் ரிஷிகேசிக்கும் நாரி முறிந்தது.

    பாவம் ரிஷிகேசி.. அசைவுள்ள தன் ஒரே ஆதனமான ட்ரவலிங் பாக்குடன் அன்ரி வீட்டில் குடிபுகுந்தான்.

    பேஸ்மெண்டில் வாடகைக்கு யாரோ சேர்த்து விட்ட குடும்பம் அன்ரி கொண்டு வந்த கழிவுப் பொருட்களுடன் பேஸ்மெண்டை 'குறை நினைக்காமல்' பங்கு போட்டது. அன்ரியின் மாஸ்டர் பிளான்படி கேட்டரிங், கடைகளுக்கு சிற்றுண்டி வினியோகம் மெதுவாக ஆரம்பிக்க.. இதற்கு உதவும் என்றும் மிஞ்சிய நேரத்தில் மூவிங் செய்யலாம் என்றும் ஒரு பழைய வானை யாரோ சித்தப்பாவின் தலையில் கட்டினார்கள். வானுக்குள் நீண்ட காலமாய் இருந்த ஜுஸ் பெட்டிகள் பற்றிய மர்மத்தை சித்தப்பாவே அவிழ்த்தார். 'வீட்டில வைச்சால் சின்னனுகள் குடிச்சு முடிச்சிடுதுகள்'. உண்மை.

    றெஸ்ரோறன்றில் இருந்து கொண்டு வந்திருந்தால்.. 'நம்மடயா' என்று பூரித்திருப்பார். காசு கொடுத்து வாங்கியது.. அளவு சாப்பாடு நடக்கிறது.

    இதற்குள் சித்தப்பா பக்ரறி வேலை ஒன்று எடுத்ததற்கு வெல்பெயர் அலுப்பு காரணமாக செப்பரேட் அடித்ததும் 'பொஸ்ஸிற்கு என்னை விட விருப்பமில்லை' என்று றெஸ்ரோறன்ட் வேலையைத் தொடர்ந்தற்கு காரணம் அந்த டொய்லட் பேப்பரும் சீனிச்சரைகளும் என்பது எனக்கு வடிவாகத் தெரியும்.

    இரண்டு மூன்று மாதத்தில் சண்டையைக் கிளப்பி.. பேஸ்மன்ட் சனம் கலைபட்டுப் போனது..

    கரண்ட், காஸ், தண்ணீர் பில் கூடிப் போச்சு, சும்மா லைட் போடுகினம், நெடுக குளிக்கினம் என்ற அன்ரியின் குற்றப்பத்திரிகைக்கு காரணம் மொத்தம் நாற்பது டொலர் அதிகரிப்புத் தான். அடுத்த குடும்பம் வந்து சேர மூன்று மாதம் பிடிக்க... சுமார் இரண்டாயிரம் டொலர் கைநழுவிப் போனது.

    போய்க் கொஞ்ச நாளிலேயே வாசலெல்லாம் பாத்திரங்கள் பரவிக் கிடக்க.. சமையலறைச் சுவரெங்கும் எண்ணெய் பாணியாகி.. அரசாங்கக் குடியிருப்பின் நறுமணத்திற்கு அன்ரி வீட்டைக் கொண்டு வந்து சேர்த்தா. இப்போது இது பிடிக்காமல் பேஸ்மன்ட் கூட்டம் நழுவ.. இன்னொரு மூவாயிரம் துண்டு விழுந்தது, அடுத்த குடும்பம் வரும்வரை ஓடுப்பட்டுத் திரிய வேண்டிய நிலை.

    கொதிக்கும் வெயிலில் வீடு புழுங்கி அவிய.. கேட்டரிங் சமையல் வெக்கையுடன் குழந்தைகள் மூச்சுத் திணறி வெந்து போனாலும், கரண்ட் பில் கூடும் என்ற அச்சத்தில் ஏ.சியை அன்ரி ஓன் பண்ண விடவேயில்லை.

    'ஊரில என்ன ஏ.சி பூட்டியே இருந்தனாங்கள்?', மரம், செடி சூழ இருந்து நிழல் தர வழியில்லாததால் பிள்ளைகள் வெளியில் போகவும் முடியவில்லை.

    'மூத்தவர்' தந்திரமாக தன் கேர்ள் பிரண்டுடன் எங்கோ பேஸ்மென்ட்டுக்கு மூவ் பண்ணி விட்டார். அன்ரிக்கு அது பெரிதாக பாதிப்பில்லை. அவன் இருந்த போதும் காசு ஒன்றும் தந்ததில்லை, அவனுடைய இடத்தில் யாரையாவது வாடகைக்கு வைத்தால் காசு வரும் என்ற எண்ணத்தில். அவனைச் சிறை மீட்க இருபது செலவழித்த கோபம் இன்னமும் இதயத்தின் மூலையில் இருந்தது எனக்குத் தெரியும்.

    கேட்டரிங் வேலைகளுக்கான மாவை அவிக்க, 'கரண்ட் போய் விடும்' என்று, அப்பாட்மெண்டில் குடியிருந்த தூரத்து உறவினர் வீட்டுக்கு மாவைச் சுமந்து அவிக்கப் போகும் போது குஞ்சுகுருமான்களையும் மறக்காமல் கூட்டிச் செல்லும் அன்ரி.. அவர்களை அங்கே குளிப்பாட்டி, கார் பிடித்து கீரிமலைக்கு குளிக்கப் போன கணக்காக... நீர் சேமித்து மீண்டு வருவார்...

    'மார்க்கமாக' வீடு வாங்கியதுதான் முன்பு போல அடிக்கடி போய் வரவும் முடியாமல் போனதற்கான காரணம் அல்ல. வாஷ்ரூமுக்கு போகும் போது வாசலில் காத்திருப்பதும், வெளியே வந்ததும் எனக்கு முன்பாகவே பாய்ந்தடித்து லைட்டை அணைப்பதும், ஐயாயிரம் ரூபாய்க்கு வாங்கி சோபா என்று அதற்கு அழுக்குப்பிடித்த பெட்சீட் ஒன்றால் மூடிச் சுற்றிக் கட்டி பிள்ளைகளை உட்காரவும் விடாமல் துரத்துவதும், சித்தப்பா என்னைக் கண்டதும் 'அட நிலத்தில இருக்க குளிர்மையாய் இருக்கு' என்று என்னை இழுத்தி உட்கார வைப்பதும் விருந்தோம்பல் பற்றி அசௌகரியங்களை ஏற்படுத்தின.

    தன் பழைய கம்பியூட்டரை எறியப் போன நண்பனிடம் 'இங்க கொண்டு வா, குழந்தையள் பாவிக்கும்' என்று குளிர் கையைக் குத்தும் வின்ரரில் நண்பனின் காரையும் உதவி கேட்டு கொண்டு போய் இறக்க.. வெளியேயுள்ளதை விட, வீடு குளிர்ந்தது. கம்பியூட்டரைக் கண்டு துள்ளியோடி வந்த குழந்தைகள் சுற்றி வளைத்து கட்டியணைக்க.. 'உதுக்கு கனக்க கறண்ட் செலவாகுமல்லோ' என்று அன்ரி ஆட்சேபித்தார். 'என்ன வீடு சரியாக் குளிருது?' என்ற கேள்விக்கு 'நாங்கள் தான் குறைச்சு வைச்சிருக்கிறம், காஸ் பில் கூடிப் போச்சு' என்று சித்தப்பா மூலையிலிருந்து முனகினார், தலைக்கு தலைப்பாகை கட்டி, கம்பளிப் போர்வைகளுடன் காலுறைகளுடன் கூடிய காலை சோபாவில் வைத்தபடி.

    'மாமா, அம்மா ரீவி பாக்க விடுறாவில்லை' என்ற குருமானுக்கு.. 'படிக்கிற பிள்ளையளுக்கு என்ன நெடுக ரிவி?' என்று நான் நியாயம் சொல்ல.. 'இல்லை, கறண்ட் வீண் எண்டு படிக்கவும் விடுறாவில்லை' என்று மற்ற குருமான் விளக்கம் தந்தது. நான் தேடிய குஞ்சு 'அம்மா, வெங்காயத்தை உரிச்சுப் போட்டு விளையாடட்டாம்' என்று கண் கலங்க விளக்கம் தந்தது. 'இண்டைக்கு கலியாண நாள், நிறைய ஓடர்' என்று அன்ரி பெருமைப்பட்டார்.

    'மாமா, நாங்கள் அப்பாட்மென்ட்டுக்கு போகப் போறம்' என்ற குஞ்சுகுருமான்களை காரணம் கேட்க.. 'அங்க போனால் தான் அப்பா நம்மடயா எண்டு எல்லாம் செய்ய விடுவார். இங்க ஒண்டும் செய்ய விடுகினமில்லை' என்று குழந்தைகள் விளக்கம் சொல்லின.

    புளோரசன்ட் லைட்களுக்கு மாற்றினால் கரண்ட் செலவு குறையும், ஆனால் சித்தப்பாவுக்கு றெஸ்ரோறன்டில் 'நம்மடயா' இலவசமாய் வரும் குமிழ் பல்புகளை விட விருப்பம் இருக்காது. அதிக நீர் விரயமாக்கும் டொய்லட்டை எறிந்து நீர்ச் சிக்கன டொய்லட்டுக்கு காசு செலவிட அன்ரிக்கு விருப்பம் இருக்காது, நகர சபையில் போனால் தண்ணீர் செலவைக் குறைக்கும் வழிமுறைகளை பதினைந்து டொலர்களுக்கு வாங்கலாம், குளியறையும் சமையலறையும் பெருமளவு நீர் விரயத்தை குறைக்கும் போன்ற உண்மைகள் இருவருக்குமே தெரியாது,

    மூலையில் பிள்ளையுடன் நெருங்கி உட்கார்ந்து ரிஷிகேசி கதகதப்புத் தேடிக் கொண்டிருந்தது. பிள்ளை பூரிப்பாக இருந்ததில்.. சித்தப்பா சில மாதங்களில் பேரனைக் காணும் சாத்தியம் புரிந்தது. பேஸ்மண்டில் தண்ணீர் பெருகுவதாக நிலக்கீழ் வாசிகள் சொன்னதில்.. போய்ப் பார்க்க.. குளிரில் உறைந்த நீர் பனிக்கட்டியாகி விரிந்து செப்புக் குழாய்களைப் பிரித்த விசயம் புரிந்தது. உடைத்துப் பிரித்துச் செய்வதற்கு வரக் கூடிய செலவுகள் பற்றிய என் அறிவை நான் வெளிக்காட்ட விரும்பாமல் வாயை மூடிக் கொண்டேன்.

    'சித்தப்பா, பெடியன் காருக்க பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்று சொல்லி, குஞ்சுகுருமான்களுக்கு முத்தம் கொடுத்து மீண்டு வரும் போது 'அண்ணை, கலியாணத்துக்கு வந்திடுங்கோ' என்று ரிஷிகேசி பணிவுடன் சொன்னது. 'குண்டலகேசியும் புலிகேசியும் சிறையில் இருந்து வந்தால் உன் ஆயுளுக்கு பங்கம் ஏற்படலாம்' என்று 'தீர்க்காயுஸ் மான் பவ' என்று வாழ்த்தி வெளியே வந்தேன்.

    எனக்கு எல்லாமே இருட்டாக இருந்தது. ஐந்து லட்சத்துக்கு வீடு வாங்கி, ஐம்பது ரூபா பில்லுக்காக வாழ்வை மாற்றியமைக்கும் இந்த மனிதர்கள் பற்றி.. ஐயாயிரம் ரூபா சோபாவுக்காக ஐந்து வயதுக் குழந்தைகளில் ஆசைகளை தகர்க்கும் புத்தியை.. மண்ணும், பொன்னும், பெண்ணுமான ஆசைகள் தலைக்குள் ஏறி தாண்டவம் செய்யும் மனித வாழ்க்கை பற்றி புரிந்து கொள்ள.. மனம் போல் வாழ்க்கை என்ற பழமொழிகளை உள்ளடக்கிய It's all in their heads என்ற என் தத்துவத்தை புரிந்து கொள்ள.. உங்களுக்கு இப்போது இரண்டு பியர் தேவைப்படாது.

    எனக்குத் தான் இரண்டு பியர் அடிக்க வேண்டும் போல தோன்றியது.

    (நான் கண்டு கேட்டு அனுபவித்து இன்புற்ற மகா அல்பங்களின் தொகுப்புத் தான் இந்த மெகா அல்பம்.)

    Postad



    You must be logged in to post a comment Login