கியூறியஸை நரி வெருட்டும் கதையை வாசித்திருப்பீர்கள்.
எதையாவது செய்து ஏதாவதை போட்டுடைத்தால் ஆச்சி சொல்வா... உவனுக்கு நரி வெருட்டுது!
நீண்ட நாளாக நீண்ட எதையும் எழுதத் தோன்றவில்லை.
அடுத்தடுத்து வந்த துன்பங்களும் வேதனைகளும் மனதை ஒருநிலைப்படுத்தி எதையும் எழுத விடவில்லை.
வேலை முடிந்து வந்தால் போய் உட்கார்ந்து விடுகிற கம்பியூட்டரில் உட்காரவே பிடிக்கவில்லை.
இதை விட, செல்போனில் நோண்டுவது நேரத்தை வீணடித்து விடுகிறது. செல்போனில் இலகுவில் எழுத முடிந்தாலாவது ஏதாவது உதவியாக இருக்கும்.
மறுபுறத்தில், இந்த சமூகத்தில் எழுதித் தான் என்ன செய்வது? என்ற கேள்வி.
உழைப்பு என்பதையே 'பிழைப்பு' ஆக்கி, எதைச் செய்தாலும், தனக்கு லாபம் கிடைக்குமா? என்பதை கணக்கிடுவதிலேயே காலத்தைக் கழிக்கும் இனத்தில் பிறந்த சாபத்தை நிறைவேற்றுவது ஒருபுறம்.
எழுதுவதை விட, தங்களைப் பற்றி எழுதப்பட வேண்டும் என்று விரும்புகிற இலக்கியவாதிகள் மலிந்த இடத்தில், எழுத்து என்பது 'தேவையில்லாத வேலை'!
குனிந்து, வளைந்து நெளிந்து கொடுத்து, எழுத்தையும் மனச்சாட்சியையும் விற்று, வாழ்க்கையை ஒரு பொய்மையாகவே வாழக் கூடிய மனநிலை இருந்தால், இங்கே எழுத்தும் ஒரு வகைப் 'பிழைப்புத்தான்!'
என்னவோ, கொஞ்ச நாளாய் மனம் தெளிவடைந்த நிலையில் இருக்கிறது.
நம் பாட்டில் போய்க் கொண்டிருக்கும்போதே, தேவையில்லாத துன்பங்கள் வந்து சூழ்ந்து கொண்டிருந்த நிலை போய், அவ்வப்போது நல்லது நடப்பதான சகுனங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.
அதைச் சொன்னால், 'சும்மா உன்ரை வாயை வைச்சுக் கொண்டிரு! உந்தச் சுவரும் கேட்டிட்டு, ஏதாவது செய்யும்' என்பாள் அபிதகுஜாம்பாள்.
'சும்மா தேவையில்லாமல் எழுதாமல் கையை வைச்சுக் கொண்டிரு' என்று சொல்லாமல் 'வாயை வைச்சுக் கொண்டிரு' என்று மட்டுமே சொல்கிற குடும்பம் கிடைப்பதே வரம்.
புலிகள் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்த அந்த நாளில் கூட வீட்டார் யாருமே 'எழுதுவதை நிறுத்து' என்று சொன்னதில்லை.
சொன்னால் கேட்க மாட்டான் என்பது அவர்களுக்குத் தெரியும்.
புதுவருடத்திற்கு அண்டிய காலத்தில், இப்படியாக மனம் தெளிவடைந்த நிலையில், பெண்களுடன் பாலியல் சேஷ்டைகள் விடும் நரிகள் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றை எழுத முடிந்தது.
கட்டுரையிலும் நரி பற்றி பல இடங்களில்!
அநியாயத்திற்கும் நரியைக் குற்றம் சொல்வது நமது பழக்கமாகி விட்டது.
வாழ்நாள் பூராவும் தன் மீது காட்டிய அன்பை மறக்காத, மிகவும் நன்றியுள்ள மிருகமான நாயை உதாரணம் காட்டி, நன்றி கெட்ட நாய் என்று மனிதர்களைத் திட்டும் சமூகம் நாங்கள்.
ஆங்கிலத்தில் நன்றி கெட்ட பாலியல் தொழிலாளி மகனே (Ungrateful bastard/ son of a bitch) என்பது தான் திட்டுதல்.
நாய் என்ன பாவம் செய்ததோ நம்ம இனத்தில் வந்து அகப்பட?
நம்மைப் போல!
வழி தெரியாமல் ஊருக்குள் வந்தால் ஒழிய, நரி நமக்கு அன்றாடம் பரிச்சயமானதொன்றல்ல.
காட்டுக்குள் வாழும் புலிகளைப் போல அன்றி!
தேவையில்லாமல் ஊருக்குள் நுழைந்து பண்ணிய அட்டகாசம் கொஞ்ச நஞ்சமா?
கடைசியில் எல்லோரையும் நடுத்தெருவில் விட்டு விட்டு போய் ஒழிந்தது!
குள்ளத் தனமான வேலைகளைச் செய்பவர்களை நரிகள் என்று வர்ணிக்கிறோம்.
ஜே.ஆரை நரி என்றும், கருணாநிதியைக் கோபாலபுரத்துக் குள்ளநரி என்றும் வர்ணிக்கும் தமிழர்கள், தங்களுக்குப் பிடித்தவர்களாக இருந்தால், அதே நரித்தனம் கொண்டவர்களை 'சாணக்கியர்கள்' என்று முடிசூட்டி விடுவார்கள்.
ஆனால் நரி புத்திசாலி என்பதை நீண்ட நாட்களுக்கு முன் பார்த்த டிஸ்னி படம் ஒன்றில் காண முடிந்தது.
துரத்திக் கொல்ல வந்த மிருகத்தை, அதுவும் புலி தான், சுத்துவதற்காக, ஒரு பற்றையை மூன்று தரம் சுற்றி வந்தது. சுற்றி வந்த மூன்றாம் தடவை புலி மறந்து போய், தனது வேலையைப் பார்க்க, நரி பேசாமல் தன் பாட்டிலேயே நடந்து போனது.
நரி புத்திசாலியாக இருப்பதற்கு காரணம் தனது பலம் தெரிந்ததால் தான்.
நாய் இனத்தைச் சேர்ந்த நாய், ஓநாய் போன்ற பலவும் பலத்தைப் பிரயோகித்தே வெற்றி காண நினைப்பன. ஆனால் நரிக்கு தன் பலம் தெரிந்ததால், புத்தியைப் பிரயோகிக்க முயல்கிறது.
அது நிலத்தைக் கிண்டி பொந்துக்குள் (வளை) தான் வசிக்கிறது. அங்கே தான் தங்குதலும், உணவுச் சேமிப்பும், குட்டிகளின் பாதுகாப்பும்.
நரி நாயை விட பூனைக்குத் தான் நெருக்கம். நாய் இனத்திலயே மரத்தில் ஏறத் தெரிந்தது நரி தான். பூனையைப் போலவே மரத்திலேயே தூங்கவும் தெரியும்.
பகல் முழுக்கத் தூங்கி விட்டு, இரவில் தான் வேட்டைக்குப் போகிறது. பூனையைப் போலவே, மெதுவாக தனது இரையை நோக்கி நகர்ந்து பாய்ந்து லபக் என்று பிடிக்க முயற்சிக்கும்.
சராசரி ஆறு குட்டிகள் பெறும். குட்டிகள் குருடாகவே பிறப்பதுடன், முதல் ஒன்பது நாட்களுக்கு கண்களைத் திறக்க மாட்டா. தாய் நரி குட்டிகளைப் பாதுகாத்துக் கொள்ள, தந்தை நரி உணவு தேடி வரும்.
கோழிக்கூடுகளுக்குள் புகுந்து கோழிகளைத் திருடுவதால் ஐரோப்பாவில் குதிரைகளில் கூட்டமாய் போய் நரிகளை வேட்டையாடுதல் ஒரு வருடாந்த விளையாட்டாகவே ஆகி விட்டது. இங்கிலாந்தில் அதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
சிறுவயதிலிருந்தே நரியின் குள்ளத்தன்தைச் சொல்லும் காக்காவும் நரியும் கதை தமிழர்கள் கண்டுபிடித்ததல்ல. அது ஈசாப்பின் கதைகளில் ஒன்று. காகத்தில் வாயில் செருகப்பட்டு இருந்த வடை, தமிழர்களின் இடைச்செருகலே!
ஹொலிவூட்டில் இருபதாம் நூற்றாண்டு நரி ஒன்றுண்டு. 20th Century Fox என்ற தயாரிப்பு நிறுவனம் தற்போது அவுஸ்திரேலியரான Rupert Murdoch கிற்கு சொந்தமானது. அதற்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனம் தீவிரவலதுசாரி அரசியலை ஆதரிப்பது. அதன் 'ஊடகவியலாளர்கள்' புலிவால் தமிழ் 'ஊட்டகவியலாளர்களை' மிஞ்சியவர்கள். கூசாமல் பொய் சொல்லி ரொம்பவும் கிளுகிளுப்பு ஊட்டக்கூடியவர்கள்.
சலசலப்புக்கு அஞ்சாத தமிழர்கள் தங்களை பனங்காட்டு நரிகளாக்கிக் கொள்வதுண்டு. உண்மையில் நரிக்கும் துணிச்சலுக்கும் சம்பந்தமேயில்லை. குள்ளத்தனம் காரணமாக தமிழர்களும் தங்களை பனங்காட்டு நரிகள் என்று சொல்லியிருக்கலாம்.
நரி வெருட்டுற கதை எப்படி ஆச்சிக்கு கிடைத்தது என்ற மர்மத்தைத் துலக்குவதற்கு அந்த நாளில் அறிவு இருக்கவில்லை.
நேற்று அந்தக் கட்டுரையை எழுதி விட்டு, அபிதகுஜாம்பாளின் அப்பொய்ன்ட்மென்ட் காரணமாக கூட்டிச் சென்று வந்த பின்னால், வேறு சில கருத்துக்களையும் சேர்த்து, இணையத்தில் தரவேற்றம் செய்யலாம் என்று நினைத்தபடி காரில் கொண்டு போய் இறக்கி விட்டு, வாகனத்தை அருகில் உள்ள வீதியில் நிறுத்துவதற்காக போய்க் கொண்டிருக்கிறேன்.
முன்னால் ஒரு நரி ஓடி வந்து கொண்டிருக்கிறது.
இதென்னடா, சும்மா பகிடிக்கு எழுதப் போக, அதை உண்மையாக நம்பி நரி நிஜமாகவே வெருட்டுவதற்காக வருகிறதோ என்ற பயம் வேறு வந்தது.
அருகில் உள்ள ஆற்றைச் சூழ்ந்த பள்ளத்தாக்கில் உள்ள சிறு காடுகளில் இருந்து வந்திருக்க வேண்டும். இங்கே அவற்றை Ravine என்பார்கள்.
பாதை மாறி வந்து என்ன செய்வது என்று தெரியாமல் பாதையைக் கடக்க முயற்சி செய்ய, ஒவ்வொரு காரும் வர வர பயத்தில் திரும்பி திரும்பி ஒருவாறாக ஒரு வீட்டுக்குப் பின்புறமாக ஓடித் தலைமறைவானது.
சமீப காலமாக காண்கின்ற நல்ல சகுனங்களில் இதுவும் ஒன்றாக இருக்குமோ?
தனது ஒரு கண் தெரியாத நிலையிலும் எனக்கு சமைத்துப் போட்டு, என்னை தன் பிள்ளையாக வளர்த்த ஆச்சி மேல் உலகில் இருந்து ஏதாவது செய்தி அனுப்பியிருக்கிறாவோ என்னவோ?
நரி முகத்தில் விழித்தால் அதிஷ்டம் என்பார்கள் நமது முன்னோர்.
நமது முன்னோர்கள் முட்டாள்கள் தான்.
அதிஷ்டம் கியூறியஸுக்கா, நரிக்கா என்பதை தெளிவாக சொல்லித் தொலைக்காமல் விட்டதால்!
You must be logged in to post a comment Login