பாலசுப்பிரமணியம், ஜானகி, மனோ, சித்திரா என்று குண்டுச்சட்டிக்குள் கம்பு சுற்றாமல்...
தியாகராஜ பாகவதருக்கும் சந்திரபாபுவுக்கும் பாட்டுக் கொடுத்த
ஜி.ராமநாதன் தான் எனக்கு மாஸ்ட்ரோ!
இரண்டு இராகம் தான் தனக்கு தெரியும் என்று தன்னடக்கத்தோடு சொன்னதைப் பிடித்துக் கொண்டு...
சங்கராபரணம் இசைக்காக வீணை பாலசந்தரால் கேலி செய்யப்பட்டாலும்...
நடனம், இசை என்றால் தில்லானா மோகனாம்பாள் முதல் சங்கராபரணம் வரைக்கும் பாட்டும் நானே, பாவமும் நானே என்ற...
'கட்டுரை எழுதிக் கொடுத்தாலும் இசையமைப்பார்' என்று சோ புகழ்ந்த
கே.வி.மகாதேவன் தான் எனக்கு இசை ஞானி!
டி.எம்.எஸ், சுசீலாவோடு வாழ்ந்த தலைமுறைக்கும்
ஜேசுதாஸ், வாணி ஜெயராம் தலைமுறைக்கும் இடையில்
சிறிநிவாஸோடு...
நெஞ்சம் மறக்க முடியாத மன்னனும் மயங்கும் மல்லிகை போன்ற பாடல்கள் தந்த அபூர்வ ராக எம்.எஸ்.வி தான் எனக்கு ராகதேவன்!
தான் பாடிய பாடல்களை இசையமைத்த ஏ.எம்.ராஜா முதல்...
ஹிந்திப்பாடல்களை வாடை தெரியாமல் உல்டா பண்ணி அமர்க்களம் பண்ணிய எம்.எல்.சிறிகாந்த் வரைக்கும்...
குன்னக்குடி, ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா முதல் வி.குமார், சந்திரபோஸ் வரைக்கும்
எத்தனையோ இசையமைப்பாளர்கள்
கொடுத்த பணத்தை பக்குவமான பணிவோடு 'அண்ணே!' என்று பேசாமல் வாங்கிக் கொண்டே தொழிலைத் தெய்வமாய் நினைந்து காலத்தால் அழியாத இசையைத் தந்தார்கள்!
மீசையும் காதலும் அரும்பிய காலத்தில் எத்தனையோ நினைவுகளோடு ஒட்டிய பாடல்களைத் தந்து, இன்றைக்கும் அந்த நினைவுகளை அசை மீட்க வைத்த இளையராஜாவும் அவர்கள் வரிசையில் ஒருவரே!
Record விற்பனை முதல் performance வரைக்கும் royalty தர வேண்டும், பேனரில் பெயர் வர வேண்டும் என்றதெல்லாம்
உரிமையை நிலை நாட்டவா, வித்தியா கர்வமா...
இல்லை, வெறும் தலைக்கனமா என்பதெல்லாம் தெரியாமல்
தலை குழம்பினாலும்...
உச்சிக்குப் போய் உருண்டு விழுந்தாலும் திரும்பவும் எழும்பி தலை நிமிர்ந்த திறமைக்காகவும்...
சாதிக்காய் காலால் மிதித்து உயிரை எடுக்கும் சமூகத்தை
தன் காலடியில் விழ வைத்த திமிருக்காகவும்...
பிறந்த நாள் என்ன... பிறப்பே கொண்டாடப்பட வேண்டும்!
ஆனால்...
கவிப்பேரரசு என தன்னையே புகழ்வதில் சிற்றின்பம் காணும் புல்லுருவி போல...
எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே என்பது தான் கொஞ்சம் இடிக்கிறது!
You must be logged in to post a comment Login